Kalki Short StoriesKalki TimesStory

Prabala Nakchatiram Kalki | Kalki Times

அத்தியாயம் 4: வெள்ளித்திரை

நாளைய தினம் அமாவாசை!
சென்ற மூன்று இரவுகளில் நான் எழுதியதையெல்லாம் இன்று மத்தியானம் படித்துப் பார்த்தேன். இடையிடையே சில சம்பந்தமில்லாத சொற்களும், அர்த்தமில்லாத வாக்கியங்களும், குழப்பமான எழுத்துக்களும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் அடித்துச் சரிப்படுத்தினேன்.
பகவானே! நாளைய இராத்திரி வரையில் எனக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். பிறகு வேகவதியில் அடைக்கலம் புகுந்து உன் பாதாரவிந்தத்தை வந்து அடைவேன்.
மேலே கூறிய விபரீத சம்பவம் நடந்த போது, அப்பா சென்னைப் பட்டணத்தில் என் இன்னொரு அக்கா வீட்டில் இருந்தார். என் தந்தியைப் பார்த்துவிட்டு, அவர் ஓடி வந்தார்; நல்லவேளையாக, என் கணவர் எழுதி வைத்த சீட்டைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவு நான் கண்டதை அப்பாவிடம் கூடச் சொல்லவில்லை.
அப்பா அந்தக் கடிதத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்தார். போலீஸ்காரர்கள் ஏதேதோ முயற்சி செய்து பார்த்ததாகவும் தகவல் ஒன்றும் தெரியவில்லையென்றும் சொன்னார்கள்.
சில சமயம் வெள்ளத்தில் போனவர்களின் உடல்கள் கரையில் ஒதுங்குவது வழக்கமல்லவா? அந்த மாதிரி அவருடைய உடல் ஒதுங்குமோ என்று சில சமயம் நான் எண்ணி நடுங்குவேன். ஒரு வாரம் வரையில் அம்மாதிரி எதுவும் செய்தி வராமலிருக்கவே, இந்தப் பாவி உள்ளத்தில் ஒருவித அமைதி உண்டாயிற்று. ஏனெனில், அவர் நிச்சயமாக இறந்த செய்தி தெரிந்தால் என்னை இல்லாத அலங்கோலங்கள் எல்லாம் செய்து விடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான் பயந்தேன்.

சில நாளைக்குப் பிறகு அப்பா என்னைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துப் போனார். அங்கே மீனா அக்கா வீட்டில் தங்கினோம். மீனா அக்காவின் புக்ககத்தில் எல்லோரும் குஷிப் பேர்வழிகள். நாகரிக வாழ்க்கையில் பற்று உடையவர்கள். அதோடு சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஓயாமல் சங்கீதம், நாட்டியம், நாடகம், சினிமா இவைகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட இடத்திலே இருந்தால், நான் என்னுடைய துக்கத்தை மறந்திருக்க முடியும் என்று என் தகப்பனார் எண்ணினார். அதோடு பெண்களின் கல்வி ஸ்தாபனம் ஒன்றில் என்னைச் சேர்ந்து படிக்கச் செய்யலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.
மீனா அக்கா வீட்டில், முதலில் சில நாள் என்னிடம் எல்லாரும் அனுதாபத்துடன் நடந்து கொண்டார்கள்; துக்க முகத்துடனே பேசினார்கள். வீட்டிலேயே சில நாள் கலகலப்புக் குறைவாயிருந்தது. நாளடைவில் நிலைமை மாறிப் பழையபடியே சிரிப்பும் விளையாட்டுமாயிருக்கத் தொடங்கினார்கள். எல்லாரும் சந்தோஷமாயிருக்கும் இடத்தில் நான் மட்டும் முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. என்னுடைய இளம் பிராயத்துக் குதூகல சுபாவம் மறுபடியும் மேலோங்கியது. எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகவும், சிரிக்கவும் தொடங்கினேன். அதோடு இல்லை; பாடவும் தொடங்கினேன்.

மீனு அக்காவின் வீட்டுக்கு ஒரு சிநேகிதர் அடிக்கடி வருவார். அவர் பெயர் பட்சிராஜன். மீனு அக்காவின் மைத்துனருடன் அவர் காலேஜில் ஒன்றாய்ப் படித்தவராம். தமிழ் டாக்கிகள் ரொம்பக் கேவலமாயிருப்பது பற்றியும் அவற்றைச் சீர்திருத்த வேண்டியதைப் பற்றியுமே அவர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். பாட்டில் அவருக்கு ரொம்பப் பிரியம். ஒருநாள் நான் பாடுவதைக் கேட்டு விட்டு அவர், “இது யார் இவ்வளவு அற்புதமாய்ப் பாடுகிறது? என்ன மதுரமான சாரீரம்? மைக்குக்கு எவ்வளவு பொருத்தமான குரல்” என்று சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. எனக்குப் புளகாங்கிதம் உண்டாயிற்று. நாளடைவில் என்னுடைய கூச்சத்தை விட்டு, புருஷர்களுக்கு முன்னால் பாட ஆரம்பித்தேன். நான் பாடும் போது அவர் அப்படியே மெய் மறந்து கேட்பார். அவருக்குப் புகைப்படமெடுக்கத் தெரியும். ஒரு நாள் கேமரா எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் எல்லோரையும் படம் எடுத்தார். “உங்களையும் ஒன்று எடுத்து வைக்கட்டுமா?” என்றார்; முதலில் நான் மறுத்தேன். எல்லோரும் வற்புறுத்தியதின் பேரில் சம்மதித்தேன்! மறுநாள் அவர் படத்தை எடுத்துக் கொண்டு வந்து, “உங்களுடைய குரல்தான் ‘மைக்’குக்கு ஏற்றது என்று நினைத்தேன், முகமும் திரைக்காகவே ஏற்பட்டது போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார். அதற்கு முன்னால் என்னை நன்றாகப் படம் எடுத்ததேயில்லை! அவர் எடுத்த படத்தைப் பார்த்ததும் எனக்கே கர்வமாயிருந்தது; “நாம இவ்வளவு அழகாகவாயிருக்கிறோம்?” என்று அதிசயித்தேன். “இந்த அழகினால் என்ன பிரயோஜனம்?” என்ற ஏக்கமும் மனத்தில் உண்டாயிற்று.

“அதற்குப் பிறகு அவர் இன்னும் பல தடவை என்னைப் படம் பிடித்தார்; அதோடு, “உங்களைப் போன்றவர்கள் சினிமாவில் சேர்ந்தால் தான், தமிழ் சினிமாவுக்கு விமோசனம்” என்று அடிக்கடி சொல்லி வந்தார். நானும் என் மனதில், “பிரபல நட்சத்திரம் ஆவதற்கே நான் பிறந்திருக்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டேன். டாக்கியில் நடிப்பதைப் பற்றியே கனவு காண ஆரம்பித்தேன்.

இம்மாதிரி என் மனம் சபலப்பட்டிருப்பதை என் அக்கா எப்படியோ தெரிந்து கொண்டாள். சில சமயம் நானும் பட்சிராஜனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் ஒட்டுக் கேட்டதாகத் தெரிகிறது. அவள் என்னைத் திட்ட ஆரம்பித்தாள். எனக்குக் கோபமாய் வந்தது. “உனக்கு என்ன? குழந்தை குட்டிகளுடனும் ஆசைக் கணவனுடனும் சௌக்கியமாயிருக்கிறாய். எனக்கு மட்டும் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டாமா? என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டேன். ஒரு நாள் விஷயம் முற்றி விட்டது. அக்கா பட்சிராஜனிடம் “சினிமா, சினிமா என்று சொல்லி ஏன் அவள் மனத்தைக் கெடுக்கிறீர்கள்? இப்படியெல்லாம் பேசுவதாயிருந்தால், நீங்கள் இந்த வீட்டுக்கு வரவேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே நான், “அவர் இந்த வீட்டுக்கு வரக் கூடாதென்றால் நானும் போய்விடுகிறேன்” என்றேன். அக்கா திகைத்துப் போனாள். கடைசியில், “உங்கப்பா வரட்டும்; அவரைக் கேட்டுக் கொண்டு எது வேணுமானாலும் செய்” என்றாள். அச்சமயம் ஹைதராபாத்துக்குப் போயிருந்த அப்பாவுக்குக் கடிதம் எழுதினாள்.
அப்பா வந்த பிறகு சில நாள் அவருக்கும் எனக்கும் ஒரே போராட்டமாயிருந்தது. “நம் குலத்தில் உண்டா? கோத்திரத்தில் உண்டா? சினிமாவில் நடிக்கவாவது? கூடவே கூடாது!” என்று சொன்னார். “எந்த விதத்திலாவது பெயர் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே எனக்கு வேண்டியதில்லை” என்றேன் நான். கடைசியில் நான் தான் வெற்றி பெற்றேன். என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தவர் பட்சிராஜன் தான். அவரை எப்படியோ அப்பாவுக்குப் பிடித்து விட்டது. ஒரு நாள் பட்சிராஜன் வந்து, குடும்ப ஸ்திரீகளையே பெரும்பாலும் நடிகைகளாகத் தேர்ந்தெடுத்து ஒரு டாக்கி எடுக்கப் போவதாகவும், எங்களுக்குச் சம்மதமானால் என்னைக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுப்பதாகவும் சொன்னபோது, அப்பா தம் சம்மதத்தைக் கொடுத்துவிட்டார். அன்றிரவு அளவிறந்த சந்தோஷத்தினால் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.
பின்னால் நான் எவ்வளவோ ஏமாற்றத்துக்கும் மனத்துயருக்கும் ஆளாக வேண்டியிருந்தது. கதாநாயகி வேஷம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு மட்டமான வேஷந்தான் கிடைத்தது. இந்தத் தடவை அந்த வேஷத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கி விட்டால், அடுத்த தடவை கதாநாயகி வேஷம் கிடைக்குமென்று பட்சிராஜன் தேறுதல் கூறினார். எதனாலோ அவர் பேச்சில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. உண்மையில் அவர் சொன்னபடியே நடக்கவும் நடந்தது. முதல் டாக்கியில் மட்டமான வேஷத்திலேயே நான் நல்ல பெயர் சம்பாதித்தேன். அது வெளியான சில நாளைக்குள்ளேயே, இன்னொரு டாக்கிக்குக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக ஒப்பந்தம் நடந்தது. பட்சிராஜனிடம் எனக்கு அளவிறந்த நன்றியுண்டாயிற்று. “உங்களால் அல்லவா எனக்கு இவ்வளவு பெருமையும் வந்தது?” என்று ஆயிரம் தடவை சொன்னேன். என்னால் ஒன்றுமே நடக்கவில்லை உங்களுடைய முகவெட்டுத்தான் காரணம்; உங்களுடைய சாரீரந்தான் காரணம்” என்று சொல்வார்.

இரண்டாவது டாக்கி எடுப்பதற்காக நாங்கள் கல்கத்தா போனோம். அங்கே ஐந்து மாத காலம் தங்க வேண்டியதாக ஏற்பட்டது. இந்தப் படம் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், நடந்த ஒரு சம்பவம் என் மனத்தில் எப்படியோ மிக ஆழமாய்ப் பதிந்தது. "இது என்ன பிரமாத விஷயம்?" என்று நானே பல தடவை எண்ணமிட்டிருக்கிறேன். என்றாலும் எதனாலோ அச்சம்பவம் என் மனத்தில் மிகவும் முக்கியத்தை அடைந்துவிட்டது.

ஒரு நாளைக்கு ஸ்டுடியோவில், “இன்றைக்கு யாரோ ஒரு பிரமுகர் ஷுட்டிங் பார்க்க வரப் போகிறார்” என்று பிரஸ்தாபம் வந்தது. அவரை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் நடந்தன. வரப்போகிறவர்களின் பெயர் ‘பாபு சம்பு பிரஸாத்’ என்று சொன்னார்கள். “அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா? எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!” என்று விசாரித்தேன். பாபு சம்பு பிரஸாத் மகா மேதாவி என்றும் அவருடைய ஆராய்ச்சிகள் அவரை உலகப் பிரசித்தமாக்கியிருக்கின்றன வென்றும், சமீபத்தில் அவருக்குச் சர்வகலாசாலையார் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்றும் சொன்னார்கள். பட்சிராஜனே அவரைப் பற்றிப் பிரமாதமாகப் பேசினார். “ஒருவேளை இங்கே ஸெட்டுக்கு வந்தாலும் வருவார். அப்போது உன்னை அறிமுகப்படுத்தப் போகிறேன். நீ அவரிடம் தைரியமாகப் பேச வேண்டும்” என்றார். “அவர் என்ன பாஷையில் பேசுவார்?” என்று கேட்டேன். “இந்த வங்காளிகளே சுய பாஷையில் அபிமானம் கொண்டவர்கள். எப்போதும் வங்காளியில் தான் பேசுவார்கள். ஆனால் நாம் தென்னிந்தியர்கள் என்று தெரிந்தால் இங்கிலீஷில் பேசலாம். உனக்குத் தான் தெரியுமே? ஏதாவது கேட்டால் பளிச்சென்று பதில் சொல்லு” என்றார்.

அவ்வளவு பெரிய உலகப் பிரசித்தமான மேதாவியைப் பார்க்க நானும் ஆவலுடன் இருந்தேன். கடைசியாக அவர் மத்தியானம் வந்தார். வங்காளிகளில் பெரும்பாலாரைப் போல் அவரும் நீண்ட தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு பெரிய கும்பலே வந்தது. ஸ்டுடியோ நிர்வாகிகள் அவருக்கு ரொம்பவும் மரியாதை செய்து எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு வந்தார்கள். எங்களுடைய ஸெட்டுக்கு அவர் வந்ததும், பட்சிராஜன் அவரை வரவேற்று, என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் உயர் குடும்பத்துப் பெண். கலையின் மேல் உள்ள ஆர்வத்தினாலேயே சினிமாவில் நடிக்க முன்வந்திருக்கிறார்” என்று அவர் கூறிய போது எனக்கு மிகவும் பெருமையாயிருந்தது. அவருக்கு மனத்திற்குள் நன்றி செலுத்தினேன். அப்போது அந்தப் பிரமுகர், என்னைப் பார்த்து, “நீங்கள் உயர் குடும்பத்துப் பெண்ணாயிருந்து இம்மாதிரி நடிப்புக் கலையில் சிரத்தை கொண்டது மிகவும் சந்தோஷிக்க வேண்டிய காரியம். உங்களைப் போன்றவர்களால் தான் சினிமா உத்தாரணம் ஆக வேண்டும். ஆனால், சினிமா தொழில் ஒழுக்கம் கெட்டுப் போகிறதென்று சாதாரணமாய் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. உங்களைப் போன்றவர்கள் அதைப் பொய்யாக்க வேண்டும்” என்றார். இதையெல்லாம் இங்கிலீஷில்தான் சொன்னார். என்னை என்னவோ செய்தது. அவருக்கு பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், நா எழவில்லை. பட்சிராஜன் என்னைப் பார்த்து, “ஏதாவது பதில் சொல்லுங்கள்” என்றார். “எனக்காக நீங்களே சொல்லுங்கள்” என்றேன் நான். உங்களுடைய புத்திமதிக்காக மாலதி ரொம்பவும் வந்தனம் செலுத்துகிறாள்” என்றார் பட்சிராஜன். அப்போது பாபு சம்பு பிரஸாத் அவருடைய கூரிய கழுகுக் கண்களால் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விட்டார். அந்த மேதாவிக்கு நான் அச்சமயம் வந்தனம் செலுத்தாவிட்டாலும் இப்போது செலுத்துகிறேன். அவருடைய புத்திமதி என் விஷயத்தில் அநாவசியமென்றாலும், எவ்விதக் காரணமும் இல்லாமல், முன்பின் தெரியாத என்னிடம் அவர் சிரத்தை எடுத்துக் கொண்டாரல்லவா? அவருடைய பார்வையையோ, பேச்சையோ என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.
என் இரண்டாவது டாக்கியினால் என் புகழ் பிரமாதமாக வளர்ந்து ‘ஓஹோ’ என்று ஆகிவிட்டது. மாலதியின் படம் வராத பத்திரிகையே கிடையாது (‘மாலதி’ என்னுடைய வெள்ளித்திரைப் பெயர்; பட்சிராஜன் அளித்த பெயர்) தமிழ்நாட்டுப் பட்டணங்களின் சுவர்களில் எல்லாம் மாலதியின் புன்னகை வதனம் காட்சி தந்தது. இப்படி நான் புகழின் சிகரத்தையடைந்திருந்த சமயத்திலே தான், என் தந்தை என்னை இவ்வுலகில் அநாதையாக விட்டு விட்டுக் காலமானார். வெகு நாளாக எங்கள் குடும்பத்திலிருந்த சமையற்காரியைத் தவிர, நான் வேறு துணையில்லாதவளானேன்.

ஆனால் அதிக நாள் துணையின்றி இருக்கவில்லை. இரண்டாவது டாக்கியில் என் புகழ் பெருகியதிலிருந்து அதுவரை என்னைப் பகிஷ்காரம் செய்திருந்த உறவினர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து உறவு கொண்டாடத் தொடங்கினார்கள். வெகு தூரத்து பந்துக்களெல்லாம் வந்தார்கள். சிலர் வேலைக்காக வந்தார்கள். சிலர், டாக்கியில் சேர்வதற்குச் சிபாரிசுக்காக வந்தார்கள். வேறு சிலர் பொருளுதவி தேடி வந்தார்கள். சிலர், பிரபல நட்சத்திரத்தின் பந்து என்ற பெருமையை நிலை நாட்டிக் கொள்வதற்காகவே வந்தார்கள். "அபலைப் பெண்ணாச்சே?" என்று இரக்கப்பட்டு வரவு செலவுக் கணக்கைக் கவனித்து ஒழுங்குபடுத்துவதற்கு அநேகர் சித்தமாயிருக்கிறார்கள்!
இதனாலெல்லாம் நான் அடைந்த தொல்லைகளைச் சொல்லி முடியாது. அவர்களை எல்லாம் வைத்துச் சமாளிப்பது பெருங் கஷ்டமாயிருந்தது. இவ்வளவு தொல்லைகளுக்கிடையில், எனக்கு உண்மையில் உற்ற சிநேகிதராக நடந்து கொண்டவர் பட்சிராஜன் ஒருவர் தான்.
அவரால் எனக்கு ஒரு விதமான கஷ்டமும் கிடையாது! எல்லாவிதத்திலும் ஒத்தாசையாகத்தான் இருந்தார். அப்பா காலமான பிறகு அவரிடம் தான் என் பணம் வரவு செலவுகளை ஒப்புவித்திருந்தேன். அவரும் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டு அடிக்கடி என்னிடம் கணக்கு ஒப்புவித்து வந்தார்.
எனக்கும் அவருக்கும் இருந்த உறவைப் பற்றி ஊரில் பல வகையாகப் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவரோ என்னுடைய மனப் போக்கை அறிந்து, என்னை மிகவும் மரியாதையாக நடத்தி வந்தார். ஒரு தடவையாவது அவர் வரம்பு மீறி நடந்ததில்லை. என் மனத்தில் மட்டும் சில காலமாக ஒரு சஞ்சலம் தோன்றியிருந்தது. 'எத்தனை நாளைக்கு இம்மாதிரி நாதனற்றவளாக இருப்பது? இவ்வளவு தூரம் நமக்கு உதவி செய்திருப்பவரை ஏன் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது?' என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று.

இப்படியிருக்கையில் ஒருநாள் பட்சிராஜன் அந்த ஆச்சரியமான – என்னை ஒரேயடியாகப் பெருமையின் சிகரத்துக்குக் கொண்டு போன செய்தியுடன் வந்தார். “மாலதி! இன்று தான் என் உள்ளம் குளிர்ந்தது. உன்னுடைய அடுத்த காண்டிராக்ட் ஒரு லட்சத்திற்குக் குறையக் கூடாது என்று தீர்மானித்தேன். இதோ ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்குக் காண்டிராக்ட்!” என்றார். நான் பிரமை பிடித்தவள் போலானேன். பத்து நிமிஷம் வரையில் என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. பிறகு “இது கனவில்லையே? டாக்கியில் ஒரு காட்சி இல்லையே?” என்று கேட்டேன். “இதோ பார்!” என்று ஒரு நகல் ஒப்பந்தத்தில் எண்ணாலும் எழுத்தாலும் ‘ஒரு லட்சத்துப் பத்தாயிரம்’ என்று போட்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார். “நல்ல நாள் பார்த்து கையெழுத்துப் போட வேண்டியது தான் பாக்கி” என்றார். நான் அவருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் ததும்ப, நாத் தழுதழுக்க, “என் உயிர் உள்ளவரையில் நான் உங்களை மறக்க மாட்டேன்” என்றேன். ஆம்; அவரை என் உயிர் உள்ளவரையில் – நாளை நள்ளிரவு வரையில் – என்னால் மறக்க முடியாது! ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் செய்த அற்புதமான காரியத்தையும் நான் மறக்க முடியாது தான்!
சீக்கிரத்திலேயே மேற்படி ஒப்பந்தம் முடிந்தது. கையெழுத்து ஆயிற்று. தென்னிந்தியாவின் டாக்கித் தொழிலை முழுவதும் கைப்பற்றுவதென்று இலங்கையிலிருந்து ஒரு முதலாளி ஏராளமான பணத்துடன் வந்திருந்தார். தென்னிந்தியாவிலுள்ள பிரபல நட்சத்திரங்களையெல்லாம் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தார். அவர் தான் என்னையும் மேற்படி பெருந் தொகைக்கு ஒப்பந்தம் செய்தார். நாற்பதினாயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு - டாக்கி எடுப்பதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த இடி போன்ற செய்தி வந்தது. என் ஆகாசக் கோட்டை இடிந்து தூள் தூளாயிற்று.
பட்சிராஜன் திடீரென்று காணாமற் போய்விட்டார்!
சினிமா உலகில் 'எக்ஸ்ட்ரா' பெண்கள் என்று ஓர் இனம் உண்டு. தோழிப் பெண்கள் முதலிய சில்லறை வேஷங்களில் நடிப்பதற்கு அவர்களை அன்றாடம் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட 'எக்ஸ்ட்ரா' பெண் ஒருத்தியுடன் பட்சிராஜன் அந்தர்த்தியானமாகி விட்டார்!
அவர் மட்டும் அந்தர்த்தியானமாகவில்லை. பாங்கியில் இருந்த என் பணம் ரூ.40,000மும் அவரோடு அந்தர்த்தியானமாகி விட்டது.
பட்சிராஜனை நான் பரிபூரணமாய் நம்பி, அவரிடமே என் வரவு செலவை ஒப்புவித்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? புதிய ஒப்பந்தப்படி வந்த அட்வான்ஸ் தொகையை அவர் தம் பேரிலேயே பாங்கில் போட்டுக் கொண்டிருந்தார். அவரே அதை வாங்கிக் கொண்டும் போய் விட்டார்.
"ஆகா! இந்தப் பட்சிராஜன் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர்? வேறொரு மனிதனாயிருந்தால், நாம் இப்படித் தன்னந்தனியாய் அவரையே நம்பி இருப்பதற்கு இவ்வளவு நேர்மையாய் இருப்பானா? நம்மிடம் ஒன்றையுமே கோராமல் இப்படி அன்புடன் இருக்கிறாரே? இவர் தெய்வப் பிறவிதான்!" என்று பலமுறை நான் எண்ணியது உண்டு.

பட்சிராஜன் என்னத்தைக் கோரி என்னிடம் அவ்வளவு அன்பாயிருந்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *