Kalki Short StoriesKalki TimesStory

Rangadurgam Raja Kalki | Kalki Times

Rangadurgam Raja Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

ரங்கதுர்க்கம் ராஜா

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Rangadurgam Raja Kalki

முதல் பாகம்

இரவு பத்து மணி (கதை ஆரம்பமாகிவிட்டது) “எச்.எம்.எஸ்.பிரிட்டானியா” என்னும் கப்பலின் இரண்டாம் வகுப்புத் தளத்தில், கப்பலின் கைப்பிடிக் கம்பிகளில் சாய்ந்து கடலை நோக்கிக் கொண்டு நிற்கிறான் ஓர் இளைஞன். அந்தக் கப்பல் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பி இங்கிலாந்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. நாளைக் காலையில் ஏடன் துறைமுகத்தைச் சேருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலில் அந்த நிமிஷத்தில் ஐரோப்பிய நடனம் நடந்து கொண்டிருந்தது. பாண்டு வாத்தியம் முழங்கிற்று. வெள்ளைக்காரப் பிரயாணிகள் அநேகமாய் எல்லாரும் நடனத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப் பிரயாணிகள் – தூங்கச் சென்றவர்கள் போக, பாக்கிப் பேர் – துரைமார்களும் துரைசானிகளும் நடனமாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நமது இளைஞன் மட்டும் தன்னந்தனியாக இங்கே நின்று கொண்டிருந்தான். ஏன்? (ஆமாம். மறந்து போனான். நியாயமாய் உங்களைக் கேட்கக் கூடாதுதான். கதை சொல்வது நீங்கள் இல்லையே? நான் அல்லவா?)

அமைதியான கடல்; தாவள்யமான நிலவு; அகண்டமான ஆகாயம்; அநந்தமான நட்சத்திரங்கள். இந்த அற்புதக் காட்சியில் கருத்தைச் செலுத்தியிருந்தான் அவ்விளைஞன். அந்த நேரத்தில் அவன் மனத்திலே ஓர் அபூர்வமான எண்ணம் உண்டாயிற்று. அது விரைவில் தீர்மானமாக மாறியது. அத்தீர்மானம் என்னவென்று உங்களால் ஊகிக்க முடியுமா? – ஒரு நாளும் முடியாது என்றான். கப்பலிலிருந்து குதித்துக் கடலில் மூழ்கி உயிரை விட்டு விடுவது என்பதே அத்தீர்மானம்! இவ்வளவு உசிதமான – புத்திசாலிகள் அனைவருக்கும் முன் மாதிரியாயிருக்கக் கூடிய – தீர்மானத்துக்கு அவன் வந்ததன் காரணம் என்னவென்று சற்றே பார்க்கலாம்.

கே.ஆர். ரங்கராஜன் ஓர் அதிசயமான இளைஞன். அவனிடம் அநேக அதிசய குணங்கள் இருந்தன. அவற்றில் எல்லாம் முக்கியமானது தனிமை வாழ்வில் அவன் கொண்டிருந்த பற்றுதான். இதற்குக் காரணம் இந்த ஏழை உலகத்தின் மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பேயாகும். இந்த உலகத்தில் அவனுக்குப் பிடித்த மனிதர்கள் யாருமே இல்லை. யார் என்ன பேசினாலும் அது அசட்டுத்தனமாகவே அவனுக்குத் தோன்றும். (நமக்குள் இருக்கட்டும், நேயர்களே! – உண்மையும் அதுதான் போலிருக்கிறதே? நாம் இன்று பேசுகிறதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குப் பின் யோசித்துப் பார்த்தால் ஒரு மாதிரியாகவே தோன்றுகிறதல்லவா?) எனவே யாரிடமும் அவன் கலகலப்பாகப் பேசுவதே கிடையாது.

பிறருடைய அசட்டுத்தனத்தில் அவனுக்கு எவ்வளவு தீவிரமான நம்பிக்கை இருந்ததென்பதற்கு ஒரே ஓர் உதாரணம் சொன்னால் போதுமானது. அவன் பி.ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியவன். அப்புறம் எம்.ஏ. பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான். பணமும் கட்டி விட்டான். ஆனால், பரீட்சைக்குப் போகவில்லை. இதற்குக் காரணம், ‘நாம் எழுதுகிற விஷயத்தை அறிந்து சீர் தூக்கிப் பார்க்க யோக்கியதை உள்ளவர் இங்கே யார் இருக்கிறார்கள்?’ என்று அவன் எண்ணியதுதான். பி.ஏ. பரீட்சையில் நியாயமாகத் தான் தேறியிருக்கக் கூடாதென்றும் கைத் தவறுதலினால் தன்னுடைய நம்பரைத் தேறியவர்களின் ஜாபிதாவில் சேர்த்து விட்டார்களென்றும் அவன் சொல்வான்.

இந்த உலகத்தில் அவன் அலுத்துக் கொள்ளாமலும் விருப்பத்துடனும் பேசக் கூடியவர்களாக வெவ்வேறு காலத்தில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் அவனுடைய தாய்மாமன். தாயார் தகப்பனார் இருவரும் காலஞ்சென்ற பிறகு அவனை அருமையுடன் வளர்த்துப் படிக்க வைத்தவர் அவர் தான். அவர் ஆங்கிலக் கல்வி பயிலாதவர். ஆனால், உலக விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவர். இயற்கையாக அமைந்த நகைச்சுவையுடன் வெகு ரஸமாகப் பேசக் கூடியவர். நவீன இலட்சியங்களையும் இயக்கங்களையும் பற்றிச் சொன்னால் மிக நுட்பமாக அறிந்து கொள்ளக் கூடியவர். அவருடன் எத்தனை நேரம் பேசினாலும் ரங்கராஜனுக்கு அலுப்புண்டாகாது.

அவ்வளவு அரிய குணங்களும் ஆற்றல்களும் படைத்த அந்த மனிதருக்கு ஒரே ஒரு சாமர்த்தியம் மட்டும் இல்லாமல் போயிற்று. யமனுடன் வாதாடி, “என் மருமகனை விட்டு வரமாட்டேன்” என்று சொல்லிச் சாதிப்பதற்கு அவருக்குச் சக்தி போதவில்லை. சென்ற வருஷம் அவர் காலஞ் சென்ற போது ரங்கராஜனுக்கு உலகவே சூனியமாகி விட்டதாகக் காணப்பட்டது. மூன்று மாத காலம் வரையில், “மேலே என்ன செய்யப் போகிறோம்?” என்று யோசிப்பதற்கே அவனுடைய மனம் இடங்கொடுக்கவில்லை. ‘மாமா போய் விட்டார்’, ‘மாமா போய் விட்டார்’ என்று அது ஜபம் செய்து கொண்டிருந்தது.

அடுத்தபடியாக, அவனுடைய மதிப்புக்குரியவராயிருந்தவர், அவன் படித்த கிராமப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர். முன்னெல்லாம் அவருடைய சிநேகத்திலும் ஸல்லாபத்திலும் அவன் பெரிதும் சந்தோஷமடைவதுண்டு. ஆனால், நாளாக ஆக அவருக்கும் தனக்கும் இடையில் ஒரு பெரிய அகழ் ஏற்பட்டு வருவதை அவன் கண்டான். அவருடைய மூப்பு அதிகமாக ஆக, புதிய இலட்சியங்கள், புதிய கருத்துக்கள் முதலியவற்றைக் கிரஹிப்பதற்கு வேண்டிய சக்தியை அவர் துரிதமாக இழந்து வருவதை நேருக்கு நேரே அவன் பார்த்தான். சில நாளைக்கெல்லாம் அவர்களுடைய சம்பாஷணை பழைமைக்கும் புதுமைக்கும் – அல்லது இளமைக்கும் முதுமைக்கும் நடக்கும் விவாதமாகவே மாறி வரத் தொடங்கியது. இந்த விவாதத்தின் காரம் அதிகமாக ஆக, உபாத்தியாயரின் பழைமைப்பற்று அபரிமிதமாகி ஏற்கெனவே இல்லாத மூட நம்பிக்கைகள், குருட்டுக் கொள்கைகள் எல்லாம் அவர் உள்ளத்தில் குடிகொள்ளத் தொடங்குவதை ரங்கராஜன் கண்டு மிக்க பீதியும், துயரமும் அடைந்தான். கடைசியில், அவருடன் தான் எவ்விதச் சம்பாஷணையும் வைத்துக் கொள்ளாமலிருப்பதே அவருக்குச் செய்யக் கூடிய பெரிய உபகாரமாகும் என்று தீர்மானித்தான்.

மற்ற ஹைஸ்கூல் உபாத்தியாயர்கள், கலா சாலை ஆசிரியர்கள் இவர்களில் யாரிடமும் ரங்கராஜனுக்கு மரியாதையாவது, சிநேகமாவது ஏற்பட்டது கிடையாது. அவர்கள் ஏதோ தண்டத்துக்கு வந்து அழுதுவிட்டுப் போனார்கள். இவன் கடனுக்குக் கேட்டுத் தொலைத்தான். அவனுடைய சகோதர மாணாக்கர்கள் விஷயத்திலும் அப்படித்தான். முதன் முதலில் அவன் ஹைஸ்கூலில் வந்து சேர்ந்தபோது, தன் பக்கத்திலிருந்த மாணாக்கனோடு பேச்சுக் கொடுத்தான். அவன் சென்ற வருஷமும் அதே வகுப்பில் இருந்தவன் என்று அறிந்ததும், “ஏன் அப்படி?” என்று கேட்டான். “ஏனா? இந்த வாத்தியார்ப் பயல் மார்க்குக் கொடுக்கவில்லை. அவன் தாலியறுக்க!” என்று பதில் வந்தபோது, அவனுடைய சகோதர மாணாக்கர்களிடன் அவனுக்கு ஏற்பட்ட அருவருப்பு, கலா சாலையை விட்டு வெளியே வரும் வரையில் சற்றும் குறைந்ததாகச் சொல்ல முடியாது.

இந்தப் பொது விதிக்கு விலக்காக ஒரே ஒருவன் மட்டும் இருந்தான். அவன் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜில் இரண்டு வருஷம் வரையில் ரங்கராஜனுடன் சேர்ந்து படித்தவன். இந்தப் பால்ய சிநேகிதனின், ஸகவாசம் எப்போதும் ரங்கராஜனுக்கு மகிழ்ச்சியளித்து வந்தது. ஆனால் இண்டர்மீடியட் பரீட்சையில் ஒரு முறை தேறாமல் போகவே, தர்மலிங்கம் கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தோடு போய் விட்டான்.

ரங்கராஜன் காலேஜ் படிப்பு முடிந்ததும் தனது பால்ய நண்பனைத் தேடிக் கிராமத்துக்குச் சென்றான். சாயங்காலம் ஆனதும், பழைய வழக்கத்தைப் போல் “ஆற்றங்கரைக்குப் போய் வரலாம்” என்று கூப்பிட்டான். தர்மலிங்கம், “என் வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்” என்று உள்ளே போனதும், ரங்கராஜனுக்கு கண்கள் திறந்தன. உள்ளே போனவன் தன் ஒரு வயதுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன் ரங்கராஜனுக்கு நிராசை ஏற்பட்டது. நண்பனும் தானும் இப்போது வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாகி விட்டதை அவன் கண்டான். மறுநாளே சிநேகிதனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

மாமா இருந்தபோது ஒரு சமயம் கல்யாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். “கல்யாணம்” என்றதும் ரங்கராஜன் காதைப் பொத்திக் கொண்டான். சராசரியில் ஸ்திரீகளை விடக் கல்வியறிவில் சிறந்தவர்களாயிருக்கும் புருஷர்களுடைய ஸகவாசத்தையே அவனால் ஐந்து நிமிஷத்துக்கு மேல் சகிக்க முடிவதில்லை. வாழ்நாளெல்லாம் பிரிய முடியாதபடி ஒரு ஸ்திரீயை யாராவது கழுத்தில் கட்டிக் கொள்வார்களா? சனியனை விலை கொடுத்து வாங்குவது போல் அல்லவா? “மாமா அம்மாமியைக் கட்டிக் கொண்டு நீங்கள் அவஸ்தைப் படுவது போதாதா? என்னையும் அப்படிக் கெடுப்பதற்கு ஏன் விரும்புகிறீர்கள்?” என்றான். “அசடே! உனக்கு என்ன தெரியும் நானும் அம்மாமியும் சில சமயம் சண்டைப் போட்டுக் கொள்கிறோம் என்பது வாஸ்தவந்தான். அதைக் கொண்டா எங்கள் இல்வாழ்க்கையை நீ மதிப்பிடுவது? உன் அம்மாமி எனக்கு இல்வாழ்க்கையில் எவ்வளவு மன நிம்மதி, எவ்வளவு உற்சாகம், எவ்வளவு ஹாஸ்யரஸம் அநுபவிப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அளித்திருக்கிறாள் என்பதெல்லாம் உனக்கு என்ன தெரியும்?” என்று மாமா சொன்னார். “அப்படியானால், அந்தப் பாக்கியம் முழுவதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு வேண்டாம்,” என்றான் ரங்கராஜன்.

மாமா எவ்வளவோ சொல்லியும் பயனில்லை.

அவ்வாறே உத்தியோகத்தைப் பற்றியும் பிரஸ்தாபம் வந்தது. வேலை ஒன்றும் இல்லாமலிருந்தால் இப்படித்தான் ஏதேனும் குருட்டு யோசனைகள் தோன்றிக் கொண்டிருக்குமென்றும் ஏதேனும் ஓர் அலுவலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியும் மாமா சொன்னார். பலவித உத்தியோகங்களைப் பற்றியும் வாதித்தார்கள். அதிலிருந்து நம் கதாநாயகனுடைய யோக்கியதைக்குத் தகுந்ததாக ஒருவித உத்தியோகமும் இல்லை என்பது வெளியாயிற்று. சர்க்கார் உத்தியோகமா? சிவ சிவா! அந்த வார்த்தையைக் கேட்டதுமே கிராமத்து ஜனங்களைப் போல் அறிவுத் தெய்வமும் பயந்து மிரண்டு அருகில் கூட வராதே! வக்கீல் வேலையா? பகவானே! முட்டாள் கட்சிக்காரர்களுடனும் மூட ஜட்ஜுகளுடனும் அல்லவா இழவு கொடுக்க வேண்டும்? வைத்தியத் தொழிலா? அதைப் போல் அறியாமையை அடிப்படையாகக் கொண்ட தொழிலே வேறு கிடையாது! வாத்தியார் வேலையா? மந்தபுத்தியுள்ள மாணாக்கர்களுடன் நாளெல்லாம் மாரடிப்பதைவிட வேறு எது வேண்டுமானாலும் செய்யலாம் – இப்படியே, படித்தவர்கள் பிரவேசிப்பதற்குரிய நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் விலக்கப்பட்டது.

“இதெல்லாம் உனக்கு ஒன்றும் பிடிக்காவிட்டால் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவது தானே? காங்கிரஸில் சேர்ந்து வேலை செய்யலாமே? உயர்ந்த மேதாவிகள் காங்கிரஸில் இருக்கிறார்களே?” என்று மாமா கேட்டார்.

அரசியல் என்றாலே ரங்கராஜனுக்குப் பிடிப்பதில்லை. ஞானசூனியர்களும், அரை குறை அறிவுள்ளவர்களுந்தான் அரசியல் முன்னணிக்கு வருகிறார்கள் என்று அவன் சொல்வான். காங்கிரஸைச் சேர்ந்தவர்களில் ஒரு நாலைந்து பேர் மட்டும் அறிவுத் தெளிவுடையவர்கள் என்று அவன் ஒப்புக் கொள்வதுண்டு; ஆனால், அவர்கள் பாடுபடுவதெல்லாம் வியர்த்தமென்றும், இந்த மூட ஜனங்கள் ஒரு நாளும் முன்னுக்கு வரப்போவதில்லை என்றும் கூறுவான்.

மேற்கண்டவாறு மாமா யோசனை சொன்னதும் ரங்கராஜன் அன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தான். அதில் வெளியாகியிருந்த ஓர் அரசியல் பொதுக் கூட்டத்தின் நடவடிக்கைகளையும் முதல் நாள் சட்டசபை நடவடிக்கைகளையும் படித்துக் காட்டினான்.

“மாமா! மகாத்மாவும், வல்லபாயும், இராஜகோபாலாச்சாரியும், ஜவஹர்லாலும் சுயராஜ்யத்துக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் இந்த ஜனங்களை வைத்துக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதென்பது அசாத்தியமென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படியே நம்மை ஆள்வோரும் முட்டாள்களாயிருக்கும் காரணத்தினால் நாம் சுய ராஜ்யம் அடைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அதை வைத்து நிர்வகிக்கப் போகிறவர்கள் யார்? இதோ இப்போது வாசித்தேனே, அதைப் போலெல்லாம் அர்த்தமில்லாமல் பிதற்றக் கூடிய ஏழாந்தர, எட்டாந்தர மூளையுள்ள மனிதர்கள் தானே? இவர்களிடம் இராஜ்யபாரத்தைக் கொடுப்பதற்காக நான் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்?” என்றான்.

ரங்கராஜனுடைய காலத்தில் பெரும்பகுதி படிப்பில் போய்க் கொண்டிருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள உயர்தர இலக்கியங்களில் அவன் படிக்காதது ஒன்றுமில்லை. நேரம் போவது தெரியாமல், ஊன் உறக்கங்களை மறந்து படித்துக் கொண்டிருப்பான். ஆனால், படிப்புங்கூடக் கசந்து போகும்படியான ஒரு சமயம் வந்தது. பண்டைக்கால ஆசிரியர்களின் சிறந்த நூல்களையெல்லாம் படித்தாகி விட்டது. இக்காலத்து ஆசிரியர்கள் எழுதுவதோ அவனுக்கு ஒன்றும் பிடிப்பதில்லை. வோட்ஹவுஸ் போன்றவர்களின் வெறும் ‘புருடை’ நூல்களில் எப்போதும் ஐந்தாறு பக்கத்துக்கு மேல் அவனால் படிக்க முடிவதில்லை. நாளடைவில் ஷா, செஸ்டர்டன், பெல்லாக் முதலியவர்கள் கூடச் சுவை நைந்த பழங்கதைகளையே படைக்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு உயிர் வாழ்க்கையே ஒரு பாரமாய் விட்டது. மனத்தைச் செலுத்துவதற்கு ஏதேனும் ஒரு வழி விரைவில் காணாவிடில் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது.

அத்தகைய வழி அவன் யோசனை செய்யாதது ஒன்றே ஒன்று தான் பாக்கியிருந்தது; வெளி நாடுகளுக்கு யாத்திரை சென்று வரவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வெகு நாளாய் உண்டு. மாமா இருந்தவரையில் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு அவ்வளவு அவசியத்தையும் அவன் அப்போது காணவில்லை. இப்போது அவசியம் அதிகமான போது சந்தர்ப்பமும் சரியாயிருந்தது. பிதுரார்ஜிதச் சொத்தில் பெரும் பகுதியை ஒன்றுக்கு பாதி விலையாக விற்றுப் பிரயாணத்துக்குப் பணம் சேர்த்துக் கொண்டான். முதலில், இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துப் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ‘பிரிட்டானியா’ என்னும் கப்பலில் பிரயாணமானான்; மூன்று நாள் கப்பல் பிரயாணத்துக்குப் பிறகு அவனுடைய மனோநிலை எவ்வாறிருந்தது என்பது கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

ரங்கராஜன், அதுவரையில் வெள்ளைக்காரர்களுடன் நெருங்கிப் பழகியதில்லை. சினிமா டாக்கிகளில் பார்த்தது தவிர அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. ‘பிரிட்டானியா’ கப்பலில் பிரயாணம் செய்தவர்களில் பெரும்பாலோர் துரைமார்களும் துரைசானிகளுமே. மூன்று நாள் அவர்கள் சமீபத்திலிருந்து அவர்களுடைய நடை உடை பாவனைகளைப் பார்த்ததன் பயனாக அவனுடைய உத்தேசம் பெரிய மாறுதல் அடைந்தது. இந்த மாதிரி ஜனங்களிடையே இன்னும் பத்து நாள் பிரயாணம் செய்ய வேண்டும். அப்புறம்? இதே மாதிரி ஜனங்கள் மத்தியில் தான் அயல் நாட்டில் வசிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வந்தாலோ? மறுபடியும் இந்த அசட்டு மனிதர்களிடையேதான் வாழ வேண்டும். சீச்சீ! இதென்ன வாழ்க்கை!

நீலநிறக் கடலில் கம்பீரமாய் எழுந்து விழுந்து கொண்டிருந்த அலைகள் அவனை, “வா! வா!” என்று சமிக்ஞை செய்து கூப்பிட்டன. கடல் நீரில் பிரதிபலித்த சந்திர பிம்பத்தின் சலன ஒளி அலைகளும் அவ்வாறே அவனை ஆதரவுடன் அழைத்தன. வெகு தூரத்தில் வான வட்டமும் கடலும் சந்திக்கும் இடத்தில் தோன்றிய ஒரு தனி நட்சத்திரம் கண் சிமிட்டி அவனைக் கூப்பிட்டது. சமீபத்திலே பறந்த ஒரு கடற்பறவையின் குரல் அவன் செவியில், “அகண்டமான இந்தக் கடலும், வானமும் வெளியும் இருக்கையில் மனிதப் புழுக்கள் வாழும் குறுகிய இக்கப்பலுக்குள் ஏன் இருக்கிறாய்?” என்று பரிகாசம் செய்வது போல் தொனித்தது. தூரத்தில் மற்றொரு கப்பல் வருவதை ரங்கராஜன் பார்த்தான். அதிலும் இவர்களைப் போன்ற அறிவீனர்களும், மந்த மதியுடையோரும் குறுகிய புத்திக் காரர்களும், அற்பச் சிந்தனையாளர்களும் இருக்கப் போகிறார்கள். என்னே இந்த உலக வாழ்க்கை!

அடுத்த விநாடி ரங்கராஜன் தலைகுப்புறக் கடலில் விழுந்தான். படாலென்று மண்டையில் ஏதோ தாக்கியது. ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் நீருக்குள்ளிருந்து கிளம்பிக் குமிழி குமிழியாய் மேலே போய்க் கொண்டிருந்தன. அவனோ கீழே கீழே போய்க் கொண்டிருந்தான். ஐயோ மூச்சுவிட ஏன் இவ்வளவு கஷ்டமாயிருக்கிறது! இந்தச் சொக்காய் மென்னியை இறுகப் பிடிக்கின்றனவே! அவற்றைக் கிழித்தெறியலாம். ரங்கராஜன் கோட்டை கழற்றிவிட்டு ஷர்ட்டைக் கிழிக்கத் தொடங்கினான். அடுத்த நிமிஷம் அவன் ஸ்மரணை இழந்தான்.

அதல பாதாளத்திலிருந்த எங்கேயோ மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறோமே; எங்கே போகிறோம்? அப்பா! இதோ கொஞ்சம் வெளிச்சம் காண்கிறது. மூச்சு நன்றாய் விட முடிகிறது. அடிவாரத்திலிருந்து மேல் பரப்புக்கு வந்து விட்டோ ம் போலிருக்கிறது. கண்களைச் சற்றுத் திறந்து பார்ப்போம். இது என்ன அதிசயம்? இங்கே எப்படி வந்தோம்? இந்த இளம்பெண் யார்? இவள் ஏன் இப்படி நம்மைப் பார்க்கிறாள்? என்ன அலட்சிய புத்தி கொண்ட பார்வை? அது என்ன மாறுதல், அவள் முகத்தில் இப்போது? என்ன சிந்தனை செய்கிறாள்? அதோ கொஞ்சம் வயதானவளாய்த் தோன்றும், அந்த ஸ்திரீ யார்? இங்கே நிற்பவர் டாக்டரைப் போல் காணப்படுகிறாரே? நாம் எங்கே இருக்கிறோம்? இது கப்பல் அறை போல் தான் இருக்கிறது. ஆனால், நாம் வந்த கப்பலில் இவர்களைக் காணவில்லையே? எல்லாம் புது முகமாயிருக்கிறதே? ஒரு வேளை தண்ணீரில் மூழ்கி இறந்து போன நாம் இப்போது ஆவி உலகத்தில் இருக்கிறோமோ? இவர்கள் எல்லாம் ஆவிகளோ? ஒரு வேளை கனவோ? கடலில் விழுந்தது கூடக் கனவில் தானோ? நிஜம் போல் தோன்றுகிறதே, மறுபடியும் கண்ணை மூடிப் பார்ப்போம்.

ஒரு நிமிஷம் திறந்திருந்த ரங்கராஜனுடைய கண்கள் மறுபடியும் மூடிக் கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *