Kalki Short StoriesKalki TimesStory

Prabala Nakchatiram Kalki | Kalki Times

அத்தியாயம் 3: இல்லறம்

நேற்று இரவு நான் நிம்மதியாகத் தூங்கினது போல் சென்ற ஆறு மாதத்தில் தூங்கினதில்லை. ஆற்றில் அடைக்கலம் புகுவது என்று தீர்மானித்ததின் பலனோ, அல்லது என் கதையை எழுதத் தொடங்கி இளம் வயதின் ஞாபகங்களை எழுதியதனால் தானோ தெரியவில்லை.
கல்யாணம் ஆன உடனேயே நானும் என் கணவரும் எங்கள் இல்வாழ்க்கையைத் தொடங்கினோம். இல்வாழ்க்கையைக் குறித்து நான் என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கெல்லாம் நேர்மாறுதலாக எங்கள் வாழ்க்கை நடந்தது.
புருஷர்கள் மனைவிகளை ஆடுமாடுகளைப் போல் நடத்துவதையும், அடிப்பதையும், துன்புறுத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவ்விதமாக என்னை அவர் கொடுமைப் படுத்தவில்லை. என்னை வைதோ, கோபமாகப் பேசியதோ கூடக் கிடையாது. வெகு மரியாதையுடன் என்னை நடத்தினார். பேசும்போதெல்லாம் இனிய வார்த்தைகளையே பேசினார். இதனாலெல்லாம் எனக்கு மனநிம்மதி ஏற்படவில்லை. ஏனோ, துக்கம் துக்கமாக வந்தது.
என் அழகையோ, அலங்காரத்தையோ அவர் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.
சில சமயம் அவர் என்னை ஆவலுடன் உற்றுப் பார்ப்பார். ஏதோ சொல்லப் பிரயத்தனப்படுகிறவர் போல் தோன்றும். ஆனால் ஒன்றும் சொல்ல மாட்டார். வர வர, என் அழகை நான் வெறுக்க ஆரம்பித்தேன். அலங்காரம் செய்து கொள்வதில் என் ஆசை போய் விட்டது. சில நாள் குளிக்காமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் தலை வாரிக் கொள்ளாமலும் இருப்பேன். அப்போதும் அவர் வாய் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டார்.
அவருக்குச் சதா அவர் வேலையே சரியாயிருந்தது. காலேஜுக்குப் போகும் நேரம் போக அவருடைய புத்தக அறைக்குள்ளேதான் இருப்பார். அப்படி ஓயாமல் படிப்பதற்கு எழுதுவதற்கும் என்னதான் இருக்குமோ, எனக்குத் தெரியாது. அதாவது, அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் கணவர் காலேஜில் சரித்திரப் புரொபஸர் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்தியாவின் பழைய சரித்திரத்தைப் பற்றி அவர் ஏதோ முக்கியமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாராம். நமது இந்திய தேசத்துக்கும் சீனா தேசத்துக்கும் பழைய காலத்தில் ஏற்பட்டிருந்த உறவைப் பற்றி சில மிகவும் முக்கியமான உண்மைகளை அவர் கண்டுபிடித்தாராம். எங்கள் கல்யாணமான புதிதில் அவர் தம் ஆராய்ச்சியைப் பற்றிச் சில சமயம் என்னுடனே பேச ஆரம்பிப்பதுண்டு. ஆனால் அவர் சொல்வது ஒன்றுமே எனக்கு விளங்காது. அதிலே எனக்குச் சிரத்தையும் இல்லை. எனவே, அவர் பேசிக் கொண்டேயிருக்கும் போது, நான் நடுவில் “மெஜஸ்டிக் சினிமாவில் மேனகா படம் வந்திருக்காமே?” என்று சொல்லி வைப்பேன். அவருக்குச் சீ என்று போய்விடும். புத்தக அறைக்குப் போய் ஏதாவது எழுத ஆரம்பித்து விடுவார். எனக்கோ, அவர் சீன தேசத்தின் மேல் செலுத்தும் கவனத்தில் நூறில் ஒன்று என் மீது செலுத்தக் கூடாதா என்று தோன்றும்.
இப்படி நாளாக ஆக, அவரும் நானும் எட்டி விலகிப் போய்க் கொண்டிருந்தோம். ஒரே வீட்டுக்குள் இருந்த போதிலும், சில தினங்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாத நிலைமை ஏற்பட்டு விட்டது. நாளுக்கு நாள் என்னுடைய மன நிம்மதி குலைந்து வந்தது. அவர் மேல் வெறுப்பும் கோபமும் வளர்ந்தன. என்னுடைய தாபத்தையும் கோபத்தையும் பன்மடங்கு அதிகமாக்கும்படியான ஒரு சம்பவம் இப்போது நேர்ந்தது.
என் கணவருக்கு ஒரு தங்கை உண்டு. அவருடைய புருஷனுக்கு டில்லியில் வேலை. எனக்குக் கல்யாணமாகி மூன்று வருஷத்துக்குப் பிறகு ஒரு தடவை அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ராஜம் முதலில் வந்துவிட்டாள். அவள் புருஷன் தம் சொந்த ஊருக்குப் போய் விட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்தார். அவர் வருவதற்கு முன் அந்த ஒரு வார காலமும் எனக்குச் சிறிது உற்சாகமாயிருந்தது. ராஜம் எங்கள் கல்யாணத்தின் போது கூட பரிகாசம் செய்து மானத்தை வாங்கினாள். “அண்ணா நித்திய பிரம்மச்சாரி என்று சொல்லிக் கொண்டிருந்தான்; பிள்ளையாருக்குக் கல்யாணம் ஆகும் போது தான் தனக்கும் கல்யாணம் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்தான். பொம்மனாட்டி என்றாலே தலையைக் குனிந்து கொள்வான். அப்படிப்பட்டவனை உன் மாய வலையில் சிக்க வைத்து விட்டாயேடி! என்ன பொடி போட்டு மயக்கினாயடி?” என்றெல்லாம் கேலி செய்தாள். என் மேனி நிறம், முகவெட்டு, கண்ணின் அழகு இதையெல்லாம் பற்றி அவள் வர்ணித்து, “அண்ணா காத்திருந்தாலும் காத்திருந்தான், முதல் நம்பர் அழகியாகப் பார்த்துப் பிடித்தான்” என்று அவள் சொன்ன போதெல்லாம் நான் வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டாலும் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷமும் கர்வமும் அடைந்தேன்.
ஆகவே, ராஜம் இப்போது வந்ததும் எனக்கு உற்சாகமாயிருந்தது. அவளும் முன்போலவே சிரிப்பும் பரிகாசமுமாய் இருந்தாள். அவளுடைய பரிகாசங்கள் எனக்கு முன்போல் சந்தோஷத்தை உண்டாக்கவில்லையானாலும், நான் என் மனோநிலையை வெளிக்குக் காட்டவில்லை. கூடிய வரையில் நானும் குதூகலமாயிருப்பதற்கு முயன்றேன். எங்களுடைய பரிகாசப் பேச்சுக்களில் சில சமயம் என் கணவரும் வந்து சேர்ந்து கொண்டார். என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மாறுதல் ஏற்படப் போவது போல் தோன்றியது.

ஆம்; என் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படத்தான் செய்தது. ஆனால் நான் எதிர்பார்த்த முறையில் அன்று.
ராஜம் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு அவளுடைய கணவர் வந்து சேர்ந்தார். அவர் வண்டியிலிருந்து இறங்கியதும் அவர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்த போதே என் மனத்தில் முள் தைத்தது போலிருந்தது. ராஜமும் நானும் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டிருந்ததற்கும் முடிவு ஏற்பட்டது. அவள் அவருடனேயே அதிக நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்குப் பேசுவதற்கு என்ன தான் இருக்குமோ என்று எனக்கு வியப்பாயிருந்தது. ஒருவரையொருவர் கேலி செய்து கொள்வதையும், கொஞ்சிக் குலாவுவதையும் பார்க்கப் பார்க்க என்னுடைய மனக் கசப்பு அதிகமாக வளர்ந்தது. சாயங்காலம் ஆனதும் அவர்கள் பாட்டுக்கு வெளியே கிளம்பி விடுவார்கள். கடைத்தெருவுக்கோ, கோயில் குளத்துக்கோ, சினிமா டிராமாவுக்கோ போய் விட்டு உல்லாசமாக இராத்திரி திரும்பி வருவார்கள். அப்போது என்னை என்னமோ செய்யும். வீட்டிலேயே இருப்பு கொள்ளாது. உள்ளுக்கும் வாசலுக்கும், மாடிக்கும் கீழுக்குமாக ஒரு காரியமும் இல்லாமல் போய் வந்து கொண்டிருப்பேன். அப்போது இவர் காலேஜிலிருந்து வருவார்; "எங்கே அவர்கள் இல்லையா?" என்று கேட்பார். எனக்குத் தொண்டை அடைக்கும். "சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்" என்பேன். மேலே நான் ஏதாவது சொல்லுவதற்குள், அவர் தம் அறைக்குப் போய்ப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்து விடுவார்.
ஒரு நாளைக்கு ராஜமும் அவள் கணவரும் மாடி அறையில் இருந்தார்கள். அது எனக்குத் தெரியாமல் அந்த அறையின் கதவைத் திறந்து விட்டேன். அப்போது நான் கண்ட காட்சி என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருந்தது. ராஜத்தின் கணவர் தரையில் உட்கார்ந்திருந்தார். ராஜம் அவருடைய மடியிலே தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க, அவர் குனிந்த வண்ணம் அவளுடைய கன்னங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் அவசரமாக படீரென்று கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்கிப் போனேன். எதனாலோ எனக்கு அழுகை அழுகையாக வந்தது. கீழே ஓர் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டேன். தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினேன்.
அத்தனை காலமும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் இப்போது பொங்கிக் கொண்டு வந்தது. வெகு நேரம் வரையில் அழுது கொண்டிருந்தேன். கண்கள் வீங்கிப் போயின. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ராஜம் வந்து கதவை இடித்தாள். நான் கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்து விட்டு, "ஐயையோ! இதென்னடி மன்னி" என்று அலறிவிட்டாள். "அசடே! பைத்தியமே! மாடிக்கு வந்து கதவைத் திறந்ததற்காகவா இப்படி அழுகிறாய்? என்னடி மோசம் முழுகிப் போயிற்று? இவர் அப்படியெல்லாம் சங்கோஜப்படுகிறவர் அல்ல. நீ வேணுமானால் பார்! நாளைக்கு நீ இருக்கிறபோதே என்னை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறேன். இதற்காக அழுவார்களா?" என்று இப்படிப் பேசிக் கொண்டே போனாள். அவளுடைய பேச்சு இன்னமும் என் நெஞ்சை அதிகமாகப் பிளந்தது என்பதை அவள் என்ன கண்டாள்?
நான் மெதுவாகச் சமாளித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு, "அதற்காக இல்லை அக்கா! தலைவலி மண்டையைப் பிளக்கிறது!" என்றேன். உண்மையாகவே தலையையும் வலிக்கத்தான் செய்தது. கண்ணில் நீர் வரவேண்டியது தான். "இதோ நானும் வருகிறேன்" என்று எனக்குத் தலைவலியும் வந்து விடுவது வழக்கம்.
அதற்கப்புறம் எனக்கு அடிக்கடி கண்ணீரும் தலைவலியும் சேர்ந்து வந்து கொண்டிருந்தன. ராஜம் இதனால் கவலையடைந்தாள். ஒரு நாள் அவள் அண்ணாவிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது என் காதிலே விழுந்தது. "ஏன் அண்ணா, மன்னி இப்படி இருக்கிறாள்?"
"எப்படி இருக்கிறாள்?" என்றார் அவர்.
"உனக்குக் கண்ணே இல்லையா, அண்ணா! ஓயாமல் அழுது அழுது மன்னிக்குக் கண் வீங்கிப் போகிறதே? தெரியவில்லையா?"
"எல்லாம் தெரிகிறது! ராஜம்! ஆனால் நான் என்ன செய்யட்டும்? நான் உன் மன்னியைக் கல்யாணம் செய்து கொண்டது பெரிய பிசகு. புத்தி அப்போது கொஞ்சம் சபலித்துவிட்டது. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்" என்றார்.
"ரொம்ப அழகாயிருக்கிறது. இப்படியெல்லாம் பேசாதே, அண்ணா! வீட்டுக்கு வீடு வாசற்படி. அங்கங்கே அப்படித்தான் இருக்கும். எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகப் போய்விடும்!" என்றாள் ராஜம்.
சில நாளைக்கெல்லாம் ராஜம் ஊருக்குப் போய் விட்டாள். ஆனால், ஒன்றும் சரியாகப் போகவில்லை. நாளாக ஆக, என் மனக்கசப்பு வளர்ந்து கொண்டிருந்தது. நான் கண்ணீர் விடுவதையும் குப்புறப் படுத்துக் கொண்டு விம்முவதையும் அவர் சில சமயம் பார்ப்பார். அவருடைய மெல்லிய காலடி சத்தத்திலிருந்து அவர்தான் வருகிறார் என்று நான் தெரிந்து கொள்வேன். ஒரு வேளை அவர் என் பக்கத்தில் உட்காரமாட்டாரா, உட்கார்ந்து என்னைச் சமாதானப் படுத்த மாட்டாரா என்று சில சமயம் மனத்திற்குள் எண்ணுவேன். ஆனால், அவர் தலையில் அடித்துக் கொண்டு, "சனியன், பீடை!" என்று சொல்லி விட்டுப் போய்விடுவார். வேறு சில சமயம், "ஐயோ! என் புத்தி இப்படியா கெட்டுப் போக வேணும்?" என்று சொல்லிக் கொண்டே போவார்.
நானோ, 'என்னத்துக்காகப் பகவான் நம்மைப் படைத்தார்?' என்று எண்ணமிடத் தொடங்கினேன். அவர் படைத்ததினாலேதான் என்ன? நல்ல வேளையாக, செத்துப் போவதை அந்தப் பகவானால் கூடத் தடுக்க முடியாதல்லவா?"
"சாவு", "மரணம்" என்ற மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினேன்.
எனக்குக் கல்யாணம் ஆனவுடனேயே என் தாயார் காலமாகி விட்டாள் என்று சொன்னேனல்லவா? என் தகப்பனார் பிறகு வேலையிலிருந்து விலகிக் கொண்டார். என் மூத்த தமக்கை ஹைதராபாத்தில் இருந்தாள். அவளுக்குப் பெரிய குடும்பம். அப்பா, பேரன் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டு ஹைதராபாத்திலேயே இருந்தார். அவருக்கு என் தீர்மானத்தைக் குறித்துக் கடிதம் எழுத முயன்றேன். அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு நன்றாக எழுதத் தெரியாது. விஷயத்தைச் சொல்ல முடியாமல் திண்டாடினேன். ஆகவே, நாலைந்து தடவை கடிதத்தைப் பாதி வரையில் எழுதிக் கிழித்துப் போட்டு விட்டேன்.
இப்படி நான் பாதி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் மட்டும் நான் கிழித்துப் போடாமலே காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை! அவர் ஒரு வேளை எடுத்திருப்பாரோ என்று ஒரு கணம் சந்தேகம் உதித்தது. ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட சுபாவம் கிடையாது. என்னுடைய அறைக்குள்ளேயே அவர் வருவதில்லை. ஆனாலும், பின்னால் நடந்ததை எண்ணிப் பார்க்கும் போது, முதலில் நான் சந்தேகப்பட்டது தான் உண்மையோ என்றும் தோன்றுகிறது.
கடைசியில், நான் என் தகப்பனாருக்குக் கடிதம் போடவேயில்லை. அதற்குள்ளேயே நான் எதிர்பாராத அந்த விபரீதச் சம்பவம் - என் வாழ்க்கையை அடியோடு மாற்றிய நிகழ்ச்சி நடந்து விட்டது.
இரவு நேரங்களில் என் கணவர் வெகு நேரம் புத்தக அறையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பார். நான் படுக்கை அறையில் கட்டிலில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பேன். சில சமயம் அழுது கொண்டே தூங்கி விடுவேன். அவர் வரும் போது விழித்துக் கொண்டிருந்தாலும், தூங்குவதுபோல் ஜாடை செய்வேன். அவர் வந்து படுத்து ஐந்து நிமிஷத்தில் காடாந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார்.
அன்று இரவு வரும் போது அந்த மாதிரி தான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். அவர் என் தலைமாட்டில் வந்து நின்ற போது எனக்குச் சற்று வியப்பாயிருந்தது. இதென்ன ஒரு நாளும் இல்லாத திருநாள்? எதற்காக இங்கே வந்து நிற்கிறார்? அடுத்த விநாடி, அவருடைய கரம் என்னுடைய நெற்றியை தொட்டது. இன்னும் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மூச்சை அடக்கிக் கொண்டிருந்தேன். ஆச்சரியம்! ஆச்சரியம்! அவர் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார்! கல்யாணம் ஆனதிலிருந்து, ஒரு தடவையாவது இம்மாதிரி அவர் செய்ததை நான் அறியேன்.
பிறகு அவருடைய காலடிச் சத்தம் கேட்கவே கண்ணைச் சிறிது திறந்து பார்த்தேன். அவர் கதவை மெதுவாய்த் திறந்து கொண்டு வெளியே போனார். எனக்கு என்னமோ வயிற்றில் பகீர் என்றது. இன்னதென்று தெரியாத பீதி உண்டாயிற்று. சற்று உற்றுக் கேட்டேன். வாசற் கதவு திறக்கும் சத்தம் வெகு இலேசாகக் கேட்டது.

உடனே பரபரப்புடன் எழுந்திருந்தேன். அவருடைய அறைக்கு ஓடினேன். அவர் மேஜை மீது ஒரு கடிதம் எழுதி வைத்து, அதன் மேல் பாரமும் வைத்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். நான் பயந்தபடியே தான் அதில் எழுதியிருந்தது. இரண்டே இரண்டு வரிதான்!
“அன்பார்ந்த அம்முலுவுக்கு,
உனக்குப் பரிபூரண விடுதலை கொடுத்து விட்டு நான் போகிறேன். நீ சௌக்கியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறேன்!
இப்படிக்கு ….”

கடிதத்தை அப்படியே போட்டு விட்டு, நான் வாசற்பக்கம் ஓடினேன். தெரு முனையில் அவருடைய வெள்ளை வேஷ்டி நட்சத்திர வெளிச்சத்தில் இலேசாகத் தெரிந்தது. அந்தத் திசையை நோக்கி ஓடினேன். அப்போது மேற்காற்று நாள்; ஹோ என்ற இறைச்சலுடன் காற்று 'விர் விர்' என்று அடித்துக் கொண்டிருந்தது. புழுதியை வாரி மேலே அடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் தலைவிரி கோலமாக ஓடினேன். தெருவில் ஒரு பிராணி கிடையாது. அந்தக் காற்றுக்கும் புழுதிக்கும் பயந்து தெரு நாய்கள் கூட வீட்டுத் திண்ணையில் பதுங்கிக் கிடந்தன போலும்! நான் நினைத்தபடியே அவர் தெரு முனையில் இருந்த சந்தில் திரும்பினார்.
வேகவதி நதிக்குப் போகும் சந்து தான் அது. நானும் அந்தச் சமயத்தில் திரும்பப் போனேன். அவர் நதிக்கரையை அடைந்தார். நேரே நதியில் இறங்கி விட்டார்; நதியில் பிரவாகம் பூரணமாய்ப் போய்க் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தினால் பிரம்மாண்டமான அலைகள் கிளம்பிக் கரையை மோதிக் கொண்டிருந்தன. நான் நதிக்கரையை அடைந்த போது அவர் வெள்ளத்தில் மார்பு அளவு ஜலத்துக்குப் போய் விட்டார். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. கூச்சல் போட வரவில்லை. ஒரு கணம் மங்கிய இருட்டில் அவர் தலை மட்டும் வெள்ளத்தின் மேல் தெரிவது போலிருந்தது! அடுத்த கணம் தலையும் வெள்ளத்துக்குள்ளே போய்விட்டது. அப்புறம் ஒரே அந்தகாரந்தான்!
சொல்ல முடியாத பீதி என்னைப் பற்றிக் கொண்டது. திரும்பி வீட்டை நோக்கி ஓடினேன்; கண் தெரியாமல் குருட்டாம் போக்காய் ஓடினேன். வழியில் பலமுறை தடுக்கி விழுந்தேன்! வீட்டுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தேனோ தெரியாது. அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு தரையில் விழுந்தேன். மனத்தினால் ஒன்றுமே சிந்திக்க முடியவில்லை. தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல் உணர்ச்சியேயில்லாமல் மரக்கட்டையைப் போல் கிடந்தேன். ஆனால், மார்பு மட்டும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த அடிப்பானது, 'விடுதலை விடுதலை விடுதலை' என்ற பல்லவிக்குத் தாளம் போடுவது போலிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *