Kalki Short StoriesKalki TimesStory

Prabala Nakchatiram Kalki | Kalki Times

அத்தியாயம் 2: கல்யாணம்

கதையை எங்கே, எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது இதிலெல்லாம் விசேஷம் ஒன்றும் கிடையாது. என் தகப்பனார் வக்கீல். அவருக்கு நான் நாலாவது பெண். என் தமக்கைமார்களுக்கெல்லாம் நல்ல வரன்களைத் தேடிக் கலியாணம் செய்து கொடுத்து விட்டார். அப்போதெல்லாம் அவருக்குச் சம்பாத்தியமும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்குத் தள்ளாமை அதிகமாக ஆக ஆக வருமானமும் குறைந்தது. வீட்டில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, எல்லாரும் இந்தத் துக்கிரி பிறந்த அதிர்ஷ்டம் என்று என்னைத் தூற்றுவார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ‘எனக்குத் தான் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொள்வேன். சில சமயம் வெளியிலும் சொல்வேன். என் தாயார் மட்டும் என் கட்சியில் இருந்து, ‘ஆமாண்டி கண்ணே! உனக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது; உன் அக்காமார்கள் எல்லோரையும் காட்டிலும் நீதான் நல்ல இடத்தில் வாழ்க்கைப் படப் போகிறாய். உன்னால் தான் எங்கள் தரித்திரம் தீரப் போகிறது” என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

பள்ளிக் கூடத்தில் நான் இரண்டாவது பாரம் வரையில் தான் படித்தேன். ஆனால் படிப்பதில் எனக்கு அந்த நாளிலேயே ஆர்வம் அதிகம். விக்ரமாதித்யன் கதை முதற்கொண்டு, பத்திரிகைகளில் அந்த வாரம் வெளியான தொடர்கதை வரையில் எல்லாவற்றையும் படித்து வந்தேன். இதனாலெல்லாம் என்னென்னமோ பகற் கனவுகள் காண ஆரம்பித்தேன். கதைகளில் வருவது போல் ‘சகல லட்சணங்களும் பொருந்திய இளங்குமரன் எனக்காக எங்கேயோ பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு நாள் அவன் எங்கிருந்தோ வந்து, என் மேல் காதல் கொண்டு சகலரும் அறிய என்னைக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு போகப் போகிறான்; நாடு நகரமெல்லாம் அதைப் பார்த்து அதிசயிக்கப் போகிறது’ என்று அடிக்கடி எண்ணமிடுவேன். தகுந்த வரன் கிடைக்காத காரணத்தினால் என் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. கற்பனா லோகத்தில் நான் கண்டு வந்த இராஜகுமாரன் வரும் பொருட்டாகவே, என் கல்யாணம் நிச்சயிக்கப்படாமல் தட்டிப் போய் வருகிறது என்று நான் நம்பினேன். அவன் எப்போது வருவான், எந்த ரூபத்தில் வருவான் என்றெல்லாம் சிந்தனை செய்தேன். நாளாக ஆக, என்னுடைய உள்ளத்தின் தாபமும் வளர்ந்து வந்தது. பொறுமைகுன்றியது. “ஏன் இன்னும் வரவில்லை?” என்று ஊர் பெயர் தெரியாத என் கற்பனை மணாளனிடம் கோபம் கொள்ள ஆரம்பித்தேன். இன்னும் எங்கள் வீட்டு வாசலிலே நின்று தெரு வீதியில் அவர் வரவை எதிர் நோக்கலானேன்.

நான் பார்ப்பதற்கு நன்றாயிருப்பேனென்று அந்த நாளிலேயே எல்லோரும் சொல்வார்கள். “உன் அழகுக்காகவே உன்னை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய்விடுவான்” என்று என் பாட்டி சொல்வதுண்டு. இதைப் பற்றி நான் உள்ளுக்குள் ரொம்பவும் கர்வம் கொண்டிருந்தேன். நாலு பேர் உள்ள இடத்தில் இருக்கும் போதெல்லாம் எல்லோரும் என் அழகையே பார்த்துப் பிரமித்துப் போய் நிற்பதாக நான் எண்ணிக் கொள்வேன். என் வீட்டு வாசலிலே நிற்கும் போதும் இந்த அழகு கர்வம் என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டு தானிருக்கும். அதற்குத் தகுந்தாற்போல், போவோர் வருவோர் எல்லோரும் என்னை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். இவ்விதம் பார்த்தவர்களில் நல்ல தோற்றமும் நாகரிகமும் வாய்ந்த இளைஞன் யாராவது இருந்தால், “என்னை மணந்து அழைத்துப் போக வரும் கந்தர்வ குமாரன் இவன் தானோ?” என்று எண்ணமிடுவேன்.

அந்த இளைஞர்களில் பலர் நான் நிமிர்ந்து பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு போய்விடுவார்கள்; இன்னும் சிலரைப் பார்த்ததும் எனக்கே வெறுப்பு உண்டாகிவிடும். ஒரு சிலர் மட்டும் சமிக்ஞைகளினாலும் நேரிலேயும் என்னிடம் காதல் பாஷை பேசத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களுடைய நிலைமை இன்னதென்று அறிந்ததும் எனக்குண்டான ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. ஒருவனுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்; இன்னொருவன் வக்கீல் குமாஸ்தா; வேறொருவன் பெயில் ஆன பி.ஏ. – ஆகா நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கந்தர்வ குமாரன் இவர்களிலே ஒருவனாக இருக்க முடியுமா? எல்லாம் மனோராஜ்யமா? வெறும் ஆகாசக் கோட்டையா? இவ்வளவு அழகையும் வைத்துக் கொண்டு, கேவலம் கன்னிகையாகவே, அப்பா அம்மாவுக்குப் பாரமாகவே இருக்கப் போகிறேனா! பகவானே! இதற்காகவா, எனக்கு இவ்வளவு அழகையும் அறிவையும் கொடுத்தாய்?

அழகிலே மட்டுமல்ல? அறிவிலும் நான் நிகரில்லாதவள் என்று தான் அப்போதெல்லாம் எண்ணியிருந்தேன்! உண்மையிலேயே நான் எவ்வளவு மந்த அறிவு படைத்தவள் என்பதைப் பகவான் எனக்கு விரைவிலேயே காட்டிக் கொடுத்து விட்டார்.
நான் என் வீட்டு வாசலில் நின்று ஸ்வயம்வரம் நடத்திய காலத்தில் ஒருநாள் கலாசாலை ஆசிரியர் ஒருவர் அந்த வழியே போவதைக் கண்டேன். அவருக்கு வயது சுமார் முப்பது தானிருக்கும். ஆனால், அவருடைய தலைப்பாகையும், நீளமாய்த் தொங்கிய கறுப்புச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அவருடைய வயதை அதிகப் படுத்திக் காட்டின. அவரைப் பார்த்தவுடனே எனக்கு ஒருவிதமான பயபக்தி உண்டாயிற்று. அவர் என்னைப் பார்த்த பார்வையோ என்னுடைய பயத்தை அதிகமாக்கியது. "ஏன் இப்படித் தெரு வீதியில் நின்று போவோர் வருவோரைப் பார்த்துப் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறாய்? நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு இது அழகா?" என்று அவர் என்னைக் கேட்பது போலிருந்தது. ஆனால் என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். "இவர் என்ன மகாப் பெரியவர். இவருக்கு எதற்காக நாம் பயப்பட வேண்டும்?" என்று நினைத்து நினைத்து அசட்டுத் தைரியத்தை அதிகமாக்கிக் கொண்டேன். அவர் வீதி வழியாகப் போகும் சமயம் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே வாசலில் போய் நிற்கவும், அவரை விழித்துப் பார்க்கவும் ஆரம்பித்தேன். இதெல்லாம் எனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அந்த வேடிக்கை விரைவில் வினையாக முடிந்தது.
ஒரு நாள் என் தாயார் திடீரென்று கூப்பிட்டுப் பரவசமாகக் கட்டி அணைத்துக் கொண்டு, "அடி அம்பு! கடைசியில் உனக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டதடி, உன் கலி தீர்ந்து விட்டதடி! 'எப்போ வருவாரோ? எப்போ வருவாரோ?' என்று பாடிக் கொண்டிருப்பாயே? அவர் வந்துவிட்டாரடி!" என்றாள். அப்போது எனக்கு உடம்பெல்லாம் புளகாங்கிதம் ஏற்பட்டது. என் உள்ளத்திலே 'அவர் வந்து விட்டாரா? அவர் யார்? எப்படி இருப்பார்?' என்ற கேள்விகள் பொங்கின. ஆனால், வாயில் ஒரு வார்த்தையும் வரவில்லை. அம்மா அவளாகவே சொன்னாள்: "ஆமாண்டி கண்ணே! நிஜந்தாண்டி. இந்த ஊர் காலேஜிலே புரொபஸராம்! 250 ரூபாய் சம்பளமாம். ரொம்பப் படிப்பாளியாம். பிரின்ஸிபால் வேலை கூட ஆகுமாம். கல்யாணமே வேண்டாம் என்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்தாராம். உன் அதிர்ஷ்டம் அப்பேர்ப்பட்டவருடைய மனது மாறி விட்டது."
இதற்குள் பாட்டி "அதுதான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நம்ம அம்புவின் அழகுக்காகவே அவளை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று அப்போதெல்லாம் என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கைப் படவில்லை" என்றார்.

காலேஜ் புரொபஸர் என்று அம்மா சொன்னதுமே என் மனது பதைத்தது. சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக “பாரடி அம்மா, பாட்டியை! என் அழகுக்காகவே யாரோ வந்து விட்டார்களாம்! நீ சொல்லுகிறவர் இன்னும் என்னை வந்து பார்க்கக் கூட இல்லை. அதற்குள்ளே பாட்டிக்கு அவசரம்!” என்றேன்.

அப்போது அம்மா, புன்னகையுடன், "இல்லேடி கண்ணே; பாட்டி அவசரப்படவில்லை. கல்யாணம் நிச்சயமான மாதிரிதான். அவர் தினம் இந்த வீதி வழியாக காலேஜுக்குப் போகிற போது உன்னைப் பார்த்திருக்கிறாராம். அவரே அப்பாவைக் கூப்பிட்டனுப்பி, 'எனக்கு உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க இஷ்டமா?' என்று கேட்டாராம். பணம் காசு என்று ஒன்றும் பேசப்படாது என்று சொல்லிவிட்டாராம். எல்லாம் தீர்மானமாகி விட்டது. முகூர்த்தத் தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்காகத்தான் அப்பா ஜோசியரண்டை போயிருக்கார்" என்று சொல்லி, ஆசையோடு என் நெற்றியில் கையை வைத்து திருஷ்டி கழித்தாள். நான் அவளிடமிருந்து திமிறிக் கொண்டு ஓடினேன். காமரா உள்ளுக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு தரையில் படுத்தேன். என் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகிற்று. ஏன் என்று எனக்கே தெரியவில்லை.
"அவரையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம்?" என்று எண்ணியபோது, ஒரு பக்கம் திகிலாயிருந்தது. இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருந்தது; அப்பேர்ப்பட்ட படிப்பாளி என் அழகு வலையில் விழுந்துவிட்டாரல்லவா? ஆனால் அந்த மனிதருடனா வாழ்க்கை முழுவதும் கழிக்கப் போகிறோம் என்று நினைத்தபோது, என்னமோ செய்தது.
சற்று நேரத்துக்கெல்லாம் அம்மா கதவை இடித்தாள். "அம்பு! கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்கிறாய்? அப்பா வந்துவிட்டார். முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடுகிறார்!" என்று குதூகலமான குரலில் சொன்னாள். நான் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அம்மா என் முகத்தைப் பார்த்து விட்டு, "அடி அசடே! அழுதாயா, என்ன?" என்று கேட்டாள். நல்ல வேளையாகப் பாட்டி, "அழுகையாவதடி; குழந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கடி!" என்றாள். அம்மா, "என் கண்ணே!" என்று என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
சாதாரணமாய்க் குடும்பங்களில் அடியும் வசவும் பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்குக் கூடக் கல்யாணம் என்று ஏற்பட்டு விட்டால் தனி மகிமை உண்டாகி விடுகிறது. எல்லாரும் கல்யாணப் பெண்ணை அருமை பாராட்டவும் கொஞ்சவும் ஆரம்பித்து விடுகிறார்கள். ஏற்கனவே நான் செல்லப் பெண்; அதிலும் இப்போது எனக்கு 'அதிர்ஷ்டம்' வேறே வந்திருந்தது. ஆகவே எல்லாரும் என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்லவா வேண்டும்?
கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. அம்மா அப்பா முதலியவர்களுக்குத் தலைகால் தெரியவில்லை. 'தடபுடல் ஒன்றும் வேண்டாம்' என்று மாப்பிள்ளை சொன்ன போதிலும் 'கிடைக்காத சம்பந்தம் கிடைத்திருக்கிறது' என்ற பெருமையினால் அப்பா ஆடம்பரமாகவே கல்யாண ஏற்பாடுகளைச் செய்தார்.
குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தது. எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். மாப்பிள்ளை நலங்கிடுவதற்கு வரவில்லை என்ற ஏமாற்றம் அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் உண்டு. இதை மறைப்பதற்காக அம்மா, "அவர் என்ன சாமான்யப்பட்டவரா? எல்லாரையும் போல் நலங்கிட உட்காருவாரா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்! இன்னும் என்னை அடிக்கொரு தடவை கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்து, "நீ அதிர்ஷ்டக்காரி அம்பு! கொடுத்து வைத்தவள்" என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த நம்பிக்கையுடனேயே அம்மா என் கல்யாணமாகிச் சில காலத்துக்கெல்லாம் கண்ணை மூடினாள்.
நானும் இன்றைக்கு இந்தச் சந்தோஷமான இடத்திலேயே நிறுத்திவிட்டு கண்ணை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *