Kalki Short StoriesKalki TimesStory

Theivayanai Kalki | Kalki Times

Theivayanai Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

தெய்வயானை

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Theivayanai Kalki

என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. “இருக்கட்டும்; நீங்கள் ஒரு காலத்தில் சாராயக் கடை குத்தகை எடுத்திருந்தீர்களாமே. அதை எப்படி விட்டீர்கள்? உத்தரமேரூரை விட்டுச் சென்னைப் பட்டணத்திற்கு ஏன் வந்தீர்கள்?” என்று நண்பரைக் கேட்டேன். “அது பெரிய கதை!” என்றார் முதலியார்.

“பாதகமில்லை, சொல்லுங்கள்” என்றேன். ஓமக்குட்டி முதலியார் சொல்லத் தொடங்கினார்:

நாங்கள் ஜாதியில் நெசவுக்காரர்கள்; ஆனாலும் எங்கள் குடும்பத்தில் மட்டும் இரண்டு தலைமுறையாய் நெசவுத் தொழில் செய்வது கிடையாது. எங்களுடைய பாட்டனார் எங்கள் ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்தார். ஆனால் என் தகப்பனார் காலத்தில் எங்கள் சொத்தெல்லாம் பல வழியில் அழிந்துவிட்டது. என்னையும் என் தாயாரையும் ஏழைகளாய்விட்டுத் தந்தை இறந்துபோனார். அப்பொழுது எனக்கு மூன்றே வயது; கடன்காரர்கள் எங்கள் சொத்தெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டார்களாம்.

என் தாயைப் பெற்ற பாட்டனார் ஒருவர் இருந்தார். அவர் அப்போது எங்களுடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவர் கிழவர்; வேலை செய்யத் தள்ளாதவர். ஆனால் நல்ல கெட்டிக்காரர். எங்களுக்கு மிஞ்சிய சொற்ப நிலத்தின் சாகுபடிக்கு வேண்டிய ஏற்பாடு செய்து குடும்ப காரியங்களைச் சீராக நடத்தி வந்தார். நான் தினந்தோறும் பகலில் எங்கள் மாடுகளை ஓட்டிச்சென்று வருவேன். மாலையில் விட்டுக்கு வந்து மாடுகளைக் கட்டிவிட்டுப் பாட்டன் பக்கத்தில் உட்காருவேன். அவர் இராமாயண, பாரதக் கதைகள் சொல்லுவார். விக்கிரமாதித்தியன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியனவும் சொல்லுவார். இவைகளையெல்லாம் நான் மிகவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஒருநாள் அவர் நளன் கதை சொல்லிக்கொண்டிருந்தார். தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் என்பதாக நளனுக்குச் செய்தி வந்த இடத்தில் கதையை நிறுத்தி, ‘உடம்பு சரியில்லை, அப்பா! ஏதோ ஒரு மாதிரியாயிருக்கிறது. பாக்கிக் கதையை நாளைக்குச் சொல்லுகிறேன்’ என்றார்.

கதையை அவர் முடிக்கவேயில்லை. மறுநாள் அவருக்கு உடம்பு அதிகமாய்விட்டது. ஊரார் அவர் செத்துப்போய் விடுவாரென்று பேசுவதைக் கேட்டேன். செத்துப் போவதென்றால் அது என்ன வென்று எனக்கு அப்போது முழுதும் புலப்பட வில்லை. எலி, பெருச்சாளி, பூச்சியின் சாவுதான் தெரியும். ஆனாலும் எல்லாரும் பேசிக் கொள்வதைக் கேட்டு ஒருவிதத் துக்கம் உண்டாயிற்று. அதைவிடக் கதை பாக்கியாய் நின்று விட்டதே என்ற துக்கம்தான் அதிகமாயிருந்தது. எனக்கு இப்போது நன்றாய் ஞாபகமிருக்கிறது; அவர் அருகில் சென்று “தாத்தா! நீ செத்துப் போகிறாயா? வேண்டாம்! கதையை முடிக்காமல் செத்துப் போக வேண்டாம்” என்று சொல்லி அழுதேன். அப்போது அவர் புன்சிரிப்புச் சிரித்து “குழந்தாய்! இதற்காக நீ வருத்தப்படாதே; நீ புத்தகம் படிப்பதற்குக் கற்றுக்கொள். நான் உனக்குச் சொன்ன கதைகளை விட இன்னும் எவ்வளவோ நல்ல கதைகள் புத்தகங்களில் இருக்கின்றன. நீ படிக்கக் கற்றுக் கொண்டால், ஆயிரங்கதைகள் படிக்கலாம். மற்றவர்களுக்கும் சொல்லலாம்” என்றார். மறுநாள் அவர் இறந்து போனார்

பாட்டன் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவேயில்லை. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தாயிடம் உத்தரவு பெற்று அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் வரையில் நான் அங்கே இருந்தேன். வீட்டு வேலை, வயல் வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆனால் படிப்பதை மட்டும் விடவில்லை. எங்கே, யாரிடத்தில் கதைப் புத்தகம் இருந்தாலும் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன். விளங்கினாலும், விளங்காவிட்டாலும் தட்டுத் தடுமாறி வாசித்து முடிப்பேன். ஒரு கந்தல் ஏடு அகப்பட்டால்கூட விடுவதில்லை. இவ்வாறு இராமாயணம், பாரதம், கந்தபுராணம், நளமகாராஜன் கதை, அரிச்சந்திர மகாராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை, அல்லி அரசாணி மாலை முதலிய பல நூல்களைப் படித்து முடித்தேன்.

இப்படி பல வருஷம் சென்றன. ஒருநாள் எனக்கு ஒரு “நாவல்” கிடைத்தது. ஆஹா! அதைப் படித்தபோது நான் அடைந்த சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. அது முதல், நாவல் பைத்தியம் என்னை நன்றாய்ப் பிடித்துக் கொண்டது. ஒரு முறை ஊரிலிருந்து சிலர் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்கப் பட்டணத்திற்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து வந்தேன். அவர்களெல்லாம் ஏதேதோ சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? மூர்மார்க்கட்டில் பழைய கிழிந்த நாவல்களில் ஒரு கட்டு வாங்கிக்கொண்டு போய்ச்சேர்ந்தேன். இரவு பகல் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். இப்பொழுது நினைத்தால் மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. குப்பைத் தொட்டியில் போடுவதற்கே தகுந்தவை என்று இப்போது நான் கருதும் நாவல்களை அப்போது எத்தனை ஆவலுடன் படித்தேன், தெரியுமா?

[“இருக்கட்டும். நீங்கள் என்னைக் கேலி செய்வதில்லை என்று உறுதி கூறினால்தான் இனி மேல் கதை சொல்லுவேன்” என்றார் ஓமக்குட்டி முதலியார். “ஒரு நாளும் கேலி செய்யமாட்டேன். சொல்லுங்கள்” என்றேன்.]

சாதாரணமாய் நாவல்கள் என்றால் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியுமே? எல்லாம் காதல் மயம். நமது வாழ்வுக்குச் சற்றும் பொருந்தாதவை. ஆனால் நான் அப்போது பதினெட்டு வயது வாலிபன். இவ்வளவு தூரம் பகுத்தறியும் சக்தி எனக்கில்லை. ஆகவே மேற்படி நாவல்களைப் படித்ததன் பயனாகக் காதலைப் பற்றியும், விவாகத்தைப் பற்றியும், வருங்கால வாழ்வைப் பற்றியும் ஏதேதோ மனோராஜ்யம் செய்யத் தொடங்கினேன்.

எங்கள் கிராமத்தில் அப்பொழுது பெரிய பணக்காரர் அப்புக் குட்டி முதலியார். அவர் தான் கிராம முன்சீப்புக்கூட. அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் தெய்வயானை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அவள் ஒரு சர்வ சாதாரணமான பெண் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்போது “நாவல்” கண்ணுடன் பார்த்த எனக்கு அவள் ஓர் அப்ஸர ஸ்திரீயைப் போல் காணப்பட்டாள். பூலோகத்திலும் சரி, தேவலோகத்திலும் சரி, அவளைப் போன்ற அழகி வேறொருத்தியில்லை என்று நிச்சயமடைந்தேன். புத்தகத்தில் படித்த கதாநாயகர்களைப் போலவே நானும் அவளைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் உயிர் பிழைத்திருக்க முடியாதென்று உறுதி கொண்டேன்.

இது வரையில் நாவல் படிப்பு பயன்பட்டது. இதற்குமேல் என்ன செய்வதென்பதற்கு நாவல்களின் உதவி கிடைக்கவில்லை. நானோ தன்னந் தனியனான வாலிபன்; தகப்பனற்றவன்; ஏழை. அப்புக்குட்டி முதலியாரோ பெரும் பணக்காரர்; ஊருக்கு எஜமானர். அவரிடம் போய் “உன் பெண்ணைக் கொடு” என்று கேட்டால் கட்டி வைத்து அடிப்பார். நாவல்களில் படித்ததைப்போல் பெண்ணை நேரே பார்த்து என் காதலை வெளியிடுவதற்கு வேண்டிய தைரியம் இல்லை. அதெல்லாம் நாவல்களில் நடக்கும். வாழ்க்கையில் நடைபெறாது. ஆதலால் ஓயாமல் சிந்தித்த வண்ணம் இருந்தேன். கடைசியாக ஒரு யுக்தி தோன்றியது. அந்த ஊரில் சமீபத்தில் கள்ளு சாராயக்கடைகள் ஏலம் போட இருந்தார்கள். அந்தக் கடைகளை ஏலம் எடுப்பதென்று தீர்மானித்தேன். விரைவில் பணம் சம்பாதித்து அப்புக்குட்டி முதலியாருக்குச் சமமாவதற்கு இது ஒன்றுதான் வழி என்று எண்ணினேன்.

தன் நகைகளை விற்றும், பத்துப் பன்னிரண்டு வருஷங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தும் என் தாயார் இருநூறு ரூபாய் வரையில் பணம் வைத்திருந்தாள். ஏலப்பணத்தைக் கட்டுவதற்கு அத்தொகையைக் கொடுக்கும்படி கேட்டேன். தாயார் முதலில் ஆட்சேபித்தாள். “அந்தப் பாவத் தொழில் நமக்கு வேண்டாமப்பா; ஏதோ உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தி அடைவோம்” என்றாள். நான் பிடிவாதம் பிடித்ததன் மேல் அவள் “குழந்தாய்! நம்முடைய குடும்ப சொத்தெல்லாம் எப்படி அழிந்தது தெரியுமா?” என்று கேட்டாள். “தெரியாதே! எப்படி?” என்றேன். “எல்லாம் உன் தகப்பன் குடித்தே ஒழித்துப் போட்டான். அந்தப் பாவம் என்னத்திற்கு?” என்றாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதுவரையில் அந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஆனால் தெய்வயானையை நினைத்துக் கொண்டேன். தாயார் சொன்ன செய்தியிலிருந்து என்னுடைய தீர்மானம் இன்னும் உறுதிபட்டது. “அம்மா! கள்ளுக் கடையில் போன சொத்தை கள்ளுக்கடை மூலமாகவே சம்பாதித்துத் தீருவேன். அதுதான் தெய்வத்தின் சித்தம். இல்லாவிட்டால் எனக்கேன் இந்த யோசனை தோன்ற வேண்டும்?” என்றேன்.

கள்ளுக்கடைக்குப் போட்டி அதிகம். எடுக்க முடியவில்லை. சாராயக்கடை மட்டும் எடுத்தேன். வியாபாரம் நன்றாய் நடந்தது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தேன். ஆனால் என் கையிலும் பணம் அதிவேகமாகச் சேர்ந்து கொண்டு வந்தது. அடுத்த வருஷம் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண்டையும் எடுத்தேன். அப்புக்குட்டி முதலியாருடைய பெண்ணுக்காக நான் செய்த காரியங்களெல்லாம் அவர் மனதில் பொறாமையைத்தான் உண்டாக்கின. ஏனெனில் அப்போது அவருடைய கை இறங்கி வந்தது. கடன் அதிகமாயிற்று. “கள்ளுக்கடைக்காரப் பயல்” என்று என்னைப் பற்றி அவர் அவமதிப்பாய்ப் பேசியதாய்க் கேள்விப் பட்டேன். அவருடைய அகம்பாவத்தை அடக்குவது எப்படி என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டு வந்தேன். என் எண்ணம் நிறைவேறுவதற்கான ஒரு சம்பவம் விரைவிலேயே நடந்தது. கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்று தோன்றிற்று!

ஒரு சமயம் அப்புக்குட்டி முதலியார் தம் குடும்பத்துடன் ஏதோ வியாதியைச் சொஸ்தப்படுத்திக் கொள்ளப் பட்டணத்துக்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்தார். இங்கே அவர்களுக்கு பந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அவர் திரும்ப ஊருக்கு வந்த அன்று அவருடைய ஆள் ஒருவன் சாராயக்கடைக்கு வந்து ஒரு புட்டி சரக்கு வாங்கிக்கொண்டு போனான். எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் பந்துக்கள் வீட்டில் கற்றுக்கொண்டார் போலும் என்று எண்ணினேன். மூன்று நாள் கழித்து மறுபடியும் அந்த ஆள் வந்து இன்னொரு புட்டி வாங்கிக் கொண்டு போனான்.

அப்போது எனக்குண்டான சந்தோஷத்தை அளவிட முடியாது. “சரி, முதலியார் நமது வலையில் வீழ்ந்தார். அவர் கர்வம் ஒழிந்தது; இந்த ஊரில் நம்மைத் தவிரக் கடன் கொடுப்பார் யாருமில்லை. தெய்வயானை நம்மைத் தப்பி எங்கே போகிறாள்?” என்று இவ்வாறெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினேன்.

எல்லாம் நான் எண்ணியபடியே நடந்து வந்தது. ஒரு வருஷத்திற்குள் அப்புக்குட்டி முதலியார் ஊரறிந்த பெருங் குடிகாரர் ஆனார். கடன் விஷம் போல ஏறி வந்தது. ஏராளமான பூமி அவருக்கு இருந்தாலும் வட்டி கொடுப்பது எளிதன்று. நிலத்தை விற்றுக் கடனைத் தீர்ப்பதற்கும் நிலத்தை வாங்குவார் யாருமில்லை. இந்த நிலைமையில் ஒரு கோர்ட்டு வாரண்டு அவர்மீது பிறந்தது. வாரண்டில் தப்புவதற்காகக் கையிலிருந்த சர்க்கார் கிஸ்திப் பணத்தைக் கொடுத்துவிட்டார். இவர் குடிகாரரென்றும், கடன்காரரென்றும் மொட்டை விண்ணப்பத்தின் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிந்து சோதனைக்கு வந்துவிட்டார்கள். முதலியார் தம் கர்வத்தை எல்லாம் விட்டு என்னிடம் ஓடிவந்தார். என் காலில் விழுந்து கெஞ்சினார். எண்ணூறு ரூபாய் கடன் கொடுத்து அவர் தலைக்கு வந்த விபத்திலிருந்து அவரைத் தப்புவித்தேன்.

நான் கொஞ்சம் குறிப்புக் காட்டியதுதான் தாமதம், முதலியார் தெய்வயானையை எனக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார். விவாகத்திற்கு நாள் குறிப்பிடுவது தான் பாக்கி. இந்தச் சமயத்தில் அப்புக்குட்டி முதலியார் ஒருநாள் திடீரென்று மரணமடைந்தார். நல்ல திடதேகியாயிருந்த அவர் இப்படி அகால மரணமடைந்ததற்கு மிதமிஞ்சிய குடிதான் காரணமாயிருக்கவேண்டும். இந்தத் துக்க சம்பவத்தினால் என்னுடைய உத்தேசங்களைப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நான் தெய்வயானையை விவாகம் செய்து கொண்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் அவர்கள் வீட்டில் வயது வந்த ஆண் மக்கள் யாருமில்லை. அப்புக்குட்டி முதலியாருடைய இரண்டாந்தாரம் சிறு பெண். அவளும், அவளுடைய கைக்குழந்தையும், தெய்வயானையும்தான் வீட்டிலுள்ளவர்கள். இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், குடும்பத்தின் கடனைத் தீர்த்துச் சீர்ப்படுத்தும் பொறுப்பையும் நானே வகிக்க வேண்டியவனாவேன். இப்படி எல்லாம் மனதில் சந்தேகங்கள் உண்டாயின. ஆனாலும் முடிவில் தெய்வயானையை மணந்துதான் தீர வேண்டும் என்று தீர்மானித்தேன்.

இப்போதெல்லாம் கள்ளு, சாராயக் கடைகளுக்கு நானே நேரில் போவதில்லை. சம்பள ஆள்கள் வைத்துவிட்டேன். அன்றாடம் சாயங்காலத்தில் மட்டும் சென்று கூடுமுதல் தொகையை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு நாள் அவ்வாறு சென்றபோது, கிராம முன்சீப்பு வீட்டு வேலைக்காரன் அப்பொழுதுதான் கையில் புட்டியுடன் கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் அவன் சாலையோரமாய்ப் பதுங்கிக் கொண்டு சென்றான்.

“இவன் இப்போது யாருக்குச் சாராயம் வாங்கிப் போகிறான்?” என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு குருட்டு எண்ணத்தினால் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தோன்றிற்று. ஆகவே அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் ஊர்த் தெருவின் புறமாய்ச் சென்று அப்புக்குட்டி முதலியாரின் வாயிற்படி வழியாய் நுழைந்தான். இதை முற்றும் ஆராய வேண்டுமென்று எண்ணி, தெருவீதிக்குச் சென்று முதலியார் வீட்டுக்குள் நுழைந்தேன். நடைக்குச் சென்றதும் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது நான் கண்ட காட்சி இடிவிழுந்தாற்போல் என்னைத் திகைக்கச் செய்து விட்டது.

தெய்வயானையும் அவளுடைய சிறிய தாயாரும் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். முதலியாருடைய மனைவியின் கையில் சாராயபுட்டி. இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தெய்வயானையிடம் கொடுத்து மற்றொன்றைத் தான் அருந்த ஆரம்பித்தாள். பலவருஷ காலமாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்த காதல் அத்தனையும் அந்த ஒரு கண நேரத்தில் விஷமாகிவிட்டது. சொல்ல முடியாத அருவருப்பு எனக்குண்டாயிற்று. சத்தம் செய்யாமல் வெளியே வந்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.

என் மனோரதத்தில் இடி விழுந்தது. என் ஆசை எல்லாம் நிராசையாயிற்று. முதலில் அப்புக் குட்டி முதலியார் வீட்டில் சாராயபுட்டி புகுந்ததைப் பார்த்தபோது, நான் ஆசைப்பட்ட பழம் கிட்டிவிட்டது என்று சந்தோஷப்பட்டேன். வீட்டிற்குள் சென்ற அந்த சாராயபுட்டி, பின்னால் செய்த வேலையைப் பார்த்ததும், அந்தப் பழம் விஷமாய்ப் போவதற்கு காரணமாயிற்று. அளவில்லாத துக்கத்துடன் அன்று படுத்தேன். பாட்டன் சொன்ன பழங்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. நாவல்கள் எல்லாம் ஆபாசமாய்த் தோன்றின.

அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கள்ளு, சாராயக் கடைகளைத் தொலைத்துத் தலை முழுகினேன். அக்கடைகளில் சம்பாதித்த சொத்தை எல்லாம் அந்த ஊர்க் கோவிலுக்கும், பஜனை மடத்திற்கும், பள்ளிக்கூடத்திற்குமாகப் பகிர்ந்து எழுதி வைத்தேன். இந்த தர்மங்கள் சரிவர நடப்பதற்கும் ஏற்பாடு செய்தேன். கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தாயாரும் நானும் இந்தச் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம்” என்று கூறி நண்பர் கதையை முடித்தார்.

இத்துடன்

அமரர் கல்கியின் தெய்வயானை

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Theivayanai Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,theivayanai Audiboook,theivayanai,theivayanai Kalki,Kalki theivayanai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *