Kalki Short StoriesKalki TimesStory

Pudhu Ovarsiyar Kalki | Kalki Times

Pudhu Ovarsiyar Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

புது ஓவர்சியர்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Pudhu Ovarsiyar Kalki

அத்தியாயம் 1: ஹிதோபதேசம்

சம்பந்தம் பிள்ளை, ஹைஸ்கூலிலும் காலேஜிலும் மாணாக்கராயிருந்தபோது அவருக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் வித்தியாசம் ஏதேனுமிருப்பதாக எவருக்கும் தோன்றவில்லை. பின்னர், அவர் கிண்டி என்ஜினியரிங் கலாச்சாலையில் பயிற்சி பெற்ற காலத்திலும் முதல் இரண்டு, மூன்று வருஷங்கள் சாதாரணமாய் மற்ற மாணாக்கர்களைப் போலவே வாழ்க்கை நடத்திவந்தார். பாடம் படித்தல், பரீட்சையில் தேறுதல், உத்தியோகம் பார்த்தல், பணந்தேடுதல் – இவையே அவர் வாழ்க்கை இலட்சியங்கள். சீட்டாட்டம், சினிமா, சிகரெட், சிறுகதை, சில் விஷமம்-இவைதாம் அவர் சந்தோஷானுபவங்கள். ஆனால், என்ஜினியரிங் கலாசாலையில் அவர் படித்த கடைசி வருஷத்தில் அவரிடம் சிற்சில மாறுதல்களை அவருடைய தோழர்கள் கண்டார்கள். காந்தி, டால்ஸ்டாய், ரஸ்கின் முதலியோருடைய புத்தகங்களை அவர் அதிகமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கலாசாலைக் கோட்டைக்குள் முதல் முதல் தைரியமாகக் கதர்க்கொடியை நாட்டியவர் அவர்தான். சீட்டாட்டம் முதலியவற்றில் அவருக்குச் சுவைகுறையத் தொடங்கிற்று. அடிக்கடி தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடும் பழக்கத்தைக் கைக்கொண்டார்.

பரீட்சை முடிந்ததும் சம்பந்தம் பிள்ளை தமது மாமாவும், மாமனாருமான அம்பலவாணம் பிள்ளையிடம் யோசனை கேட்கச் சென்றார். ஸ்ரீமான் அம்பலவாணம் பிள்ளை மயிலாப்பூரில் மத்தியதரமான வருவாயுள்ள வக்கீல்களில் ஒருவர். அவரிடம் சம்பந்தம் கூறியதாவது:- “மாமா! உத்தியோக வாழ்க்கை என் இயல்புக்கு ஒத்து வராதென்று தோன்றுகிறது. டால்ஸ்டாய் முதலியவர்களின் நூல்களைப் படித்ததினால் எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பகவானருளால் எனக்குக் கொஞ்சம் பூமி காணி இருக்கிறது. ஆதலின் என் சொந்த கிராமத்துக்கே சென்று நிலத்தைப் புதிய சாஸ்திரீய முறையில் சாகுபடி செய்து அமைதியான வாழ்க்கை நடத்தலாமென்று எண்ணுகிறேன். எனக்கிருக்கும் என்ஜினியரிங் அறிவைக் கொண்டு மற்றக் கிராமவாசிகளுக்கும் பல வழிகளில் நன்மை செய்வதற்குச் சில திட்டங்கள் போட்டிருக்கிறேன். இதைப்பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

அம்பலவாணர் புன்னகை புரிந்தார். “இதென்ன பைத்தியம்” என்றார். அவர் மருமகனுக்குச் சிறிது கோபம் வந்துவிட்டது. ஆனால், வக்கீல் மகா புத்திசாலி; அத்துடன் உலகானுபவம் நிரம்ப உள்ளவர். இல்லாவிடில் மயிலாப்பூரிலிருந்து வக்கீல் தொழிலில் பேர் சொல்ல முடியுமா? வெறுமே பரிகாசம் பண்ணினால் மருமகனுக்குப் பிடிவாதமே அதிகமாகுமென்று அவருக்குத் தெரியும். ஆதலின், “கோபித்துக் கொள்ளாதே தம்பி! என்னைப் போன்ற கர்நாடகப் பேர்வழிகளுக்கு இதெல்லாம் பைத்தியக்காரக் கொள்கைகளாகத் தோன்றுகின்றன” என்று சொல்லிப் பின்னர் பின்வருமாறு ஹிதோபதேசம் செய்தார்.

“நீ புத்திசாலி, சிறிது சிந்தித்துப் பார்ப்பாயானால், இதெல்லாம் நடவாத காரியம் என்று, நீயே சொல்வாய். டால்ஸ்டாய் நூற்றுக்கணக்காகப் புத்தகங்கள் எழுதினாரே! அவருடைய கொள்கைகளை அவரே அனுஷ்டிக்க முடியவில்லையென்பது உனக்குத் தெரியாதா? காந்தியுங்கூட அல்லவா தமது இலட்சியங்கள் எல்லாவற்றையும் வாழ்க்கையில் நிறைவேற்றக்கூடவில்லையென்று சொல்கிறார். அவர்களாலெல்லாம் முடியாதது உன்னால் முடியுமென்று நினைக்கிறாயா?”

“மேலும், அவசரம் என்ன? இப்போதுதான் நீ வாழ்க்கை தொடங்கப் போகிறாய். புதிய துறையில் இறங்கிக் கொஞ்ச காலத்திற்கெல்லாம் அதிருப்தி கொள்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அதற்குள் 25 வயது கடந்துவிட்டால் அப்புறம் உத்தியோகம் ‘வா’ என்றால் வருமா? உத்தியோக வாழ்க்கையில் அதிருப்தி கொண்டால் அப்புறம் நீ உன் புதிய கொள்கைகளை நடத்திப் பார்ப்பதற்கு எதுவும் குறுக்கே நில்லாது.”

“இருக்கட்டும், உன்னுடைய குடும்ப நிலைமை என்ன? வீட்டிலே உட்கார்ந்து சாப்பிட்டால் உன்னுடைய இரண்டு வேலி நிலம் எத்தனை நாளைக்குக் காணும் என நினைக்கிறாய்? பத்து வேலி, இருபது வேலி மிராசுதாரர்கள் எத்தனையோ பேர் ஆண்டியாய்ப் போகிறார்களென்பது எனக்குத் தெரியும். வேறு வருவாய்க்கு வழியில்லாத மிராசுதாரர் இக்காலத்தில் உருப்படவே முடியாது. இந்தக் காலத்தில் விவசாயம் செய்து முன்னுக்கு வந்தவன் உண்டா? உன் தம்பிமார்கள் இருவரையும் படிக்க வைத்தாகவேண்டும். தங்கைக்கும் கலியாணம் செய்து கொடுக்கவேண்டும். உனக்கும் இனிமேல் இரண்டு குஞ்சு குழந்தைகள் உண்டாகிவிடும். இவர்களுடைய கதியெல்லாம் என்ன?”

“இத்தனை காலம் ஏதோ அவ்வப்போது உனக்குப் பண உதவி செய்து வந்தேன். எனக்கும் இப்போது கை சளைத்துவிட்டது. வக்கீல் தொழிலில் போட்டி சொல்ல முடியாது. 300 ரூபா ஆடம்பரத்தில் செலவழித்தால்தான் 500 ரூபா வருமானம் வருகிறது. மயிலாப்பூரில் எத்தனையோ பெரிய பெரிய வக்கீல்கள் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் வாதிகளாகட்டும், மிதவாதிகளாகட்டும், ஜஸ்டிஸ் வாதிகளாகட்டும், எந்த வாதிகளாகட்டும் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும், மருமகன்களுக்கும், மாப்பிள்ளைகளுக்கும், மற்ற இஷ்டமித்ரபந்துக்களுக்கும் அரசாங்க உத்தியோகம் தேடிக் கொடாதவர்கள் உண்டா? அரசாங்க உத்தியோகத்துக்குச் சமானம் வேறெதுவுமில்லை. நாற்பது ரூபா சம்பளத்துக்குப் போனாலும் பிறகு வருஷம் ஆறு ஆறு ரூபாய் நிச்சயமாய் ஏறிக்கொண்டு போகிறது. சாகும்வரையில் பென்ஷன். அதிர்ஷ்டமும் சிபாரிசும் இருந்து நல்ல உத்தியோகம் கிடைத்துவிட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. உதாரணமாக, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸில் உத்தியோகம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள். செட்டிமார் கடையில் கணக்கெழுதும் குமாஸ்தாக்களுக்குக் கொஞ்சம் பயிற்சியளித்துவிட்டால் அந்த வேலையைச் செய்து விடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் அவ்வேலைக்கு ஆரம்பத்தில் ரூ.300 சம்பளம். பின்னர் வருஷந்தோறும் 50, 50 ரூபா உயர்வு 1500 வரையிலும், அதிர்ஷ்டமிருந்தால் அதற்கு மேலும் போகலாம்.

“ஆனால், எல்லா உத்தியோகங்களும் உத்தியோகமாகா. மேல் வருமானம் உள்ள உத்தியோகந்தான் உத்தியோகம். சம்பளம் உயர உயர, வாழ்க்கை அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போவதால் மாதச் சம்பளம் எவ்வளவு வந்தாலும் செலவழிந்து போகும். மேல் வருமானமிருந்தால் தான் மீதி செய்ய முடியும். இக்காலத்தில் பொதுவாக எல்லா உத்தியோகங்களிலுமே மேல்வருவாய்க்கு இடமிருக்கிறதாயினும், முக்கியமாகச் சில இலாக்காக்கள் இருக்கின்றன. உன்னுடைய இலாக்கா அவற்றில் ஒன்று. புத்திசாலித்தனமாயும் சாமர்த்தியமாயும் நடந்துகொண்டால் கொஞ்ச நாளில் குடும்பக் கவலையே இல்லாமல் பண்ணிவிட்டு அப்புறம் நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…”

இத்தனை நேரம் பொறுமையாகவும் மரியாதையுடனும் கேட்டுக் கொண்டிருந்த சம்பந்தப்பிள்ளைக்கு இப்போது பொறுக்க முடியாமலே போய் விட்டது. அவர் இடைமறித்துச் சொன்னதாவது:-

“ஒருகால் நான் உத்தியோகத்துக்கே போனாலும் நீங்கள் சொல்லும் வழிக்குப் போகவே மாட்டேன். மகா பாவமான காரியத்தை நீங்கள் சொல்கிறீர்கள். உத்தியோகம் பார்ப்பது போதாதென்று லஞ்சம் வாங்கியும் பிழைக்கவேண்டுமா?”

வக்கீல் பிள்ளையின் மனம் மகிழ்ந்தது. தன் ஹிதோபதேசம், முக்கால்வாசி பலிதமாகி விட்டதென்றும், பையனுக்குப் பைத்தியம் நீங்கிற்று என்றும் கருதினார்.

“நல்லது தம்பி, வாழ்க்கை தொடங்கும் போது எல்லாரும் இத்தகைய நல்ல தீர்மானங்களுடனேதான் தொடங்குகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் அநுபவம் ஏற்பட ஏற்பட அத்தீர்மானங்கள் எல்லாம் பறந்துபோகின்றன. ஏதேனும் சாக்குப் போக்கினால் அவர்கள் ஆன்ம திருப்தி செய்து கொள்கிறார்கள். உதாரணமாக, என்னுடைய கலாசாலைத் தோழர் ஒருவர் தற்போது டெபுடி கலெக்டராயிருக்கிறார். அவர் நெறி தவறாதவரென்று பிரசித்தி பெற்றவர். ஆயினும், அவர் ‘வள்ளல்’ எனக்குத் தெரியும்; கிராமக் கணக்குப்பிள்ளை, மணியக்காரர்களுக்கும் தெரியும். ஒரு கிராமத்தில் போய் அவர் மூன்று நாள் முகாம் போட்டாரானால், முகாம் முடிந்ததும் மணியக்காரரைச் செலவுப் பட்டியல் கேட்கிறார். மணியக்காரர் 31/2 ரூபாய்க்குப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். டெபுடி கலெக்டர் 3 நாளில் முட்டை மட்டும் 31/2 ரூபாய்க்குத் தின்றிருக்கிறார். ஆயினும் அவர் பட்டியல்படி 31/2 ரூபாயை எண்ணிக் கொடுத்து விட்டு ரசீது வாங்கிக்கொண்டு தம் மனச் சான்றைத் திருப்தி செய்துகொள்கிறார். ஆரஞ்சுப் பழம் பட்டணத்தில் டஜன் 11/2 ரூபாய். அது அங்கிருந்து டெபுடி கலெக்டருக்கென்று கிராமத்துக்கு வாங்கிக் கொண்டு போகப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் பட்டியலில் அதன் விலை டஜன் 4 அணா ஆகிவிடுகிறது.”

“ஆயிரக்கணக்கான தொகைகள் சம்பந்தமான அரசாங்கக் கணக்குகளைப் பரிசீலனை செய்து தப்புக் கண்டுபிடிக்கும் டெபுடி கலெக்டருக்குத் தமது பட்டியலில் காணப்படும் இச்சிறு தவறு புலனாவதேயில்லை? தம்பி! அவரும் உன்னைப்போல் எவ்வளவோ நல்ல தீர்மானங்கள் எல்லாம் செய்து கொண்டவர்தான். இவ்வுலகம் அப்படிப்பட்டது” என்றார் வக்கீல்.

“மாமா, தங்கள் புத்திமதிக்காக வந்தனம். என்ன செய்வதென்று நான் தீர்மானித்துவிட்டேன். என்னுடைய உயரிய வாழ்க்கை லட்சியங்களையெல்லாம் இப்போதைக்கு ஒரு மூலையில் கட்டி வைக்க வேண்டியதுதான். ஆனால், இது என்னுடைய சுயநலத்தை முன்னிட்டோ என் இலட்சியங்களில் எனக்கு நம்பிக்கைக் குறைவினாலோ அன்று. என் தம்பிமார்களையும், தங்கையையும் உத்தேசித்தே இம்முடிவுக்கு வந்தேன். எனக்காகிறது அவர்களுக்குமாகட்டும் என்னும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால், ஒன்று கூறுகிறேன், தாங்கள் சற்றுமுன் கூறியது போல் பணம் சேர்ப்பதற்கு நான் குறுக்கு வழி கடைப்பிடிக்கப் போவது மட்டும் இல்லவே இல்லை, அதை உங்களுக்குச் சத்தியமாகச் சொல்கிறேன். யோக்கியன் எங்கும், எந்த நிலைமையிலும் யோக்கியனாயிருக்க முடியுமென உங்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்” என்றார் சம்பந்தம் பிள்ளை.

காரிய சித்தியினால் மகிழ்ச்சியடைந்த அம்பலவாணம் பிள்ளை சொல்கிறார்:- “நான் விரும்புவதும் அதுதான், சம்பந்தம். நான் கூறியதைத் தப்பர்த்தம் செய்துகொள்ளாதே. நான் உலகத்துக்குச் சொன்னேனேயொழிய உனக்குச் சொல்லவில்லை. எப்போதும் கண்யமாயிருந்தால் அபாயம் இல்லை. அயோக்கியன் தான் பயப்பட வேண்டும். நாளடைவில் கண்யமே லாபம் தரும். நீ உத்தியோகத்தில் நெறி தவறாதவனாய் நின்று, மேன்மேலும் முன்னுக்கு வர வேண்டுமென்பது தான் என் பிரார்த்தனை.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *