Kalki Short StoriesKalki TimesStory

Kamalavin Kalyanam Kalki | Kalki Times

Kamalavin Kalyanam Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

கமலாவின் கல்யாணம்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Kamalavin Kalyanam Kalki

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்துவை!” என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள்! ஆனால் ஜுனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம். நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீந்து வரும்படி செய்வதற்குள் வாய்ப் பிராணன் தலைக்கு வந்து விடுகிறது. ஆயிரம் பொய் சொல்லுவதாம்! கல்யாணம் செய்து வைப்பதாம்? அந்த நிபந்தனையின் பேரில்தான் கல்யாணம் நடக்கும் என்றால் உலகத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாரும் விநாயகர்களாயிருக்க வேண்டியதுதான்.

நல்ல வேளையாக, அப்படியாவது பொய் சொல்லி யாருக்கும் கல்யாணம் செய்துவைக்கும்படியான அவசிய்ம் எனக்கு இதுவரையில் ஏற்படவில்லை. கல்யாணமுயற்சி எதிலுமே நான் தலையிட்டது கிடையாது. ஒரு கல்யாணத்தைத் தடைப்படுத்தும் முயற்சியில் தான் சமீபத்தில் கலந்துகொண்டேன். அந்தக் கதை தான் இது.

ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர் என்று எல்லாரும் கேள்விப்பட்டிருக்கலாம். பிரசித்திபெற்ற வக்கீல். அவரிடம் தான் இரண்டு வருஷமாக நான் ஜுனியராக இருக்கிறேன். மாதம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாத வருமானம். இப்படியே இருபது வருஷமாய் இருந்து வருகிறது. டாக்டர் பெஸண்டு அம்மையின் காலத்தில் இவர் ஹோம் ‘ரூல்’ கிளர்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால் தான் ‘ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர்’ என்று பெயர் வந்தது. வீட்டில் அகத்துக்காரியின் ஆட்சி கொஞ்சம் அதிகமாதலால், இந்தப் பெயர் அவருக்கு நிலைத்து விட்டது என்று சில பொறாமைக்காரர்கள் சொல்வதுமுண்டு.

மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு முன்னணியில் நிற்பார். கதர் தான் அணிவார். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேச இயக்கத்தில் வெகுபாடுபட்டு உழைத்தவர் அவர். இருபது வருஷங்களுக்கு முன்பு ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர். இன்னமும் வஞ்சனையில்லாமல் ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று வருகிறார். தேர்தல்களில் எல்லாம் அவருடைய ஆதரவு காங்கிரஸுக்குத்தான். சென்னையிலிருந்தோ, வெளிமாகாணங்களிலிருந்தோ, தேசீயத் தலைவர்கள் வந்தால், அவருடைய வீட்டில்தான் இறங்கவேண்டும்.

இன்னும் சமூக சீர்திருத்தத் திட்டங்களில் எல்லாம் அவருக்கு அதிகப் பற்று உண்டு. சாரதா சட்டத்துக்கு விரோதமான கிளர்ச்சி நடந்தபோது, சாரதா சட்டத்துக்குச் சாதகமாய்ப் பொதுக் கூட்டங்கள் போட்டதுடன் கையெழுத்துக்களும் வாங்கி அனுப்பினார்.

ருதுமதி விவாகம் விதவா விவாகம் முதலியவை சமீபத்திலுள்ள ஊர்களில் எங்கே நடந்தாலும், இவர் போய் இருந்து நடத்தி வைப்பார். சில கல்யாணங்களில் புரோகிதம் கூடச் செய்து வைத்ததுண்டு.

ஸ்ரீ கோபாலகிருஷ்ண ஐயருக்கு நாலு பெண்கள். ஒரே அருமைப் பிள்ளை. பெண்களுக்கெல்லாம் நல்ல இடங்களில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். ஒரு மாப்பிள்ளை ஐ.சி.எஸ். இன்னொரு மாப்பிள்ளை அக்கவுண்டண்ட் ஜெனரல். இப்படி பிள்ளைக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பையன் சென்ற வருஷந்தான் பி.எல். பாஸ் செய்துவிட்டு வந்து எங்களைப் போல் தானும் தகப்பனாரிடம் ஜுனியராக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். கோபாலகிருஷ்ண ஐயர் நல்ல பணக்காரர் ஆனதால் எவ்வளவோ பெரிய பெரிய இடங்களிலிருந்து கல்யாண சுந்தரத்துக்குப் பெண் கொடுப்பதாக வந்தார்கள். பல காரணங்களால் கல்யாணம் தடைப்பட்டு வந்தது. அப்பாவுக்குப் பிடித்தால் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. அம்மாவுக்குப் பிடித்தால் பிள்ளைக்கு பிடிப்பதில்லை. இவர்கள் மூன்று பேருக்கும் பிடித்திருந்தால் பெண் வீட்டுக்காரர்கள், ‘இவர்களுடைய அனாசாரம் பிடிக்கவில்லை’ என்று போய் விடுவார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான், ஒரு நாள் திருவளர்ச்சோலைக் கோவிலில் நடக்கப்போகும் ஒரு கல்யாணத்தைப் பற்றி எங்களுக்குச் செய்தி வந்தது. ஐம்பத்தைந்து வயதான ஒரு கிழவருக்கும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதாக வதந்தி உலாவிற்று. மாமண்டூரில் யாரோ ஒரு உபாத்தியாயராம்; சம்சாரியாம். அவருடைய மூத்த பெண் கமலாவைத்தான் இப்படி ஒரு கிழவருக்குப் பலிகொடுக்க ஏற்பாடாகியிருந்ததாம். மாமண்டூரிலிருந்து வந்த ஒரு கட்சிக்காரர் மேற்கூறிய விவரம் தெரிவித்தார். ‘கிழ மாப்பிள்ளை’ யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த அநியாயத்தைப்பற்றி ஒருநாள் ஜுனியர்களாகிய நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, பெரியவர் வந்துவிட்டார். ‘என்ன சமாசாரம்’ என்று அவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் தலைக்குத் தலை வெகு ஆத்திரத்துடன் மேற்படி கல்யாணக் கொடுமையைப் பற்றிச் சொன்னோம். பெரியவர் அப்போது, “நீங்கள் எல்லோரும் இவ்வளவு ஆத்திரமாய்ப் பேசுகிறீர்களே? பேசி என்ன பிரயோசனம்? உங்கள் ஆத்திரத்தைக் காரியத்தில் காட்ட எத்தனை பேர் தயாராயிருக்கிறீர்கள்? இந்தக் கல்யாணத்தை ஏன் நாம் நிறுத்தி விடக் கூடாது” என்றார். “நீங்கள் வந்தால் நாங்களும் தயார்” என்று எல்லோரும் ஒரு முகமாகக் கூறினோம். அந்த மாமண்டூர்க் கட்சிகாரனைக் கூப்பிட்டு மறுபடியும் விசாரித்தோம். “நாளை ஞாயிற்றுக் கிழமை கல்யாணமாம்” என்று அவன் சொன்னான். கிழமை ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது நல்லதாய் போயிற்று. கோர்ட்டு உள்ள தினமாயிருந்தால், ஒரு வேளை எங்களுடைய உற்சாகம் மழுங்கிப்போயிருக்கலாம். விடுமுறை நாளாயிருந்தபடியால் எங்களுடைய சமூகச் சீர்த்திருத்த வேகம் பன்மடங்கு அதிகரித்தது. ஆகவே ஞாயிற்றுக்கிழமையன்று எல்லாரும் திருவளர்ச்சோலைக்குக் கும்பலாகச் சென்று, மேற்படி கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்துவிடுவது என்று தீர்மானம் செய்தோம்.

நடுவில் ஒரே நாள் தான் இருந்தது என்றாலும் ஊரெல்லாம் செய்தி பரவிவிட்டது. திருவளர்ச் சோலையில் நடக்கும் அக்கிரமமான பால்ய விவாகத்தைப்பற்றிப் பலர் பலமாகக் கண்டித்தார்கள். வேறு சிலர் “யார் எப்படிப் போனால் இவர்களுக்கென்ன? உலகத்தை இவர்கள் தான் உத்தாரணம் செய்யப் போகிறார்களாக்கும்” என்று எங்களைக் கண்டித்தார்கள். இதனாலெல்லாம் எங்களுடைய உறுதி குன்றவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருபது பேர் ஏறக்கூடிய ஒரு பெரிய பஸ் வந்து, கோபாலகிருஷ்ண ஐயர் வீட்டு வாசலில் நின்றது. பெரியவர் எல்லாருக்கும் முன்னால் தயாராக வந்து நின்றார். நாங்கள் நாலு ஜுனியர்களும், இரண்டு குமாஸ்தாக்களும் அவ்விதமே தயாராயிருந்தோம் கல்யாணசுந்தரமும் பிரயாணத்துக்குத் தயாராய் வருவதைப் பார்த்து, பெரியவர், “நீ என்னத்திற்காக வருகிறாய்?” என்று கேட்டார். “நானும் வரத்தான் வருவேன்” என்று அவன் முன்னதாக வண்டியில் ஏறிக் கொண்டான். உள்ளூர் காங்கிரஸ் காரியதரிசியும் நாலு தொண்டர்களும், கையில் கொடி பிடித்துக் கொண்டும் “வந்தே மாதரம்”, “மகாத்மா காந்திக்கு ஜே”, “பால்யவிவாகம் ஒழிக”, “காதல் மணம் வாழ்க” என்று கோஷித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்படி இப்படியென்று, பஸ் நிறைய ஆள் சேர்ந்துவிட்டது.

பஸ் கிளம்பி ஐந்து நிமிஷம் இருக்கும். இன்னும் நகர எல்லையைத் தாண்டவில்லை. முதல் நாள் சாயங்காலமே நாங்கள் திருவளர்ச்சோலைக்கு அனுப்பியிருந்த பையன் சைக்கிளில் பறந்து வருவதைக் கண்டோ ம். அவன் கையைக் காட்டுவதற்கு முன்னாலேயே பஸ் நின்று விட்டது. எங்களுக்கு அங்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்காகவும் கல்யாணம் நடக்கும் இடம் முதலியவற்றைக் கவனித்து வைப்பதற்காகவும் அவனை முதல்நாள் அனுப்பியிருந்தோம். அவன் இப்படித் தலை தெறிக்க ஓடி வந்ததைப் பார்த்ததும், எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஏக காலத்தில் எல்லாரும், “என்ன? என்ன?” என்றோம். பையன் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான். “அவர்களுக்கு எப்படியோ சமாசாரம் தெரிந்துவிட்டது. திருவளர்ச்சோலையில் கல்யாணம் நடக்கவில்லை. குலசேகரபுரத்தில் நடக்கப் போகிறதாம்!” என்றான்.

பலே பேஷ்! நல்ல வேலை செய்தார்கள்! திருவளர்ச்சோலை எங்கள் நகரிலிருந்து பன்னிரண்டு மைல். குலசேகரபுரம் நாற்பது மைல். அவ்வளவுதூரம் எங்களுடைய சீர்திருத்த வேகம் எட்டாது என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்! கிழ மாப்பிள்ளை யாராயிருந்த போதிலும் பலே கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் கெட்டிக்காரத்தனத்தில் குறைந்தவர்களா? “விடு பஸ்ஸைக் குலசேகரபுரத்துக்கு” என்றோம். தாலி கட்டியாவதற்குள் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டுமென்பது எங்கள் ஆசை. பஸ் டிரைவருக்கும் இந்த கலாட்டாவில் ருசி ஏற்பட்டுவிட்டது. பஸ் பறந்தது.

அன்றைக்கு முதல் முகூர்த்தம் ஒன்பது மணிக்கு மேல் பத்தரை மணிக்குத்தான் என்பது எங்களுக்குத் தெரியும். பஸ் எட்டரை மணிக்கு குலசேகரபுரத்தை அடைந்துவிட்டது. கொட்டு மேளம் கொட்டுகிற சத்தத்தைக் கொண்டு, கல்யாண வீட்டைக் கண்டு பிடித்தோம். அங்கே நாங்கள் போன சமயம், மாப்பிள்ளை பரதேசக் கோலம் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்! மாப்பிள்ளை எங்கள் ஊர்ப்பேர்வழி; அதோடு வக்கீல் தொழில் செய்பவர்; பெயர் கணபதிராம சாஸ்திரிகள். வயது ஐம்பத்திரண்டு ஆயிற்று. ஆனால் பார்ப்பதற்கு நாற்பத்தைந்து வயது தான் சொல்லலாம். சிவப்பு நிறம், முகத்தில் நல்ல களை. இப்போது மாப்பிள்ளைக் கோலத்தில் அப்படியொன்றும் மோசமாக இல்லை; ஜோராகத்தான் இருந்தார். பரதேசக் கோலத்தில் சாஸ்திரிகளைப் பார்த்ததும் என்னுடைய சீர்திருத்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிற்று. ஏனெனில், அவருடைய நிலைமையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ரொம்ப நல்ல மனுஷர்; பரமசாது; ஒருவருக்கு ஒரு தீங்குஞ் செய்யாதவர். வக்கீல் வேலையில் அவ்வளவு வருமானம் கிடையாது. கையிலிருந்த பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் பெருக்கியிருந்தார். இப்போது ஐம்பதினாயிரம் ரூபாய் சொத்துக்குக் குறைவில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாதவர். ஒரு மனைவி, பிள்ளையில்லாமலே இறந்து போனாள். துர்பாக்கியவசமாக, அந்தப் பெண் குழந்தையையும் மூன்றாவது வயதில் இழந்தார். மாமாங்கக் கூட்டத்தில் குழந்தை காணாமல் போனதாக வதந்தி, அப்புறம் வெகு காலம் அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. விதந்துவாய் போன அவர் தங்கை இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அந்தக் குழந்தைகளை வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்தார். பையன் உத்தியோகமாகி வெளியூர் போய்விட்டான். பெண்ணுக்குக் கல்யாணமாகிப் புக்ககம் போய்விட்டான். அவளுக்குத் துணையாகத் தாயாரும் வந்திருக்க வேண்டுமென்று மாப்பிள்ளை வற்புறுத்திய படியால், அவருடைய சகோதரியும் போய்விட்டாள். தற்சமயம் சாஸ்திரிகள் ஒரு சமையற்காரப் பையனை வைத்துக் கொண்டு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வந்தார். இந்தத் தனிமையின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் தான் அவர் இந்த முதிர்ந்த வயதில் கல்யாணம் செய்து கொள்ளத் துணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறெண்ணி அவரிடம் நான் கொஞ்சம் அனுதாபங்கொண்டேன். ஆனால், மற்றவர்கள் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் கிளம்பி வந்த போது, “முன்பின் தெரியாத முரட்டுக் கிழவன் யாராவது மாப்பிள்ளையாயிருந்தால் என்ன செய்கிறது?” என்ற பயம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் இருந்தது. “உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்!” என்று முரட்டடியாய் அடித்தால், உண்மையில் நாங்கள் என்ன செய்யமுடியும்? ஆனால், சாது கணபதிராம சாஸ்திரிகள் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், எங்கள் கோஷ்டியில் அனேகருக்கு உற்சாகம் தலைக்கேறி விட்டது.

“வந்தே மாதரம்!” “பால்ய விவாகம் ஒழிக!” என்று கோஷித்துக் கொண்டு நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கியதைப் பார்த்ததுமே கணபதிராம சாஸ்திரிகள் திகைத்துப் போய் நின்று விட்டார். எல்லோருமாகப் போய் அவரைச் சூழ்ந்து கொண்டோ ம். வைதிகர்கள், பெண் வீட்டார், முதலியோர் மிரண்டு போய் விலகி கொண்டார்கள்.

“சாஸ்திரிகளே! நல்ல வேளை செய்தீர் ஐயா!” என்றான் எங்களில் ஒருவன்.

“ராத்திரிக்கு ராத்திரியே, எப்படி ஐயா, பிளானை மாற்றினீர்? ஹிட்லரால் கூட இவ்வளவு துரிதமாய்க் காரியம் செய்ய முடியாதே!” என்றான் இன்னொருவன்.

“கண்ணில் மை இட்டிருக்கிறது ரொம்ப அழகாயிருக்கிறது. கண்ணாடியில் பார்த்துக் கொண்டீரா?” என்றான் மற்றொருவன்.

“தலையில் பூச்சூட்டிக் கொண்டிருக்கிறது அதை விட இலட்சணம்!” என்றான் இன்னொருவன்.

பெரியவர் எல்லாரையும் கையமர்த்திச் சும்மா இருக்கச் செய்துவிட்டு, “சாஸ்திரிகளே! யாரோ பட்டிக் காட்டுக் கிழவனாக்கும் என்று பார்த்தேன். படிப்பும் பகுத்தறிவும் உள்ள நீங்களே இப்படியெல்லாம் செய்தால் நமது தேசம் எப்படி முன்னுக்கு வரும்? ஒரு சின்னப் பெண் குழந்தையை இந்த வயதில் நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால், அந்தப் பெண் சந்தோஷமாக இருக்க முடியுமா? உங்களுக்குத் தான் அதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்? சுத்தமாய் நன்றாயில்லை. அப்படி உங்களுக்கு வேண்டுமென்றால் சம வயதுள்ள ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்வது தானே? நாங்களே கிட்ட இருந்து நடத்தி வைக்கிறோம்” என்று சரமாரியாகப் பொழிந்தார்.

சாது கணபதிராம சாஸ்திரிகள் இந்த ‘பிளிட்ஸ்கிரிக்’ தாக்குதலினால் அப்படியே அசந்து போனார். முகத்தில் ஈயாடவில்லை. மென்று விழுங்கிய வண்ணம். “எனக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதில் சம்மதந்தான். நேற்றே நான் சொன்னேன். பெண் வீட்டார் தான் ரொம்பவும் ஆட்சேபிக்கிறார்கள். அவர்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்” என்றார். இவ்வளவு சுலபத்தில் காரியம் முடிந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எனவே, எங்களுடைய உற்சாகம் பொங்கிற்று. பரதேசக் கோலம் பூண்ட மாப்பிள்ளை திரும்பி வீட்டுக்குள் வர முடியாதபடி அவரைச் சிலர் வளைத்துக் கொண்டு நின்றார்கள். மற்றவர்கள், கல்யாண வீட்டுப் பக்கம் போனார்கள். இதற்குள் ஏதோ கலாட்டா நடக்கிறதென்று தெரிந்து பெண் வீட்டார், ஆண் பெண் அடங்கலும், வீட்டு வாசலுக்கு வந்திருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாயிருந்தது. தலைக்குத் தலை பேசத் தொடங்கினார்கள்.

“பெண்ணின் தகப்பனார் யார்?” என்று கோபாலகிருஷ்ண ஐயர் கேட்டார். “இவர் தான்” என்று ஒருவரை எல்லாருக்கும் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

“ஐயர் வாள்! உள்ளே போவோம் வாருங்கள்; உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேசலாம்” என்றார் கோபாலகிருஷ்ண ஐயர்.

அவர் பெரிய மனுஷர், அந்தஸ்துள்ளவர் என்று எல்லாருக்கும் தெரியுமாதலால், சிலர், “அப்படியே செய்கிறது! வாருங்கள் உள்ளே!” என்று அழைத்துப் போனார்கள். நாங்களும் உள்ளே போனோம். எங்களைத் தொடர்ந்து எல்லாரும் உள்ளே வந்துவிட்டார்கள். தாழ்வாரத்தில் போட்டிருந்த பாயில் கோபாலகிருஷ்ண ஐயரும் சம்பந்திப் பிராமணரும் வேறு சில பெரியவர்களும் உட்கார்ந்தார்கள். நாங்களும் சூழ்ந்து உட்கார்ந்தோம். இம்மாதிரிச் சமயங்களில் காரியத்தை மேற் போட்டுக் கொண்டு செய்கிற மனிதர்கள் சிலர் உண்டு அல்லவா? அப்படிப்பட்ட மனிதர் ஒருவர், “ஸத்து, ஸத்து” என்றார். ஒரு நிமிஷம் மௌனம் குடி கொண்டது. அந்த மௌனத்தைப் பிளந்துகொண்டு விம்மி அழும் குரல் ஒன்று கேட்டது. எல்லோரும் அழுகைச் சத்தம் வந்த பக்கம் பார்த்தோம். அழுதது வேறு யாருமில்லை மணக்கோலத்திலிருந்து மணப்பெண் தான். என் அருகில் இருந்த கல்யாணசுந்தரம், “ராகவன்! இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்கவில்லை! வெளியே போகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனான். வாசற்படியைக் கடக்கும் போது, அவன் ஒரு தடவை திரும்பி, மணப்பெண் இருந்த திசையை நோக்கியதைப் பார்த்தேன். அவன் கண்களில் அப்போது தோன்றிய இரக்கமும் கனிவும் எனக்கு ஒருவாறு நகைப்பை உண்டாக்கி, பெண்ணின் அழுகைக் குரலினால் ஏற்பட்ட வேதனையைப் போக்கிற்று. “பிள்ளையாண்டானுக்கு அசடு தட்டி விட்டது என்று மனதில் எண்ணிக் கொண்டேன். அதற்குத் தகுந்தாற்போல் அவனும் வெளியே போகாமல் நின்ற இடத்திலேயே நின்றான்.

ஒரு ஸ்திரீ – மணப் பெண்ணின் தாயாராய்த்தான் இருக்க வேண்டும் – பெண்ணிடம் வந்து அவள் கையைப் பிடித்து, “அசடே! என்னத்திற்காக அழுகிறாய்? தலையெழுத்துப் போல் நடந்து விட்டுப் போகிறது!” என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.

இதையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் இளகிய கோபாலகிருஷ்ண ஐயர், பெண்ணின் தகப்பனாரைப் பார்த்து, “என்ன சுவாமிகளே! உங்களைப் பார்த்தால் படித்த மனுசர் மாதிரி தோன்றுகிறது. நீங்களெல்லாம் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யலாமா? அந்தப் பெண்ணை இப்படி அழவிட்டுக் கல்யாணம் செய்து கொடுக்காமற் போனால் என்ன?” என்றார்.

அப்போது அந்த பிராமணனுக்குத் திடீரென்று வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்க்கவேண்டுமே!

“நான் வேண்டாம்; வேண்டாம் என்று தான் முட்டிக் கொண்டேன்; பொம்மனாட்டி சொன்னதைக் கேட்டு இப்படியாச்சு! ஸ்திரீ புத்திப் பிரளயாந்தகா!” என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்.

உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீயின் குரல், “ஆமாம், எல்லாப் பழிக்குந்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே?” என்று சொல்வது கேட்டது.

அப்போது கோபாலகிருஷ்ண ஐயர், “இன்னும் ஒன்றும் முழுகிப் போகவில்லையே! சாஸ்திரிகள் இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடச் சம்மதம் என்று சொல்லி விட்டார். நீங்கள் சம்மதிக்க வேண்டியதுதான் பாக்கி” என்றார்.

“இருநூறு ரூபாய் வரையில் பணம் செலவாகியிருக்கிறதே. அதற்கு யார் வழி செய்கிறது!” என்று பெண்ணின் தகப்பனார் ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்டார்.

“இவ்வளவு தானே?” என்றார் கோபாலகிருஷ்ண ஐயர், சட்டைப் பையிலிருந்து பணப் பையை எடுத்து, அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வீசினார். “இந்தாருங்கள் இதை இப்போது வைத்துக் கொள்ளுங்கள் பாக்கி நூறு ரூபாய்க்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். எப்படியாவது அந்தக் குழந்தையை நீங்கள் படுகுழியில் தள்ளாமல் காப்பாற்றினால் போதும்” என்றார்.

கோபாலகிருஷ்ண ஐயரின் தாராள குணத்தைப் பார்த்து அங்கே எல்லோரும் பிரமித்துப் போனார்கள். “ஐயர்வாளுடைய தர்ம குணந்தான் உலகப் பிரசித்தியாச்சே? கேட்கவா வேணும்?” என்றார் ஒரு வைதிகர்.

“நாங்களெல்லாம் ஏழெட்டு மைல் நடந்து வந்திருக்கிறோம். எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேணும். வெறுங்கையோடு போகச் சொல்லக் கூடாது” என்றார் இன்னொரு வைதிகர்.

“பிராமணச் சாபம் உதவாது; தலைக்கு நாலணாவாவது கொடுத்தனுப்புங்கோ” என்று ஒருவர் மத்தியஸ்தமாய்ச் சொன்னார்.

பெரியவர், இன்னொரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து வைதீகர்களில் முதன்மையாயிருந்தவரிடம் கொடுத்து, “எல்லாருக்கும் சரியாய்க் கொடுத்துடுங்கோ” என்றார்.

“கர்ணன் என்றால் கர்ணன்! இந்தக் கலியுகத்திலே இப்படிப்பட்ட தர்மப்பிரபு யார் இருக்கா?” என்று இம்மாதிரிப் பேச்சுக்கள் எழுந்தன.

எல்லாரும் வெளியே வந்தோம். கணபதிராம சாஸ்திரிகளை மறுபடி கல்யாண வீட்டுக்குள் போகவிடவில்லை. அப்படியே பஸ்ஸிலே கொண்டுபோய் ஏற்றி, அவருடைய சாமான்களை யெல்லாம் கொண்டுவரச் சொன்னோம். அவரைச் சேர்ந்த மனுஷர்கள் – பந்துக்களோ, சிநேகிதர்களோ… யாரும் வந்திருக்கவில்லை. ஒரு குமாஸ்தா பையன் மட்டுந்தான் வந்திருந்தான். பாக்கிச் சாமான் வகையராக்களைப் பார்த்து எடுத்துக் கொண்டு வரும்படி அவனிடம் சொல்லி விட்டு, பஸ்ஸை விட்டுக் கொண்டு கிளம்பினோம். எல்லோருக்கும் வெகு உற்சாகம். உத்தேசித்து வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதல்லவா? ஏதோ பெரிய கோட்டையைப் பிடித்து ஜயக்கொடி நாட்டிய சைனியத்தைப் போல் கர்வத்துடன் நகருக்குத் திரும்பி வந்தோம். கணபதிராம சாஸ்திரிகள் அப்புறம் ஒரு வாரம் வரையில் வெளியில் தலை காட்டவில்லை. கோர்ட்டுக்கும் வரவில்லை. ஆனால் வம்புப் பிரியர்களும் அதிகப் பிரசங்கிகளும் அவரைத் தேடிப்போய், “என்ன சாஸ்திரிகளே? எங்களுக்கெல்லாம் தெரியாமல் கல்யாணத்தை முடிச்சுட்டீர்கள் போலிருக்கே? விருந்து கிருந்து ஏதாவது உண்டா இல்லையா? சம்சாரத்தை அழைச்சுண்டு வந்தாச்சோ இல்லையோ? சீமந்தக் கல்யானத்துக்காவது எங்களைக் கூப்பிடுங்கள்” என்று இப்படியெல்லாம் பரிகாசம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். எனவே இரண்டு நாளைக்கு ஒரு தடவை நான் போய் கொஞ்சம் அனுதாபத்துடன் பேசி அவரைத்தைரியப் படுத்திவிட்டு வந்தேன். அவரும் மனம் விட்டுத் தமது குறைகளைச் சொன்னார்.

“என் தங்கைக்கு நான் எவ்வளவோ செய்தேன். அவளுடைய குழந்தைகளை என் குழந்தைகளைப் போல் வளர்த்தேன். ஆயிரம் ஆயிரமாய்ச் செலவழித்தேன்; கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். கடைசியில் என்ன ஆயிற்று? போய் விட்டார்கள். என்னைத் தனியாய் விட்டு விட்டார்கள். இந்த மாதிரி மனது உடைந்திருந்த போது, அந்தப் பாவி பிராமணன் கலியாணத் தரகன் வந்து சேர்ந்தான். அவனுடைய போதனையில் மயங்கிப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரி அசட்டுத்தனத்திற்கு ஆளாவேனா?” என்று இவ்வாறெல்லாம் சொன்னார். நானும் அவருக்கு அனுசரணையாகப் பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

இதற்கிடையில் கல்யாண சுந்தரம் என்னுடைய காதைக் கடிக்க ஆரம்பித்திருந்தான். பையனுக்குக் கல்யாணத்தன்றே கொஞ்சம் அசடு தட்டிப் போயிருந்தது என்பதைத் தான் கவனித்திருந்தேனே! ஆனால், பைத்தியம் இவ்வளவு முற்றிப் போய் விடுமென்று எதிர்பார்க்கவில்லை; “ராகவன்! எல்லாருமாய்ச் சேர்ந்து ரகளை பண்ணிக் கல்யாணத்தை நிறுத்தி வந்துவிட்டோ மே! அந்தப் பெண்ணினுடைய கதி என்ன ஆகிறது?” என்று அடிக்கடி என்னைக் கேட்கத் தொடங்கினான்.

ஒரு தடவை அவனுடைய தொந்தரவைப் பொறுக்காமல் நான் “என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? எனக்கோ கல்யாணம் ஆகிவிட்டது. நீ தான் பிரம்மசாரி; வேணுமானால் கல்யாணம் செய்து கொள்ளேன்!” என்றேன். “எனக்குப் பூரண சம்மதம்” என்றான் கல்யாண சுந்தரம். “அப்படியானால் என்ன தயக்கம்” என்று கேட்டேன். “என்ன தயக்கமா? எனக்குச் சம்மதமாயிருந்தால் சரியாய்ப் போய் விட்டதா? அப்பா அம்மா அல்லவா சம்மதிக்க வேணும். ராகவன் இந்த உபகாரம் நீதான் செய்ய வேண்டும். அப்பாவிடம் சொல்லேன்” என்றான். “சரியாய்ப் போச்சு போ! ஏதோ உங்கப்பாவிடம் ஜுனியராயிருந்து, பத்து ஐம்பது சம்பாதிப்பது உனக்குப் பிடிக்கவில்லையாக்கும். என்னால் முடியாதப்பா! உன் அம்மாவின் காதில் விழுந்தால் அப்புறம் நான் இந்த வாசற்படி ஏற வழியில்லாமல் போய் விடும்” என்றேன் நான். கல்யாணசுந்தரத்தின் பேச்சை விளையாட்டாகவே பாவித்துத் தள்ளி விடப் பார்த்தேன். அதற்கு அவன் இடங்கொடுக்கவில்லை. வேலை ஒன்றும் ஓடாமல் அவன் தவிப்பதையும், அடிக்கடி பெருமூச்சு விடுவதையும், ராத்திரி தூங்காதவனைப் போல் முகம் வெளிறிக் கிடப்பதையும், அதையும் இதையும் பார்த்த பின், “ஏதேது பெரியவர் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்து விட்டதே!” என்று எனக்குப் பெருங் கவலையாய் போய்விட்டது! பையனோ, “நீ வேணாப் பார்த்துக் கொண்டே இரு ராகவன், ஒரு நாளைக்கு நான் என் அறையில் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து வைக்கப் போகிறேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அப்புறம் சந்தோஷமாயிருக்கட்டும். சஷ்டியப்பூர்த்தி கல்யாணம் கூடத்தான் வரப்போகிறது. பிள்ளை செத்துப் போனால் அவர்களுக்கென்ன?” என்று இம்மாதிரியெல்லாம் தத்துப்பித்தென்று பேச ஆரம்பித்துவிட்டான். “அப்பாவிடம் நீயே சொல்லேன்” என்றால், அதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை.

நாங்கள் எல்லோரும் குலசேகரபுரத்துக்குப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்து ஒரு வாரம் இருக்கும் ஒரு நாள் காலையில் கணபதிராம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு ஆள் பெரியவருக்குக் கடிதம் கொண்டு வந்தான். அப்போது பெரியவரின் அறையில் நான் இருந்தேன். அவர் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு, “கேட்டாயா, ராகவன் சமாசாரத்தை! மாமண்டூர்க்காரர்கள் கணபதிராம சாஸ்திரிகள் வீட்டுக்கு வந்திருக்கிறார்களாம். என்னை அவசரமாய் வந்துவிட்டுப் போக வேணும் என்று எழுதியிருக்கிறார்” என்றார். இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கல்யாணசுந்தரத்தைப் பார்த்து, “வண்டியை எடுக்கச் சொல்லு” என்று அவர் கூறவே கல்யாணம் வெளியேறினான்.

“ஏதேது? அந்த மாமண்டூர்க்காரர்கள் பலே பேர் வழிகள் போலிருக்கிறது. சாஸ்திரிகளை விடமாட்டேன்னென்கிறார்கள். கலியாணத்துக்குச் செலவான பாக்கிப் பணத்தையும் கேட்க வந்திருக்கிறார்களோ, என்னமோ தெரிய வில்லை!” என்று சொல்லிக் கொண்டே பெரியவர் எழுந்து, “நீயும் வா! அந்தத் தமாஷையும் பார்த்து விட்டு வரலாமே” என்றார். அவர் கூப்பிடாமலே நான் போகத் தயாராயிருந்தேன். வீட்டு வாசலுக்கு வந்ததும், நான் எண்ணியபடியே கல்யாணசுந்தரம் டிரைவரின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.

பெரியவர் வண்டிக்குள் உட்கார்ந்த பிறகுதான் அதைக் கவனித்தார். “நீ என்னத்திற்கு வருகிறாய் கல்யாணம்?” என்றார். “டிரைவரைக் காணோம்” என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான் கல்யாணம். ஆனால் டிரைவர் ஷெட்டுக்குள்ளே தான் இருந்திருக்க வேண்டுமென்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டிற்குள் நுழைந்ததும் முன்புறத்து ஹாலில் சாஸ்திரிகளும் மாமண்டூர் வைத்தீசுவர ஐயரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தோம். நாங்களும் போய் உட்கார்ந்தோம். ஹாலினுடைய மற்றப் புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதற்கப்பால் இருந்த காமிரா உள்ளில் இரண்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். ஹாலுக்குள் நுழையும் போதே அவர்கள் இன்னார் என்று நான் தெரிந்து கொண்டேன். வைதீஸ்வர ஐயரின் சம்சாரமும் பெண்ணுந்தான். எதற்காக இவர்கள் சாஸ்திரிகளின் வீடு தேடி வந்திருக்கிறார்கள்? கல்யாணப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்களே. இதென்ன வேடிக்கை?

சாஸ்திரிகள் பேச ஆரம்பித்ததும் ஒருவாறு விஷயம் புரிந்தது.

“ஐயர் வாள்! இவர்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் விட்டிருக்கிறார்கள். பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து ‘கல்யாணம் செய்து கொண்டால்தான் ஆச்சு’ என்கிறார்கள். நான் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. நீங்கள்தான் இவர்களுக்குப் புத்தி சொல்லி திருப்ப வேண்டும்” என்றார்.

உடனே வைதீசுவர ஐயர் ஆரம்பித்தார். “பணக்கரரகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரிகிறதில்லை என் கையில் காலணாக் கிடையாது; வேலை போய் மூன்று வருஷத்துக்கு மேல் ஆச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். பெண்ணுக்கோ, வயதாகிவிட்டது; இந்தக் காலத்திலே சாதாரணமாய் வரம் கிடைப்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஒரு தடவை நிச்சயமாகித் தட்டிப் போச்சு என்றால், அப்புறம் எவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வருவான்? நீங்கள் பட்டுக்குத் தடபுடலாய் வந்து கல்யாணத்தை நிறுத்தி விட்டு வந்துவிட்டீர்கள். பொறுப்பு என் தலையில் தானே விழுந்திருக்கிறது? நீங்களா வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறீர்கள்…?”

இந்தச் சமயத்தில் உள்ளே கதவோரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாள் ஒரு அடி முன்னால் வந்து “ஏன்? இவாளாத்திலே கூட ஒரு பிள்ளை கல்யாணமாகாமல் இருக்காமே! வேணுமானால் பண்ணிக்கொள்ளட்டுமே!” என்றாள். பலே! ஸ்திரீகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?

கல்யாணசுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சட்டென்று எழுந்து வெளியே போனான்.

இதுவரையில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண ஐயருக்கு, கல்யாணம் வெளியில் போனதும் கொஞ்சம் தைரியம் வந்தது.

“சரிதான் ஐயா! உங்களுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கலாம். இந்தக் காலத்திலே வீட்டுக்கு வீடுதான் வாசற்படியாயிருக்கிறது. யாருக்குத்தான் சிரமம் இல்லை? அதற்காக ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் படு குழியில் தள்ளி விடுகிறதா?” என்றார்.

அதற்குள் உள்ளேயிருந்த அம்மாள், “குழியிலே தள்ளுவானேன்? பெத்து வளர்த்தவாளுக்கு இல்லாத அக்கறை அசல் மனுஷாளுக்கு எப்படி வந்துவிடும்? நாங்கள் அப்படி ஒன்றும் காட்டுமிராண்டிகள் அல்ல. பெண்ணின் சம்மதங் கேட்டுக் கொண்டு தான் தீர்மானித்தோம். அவ்வளவு சந்தேகமாயிருந்தால், நீங்களே அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ!” என்றாள்.

“கமலா இப்படி இங்கே வா! மாமா கேட்கிறதுக்குப் பதில் சொல்லு!” என்றார் வைத்தீசுவர ஐயர்.

அவருடைய சம்சாரம், “போடி, அம்மா, போ. வெட்கப்படாமல் உன் மனதிலிருக்கிறதைச் சொல்லு! அப்புறம் எங்களைப் போட்டுத் தொளைக்காதே!” என்றாள்.

வைத்தீசுவர ஐயர் மறுபடியும், “உங்களுக்கு வாஸ்தவத்தைச் சொல்லுகிறேன். ஒரு தடவை தட்டிப் போன பிறகு மறுபடியும் இங்கே வர எங்களுக்கும் இஷ்டமில்லை தான். இந்தப் பெண் தான் பிடிவாதம் பிடிச்சு, இவரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று அடம் பண்ணி எங்களை இழுத்துக் கொண்டு வந்திருக்காள். உண்டா இல்லையா என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

இதற்குள், கமலா நாங்கள் இருந்த இடத்துக்குச் சமீபம் வந்தாள். கோபாலகிருஷ்ண ஐயரை நேருக்கு நேர் பார்த்தாள். “எங்க அப்பா சொன்னது அவ்வளவும் நிஜம். எனக்கு இவாளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத் தான் இஷ்டம், என் சம்மதத்தின் மேலே தான் எங்க அப்பாவும் அம்மாவும் என்னை அழைச்சுண்டு வந்தா. என்னை ஒருவரும் பலவந்தம் பண்ணவில்லை” என்று கணீரென்று சொன்னாள்.

கோபாலகிருஷ்ண ஐயர் திகைத்துப் போய் விட்டார். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, “அப்படியானால் கல்யாணத்தன்றைக்கு அப்படி ஏன் அம்மா விம்மி விம்மி அழுதாய்?” என்று கேட்டார்.

எப்படியும் பெரிய வக்கீல் பெரிய வக்கீல் தான், என்று நான் மனத்திற்குள் எண்ணினேன். ஆனால், கமலா, அந்தப் பெரிய வக்கீலையும் முதுகுக்கு மண் காட்டி விட்டாள்.

“கல்யாணத்தில் இஷ்டம் இல்லாததற்காக நான் ஒன்றும் அழவில்லை. நீங்கள் எல்லாம் திடீரென்று வந்து அமர்க்களம் பண்ணியதைப் பார்த்துத் தான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் அழுகை வந்தது!”

“பேஷ் அம்மா, பேஷ்! ரொம்பக் கெட்டிக்காரி நீ? உனக்கே சம்மதமானால் எங்களுக்கு என்ன ஆட்சேபம். சாஸ்திரிகளும் நானும் ரொம்ப நாள் சிநேகிதர்கள். அவருக்கு உன்னைப் போன்ற சமத்துப் பெண் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிவிட்டுக் கோபாலகிருஷ்ண ஐயர் எழுந்திருந்தார்.

“அப்பா, அவாள் கொடுத்த பணத்தை அவாளிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்றாள் கமலா.

வைத்தீசுவர ஐயர் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.

“வேண்டாம் வேண்டாம், என்னால் நேர்ந்த நஷ்டத்துக்கு ஈடாயிருக்கட்டும்” என்று மறுதளித்து விட்டுப் பெரியவர் வெளிக் கிளம்பினார். வண்டி கிளம்பி கொஞ்ச தூரம் போனதும், கோபாலகிருஷ்ண ஐயர், “எல்லாம் அந்தப் பொம்மனாட்டியின் வேலை. பலே கைகாரி அவள். புருஷனைக் கண்ணில் விரல் கொடுத்து ஆட்டி வைக்கிறாள். அவன் சுத்த ‘ஹென்பெக்டு’. சுயபுத்தியே கிடையாது. தாயாருக்குத் தகுந்த பெண். வெகு சமத்து. அம்மா சொல்லிக் கொடுத்த பாடத்தை நன்றாய் ஒப்பிக்கிறது. என்னமோ பாவம்! அதன் தலையெழுத்து அந்தக் கிழவனைக் கட்டிக்கொண்டு காலங் கழிக்கணும்னு இருக்கு” என்றார்.

கல்யாணசுந்தரம் என்னமோ சொன்னான். சரியாய்க் காதில் விழவில்லை.

நான் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சற்று முன் கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டில் நடந்த நாடகத்தில் ஏதோ ஒரு மறைபொருள் இருப்பதாக எனக்குத் தோன்றிற்று. அது என்னவாயிருக்கும்? நடந்ததெல்லாம் சரிதான். எல்லாரும் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டுப் பேசியது போல் தான் காணப்பட்டது. ஆனாலும் இன்னதென்று விளங்காத ஒரு வேதனை என்னைப் பிடுங்கித் தின்றது. ஏதோ ஒரு இரகசியம் – புலப்படாத மர்மம் – கட்டாயம் இருக்கிறது. அது என்னவாயிருக்கும்?

வழியிலே என்னுடைய சொந்த வீடு இருந்தது. “நான் இறங்கிக் கொள்கிறேன்; சாப்பிட்டுவிட்டு மத்தியானம் வருகிறேன்” என்றேன். அன்று கோர்ட் இல்லை.

என்னை வீட்டில் இறக்கிவிட்டு, வண்டி போய் விட்டது. பிற்பகல் மூன்று மணிக்கு, நான் பெரியவர் வீட்டுக்குப் போனவுடனே, வேலைக்காரன், “நீங்க வந்தாச்சா என்று ஐயா கேட்டாங்க; வந்தவுடனே மேலே வரச் சொன்னாங்க” என்றான்.

மாடியில் பெரியவர் ஏதோ கோபமாகப் பேசும் சப்தமும் அதற்குக் கல்யாணம் படபடவென்று பதில் சொல்லும் சப்தமும் கேட்டது. “சரி பையன் வாயைத் திறந்து பேசி விட்டான். பெரியவர் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சங்கடத்தில் நாம் அகப்பட்டு விழிக்கப் போகிறோமே” என்று எண்ணிக் கொண்டே மேலே போனேன்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த பெரியவர் என்னைக் கண்டதும் நிமிர்ந்து உட்கார்ந்து “கேட்டாயா ராகவன்! இந்தப் பையனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. ‘எனக்குக் கல்யாணம் பண்ணி வை’ என்று வெட்கமில்லாமல் கேட்க ஆரம்பித்து விட்டான். அதோடு இல்லை. அந்த அதிகப் பிரசங்கிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானாம்?” என்று கூச்சல் போட்டார்.

ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த கல்யாணம் எழுந்து நின்று கொண்டான்.

“யார் அதிகப் பிரசங்கி? அந்தப்பெண் அப்படி என்ன அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி விட்டது? அதிகப்பிரசங்கித்தனம் நாம் தான் செய்தோம். நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்திலே போய்த் தலையிட்டு ஒரு கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்தது அதிகப் பிரசங்கித்தனம் இல்லையாக்கும்?”

“கேட்டாயா, ராகவன்? கேட்டுண்டாயா என்கிறேன். எல்லாத்தையும் நன்னாக் கேட்டுக்கோ!” என்றார் பெரியவர்.

கல்யாணம் மறுபடியும் சீறினான். “என்னத்தைக் கேட்கிறது? அந்த அம்மாள் கேட்டாளே ஒரு கேள்வி, அதற்கு என்ன பதில் சொல்றேள்? ‘உங்காத்திலேயும் ஒரு பிள்ளை இருக்காமே, அதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறதுதானே’ என்று கேட்டாளோ, இல்லையோ? அதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வாயில்லையே? கல்யாணத்தை மாத்திரம் போய் என்னத்துக்காகத் தடை செய்தேள்?”

“பிசகுடாப்பா, பிசகுதான், என் பேரிலே பிசகுதான். அந்தப் பெண் தொண்ணூறு வயதுக் கிழவனை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும். அந்த அதிகப்பிரசங்கி எனக்கு நாட்டுப் பெண்ணாக வரவேண்டாம். அந்த வாயாடிப் பொம்மனாட்டியும், அந்த ‘ஹென்பெக்டு ஹஸ்பெண்டும்’ எனக்குச் சம்பந்திகளாக வரவும் வேண்டாம்” என்றார் பெரியவர்.

“உங்களுக்கு வேண்டாமென்றால் சரியாகப் போய்விட்டதா? உலகமெல்லாம் உங்கள் சௌகரியத்துக்காகவே தானா ஏற்பட்டது? தேசத் தொண்டு, சமூகத் தொண்டு என்று பேசுகிறதெல்லாம் இந்த லட்சணந்தான்! சொந்தக்காரியம் என்று வந்தால் பறந்து விடுகிறது. இந்த மாதிரி எல்லோரும் பிறத்தியாருக்கு வாத்தியாராயிருக்கும் வரையில் நம்முடைய தேசம் எங்கே உருப்படப் போகிறது?” என்றான் கல்யாணம். “கேட்டுண்டாயா ராகவன். கேட்டுண்டாயான்னேன்! இவன் எப்போ இப்படியெல்லாம் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சுட்டானோ, அப்புறம் நான் இவனோடு பேசறத்துக்கே தயாராயில்லை! எங்கேயாவது போகச் சொல்லு, என்னவாவது பண்ணச் சொல்லு” என்றார் பெரியவர்.

“பேசாமற் போனால் ரொம்ப மோசமாய்ப் போச்சாக்கும்” என்று கல்யாணம் முணு முணுத்தான்.

இதுவரையில் நான் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தேன். இப்போது அப்பா பிள்ளை பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டு விட்டபடியால், நான் தலையிட வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டது.

“கல்யாணம்! இவ்வளவு கோபமும் தாபமும் என்னத்திற்காக? உன் மனதிலிருக்கிறதை நிதானமாகச் சொல்லேன்” என்றேன்.

“நிதானமாவது மண்ணாங்கட்டியாவது? எல்லாம் நிதானமாய்ச் சொல்லி அழுதாயிடுத்து. நான் அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அப்பா சம்மதித்தாலாச்சு; இல்லாவிட்டால்…”

“அடப்பாவி! நான் சம்மதிச்சாலும் உங்க அம்மா சம்மதிக்க மாட்டாளேடா! ஊரை இரண்டு பண்ணி விடுவாளே! நல்ல வேளையா அவள் இப்போது பெண்ணாத்துக்குப் போயிருக்காள். இங்கேயிருந்திருந்தால், இதற்குள்ளே ரகளையாயிருக்குமே?” என்றார் பெரியவர்.

“நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா? அம்மா பண்ணிக்கப் போறாளா? சற்று முன்னாலே மாமண்டூர்க்காரரை ‘ஹென்பெக்டு’ என்று சொன்னீர்களே? நீங்கள் மாத்திரம் என்னவாம்?” என்று கல்யாணம் பளிச்சென்று கேட்டான்.

இப்படிக் கேட்கிறானே பாவி, பெரியவருக்கு நிஜமாகவே கோபம் வந்து விடப் போகிறதே என்று ஒரு கணம் பயந்து போனேன். நல்ல வேளை, நான் பயந்ததற்கு நேர்மாறாக காரியம் நடந்தது. கோபாலகிருஷ்ண ஐயர் குபீரென்று சிரித்துவிட்டார். பெரியவருக்கு, எப்போதுமே நகைச்சுவையுள்ளவர் என்று பெயர் உண்டு. எதிராளி மடக்கிவிட்டால், அவர் கோபங் கொள்ள மாட்டார். கோபப்பட்டால் கட்சி அடியோடு போய் விடுமென்று அவருக்குத் தெரியும்; ஆகையால் சிரித்து மழுப்புவார்.

இப்போதும் அப்படித்தான் பண்ணினார். சிரித்துக் கொண்டே, “ஆமாண்டாப்பா, ஆமாம்! நான் ‘ஹென்பெக்டு’தான். என்னைப் பார்த்தாவது நீ எச்சரிக்கையாயிரு. அசட்டுப் பிசட்டுக் காரியம் பண்ணிவிட்டு அப்புறம் அகப்பட்டுண்டு முழிக்காதே!” என்றார். அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு ஒத்தாசையாகப் பேச்சைத் திருப்ப எண்ணி, நானும், “பையனுக்கும் வயதாகி விட்டதோ, இல்லையோ? நீங்கள் பாட்டுக்கு வந்த பெண்ணையெல்லாம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுகிறது? இப்படித்தான் ஏதாவது விபரீதமாய் வந்து சேரும்” என்றேன்.

“என் மேலே என்ன தப்பு, ராகவன்? அவன் அம்மாதான் அப்படிப் பண்ணின்டிருக்கா. இப்போதுக் கூட கையிலே மூன்று ஜாதகம் இருக்கு. ஒரு ஜில்லா ஜட்ஜின் பெண், ஒரு ஐ.சி.எஸ்.ஸின் பெண், ஒரு முந்நூறு காணிப் பண்ணையாரின் பெண். அடுத்த வாரத்திற்குள்ளே ஏதாவது ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணிக் கல்யாணம் செய்து வைக்கிறேன். இவனை மட்டும் அம்மா பேச்சைக் கேட்காமல் சம்மதிக்கச் சொல்லு” என்றார்.

“அதெல்லாம் முடியவே முடியாது. நான் இந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்” என்றான் பிள்ளையாண்டான்.

இதற்குள் வாசலில் வண்டிச் சத்தம் கேட்கவே, யார் என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். கணபதிராம சாஸ்திரிகள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

“இதென்ன கூத்து, சாஸ்திரிகள் வருகிறாரே? நம்மை விடமாட்டார் போலிருக்கிறதே!” என்றேன்.

“வரட்டும் வரட்டும்; என்ன வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான். எந்த வேளையிலே அந்தக் கல்யாணத்தை நிறுத்துகிறதற்காகக் கிளம்பினோமோ, தெரியவில்லை” என்றார் பெரியவர். கணபதி ராம சாஸ்திரிகள் மேல் மாடிக்கு வந்து சேர்ந்தார். ஆனால், காலையில் பார்த்த மாதிரி அமைதியான தோற்றமுடையவராயில்லை. முகமே மாறு பட்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்திருந்தது. நடக்கும் போது கால் தடுமாறிற்று. சுருங்கச் சொன்னால் திடீரென்று பத்து வருஷம் அதிக வயதானவரைப் போல் காணப்பட்டார். என் மாதிரியே, கல்யாணமும் அவனுடைய தகப்பனாரும் அதிசயத்துடன் அவரை நோக்கினார்கள்.

பெரியவர், “என்ன சாஸ்திரிகளே? விஷயம் என்ன? உடம்பிலே ஏன் இவ்வளவு படபடப்பு? உட்காருங்கள். உட்கார்ந்து நிதானமாய்ச் சொல்லுங்கள்” என்றார்.

கணபதிராம சாஸ்திரிகள் சாய்வு நாற்காலியில் தொப்பென்று விழுந்தார்.

தொண்டை அடைக்க, தழுதழுத்த குரலில், “நீங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை மகா பாபத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்றார். உடனே முகத்தைத் துணியினால் மூடிக் கொண்டார். விம்மல் சத்தம் கேட்டது.

அவரை ரொம்பவும் ஆசுவாசப் படுத்தினோம். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மனதில் மட்டும், ‘ஏதோ மர்மம் இருக்கிறது என்று நாம் எண்ணியது சரி; அது இப்போது வெளியாகப் போகிறது’ என்று தோன்றிற்று.

“அன்று குலசேகரபுரத்துக்கு நீங்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால் எப்பேர்ப்பட்ட விபத்து நேர்ந்திருக்கும். அதை நினைத்தாலே எனக்குப் பயங்கரமாயிருக்கிறது. இதோ பாருங்கள் என் உடம்பில் மயிர் சிலிர்த்திருக்கிறது” என்றார் சாஸ்திரிகள்.

நாங்கள் பார்த்தோம். அவர் உடம்பிலே ரோமங்கள் குத்திக் கொண்டுதான் நின்றன.

“என் கை நடுங்குகிறதைப் பாருங்கள்” என்றார்.

பார்த்தோம்; கை நடுங்கிக் கொண்டிருந்தது.

“சமாசாரம் என்ன, சாஸ்திரிகளே? ஏதாவது நடவடிக்கை எடுத்து கொள்வது அவசியமாயிருந்தால் சீக்கிரம் சொன்னால் தானே தேவலை?” என்றார் பெரியவர்.

அந்த மாமண்டூர்க்காரர்கள், ஒரு வேளை, சாஸ்திரிகளைக் கொலை கிலை செய்ய முயற்சித்தார்களோ என்ற சந்தேகம் பெரியவருக்கும் உதித்திருக்க வேண்டும். அதனால்தான் நடவடிக்கையைப் பற்றி அவர் பிரஸ்தாபித்தார்.

கணபதிராம சாஸ்திரிகள் கொஞ்சம் தயங்கி யோசனை செய்துவிட்டு, “அடியே பிடித்துத்தான் சொல்லியாக வேண்டும்” என்றார்.

“பேஷாய்ச் சொல்லுங்கள். நிதானப்படுத்திக் கொண்டு சொல்லுங்கள்” என்றார் பெரியவர்.

எங்களுக்கெல்லாம் வியப்பையும் பரபரப்பையும் பயங்கரத்தையும் மகிழ்ச்சியையும் மாறி மாறி உண்டாக்கி வந்த பின்னவரும் அதிசயமான விவரத்தைக் கணபதிராம சாஸ்திரிகள் கூறினார்:-

கமலாவின் வரலாறு

“நீங்கள் காலையில் என் வீட்டிலிருந்து கிளம்பிப்போன பிறகு, எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் இஷ்டம் கிடையாது. துர்போதனையில் மயங்கிப் போய்ச் சம்மதித்து விட்டேன். குலசேகரபுரத்தில் கல்யாணத்தன்றைக்குக் கூட எனக்கு மன நிம்மதியேயில்லை. நீங்கள் வந்து தடுத்ததும், நல்லதாய்ப் போயிற்று என்று நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

இன்றைக்கு இவர்கள் மறுபடியும் வந்து சேர்ந்ததும் உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். நீங்கள் வந்தால் எப்படியும் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவீர்களென்று நினைத்தேன். நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள். நீங்கள் வந்த பிறகு அவர்கள் இன்னும் நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தார்கள். நான் யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். உங்கள் பெண்ணின் இஷ்டத்தினால்தான் வந்திருப்பதாய்ச் சொல்கிறீர்கள். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவளிடம் தனியாய்ச் சற்று நேரம் பேச வேண்டும். பேசி உங்கள் நிர்ப்பந்தத்தினால் அவள் வரவில்லை என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவாகப் பதில் சொல்வேன் என்றேன். அவர்கள் கொஞ்சங்கூட ஆட்சேபிக்காமல் அதற்குச் சம்மதித்தார்கள். பெண்ணை அந்த ஹாலிலேயே விட்டு விட்டு உள்ளே சென்றார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘கமலா, உன் அப்பாவிடம் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? உன்னை இவர்கள் நிர்ப்பந்தப் படுத்தவில்லையென்பது நிஜந்தானா?’ என்று கேட்டேன்.

“நிஜந்தான். அவர்கள், என்னை நிர்ப்பந்தப்படுத்தவேயில்லை. நான் தான் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வந்தேன்” என்றாள்!

“அப்படியானால் நிஜத்தைச் சொல்லு, என்னத்திற்காக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்கிறாய்? அப்பா அம்மாவைப் பிடிக்கவில்லையா? அவர்களுடன் இருப்பது கஷ்டமாயிருக்கிறதா?” என்று கேட்டேன்.

“கஷ்டம் ஒன்றுமில்லை; ஆனால், அவர்களுடன் இனிமேல் இருக்க எனக்கு இஷ்டமில்லை!” என்று அந்தப் பெண் சொன்னாள்.

“ஏன்?” என்று கேட்டேன்.

அவள் பதில் சொல்லத் தயங்கினாள்.

“நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் உன்னோடு காலங்கழிக்க வேண்டுமே? உன்னிடம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தால்தானே அது முடியும்? இப்பொழுது நீ நிஜத்தைச் சொல்லாவிட்டால், உன்னிடம் எப்படி எனக்கு நம்பிக்கை ஏற்படும்?” என்று கேட்டேன்.

“நான் நிஜத்தைச் சொல்கிறேன். ஆனால் அதற்காக என்னை நீங்கள் நிராகரிக்கக் கூடாது. அப்பா, அம்மாவிடம் நான் சொல்வதைச் சொல்லவுங் கூடாது” என்று கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.

“அதெல்லாம் நான் ஒன்றும் வாக்களிக்க முடியாது. முதலில் நீ நிஜத்தைச் சொல்லு. உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டானால், அதற்குப் பிறகு முடிவு சொல்கிறேன்” என்றேன்.

“அப்பாவும் அம்மாவும் ரொம்ப தரித்திரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவுக்கு வேலை போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. எனக்கு ஐந்து பேர் தம்பி தங்கைகள். வீட்டிலே சில நாளைக்குச் சாப்பாடு கூடக் கிடைக்கிறதில்லை. நீங்கள் பணக்காரர் என்று எனக்குத் தெரியும். உங்களைக் கல்யாணம் செய்து கொண்டால், அவர்களுக்கெல்லம் ஒத்தாசை செய்யலாம் என்ற ஆசைதான். நிஜத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் நீங்கள் விட்டவழி விடுங்கள்” என்றாள்.

என் மனது இரங்கிவிட்டது. ஆனாலும், ஒருவாறு மனதைக் கடினப்படுத்திக் கொண்டு, “அப்படியானால் உங்கள், அப்பா அம்மாவின் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதித்தாய் என்று சொல்லு; அவர்களுக்கு ஒன்றும் ஒத்தாசை செய்ய முடியாது என்று நான் சொல்லி விட்டால் என்ன பண்ணுவாய்?” என்றேன்.

“கல்யாணச் செலவு, எதிர் ஜாமீனாவது இல்லாமல் போய் விடுமோ, இல்லையோ? என்னை இத்தனை நாள் வளர்க்கிறதற்கே அவர்களுக்கு எத்தனையோ பணச் செலவு ஆகியிருக்கிறது.”

“ரொம்ப அழகாயிருக்கே நீ சொல்கிறது? பெண்ணை வளர்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறது பெற்றவர்களுடைய கடமை. இதற்காக நீ என்னத்திற்குக் கவலைப்பட வேண்டும்?”

“பெற்றவாளாயிருந்தல் நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால், அவாள் என்னைப் பெற்றவாள் இல்லை. என்னுடைய சொந்த அப்பா, அம்மா இல்லை.”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என்ன சொல்லுகிறாய், நிஜமாகவா?” என்று கேட்டேன். “உங்களுக்குப் புண்ணியம் உண்டு. கொஞ்சம் மெதுவாய்ப் பேசுங்கள். நான் இதையெல்லாம் உங்களிடம் சொன்னதாய் அவர்களுக்குத் தெரியக்கூடாது. ஒரு மாதத்துக்கு முன்னாலே தான் எனக்கே இது தெரிஞ்சுது. ஒரு நாளைக்கு அப்பாவும் அம்மாவும் தனியாகக் கதவைச் சாத்திண்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என் கலியாண விஷயமாய்த்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு நான் ஒட்டுக்கேட்டேன். ‘அதுக்காகக் கமலாவைப் பலி கொடுக்கணும் என்கிறாயா?’ என்று அப்பா சொன்னார். அதற்கு அம்மா, ‘பலி கொடுக்கிறது என்ன? நல்ல பணக்கார இடத்திலே தானே கொடுக்கப் போகிறோம்? நடுச்சாலையிலே அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்துப் பதின்மூன்று வருஷமாக வளர்க்கலையா? அவளுக்கும் நம்ம சொந்தக் குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசம் பாராட்டினோமா? அவள் வந்த முகூர்த்தம் நமக்கு நாலைந்து குஞ்சு குழந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. தரித்திரமோ பிடுங்கித் தின்கிறது. இத்தனை வருஷமாய் அவளை வளர்த்ததற்கு அவளாலே தான் நமக்கு ஏதாவது உபகாரம் ஏற்படட்டுமே! அதிலே என்ன பிசகு?’ என்று சொன்னாள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அப்படிப் பதின்மூன்று வருஷம் என்னை வளர்த்தவாளுக்கு நான் பதிலுக்கு உபகாரம் கட்டாயம் செய்யணும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அதனால் தான் உடனே உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். உங்களுடைய நல்ல குணத்தைப் பார்த்த பிறகு அந்த உறுதி அதிகமாயிற்று. நிஜத்தைச் சொல்லிவிட்டேன். நீங்கள் என்னைக் கைவிட்டால், திரும்பி அவர்கள் வீட்டுக்கு நான் போகப் போவதில்லை. வழியில் எங்கேயாவது ரயிலிலேயிருந்து குதித்தாவது உயிரை விட்டு விடுவேன்” என்றாள்.

இந்த அதிசயமான விவரத்தைக் கேட்டுக் கொண்டு நான் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தேன். என் நெஞ்சு மட்டும் எதனாலோ, படீர், படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய சந்தேகம் – பயங்கரமும் ஆனந்தமும் கலந்த சந்தேகம் – என் மனத்தில் உதித்து விட்டது.

“இப்போது உனக்கு என்ன வயது அம்மா” என்று கேட்டேன்.

“பதினாறு” என்றாள்.

“உன் சொந்த அப்பா அம்மாவைப் பற்றி ஏதாவது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன்.

“ஒன்றுமே ஞாபகமில்லை” என்றாள்.

“உன்னை எங்கே கண்டெடுத்தார்களாம். அதாவது தெரியுமா?” என்று கேட்டேன்.

“கும்பகோணம் மகாமகத்தின் போது அகப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள்” என்று அவள் சொன்னதும், என்னுடைய பரபரப்பு அளவு கடந்துவிட்டது.

“இங்கே வா, அம்மா! கொஞ்சம் வலது காதை மடித்துக் காட்டு” என்றேன்.

அவள் தயங்கியதைப் பார்த்துவிட்டு, “பயப்படாதே அம்மா! இப்படி வா! ஒரு அடையாளத்துக்காகக் கேட்கிறேன்” என்றேன். அவள் அருகில் வந்ததும் அவளுடைய வலது காதை மடித்து விட்டுப் பார்த்தேன். அதன் பின்னால் மூன்று கறுப்பு மச்சங்கள் பளிச்சென்று தெரிந்தன.

“என் கண்ணே! நீ என் சொந்தப் பெண்ணடி!” என்று கத்திக் கொண்டே அவளைக் கட்டிக் கொள்ளப் போனேன். திடீரென்று கண் இருண்டு வந்தது. கீழே விழுந்து விட்டேன். இப்படிச் சொல்லிவிட்டு கணபதிராம சாஸ்திரி நிறுத்தினார். என் மனதில் காலையிலிருந்து உறுத்திக் கொண்டிருந்த மர்மமான விஷயம் இன்னதென்று இப்போது விளங்கிவிட்டது. அது கணப்திராம சாஸ்திரிக்கும் கமலாவுக்கும் முகபாவத்தில் காணப்பட்ட ஒற்றுமை தான்.

நாங்கள் மூன்று பேரும் எங்கள் அதிசயத்தைப் பல விதத்திலும் தெரிவித்தோம். “நீங்கள் ரொம்பப் புண்ணியம் செய்தவர். அதனால் தான் உங்களைப் பகவான் அப்பேர்ப்பட்ட பாவத்திலிருந்து காப்பாற்றினார். பெண்ணையும் கொண்டு வந்து சேர்த்தார்” என்று அவரைப் பாராட்டினோம்.

“பகவான் உங்கள் மூலமாக என்னைத் தடுத்தாட்கொண்டார். அதனால் பாக்கிக் காரியத்தையும் நீங்கள் தான் செய்து கொடுக்க வேணும். குழந்தைக்குக் கல்யாணம் பண்ணி வைத்த பிறகுதான் என் மனதில் ஏற்பட்டுள்ள பயங்கரம் நீங்கும்; நிம்மதி ஏற்படும் ஐயர்வாள்! வேறு எது எப்படியிருந்தாலும் வித்தியாசம பார்க்காமல் உங்கள் பிள்ளைக்கே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் ஆகி விடவேண்டும்” என்றார் கணபதிராம சாஸ்திரிகள்.

இவ்வாறு கல்யாணசுந்தரத்தின் கட்சியில் பகவானே இருந்து, அவன் மனோரதத்தை நடத்தி வைத்தார். பெரியவரின் சம்மதம் உடனே கிடைத்து விட்டது. அம்மாளின் சம்மதம் பெறுவது அவ்வளவு சுலபமாயில்லை. ஆனால் கணபதிராம சாஸ்திரிகள் கமலாவின் பேருக்குத் தம் முக்கால் லட்சம் சொத்தையும் எழுதி வைத்து உயிலையும் கொண்டு வந்து கொடுத்த பிறகு, அம்மாளின் சம்மதமும் கிடைத்து விட்டது. அடுத்த முகூர்த்த தினத்தில் கமலாவின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

இந்த விஷயத்தில் கல்யாணசுந்தரம் காட்டிய பிடிவாதமும் உறுதியும் அவனிடம் எனக்கு ரொம்ப மதிப்பை உண்டாக்கிவிட்டது என்பதைச் சொல்ல வேண்டும். அவனும் என்னிடம் மிகவும் நன்றியுடனிருக்கிறான்.

இதை எழுதிய பிறகு, இந்தக் கதைக்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் பார்த்தேன். இரண்டு விதத்திலும் அது பொருத்தமாயிருப்பது தெரிய வந்தது. பிள்ளையாண்டான் இப்போது ‘கமலாவின் கல்யாண’மாகத்தான் விளங்குகிறான். அப்பாவுக்குப் பிள்ளைதானே?

இத்துடன்

அமரர் கல்கியின் கமலாவின் கல்யாணம்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Kamalavin Kalyanam Kalki Tag

kalki novels,kalki novels in tamil,kalki novels pdf download,kalki novels in tamil pdf download,kalki novels in english,kalki novels app,kalki novels in tamil free download,

kalki story,kalki story books,kalki story books list,kalki story in kannada,kalki story books free download,kalki storyline,kalki story novel,kalki story download,kalki avatar story in hindi,kalki avatar story in tamil,kalki bhagwan story,kalki avatar story in telugu,kalki avatar story in gujarati,kalki avatar story in malayalam

kalki books,kalki books in tamil,kalki books in english,kalki books online,kalki books in tamil pdf free download,kalki books buy online,kalki books order to read,kalki books online reading,kalki books pdf download,order of kalki books,who will kalki marry,is kalki indian

kalki audiobook,parthiban kanavu kalki audiobook

kalki krishnamurthy kalki krishnamurthy novels in tamil kalki krishnamurthy in tamil kalki krishnamurthy books in english kalki krishnamurthy best novels kalki krishnamurthy ponniyin selvan kalki krishnamurthy memorial trust kalki krishnamurthy road thiruvanmiyur kalki krishnamurthy biography in hindi kalki krishnamurthy quotes kalki krishnamurthy social novels kalki krishnamurthy alai osai kalki krishnamurthy songs kalki krishnamurthy movies

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,kamalavin kalyanam Audiboook,kamalavin kalyanam,kamalavin kalyanam Kalki,Kalki kamalavin kalyanam,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *