Kalki Short StoriesKalki TimesStory

Thookku Thandanai Kalki | Kalki Times

Thookku Thandanai Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

தூக்குத் தண்டனை

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Thookku Thandanai Kalki

அமாவாசை இரவு. திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்கார் சுகமான பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தார். என்ன புரண்டாலும் தூக்கம் வருகிற வழியாயில்லை. தலைப் பக்கத்துத் தலைகாணியைக் கால் புறத்திலும், கால் புறத்துத் தலைகாணியைத் தலைப்புறத்திலும் வைத்துக் கொண்டு பார்த்தார். அப்படியும் தூக்கம் வரவில்லை

கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கிற்று. “ஒன்று, இரண்டு, மூன்று…” என்று எண்ணிக் கொண்டே வந்தார். பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்தது. “இனிமேல் கட்டாயம் தூங்க வேண்டியதுதான்” என்று ஜட்ஜ் அய்யங்கார் திடசங்கல்பம் செய்து கொண்டு கண்களை இறுக மூடினார். அப்போது அவருடைய மனக் கண்ணின் முன்பாக ஒரு பயங்கரக் கோரக் காட்சி தென்பட்டது.

முதலில் எங்கேயோ வெகு தூரத்தில் உள்ளது போல் அந்தக் காட்சி மங்கலாய்த் தெரிந்தது. தூக்கு மேடையில் தூக்கு மரத்தில் ஒரு உருவம் தொங்கி இலேசாகக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் காட்சி, தூக்கு மரம், அதில் தொங்கிய உருவம் எல்லாம் வெகு சமீபத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. பால் வடியும் அழகிய வாலிபனுடைய முகம். ஆனால், முகத்தில் உயிர்க்களை இல்லை. கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. உயிரில்லாத அந்தக் கண்கள் திவான் பகதூரின் இருதயத்தை ஊடுருவிப் பார்ப்பது போல் அவருக்கு உணர்ச்சி உண்டாயிற்று

சட்டென்று அய்யங்கார் எழுந்து உட்கார்ந்தார். படுக்கையிலிருந்து கீழே குதித்தார். ஜன்னல் ஓரமாகச் சென்று ஜன்னல் கதவைத் திறந்தார். குளிர்ந்த காற்று உள்ளே ‘விர்’ரென்று வந்தது. கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. அய்யங்கார் ஜன்னல் ஓரமாக நின்று வெளியே தோட்டத்தில் பார்வையைச் செலுத்தினார்.

ஆஹா! அது என்ன! அதோ அந்த மரத்தின் கிளையில் ஏதோ தொங்குகிறாப் போல் இருக்கிறதே? ஐயோ?…படீரென்று ஜன்னல் கதவைச் சார்த்தினார் அய்யங்கார். இருட்டில் தடவிக் கொண்டே சென்று, ‘ஸ்விட்ச்’ இருக்குமிடம் கண்டுபிடித்து, மின்சார விளக்கை ஏற்றினார். அலமாரியைத் திறந்து கையிலகப்பட்ட புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார். புத்தகத்தைப் பிரித்தார். ஆகா! புத்தகத்திற்குள் ஏதாவது தேள் ஒளிந்திருந்து அவர் கையில் கொட்டி விட்டதா என்ன? புத்தகத்தை அப்படித் திடீரென்று போட்டு விட்டுக் குதிக்கிறாரே?

தேளுமில்லை கீளுமில்லை; அந்தப் புத்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாயிருந்தது தான் காரணம். திவ்யப் பிரபந்தத்தைப் பார்த்ததும் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்ரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் மதகுப்பட்டி கலக வழக்கில் கூறிய சாட்சியம் அய்யங்காருக்கு ஞாபகம் வந்தது. அவர் என்ன சாட்சி சொன்னார்? “மதகுப்பட்டிக் கலகம் நடந்த அன்றைக்கு முதல் நாள் இரவு நானும் திருமலையும் திருச்சி ஜங்ஷன் வெயிட்டிங் ரூமில் திவ்யப் பிரபந்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்!” என்றார். “பெரியாழ்வார் பாத சாட்சியாகவும் திருமங்கையாழ்வார் திருவடி சாட்சியாகவும் சத்தியமாய்ச் சொல்கிறேன்” என்று ஆணையிட்டார். சடகோபாச்சாரிய ஸ்வாமியை அஷ்டோ த்தரமய்யங்காருக்கு வெகு காலமாகத் தெரியும். பரம பக்தர்; சிறந்த அறிவாளி; உயர்ந்த ஒழுக்கமுள்ளவர். எத்தனையோ தடவை அவரிடம் அஷ்டோ த்தரமய்யங்கார் திவ்யப் பிரபந்த பாசுரங்களைக் கேட்டு மனமுருகிக் கண்ணீர் வடித்திருக்கிறார். அப்பேர்ப்பட்டவருடைய சாட்சியைப் பொய்ச்சாட்சி என்று தள்ளிவிட்டு, போலீஸ் சாட்சியத்தையே உண்மையென்று ஏற்றுக் கொண்டு திருமலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டியதாயிற்று! சடகோபாச்சாரியின் சாட்சியம் உண்மையாக இருக்குமோ? திருமலை நிரபராதிதானோ? குற்றமற்ற பையனையா நாளைப் பொழுது விடிந்ததும் தூக்கில் போடப் போகிறார்கள்? அந்தப் பாதகம் தம்முடைய தலையிலா விடியப் போகிறது? ஐயோ! இந்த ஜட்ஜ் உத்தியோகத்தை என்னத்திற்காக ஏற்றுக் கொண்டோ ம்? வக்கீலாகவே இருந்து காலத்தை ஓட்டி இருக்கக் கூடாதா?… இப்படி அய்யங்காரின் மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அலைந்தது.

மதகுப்பட்டிக் கலகமும், அதன் பயனாக விளைந்த மதகுப்பட்டிக் கலக வழக்கும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்; ஆனால் தேசமெங்கிலும் அப்போது குழப்பமாய் இருந்தபடியால் நேயர்கள் சிலர் மறந்து போயிருக்கவும் கூடும். எனவே, வழக்கின் விவரங்களை இங்கே சுருக்கமாகக் கூறுகிறேன்.

சென்ற வருஷம் (1942) மகாத்மா காந்தி முதலியவர்கள் கைதியான புதிதில் மதகுப்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மைல் தூரத்தில், யாரோ, ஒரு தண்டவாளத்தைக் கழற்றி நகர்த்தியிருந்தார்கள். நல்ல வேளையாக விபத்து ஒன்றும் நேரவில்லை. பொழுது விடியும் சமயத்தில் வந்த முதல் ரயில் வண்டியின் டிரைவர் ரயில் பாதையில் தண்டவாளம் நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டான். அரைமணிக்குள் பாதை சரி செய்யப்பட்டு வண்டியும் போய்விட்டது.

பிறகு மதகுப்பட்டி போலீஸார் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். அநேக வீடுகள் சோதனை போடப்பட்டன. ஹைஸ்கூலுக்குப் போய் எல்லா வகுப்புகளும் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆறு மாணாக்கர்களைக் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனார்கள். அந்த ஆறு பேரைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் அவ்வளவு பேரும் கோஷித்துக் கொண்டு வெளிக் கிளம்பினார்கள்.

அன்று மதகுப்பட்டி வீதிகளில் புரட்சி கோஷங்கள் வானளாவ எழுந்தன. கூச்சலின் பலத்தைக் கொண்டு மட்டும் சுயராஜ்யம் கிடைப்பதாயிருந்தால், அன்று மதகுப்பட்டிக்கு இரட்டிப்பு சுயராஜ்யம் கிடைத்திருக்க வேண்டும்.

பள்ளிப் பிள்ளைகளின் பெருங் கோஷத்தைக் கேட்டு வியாபாரிகள் பீதியடைந்து மளமளவென்று கடைகளை அடைத்தார்கள். வீதிகளில் கூட்டம் அதிகமாயிற்று.

போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றியும் கூட்டம் சேர ஆரம்பித்தது. ஸ்டேஷனுக்குள் அடைக்கப்பட்டிருந்த மாணாக்கர்கள் ஜன்னல் வழியாக வெளியில் நின்ற கும்பலைப் பார்த்துவிட்டு “புரட்சி ஓங்குக!” என்று கோஷமிட்டார்கள். வெளியில் நின்ற கூட்டத்தார் பதில் கோஷம் செய்தார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே மாணாக்கர்களை அடிக்கிறார்கள் என்ற வதந்தி கிளம்பி அந்த ஜனக் கூட்டத்தில் அதி வேகமாகப் பரவிற்று. ஜனங்களின் கொதிப்பு அதிகமாயிற்று. சமீபத்தில் ரோடு ரிப்பேர் செய்வதற்காகக் கப்பிக் கற்கள் கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஜனங்களின் கொதிப்பு வெளியாவதற்கு சௌகரியம் ஏற்பட்டது. கப்பிக் கற்கள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்தன.

போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் வெளி வந்து கூட்டத்தை நோக்கிக் குறிபார்த்தார்கள். இதன் பலனாகக் கூட்டத்தின் வெறி அதிகமாயிற்று. ஜனங்கள் ஸ்டேஷனை இன்னும் நெருங்கி வந்தார்கள். போலீஸ் துப்பாக்கியிலிருந்து வேட்டுக்கள் கிளம்பின. இரண்டொருவர் காயம்பட்டு விழுந்தனர். கூட்டம் ஒரே பாய்ச்சலாகப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பாய்ந்தது. துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்து விட்டபடியால் போலீஸ் சேவகர்கள் ஸ்டேஷனுக்குள் ஓடிப் புகுந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஒரே ஜயகோஷம் ஆரவாரம்.

இத்துடன் நின்றதா? இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஒரு சில மண்ணெண்ணெய் டிப்போக்கள் இருந்தன. கூட்டத்தில் சிலர் டிப்போவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மண்ணெண்ணெய் டின்களை எடுத்து வந்தார்கள். புகை குடிப்பவர்கள் சிலர் நெருப்புப் பெட்டி கொடுத்து உதவினார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் புகையும் நெருப்பும் எழுந்தது.

இதற்குள்ளாகத் தகவல் தெரிந்து ஜில்லா மாஜிஸ்ட்ரேட், போலீஸ் ஸுபரிண்டெண்ட் முதலியவர்கள் பெரிய போலீஸ் படையுடன் வந்து சேர்ந்தார்கள். இந்தத் தடவை நிஜமான துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. சிலர் உடனே உயிர் துறந்து விட்டார்கள். பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் கூட்டம் கலைந்து போயிற்று. தீயும் அணைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம் பாதிக்கு மேல் எரிந்து போயிற்று.

அன்று மதகுப்பட்டியே சுடுகாடு மாதிரி இருந்தது. ஜனங்கள் யாரும் வெளியில் தலைகாட்டவில்லை. பிரேதங்களை எடுத்துச் சென்று தகன சம்ஸ்காரம் செய்யக் கூட முதலில் யாரும் முன் வரவில்லை. உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்கு வெகு நேரம் ஆகி விட்டது. கடைசியில் தகவல் எப்படியோ தெரிந்து காரியங்கள் நடந்தேறின.

மறுநாள் மதகுப்பட்டியில் பிரிட்டிஷ் அதிகாரம் தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியது.

எங்கே பார்த்தாலும் போலீஸ் மயமாக இருந்தது. போலீஸார் வீடு வீடாகப் புகுந்து, முதல் நாள் கலகத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து வந்தார்கள். மொத்தம் 186பேர் கைது செய்யப்பட்டனர். பின்னால் இவர்களில் முப்பது பேர் தகுந்த சாட்சியமில்லையென்று விடுவிக்கப்பட்டனர். பாக்கி 156 பேர் மேல் கேஸ் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியப் பாதுகாப்புச் சட்டத்திலும் பீனல் கோடிலும் உள்ள செக்ஷன்கள் இந்தக் கேஸில் பிரயோசனப்பட்ட மாதிரி இதுவரை வேறு எந்தக் கேஸிலும் உபயோகப்பட்டது கிடையாது என்று பிரசித்திப் பெற்ற ‘கிரிமினல்’ வக்கீல்கள் சொன்னார்கள்.

திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்காரின் கோர்ட்டில் உரிய காலத்தில் மேற்படி கலக வழக்கு விசாரணைக்கு வந்தது.

மதகுப்பட்டிக் கலக வழக்கில் முதலாவது எதிரி திருமலை என்னும் இளைஞன். இவன் பேரில் மொத்தம் ஒன்பது செக்ஷன்கள் பிரயோகிக்கப்பட்டன. தண்டவாளத்தை பெயர்த்தது முதற்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைத்த வரையில் பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. திருமலையின் சார்பாகப் பிரபல வக்கீல்கள் வைத்துப் பலமான எதிர் வழக்கும் ஆடப்பட்டது. திருமலை அவனுடைய பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. மதகுப்பட்டிக்கே அவன் செல்லப்பிள்ளை.

நல்ல அறிவாளி; முகவெட்டும் வாக்குச் சாதுர்யமும் உள்ளவன். சிறந்த ஒழுக்கம் படைத்தவன்; பொதுக் காரியங்களில் அளவற்ற ஊக்கமுடையவன். இத்தகைய குணங்களினால் அவன் மதகுப்பட்டி வாசிகளின் அன்பையும் மதிப்பையும் கவர்ந்திருந்தான்.

காங்கிரஸ் கமிட்டியானாலும் சரி, சங்கீதசபையானாலும் சரி, பழைய மாணவர் சங்கம் – கூட்டுறவு பண்டக சாலை – இலவச வாசக சாலை – எதுவானாலும் சரி, திருமலைக்கு ஒரு முக்கியமான நிர்வாகப் பொறுப்பு இருந்தே தீரும்.

எந்தப் பொதுக் காரியத்துக்கானாலும் பணம் வசூலிப்பதற்குத் திருமலை கிளம்பினால் ஒரே சுற்றில் வேண்டிய பணத்தைச் சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவான். வேறு யார் போனாலும் மதகுப்பட்டி வாசிகளிடம் பணம் கிளம்புவது சிரமமான காரியமாயிருக்கும்.

இம்மாதிரியெல்லாம் பொதுக்காரியங்களில் திருமலை ஈடுபட்டிருந்தமையால் மதகுப்பட்டி அதிகாரிகளுக்கும் அவனுக்கும் எப்போதும் சஷ்டாஷ்டமாகவே இருந்தது.

அப்படிப்பட்ட திருமலைதான் மேற்படி கலக வழக்கில் முதலாவது எதிரி. திருமலையின் சார்பாக சொல்லப்பட்ட எதிர் வழக்கு என்னவென்றால், மதகுப்பட்டியில் கலகம் நடந்த தினம் அவன் ஊரிலேயே இல்லை. அன்று சாயங்காலந்தான் மதகுப்பட்டிக்கு வந்தான் என்பது.

இதற்குத் திருமலையின் சார்பாகச் சாட்சி கூறியவர் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்கரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் என்பவர். அன்று சாயங்காலம் அவர் ஸ்ரீரங்கத்தில் உபந்நியாசம் செய்துவிட்டு ரயிலுக்கு வந்ததாகவும், ரயில் தவறி அங்கே இருந்த திருமலையைப் பார்த்ததாகவும், அந்தப் பிள்ளையாண்டானைத் தமக்கு ஏற்கனவே தெரியுமென்றும், இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். “எதைப் பற்றிப் பேசினீர்கள்?” என்று கேட்டதற்கு “முக்கியமாக திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் உள்ள கவிதைச் சுவையையும் பக்திப் பெருக்கையும் பற்றிப் பேசினோம்” என்றார்.

“அதைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியாவது பேசினீர்களா?” என்று திருமலையின் வக்கீல் கேட்டார்.

“தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த விபரீதமான காரியங்களைப் பற்றியும் பேசினோம்.”

“விபரீத காரியங்கள் என்றால் என்ன?”

“ரயில் தண்டவாளத்தைப் பெயர்ப்பது முதலிய காரியங்கள்.”

“அதைப் பற்றி என்ன பேசினீர்கள்?”

“ரயில் பிரயாணம் ரொம்பவும் அபாயகரமாகப் போனது பற்றிப் பேசினோம். ‘இதனாலெல்லாம் என்ன பிரயோஜனம் ஏற்படப் போகிறது? நம்முடைய ஜனங்கள் தானே கஷ்டப்படுவார்கள்? ஒரு ரயில் வண்டி கவிழ்ந்தால், எத்தனை உயிர்ச்சேதம் ஏற்படும்? எத்தனை குடும்பங்கள் துன்பமடையும்’ என்று நான் சொன்னேன். திருமலை என்னுடைய அபிப்ராயத்தை முழுவதும் ஆமோதித்தான். தந்தியறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது முதலியவை பலாத்காரக் காரியங்கள் தான் என்றும், மகாத்மா காந்தி அந்தக் காரியங்களை ஒருநாளும் அனுமதித்திருக்க மாட்டாரென்றும், ஐந்தாம் படைக்காரர்கள் அவருடைய பெயரைப் பொய்யாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் சொன்னான்.”

இந்தச் சமயத்தில் கவர்ன்மெண்ட் தரப்பு வக்கீல் ஆட்சேபித்து, மேற்படி அபிப்ராயங்கள் எல்லாம் சாட்சியம் ஆகாதென்றும், அவைகளைப் பதிவு செய்யக் கூடாதென்றும் கூறினார். இத்துடன் சடகோபாச்சாரிய ஸ்வாமியின் சாட்சியம் முடிந்தது.

சடகோபாச்சாரி ஸ்வாமியின் சாட்சியத்துக்கு நேர் மாறாகப் போலீஸ் தரப்புச் சாட்சிகள் சொன்னார்கள். போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த கூட்டத்தில் திருமலையும் இருந்தானென்றும், அவன் போலீஸ் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு, மண்ணெண்ணெய் டின்னை வெளியிலிருந்து வாங்கி உள்ளே இருந்தவர்களிடன் கொடுத்ததைக் கண்ணால் பார்த்ததாகவும் சொன்னார்கள்.

கேஸ் விசாரணையெல்லாம் சாங்கோபாங்கமாக நடந்தது. நூற்றுக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கடைசியில் தீர்ப்புக் கூறும் நாள் வந்தது.

முதல் எதிரி திருமலை சம்பந்தமாகத் தீர்மானம் செய்வதில் தான் ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்காருக்கு ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டது. அவருக்கும் அவருடைய மனசாட்சிக்கும் பெரிய போராட்டம் நடந்தது. சடகோபாச்சாரிய ஸ்வாமிகளின் சாட்சியம் உண்மையாகவே தோன்றிற்று. அம்மாதிரி ஒரு சம்பவத்தை அவர் கற்பனை செய்திருக்க முடியாது. அவ்வளவு பச்சையான பொய் சொல்லக் கூடியவரல்ல; சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. ஆனால் போலீஸ் தரப்பின் திட்டமான சாட்சியத்தை நிராகரிப்பது – ‘பெரிய இடத்து’ அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்த பட்டமளிப்பில் தமக்கு ஸி.ஐ.இ. பட்டம் வருமென்று அய்யங்கார் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கேவலம் இதற்காக வேண்டி ஒரு காரியம் செய்யப் போவதில்லை; ஆனால் என்ன முகாந்திரத்தைக் கொண்டு ஐந்து போலீஸ்காரர்களின் சாட்சியத்தை நிராகரித்து ஒரு வைஷ்ணவ உபந்நியாசகரின் சாட்சியத்தை ஒப்புக் கொள்வது? – இப்படிச் செய்தால் தம் பேரிலேயே ஒரு வேளை சந்தேகம் ஏற்பட்டாலும் ஏற்படலாமல்லவா? ஏன் லஞ்சம் வாங்கிக் கொண்டு, விடுதலை செய்ததாகச் சொன்னாலும் சொல்வார்கள்.

பார்க்கப் போனால், ஜட்ஜுனுடைய கடமை என்ன? கோர்ட்டில் தாக்கல் ஆகியிருக்கும் சாட்சியத்தைக் கொண்டு தானே, ஜட்ஜ் தீர்ப்புச் சொல்ல வேண்டும்? எல்லாம் வல்ல தெய்வத்தின் சாட்சியாகத்தான் போலீஸ்காரர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் – அவர்கள் எல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள் – சடகோபாச்சாரியார் மட்டும் தான் நிஜம் சொன்னார் என்று தீர்மானிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

இவ்விதமெல்லாம் அஷ்டோ த்தரமய்யங்காரின் மனதில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் போலீஸ் சாட்சிதான் ஜயமடைந்தது!

மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், பன்னிரெண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு இரண்டு வருஷம் முதல் பத்து வருஷம் வரையில் சிறைவாசமும் அளிக்கப்பட்டது.

துக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரில் திருமலையும் ஒருவன்.

தீர்ப்புச் சொல்லப்பட்ட அன்றைக்குக் கோர்ட்டில் திருமலையின் தகப்பனாரும் தாயாரும் வந்திருந்தார்கள். சடகோபாச்சாரியாரின் சாட்சியத்தின் பேரில் திருமலைக்கு விடுதலை கிடைத்துவிடலாமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அல்லது சிறைவாச தண்டனையோடாவது போகுமென்று நம்பினார்கள். இதற்கு மாறாக, தூக்குத் தண்டனை என்று கேட்டதும், திருமலையின் தாயார் அங்கேயே பிரக்ஞை தப்பி விட்டாள். திருமலையின் தகப்பனார் “அடேய் திருமலை! அடேய் திருமலை! எங்கேடா போய்விட்டாய்?” என்று கதறிக் கொண்டு சாலையோடு நெறிக் கெட்டு ஓடத் தொடங்கினார்.

திருமலையின் தங்கை கர்ப்பமாயிருந்தாள். தீர்ப்பைக் கேட்டதும், அவளுக்குக் குறைபிரசவம் ஆகி ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டார்கள். ஐந்தாறு நாளைக்கெல்லாம் அவள் கண்ணை மூடினாள்.

மதகுப்பட்டிக் கலக வழக்கில் தீர்ப்புச் சொன்ன நாளிலிருந்து அஷ்டோ த்தரமய்யங்காரின் மனம் சரியான நிலைமையில் இல்லை; திருமலை விஷயத்தில் அநியாயம் செய்து விட்டோ மோ என்ற எண்ணம் அவர் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது.

தூக்குத் தண்டனைக் கைதிகளின் சார்பாக கவர்னருக்குக் ‘கருணை விண்ணப்பம்’ செய்யப்பட்டிருக்கிறது என்று அறிந்தபோது, அய்யங்காருக்குச் சிறிது திருப்தி ஏற்பட்டது. கவர்னர் கருணை செய்து தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று எண்ணினார்.

ஆனால் கவர்னர் அவ்விதம் கருணை செய்யவில்லை. அய்யங்காரின் மனத்திலிருந்த பாரமும் நீங்கவில்லை.

நாளுக்கு நாள் அந்தப் பாரம் அதிகமாயிற்று. தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தினம் நெருங்க நெருங்க இரவில் அவருக்குத் தூக்கம் வருவதே அரிதாயிற்று.

திருமலையின் குற்றமற்ற இளம் முகம் அவர் மனக் கண்ணின் முன் அடிக்கடி தோன்றியது. சர்க்கார் தரப்புச் சாட்சியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவன் முகத்தில் தோன்றிய வியப்பும் திகைப்பும் அப்படியே அவருடைய நினைவுக்கு வந்தது. ‘இதென்ன அபாண்டம்? அன்று நான் ஊரிலேயே இல்லையே?” என்று அவன் கதறியதும் ஞாபகத்துக்கு வந்தது. நினைத்துப் பார்க்க பார்க்க அந்தக் குரலில் உண்மை தொனித்ததாக அவருக்குத் தோன்றியது. “ஐயோ! நாம் அநீதிதான் செய்து விட்டோ மோ? அந்தப் பிள்ளையின் அகால மரணத்துக்கு நாம் தான் பொறுப்பாளியாவோமோ?” என்று எண்ணிய போதெல்லாம், அவருடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டது.

இரவு ஒரு மணி. இரண்டு மணி, மூன்று மணியும் ஆயிற்று. அய்யங்கார் இப்பொது சாய்வான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய கண்கள் சில சமயம் தாமே மூடிக் கொள்ளும். அடுத்த நிமிஷம் திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டுக் கண்ணைத் திறந்து பார்ப்பார். “திருமலையைத் தூக்கில் போட இன்னும் நாலு மணி நேரந்தான் இருக்கிறது – இன்னும் மூன்றரை மணிதான் பாக்கி” என்று மனம் ஒரு புறத்தில் கணக்குப் போட்டுக் கொண்டேயிருக்கும்.

அதிகாலை ஆறு மணிக்குள் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கில் போடுவது வழக்கமென்று அவருக்குத் தெரியும். ஆகையினால் தான் மணியை அவ்வளவு கவலையுடன் எண்ணினார்.

தூக்க மயக்கத்தில் அய்யங்காருக்கு ஒரு அதிசயமான யோசனை தோன்றிற்று. அந்த யோசனை எப்படி அவர் மனத்தில் உதித்ததென்பதை அவராலேயே சொல்ல முடியாது. திடீரென்று தோன்றியது.

சில சமயம் கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து ஓடி விடுகிறார்கள் அல்லவா? அதிலும் அரசியல் கைதிகள் – புரட்சிக் கைதிகள் சிறையிலிருந்து தப்புவது சகஜமல்லவா? சுபாஷ் போஸ் கூடப் போலீஸாரை ஏமாற்றி விட்டுக் கம்பி நீட்டி விடவில்லையா? அந்த மாதிரித் திருமலையும் ஏன் சிறையிலிருந்து தப்பி ஓடி விடக் கூடாது? அவ்வளவு துணிச்சலும் சாமர்த்தியமும் அந்த சாதுப் பையனுக்கு எங்கே வரப் போகிறது? – அவன் குற்றம் செய்யாதவனாயிருந்தால் கட்டாயம் ஓடி விடுவான். அதற்குப் பகவான் கூட உதவி செய்வார். ஏன் செய்ய மாட்டார்?

டிங், டிங், டிங், டிங் மணி நாலு அடித்தது. “ஐயோ! நேரம் நெருங்கிவிட்டதே!” என்று, அய்யங்கார் மனம் திடுக்கிட்டது. அதே சமயத்தில் அவருடைய அறையின் கதவு சிறிது திறந்து, ஜில்லென்று காலைக் காற்று உள்ளே வந்தது.

கதவை மூடலாமென்று அய்யங்கார் எழுந்திருக்கப் பார்த்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை. அப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார்.

ஏனெனில், திறந்த கதவு வழியாக ஒரு மனித உருவம் உள்ளே வந்தது. ஆ! இது யார்? இந்த இளம் முகம் யாருடையது! சந்தேகமென்ன? ‘திருமலைதான்’ – ஆகா! இவன் எப்படி இங்கே இந்த நேரத்தில் வந்தான்! நாம் எண்ணியது போல் உண்மையாகவே சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு வந்து விட்டானா? – அப்படியானால் கெட்டிக்காரன் தான்.

திருமலை நிதானமாக நடந்து வந்து அய்யங்காருக்கு எதிரில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

சற்று நேரம் இருவரும் ஒருவரையொருவர் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். திருமலையின் முகத்தில் சொல்ல முடியாத ஒரு இரக்க பாவம் காணப்பட்டது.

அய்யங்காரின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அவர் பேச ஆரம்பித்தபோது அவருடைய குரலை அவராலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு கம்மிப் போயிருந்தது.

“யார்? திருமலைதானே” என்றார் அய்யங்கார்.

“ஆமாம்; அடியேன் திருமலைதான்”

“பொழுது விடிந்தால் ஆறு மணிக்குள்” என்று அய்யங்கார் தடுமாறினார்.

“ஆமாம்; ஆறு மணிக்குள் தண்டனை நிறைவேற வேண்டியது.”

“நல்ல வேளை நீ தப்பி வந்தது…”

“நல்ல வேளையா?”

“ஆமாம்; நல்ல வேளைதான். உன்னைத் தண்டித்தது பற்றி எனக்கு மனச் சமாதானமே ஏற்படவில்லை. நீ சிறையிலிருந்து ஏன் தப்பித்துக் கொள்ளக்கூடாது என்று நான் கூடச் சற்று முன்பு நினைத்தேன்.”

திருமலையின் முகத்தில் ஆச்சரியம் தாண்டவமாடிற்று!

“நீ தப்பித்து வந்தது பற்றிச் சந்தோஷந்தான் ஆனால்…”

“ஆனால் என்ன?”

“நீ இங்கு வந்ததுதான் பிடிக்கவில்லை. இங்கே என்னத்திற்காக வந்தாய்?”

“முக்கியமாக உங்களைப் பார்ப்பதற்குத்தான் நான் சிறையிலிருந்து தப்பினேன்.”

“என்ன? என்னைப் பார்ப்பதற்கா?”

“ஆமாம்; தூக்குத் தண்டனையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய பக்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சடகோபாச்சாரியார் ரொம்பவும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட தாங்கள் என்னைப் பொய்யனென்று நினைத்தது தான் ரொம்பவும் வருத்தமளித்தது. சத்தியமாகச் சொல்கிறேன்; நான் அன்றைக்கு மதகுப்பட்டியில் இல்லை. திருச்சி ஜங்ஷனில் தான் இருந்தேன். சடகோபாச்சாரி ஸ்வாமிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.”

“நீ சொல்வதை முழுதும் நம்புகிறேன். சடகோபாச்சாரியாரும் நிச்சயமாய்ப் பொய் சொல்லியிருக்க மாட்டார். தீர்ப்பு எப்படியோ பிசகாய்ப் போய்விட்டது. நீ தப்பி வந்ததே நல்லதாயிற்று. ஆனால் இங்கே நீ அதிக நேரம்…”

“இல்லை, இங்கே அதிக நேரம் தாமதிக்கவில்லை. உங்களிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். என் வார்த்தையை இப்போதாவது நம்புகிறீர்களே, ரொம்ப சந்தோஷம் போய் வருகிறேன். நமஸ்காரம்”

திருமலை ஒரு கும்பிடு போட்டுவிட்டு எழுந்திருந்து போனான்.

மறுபடியும் அய்யங்காருக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது. இந்தத் தடவை நாற்காலியிலிருந்து அவர் எழுந்து திறந்திருந்த கதவண்டை போய், அப்பாலிருந்த தாழ்வாரத்தில் பார்த்தார். அங்கே ஒருவரையும் காணவில்லை. வாசற்கதவைப் போய்ப் பார்த்தார். கதவு உட்புறம் பந்தோபஸ்தாகத் தாளிடப்பட்டிருந்தது!

திருமலை எப்படி உள்ளே வந்தான். எப்படி வெளியே போனான்?

“சீ! வெறும் பிரமை! திருமலையாவது வரவாவது?” என்று எண்ணமிட்டவராய், அஷ்டோ த்தரமய்யங்கார் தமது அறைக்குத் திரும்பினார். மணி ஐந்தடித்தது.

இரண்டு நாளைக்குப் பிறகு ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்கார் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது, ஒரு மூலையில் சின்ன எழுத்தில் அச்சிட்டிருந்த பின்வரும் செய்தி, அவருடைய கவனத்தைக் கவர்ந்தது.

‘தூக்குக் கைதியின் மரணம்’

“மதகுப்பட்டிக் கலக வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருந்த திருமலை. சிறைச்சாலையில் முந்தாநாள் காலை நாலு மணிக்கு இயற்கை மரணமடைந்தான். எனவே, கைதியைத் தூக்குப் போட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.”

மேற்படி செய்தியைப் படித்ததும் அய்யங்காருக்குத் தலை சுற்றியது. அதே நேரத்தில்தான் திருமலை தம்முடைய அறையில் வந்து பேசினான் என்பது நினைவு வந்தது. அய்யங்கார் திடீரென்று கீழே விழுந்தார். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு, “மாரடைப்பினால் மரணம்” என்று தெரிவித்தார்கள்!

இத்துடன்

அமரர் கல்கியின் தூக்குத் தண்டனை

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Thookku Thandanai Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,thookku thandanai Audiboook,thookku thandanai,thookku thandanai Kalki,Kalki thookku thandanai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *