Kalki Short StoriesKalki TimesStory

Pudhu Ovarsiyar Kalki | Kalki Times

அத்தியாயம் 5: முடிவு

சம்பந்தம் பிள்ளை தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்புவதற்கு முன்னால், தமது வாழ்க்கையின் பெருஞ்சோதனையில் தாம் வெற்றி பெற்ற இடத்துக்கு ஒரு முறை செல்ல வேண்டுமென விரும்பினார். அவ்வாறே, வேலையைத் தமக்குப் பதிலாக வந்தவரிடம் ஒப்புவித்த அன்று காலை, நதிக்கரைக்குச் சென்று, உடைப்பெடுத்த இடத்தில் வந்து அமர்ந்தார். சென்ற ஆண்டில், ஏறக்குறைய இதே காலத்தில்தான் அச்சோதனை நிகழ்ந்தது. இவ்வருஷம் நதியில் சென்ற வருஷத்தைப் போன்ற வெள்ளம் வரவில்லையாயினும் சுமாரான பிரவாகம் ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தம் பிள்ளை அன்றைய தினம் மாலை நிகழ்ந்ததெல்லாவற்றையும் ஒரு முறை நினைத்தார். நதியின் வெள்ளத்தில் மேலக் காற்றின் வேகத்தினால் எழுந்த அலைகளே போல், அவர் உள்ளத்தில் எத்தனையெத்தனையோ எண்ணங்கள் எழுந்து மறைந்தன. அம்பலவாணம் பிள்ளையின் ஹிதோபதேசமும் அவர் ஞாபகத்துக்கு வந்தது. “ஆம், மாமாவின் புத்திமதியை ஏற்றுக் கொண்டது நல்லதேயாயிற்று. ‘பின்னால் உத்தியோகம் வா’ என்றால் வருமா? உத்தியோக வாழ்வில் அதிருப்தி ஏற்பட்டால் அதைவிட்டு வேறு துறையில் இறங்குவதற்கு எதுவும் குறுக்கே நில்லாது’ என்று அவர் கூறினாரன்றோ? இப்போது உத்தியோக வாழ்வைப் பார்த்தாய்விட்டது. இனி அதைப்பற்றி சபலம் சிறிதும் இன்றி, தமது வாழ்க்கை இலட்சியங்களைப் பின்பற்றலாம்” என்று சம்பந்தம்பிள்ளை எண்ணமிட்டார்.

கதிரவன், மேல் வான வட்டத்தின் அடிவாரத்தில், சுழலும் தங்கத் தகடெனத் திகழ்ந்தான். அவனுடைய பொன்னிறச் செங்கதிர்கள் நதியின் நீரில் படிந்தபோது, அலைகள் மெருகுகொடுத்தாற் போல் தகதகவென்று பிரகாசித்தன. ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து நிமிஷம் சென்றது. கதிரவன் இருந்த இடத்தில் அவனது பொற்கிரணங்களைப் போர்வையாகப் போர்த்த சில முகில் திட்டுக்களே காணப்பட்டன. இந்தக் காட்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த சம்பந்தம் பிள்ளை, தமக்கருகில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். கோவிந்தராஜ உடையாரைக் கண்டு திடுக்கிட்டார். உடனே எழுந்து சைக்கிள் பிடியில் கைவைத்து ஏறப் போனார். “தம்பி, உன்னைத் தேடிக் கொண்டு தான் வந்தேன். சற்று உட்கார், போகலாம். உன் ஜாகைக்குப் போய் விசாரித்தேன். நதிக்கரைக்குப் போனதாகச் சொன்னார்கள். இங்கே தான் வந்திருப்பாய் என்று ஊகித்தேன்” என்று உடையார் கூறினார்.

சம்பந்தம் பிள்ளை தம் காதுகளையும் கண்களையும் நம்பவில்லை. பிரமித்துப் போய் நின்றார்.

“ஆம், அப்பா! நான் உன்னைத் தேடிவந்தது உனக்கு அதிசயமாயிருக்கலாம். ஒரு காரியத்தைப் பற்றிப் பேசவந்தேன். தயவு செய்து உட்கார மாட்டாயா?” என்று கூறிக்கொண்டே உடையார் கீழே மல் துணியை விரித்துப் போட்டு உட்கார்ந்தார்.

அவருடைய பரிதாபகரமான குரல் சம்பந்தம் பிள்ளையின் மனத்தை உருக்கிற்று. இந்த அதிசயத்தையும் பார்த்துவிட வேண்டுமென எண்ணி, அருகில் கிடந்தகட்டையின்மீது சம்பந்தம் பிள்ளை அமர்ந்தார்.

“என்ன சொல்லப்போகிறீர்கள்? தங்களுடைய வெற்றியைப் பற்றிச் சொல்லிக்காட்டப் போகிறீர்களா? அப்படியானால் வேண்டாம். ஏனெனில், நான் தான் வெற்றியடைந்ததாக என்னுடைய எண்ணம். அல்லது, என்னுடைய நிலைக்காக இரக்கம் காட்டப்போகிறீர்களா? அதுவும் தேவையில்லை. பகவான் எனக்குக் கொஞ்சம் பூமியையும் அதை உழுத பயிரிட உடம்பில் வலிவையும் அளித்திருக்கிறார்” என்று சம்பந்தம் கூறினார்.

அப்போது உடையார், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தம்பி! வேறு காரியம். நான் உங்களையெல்லாம் போல் படித்தவனல்லன். ஆகையால், சாமர்த்தியமாகப் பேசத் தெரியாது. இருந்தாலும் மனத்திலுள்ளதை விட்டுச் சொல்கிறேன். போன வருஷத்தில், இதே இடத்தில் நீ சந்தித்தாயே, அந்த கோவிந்தராஜ உடையார் இப்போதில்லை. இந்த வழக்கினால் நான் முற்றும் புதிய மனிதனாகிவிட்டேன். என் உடம்பும் உள்ளமும் நிரம்பத் தளர்ந்து போய்விட்டன. என்னால் இனி குடும்ப விவகாரங்களைப் பார்க்கவும் முடியாது. எனக்கு 60 வேலி நிலமும் மற்றும் வரவு செலவுகளும் உண்டு. இவற்றையெல்லாம் கவனிக்க நம்பிக்கையான காரியஸ்தன் ஒருவன் வேண்டும். உன்னைவிட உண்மையான மனிதன் எனக்கு எங்கே கிடைப்பான்? அதற்காகத் தான் உன்னைத் தேடி வந்தேன்” என்றார்.

சம்பந்தம் பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. அசாத்தியமான கோபம் வந்தது. ‘இந்தப் பொல்லாத மனிதனின் தைரியத்தைப் பார்த்தாயா? எனினும், அவர் முகத்தோற்றமும் குரலும் நம் மனத்தை இளக்குவதன் இரகசியம் என்ன? ஒரு வேளை, உண்மையிலேயே வேறு மனிதராகிவிட்டாரோ!’ என எண்ணினான். உடையார் பின்னர் கூறிய மொழிகள் சந்தேகத்தை நிவர்த்தி செய்தன.

“தம்பி! உனக்கு ஆச்சரியமாயிருக்கலாம். என் துணிவைக் கண்டு நீ வியப்புறலாம். ஆயினும் உண்மை அதுதான். என் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள உண்மையான மனிதன் தேவை. இது மட்டுமன்று, இவ்வளவு காலமும் நான் செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும். இதற்கு எனக்கு வழிகாட்ட ஓர் உத்தமத்தோழன் தேவை. அத்தகைய உத்தமன் உன்னையல்லாமல் எனக்கு வேறு யார் கிடைக்கப் போகிறார்கள்? என் வாழ்நாளிலே நான் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களிலே யோக்கியர்களும் அயோக்கியர்களும் என்னைப் போன்ற பாதகர்களும் உண்டு…”

இச்சமயத்தில் சம்பந்தரின் கண்களில் நீர் ததும்பிற்று. உடையாரின் தொண்டை கம்மலுற்றது. அவர் மெதுவாக எழுந்து வந்து சம்பந்தம் பிள்ளையின் அருகில் நின்று, அவர் தலையைத் தம் கையினால் தொட்டுக் கொண்டு, “….அத்தனை பேரிலும் உன்னைப்போன்ற உத்தமன் ஒருவனைச் சந்தித்ததில்லை. மற்றும் இன்னொரு செய்தி உனக்குத் தெரியுமா? எனக்குப் பிள்ளை குட்டிகள் ஒருவரும் இல்லை. நான் இன்று இறந்தால் ஒரு துளிக் கண்ணீர் விடுவோர் கிடையாது. அப்போது, நான் எத்தனையோ அக்கிரமங்கள் செய்து சேர்த்த இந்தச் சொத்து முழுதும் என்னவாகும்? நேற்றைய தினம் இதையெல்லாம் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். உன்னைப் போன்ற ஒரு சத்புத்ரன் மட்டும் இருந்தால் நான் எவ்வளவு பெருமையடைவேன்? அப்போது, இந்த அக்கிரமச் சொத்து முழுவதையும் நல்வழியில் பயன்படுத்தி, என் பாவங்களுக்குக் கழுவாய் தேடிவிடுவாயல்லவா!…. போகட்டும், அதைப்பற்றி நினைத்து என்ன பயன்? தம்பி, என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்குவாயா? மாதம் ரூ.100 சம்பளத்தில் என் காரியஸ்தனாக வேலை பார்ப்பாயா?” என்று கேட்டார்.

இவ்வாறு கூறி உடையார் கண்ணீர் உகுத்தார். அக் கண்ணீர் சம்பந்தம் பிள்ளையின் முகத்திலும் மார்பிலும் விழுந்து அவருடைய கண்ணீருடன் கலந்தது. பின்னர், அவ்விரு கண்ணீர் அருவிகளும் சேர்ந்து ஓடி, நதி ஜலத்தில் விழுந்தன. இவ்வாறு அன்றைய தினத்திலே அந்தப் புண்ணிய நதி, கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிகள் கூடும் பிரயாகையைக் காட்டிலும் விசேஷ மகிமையுடையதாயிற்று.

இத்துடன்

அமரர் கல்கியின் புது ஓவர்சியர்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Pudhu Ovarsiyar Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,pudhu ovarsiyar Audiboook,pudhu ovarsiyar,pudhu ovarsiyar Kalki,Kalki pudhu ovarsiyar,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *