Kalki Short StoriesKalki TimesStory

Theepiditha Kudisaigal Kalki | Kalki Times

Theepiditha Kudisaigal Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

தீப்பிடித்த குடிசைகள்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Theepiditha Kudisaigal Kalki

1929-ம் வருஷத்தில் சட்டசபைத் தேர்தல்கள் இல்லை என்று இர்வின் மகாப் பிரபு தீர்மானித்து விட்டதில் என்னைப்போல் வருத்தமடைந்தவர்கல் யாரும் இருக்கமுடியாதென்று நினைக்கிறேன். என் துக்கத்தின் காரணங்களைச் சொல்கிறேன், கேளுங்கள். (1) இந்த வருஷத்தில் தேர்தல் நடந்து நான் இந்திய சட்டசபைப் பதவிக்கு நின்றிருக்கும் பட்சத்தில், என் எதிரி யாராயிருப்பினும் அவர் தேர்தலுக்கு முதல் நாள் யமலோகத்துக்கு வோட்டு கேட்கப் போய்விடுவாரென்றும், நான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவேனென்றும், ஜோசியர் சொல்லியிருந்தார். அது இல்லாமற்போயிற்று. (2) தேர்தல் விநோதங்களைப் பற்றிச் சிற்சில கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அதற்கும் இடமில்லை.

புதுத் தேர்தலைப்பற்றி எழுத இடமில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பழைய தேர்தலில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பல்லில்லாத கிழவன் பாலிய பருவத்தில் வெல்லச் சீடை தின்றதை எண்ணிச் சந்தோஷப் படுவதுபோல், அந்தப் பழைய தேர்தல் சம்பவத்தைப்பற்றியாவது எழுதலாமென்று தீர்மானித்தேன்.

1626-ம் வருஷத்தில், சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் பல அதிசயமான முடிவுகள் ஏற்பட்டன. வெற்றி நிச்சயமென்று எண்ணியிருந்தவர்கள் பலர் தோல்வி அடைந்தார்கள். நம்பிக்கையெல்லாம் இழந்து சர்வ நாடியும் ஒடுங்கிப் போயிருந்த பலர், பெரும் வெற்றியடைந்தார்கள். இந்த அதிசயமான முடிவுகளுக்குள்ளே மிகவும் அதிசயமானது ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளையின் வெற்றியேயாகும். இவர் தமது ஜில்லாவில் முதன்மையாக வெற்றி பெறுவார் என்று அரசியல் ஜோதிடத்தில் வல்ல பத்திரிக்கை நிருபர்கள் கூட எதிர் பார்க்கவில்லையென்றால், நீங்களும் நானும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியமடைந்ததில் வியப்பில்லையன்றோ?

ஆம், இப்போது நினைத்தாலும் அந்தக் காட்சி என் கண் முன்னே நிற்கின்றது. தேர்தல் முடிவுகள் பெருவாரியாக வெளியாகிக்கொண்டிருந்த அன்று, சென்னையில் தினசரிப் பத்திரிகாலயங்களின் வாயில்களில் கும்பல் கும்பலாய் ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிப் பெற்றவர்களின் பெயர்கள் வர வர, வாசலில் ஒரு கருப்புப் பலகையில் எழுதப்பட்டு வந்தன. பிரபல ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் தோற்றுப்போனார் என்று தெரிந்ததும், காங்கிரஸ் அபிமானி ஒருவர் அவசரமாகப் பக்கத்துக் கடைக்குச் சென்று ஒரு டஜன் சுருட்டுக் கட்டுகள் வாங்கி வந்து, எல்லாருக்கும் வழங்கினார். (யாராவது இறந்துபோனால் புகையிலை வழங்குவது சென்னையில் வழக்கம்) இந்த வினோதத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கையில்….ஜில்லாத் தேர்தல் முடிவுகள் கருப்புப் பலகையில் எழுதப்பட்டன. வெற்றி பெற்ற மூவரில் ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளை முதன்மையாக நின்றார். அவருக்கடுத்தபடியாக வந்தவருக்கும் அவருக்கும் 5000 வாக்கு வித்தியாசம்!

ஒரு துள்ளுத் துள்ளி மூன்று முழ உயரம் மேலெழும்பிக் குதித்தேன். உடனே எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. சுற்று முற்றும் பார்த்தேன். மற்றவர்கள் என்னைவிட மோசம் என்று தெரிந்த பிறகுதான் கொஞ்சம் சமாதனமாயிற்று. என்னைப் போலவே ஆகாயத்தில் கிளம்பிய பலர் அப்போதுதான் தரையிலிறங்கினார்கள். அவர்களிலொருவர் கீழே கிடந்த சுருட்டு நெருப்பில் காலை வைத்துவிட்டு மறுபடியும் மேலெழும்புவதையும் கண்டேன். வேறு சிலரோ, ஆச்சரியத்தினால் திகைத்துப் போய்ப் பிளந்த வாய் மூடாமல் நின்றார்கள். ஆனால், இப்படி ஆச்சரியப்பட்டவர்களில் எவரும் துக்கமோ மகிழ்ச்சியோ காட்டவில்லை. ஏனெனில், ஸ்ரீமான் காவடிப்பிள்ளை காங்கிரஸ் கட்சியையோ, ஜஸ்டிஸ் கட்சியையோ சேர்ந்தவரல்லர். அவர் சுயேச்சைவாதி.

அதுதான், சுவாமிகளே! இதில் பெரிய அதிசயம். ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளை எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்லர். அவரை ஆதரிக்கப் பத்திரிக்கைகள் இல்லை. பிரசாரகர்கள் இல்லை. அவர் பெரிய வக்கீல் அல்ல; ஜில்லா போர்டு தலைவர் அல்ல; பெரும் பணக்காரருமல்ல. அந்த ஜில்லாவுக்கு வெளியே அவர் பெயரை யாரும் கேட்டது கிடையாது. பின் எப்படி அவர் இம்மாதிரி ஒரேயடியாகத் தாண்டிக் குதித்தார்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடியவர் சென்னைப் பட்டணத்தில் யாரும் இல்லை. கூளிப்பட்டி ஜமீந்தாரைப் பிடித்தால் ஒருவேளை இந்த மர்மம் விளங்கலாமென்று நினைத்தேன்.

கூளிப்பட்டி ஜமீந்தாரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் எனது பழைய நண்பர். இது குறித்து நீங்கள் என் மீது பொறாமைப்படவேண்டாம். மேலும், அது என்னுடைய தப்புமன்று; ரயில்காரனுடைய தவறு. நாங்களிருவரும் ஒரு தடவை ஒரே ரயில்வே ஸ்டேஷனில் ரயிலேறும்படி நேர்ந்தது. இல்லை ரயிலேறாதிருக்க நேர்ந்தது. நாங்கள் கையில் மூட்டையை வைத்துக் கொண்டு தயாராய்க் காத்துக்கொண்டுதானிருந்தோம். நான் நின்ற இடத்துக்கு நேரே இரண்டாம் வகுப்பு வண்டி வந்து நின்றது. அந்த மனிதருக்கு நேரே மூன்றாம் வகுப்பு ஸ்திரீகளின் வண்டி நின்றது. நான் மூன்றாம் வகுப்பையும் அவர் இரண்டாம் வகுப்பையும் தேடிக் கொண்டு போனோம். நான் என் வண்டியை விரைவில் கண்டு பிடித்து விட்டேன்.

“ஸார்! ஸார்!! ஸார்!!! கதவைக் கொஞ்சம் திறவுங்கள்” என்றேன்.

“ஸார்! ஸார்!! ஸார்!!! தயவு செய்து கொஞ்சம் அடுத்த வண்டிக்குப் போங்கள்” என்று உள்ளிருந்து பதில் வந்தது.

மீறி ஏறுவதற்கு முயன்றேன். உடனே என்னை நோக்கி ஒரு டஜன் கைகள் முன் வந்தன. எனவே, நான் பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்த மாதிரி இரண்டு வண்டி பரிசோதிப்பதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. கொஞ்சம் தூரம் ரயிலுடன் நானும் ஓடினேன். பின்னர், “சை! சை! இந்த ரயிலுக்கு நம்முடன் கூட ஓடும் சக்தி உண்டா?” என்று தீர்மானித்து நின்று விட்டேன். திரும்பிப் பார்த்தபோது கூளிப்பட்டி ஜமீன்தாரும் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பில் தம்பதி சமேதராய் எழுந்தருளியிருந்த ஒரு வெள்ளைக்காரன் அவரை “நரகத்துக்குப் போகும்படி” ஆக்ஞாபித்ததாய் எனக்குப் பின்னால் தெரியவந்தது. ரயில் போனதும் நாங்கள் இருவரும் சந்தித்தோம்.

“இந்த ரயில் நாசமாய்ப் போனாலென்ன?” என்று நான் கேட்டேன்.

“ரயில் கம்பெனி பாதாள லோகத்துக்குப் போனாலென்ன?” என்று ஜமீன்தார் திருப்பிக் கேட்டார்.

“கொஞ்சமும் ஆட்சேபமில்லை” என்றேன்.

இவ்வாறுதான் நாங்கள் நண்பர்களானோம்.

கூளிப்பட்டி ஜமீன்தார் மிக்க செல்வாக்குள்ளவர். அந்த ஜில்லாவில் 4000 வாக்குகள் அவர் கைக்குள் அடக்கம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏழை எளியவர்களிடம் அவர் மிக்க கருணையுள்ளவர் என்பதும் பிரசித்தியான விஷயம்….ஆனால், அவர் அரசியல் விஷயங்களில் மட்டும் தலையிட்டுக்கொள்வது கிடையாது. தலையை மட்டுமன்று; கால், கை, காது முதலிய எந்த அவயத்தையுமே அவர் அரசியலில் இடுவது கிடையாது. சட்டசபை அபேக்ஷகர்களாக நின்ற ஒவ்வொருவரும் ஜமீன்தாரின் ஆதரவைப் பெறப் பிரயத்தனம் செய்தார்கள். எல்லோருக்கும் “ஆகட்டும், பார்ப்போம்” என்ற பதிலே அவர் சொல்லி வந்தார். ஆகவே, இப்பொழுது காவடி கோவிந்தப்பிள்ளையின் மகத்தான வெற்றியைப் பற்றி தெரிய வந்ததும், ஒருக்கால் நமது நண்பரின் கைவேலை இதில் இருக்குமோவென்று நான் சந்தேகித்தது இயல்பேயல்லவா?

கூளிப்பட்டிக்குப் போனேன். ஆனால் ஏமாற்றமடைந்தேன். ஜமீன்தார், “எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று ஒரேயடியாகச் சாதித்துவிட்டார். எவ்வளவோ சாமர்த்தியமாகவெல்லாம் கேட்டும் பயன்படவில்லை. ஆனால், கூளிப்பட்டிக்குப் போனதில், லாபமில்லாமலும் போகவில்லை. தேர்தலுக்கு நாலு தினங்களுக்கு முன்பு அங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன். அதை இங்கே சொல்லிவிடுகிறேன். அதற்கும் கோவிந்தப் பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டாவென்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். தேர்தலுக்கு நாலு நாளைக்கு முன்பு, கூளிப்பட்டிக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்திலுள்ள கிராமத்தில் பெரிய சமூக மாநாடு ஒன்று நடந்ததாம். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அங்கே கூடுவதை முன்னிட்டுச் சட்டசபை அபேட்சகர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் மகா நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். ஜமீன்தாரும் போயிருந்தார். திரும்பிப் போகும்போது அபேட்சகர்கள் எல்லாரும் கூளிப்பட்டி வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. மாலை ஐந்து மணிக்கு மாநாடு “பலமான கரகோஷங்களுக்கிடையே இனிது நிறைவேறிய” பின்னர், அபேட்சகர்களின் மோட்டார் வண்டிகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டன.

இப்பொழுது வாசகர்கள் என்னுடன் கிளம்பி மோட்டார் வண்டிகளைவிட வேகமாய்ப் பிரயாணம் செய்து, கூளிப்பட்டிக்கு வடக்கே ஒரு மைல் தூரத்திலிருந்த ‘சேரி’க்கு வந்துவிட வேண்டும். ஆஹா! என்ன பயங்கரமான காட்சி! சேரியிலுள்ள குடிசைகளில் சில தீப்பற்றி எரிகின்றன. தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. காற்று பலமாக அடிக்கிறது. ஐயோ! குடிசையிலிருந்து பக்கத்திலுள்ள வைக்கோற் போரிலும் தீப்பிடித்துக் கொண்டது. “வானை நோக்கிக் கைகள் தூக்கி வளரும் தீயின் காட்சி” என்ன பயங்கரம்! தீயை அணைப்பதற்கு எவ்வித முயற்சியும் காணப்படவில்லை. மக்களையே அதிகமாய் அங்கே காணோம். ஸ்திரிகளும் குழந்தைகளுந்தான் சுற்றிச் சுற்றி வந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் ஆண் மக்கள் அந்த ஸ்திரீகளையும் தீ விபத்துக்காளாகமல் தப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். எரியும் குடிசைகளுக்கருகே அவர்கள் போகாவண்ணம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜில்லா போர்டு பெரியசாலை இந்தச் சேரியைப் பிளந்துகொண்டு போகிறது. சாலைக்கு இடது புறத்திலிருந்த குடிசைகள் எல்லாம் ஏறக்குறைய எரிந்து போயின. வலது புறத்திலுள்ள குடிசைகளுக்கு இன்னும் நெருப்பு வரவில்லை. ஐயோ! காற்று இப்படிச் சுழன்றடிக்கின்றதே! ஒரு ஜுவாலை பறந்து சென்று வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றின்மீது விழுகின்றது! ஆகா! சட்டென்று சென்று, அந்த ஒரு கீற்றை இழுத்தெறிந்து ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினால் நெருப்பு பரவாமல் தடுக்கலாம். யாரேனும் அப்படிச் செய்யப் போகிறார்களா? ஒருவரையும் காணோம். பெண்களும், சிறுவர் சிறுமிகளும் சுற்றிச் சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் பெரிய ஆட்களுக்கு இவர்களை வெளியே பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்ப்பதே பெரிய காரியமாயிருக்கிறது. அது வரையில் புத்திசாலிகள்தான். அப்படியும் ஒரு சிறுவன்மீது நெருப்புப்பட்டு முதுகு வெந்து போயிற்று. அவனைச் சாலையில் கொண்டுவந்து போட்டார்கள்.

பூம்! பூம்! பூம்! ஒரு மோட்டார் வண்டி அதிவேகமாய் வருகிறது. சமூக மகாநாட்டுக்குச் சென்றிருந்த திவான் பகதூர் வீரண்ணப்பிள்ளையும் திருவாளர் பெரியசாமித் தேவரும் அதிலே வருகிறார்கள். தீப்பிடித்த குடிசைகளுக்கருகே மோட்டார் வண்டி நிற்குமா? ஏழை ஆதித்திராவிடர் மீது இப்பெரிய மனிதர்கள் கண்ணோட்டம் செலுத்துவார்களா? இல்லை; இல்லை; கண்மூடித்திறக்கும் நேரத்தில் மோட்டார் பறந்து போகிறது. அன்றிரவு ஜில்லா கலெக்டர் விருந்துக் கச்சேரி. அவர்களெப்படி இங்கே நிற்க முடியும்?

ஒரு நிமிஷத்திற்கெல்லாம் மீண்டும் பூம், பூம் என்ற சத்தம், ராவ்பகதூர் சடையப்ப முதலியாரின் மோட்டார் அதிவேகமாய் வருகிறது; இதுவும் இங்கு நில்லாமலே போய்விடுகின்றது; அடுத்தாற்போல் ஸ்ரீமான் வராகவதாரமையங்காரின் வண்டி. ஆகா இவரல்லவோ புண்ணியவான்! ஏழைகளின் நண்பர்! வண்டி மெதுவாக நிற்கிறது. உடனே பலர் ஓடிவந்து, மோட்டாரைச் சூழ்கிறார்கள்.

ஐயங்கார்:- தீ எப்படிப் பிடித்தது?

கூட்டத்தில் பலர்:- சாமி! தெரியவில்லை. (கூச்சலும் அழுகையும்).

ஐயங்கார்:- அட, சனியனே! சும்மாயிருங்கள். வெறும் மூடத்தனம், தீப்பிடித்தவுடன் ஏன் அணைக்கக் கூடாது? இப்படி வெறுங்கூச்சல் போட்டால் என்ன பிரயோசனம்?

ஒருவன்:- ஐயா, சாமி! இந்தப் பையன் முதுகு எரிந்து போய்விட்டது.

ஐயங்கார்:- டிரைவர்! பலமான காயமா, பார்.

டிரைவர்:- அதெல்லாம் இல்லை. சொற்பக் காயந்தான்.

ஐயங்கார்:- சரி, தேங்காய் எண்ணெய் தடவு, தெரிகிறதா? சீக்கிரம் வண்டியை விடு.

அடுத்த கணத்தில் மோட்டார் மாயமாய்ப் பறந்து போகிறது.

மேற்கூறியவையெல்லாம் ஐந்து நிமிஷத்திற்குள் நடந்தனவென்பதை நேயர்கள் நினைவில் வைக்க வேண்டும். கடைசியாகக் காவடி கோவிந்தப்பிள்ளையின் மோட்டார் வந்து குடிசைகளுக்கருகில் நின்றது. பிள்ளை சட்டென்று மோட்டாரிலிருந்து வெளியே குதித்தார். வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றில் இப்பொழுதுதான் தீப்பிடித்துக் கொண்டிருப்பதை அவர் உடனே கவனித்தார். “டிரைவர்! ஓடி வா! ஓடி வா!” என்று கூவிக் கொண்டே அவர் அந்தக் குடிசையை நோக்கி ஓடினார். டிரைவரும் பின்னால் சென்றான். இருவரும் அக்குடிசையின் கூரையில் தீப்பிடித்திருந்த கீற்றை இழுத்துக் கீழே போட்டார்கள். “குடம்! குடம்!” என்று காவடிப்பிள்ளை கத்தினார், சில பெண்கள் மண்குடம் கொண்டு வந்தார்கள்! அவற்றுள் ஒன்றைப் பிள்ளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போய்ப் பக்கத்திலிருந்த வாய்க்காலிலிருந்து ஜலம் கொண்டு வந்தார். அவரைப் பின் தொடர்ந்து இன்னும் பலரும் ஜலங்கொண்டு வந்து கொட்டினார்கள். தீ அணைந்தது. சாலைக்கு வலது புறத்திலிருந்த இருபது குடிசைகள் தப்பிப் பிழைத்தன.

காவடிப் பிள்ளையும், டிரைவரும் திரும்பி வந்து மோட்டாரில் உட்கார்ந்தார்கள்.

டிரைவர்: சுத்த மூட ஜனங்கள்! சுலபமாய்த் தீயை அணைத்திருக்கலாம். பக்கத்திலே வாய்க்கால்.

காவடிப் பிள்ளை: பாவம்! அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? அவர்களை மூடர்களாய் வைத்திருப்பது யார்? மேலும் ஆண்பிள்ளைகளெல்லாம் வயல்வெளிக்குப் போய்விட்டார்கள். குழந்தைகளும் ஸ்திரீகளும் என்ன செய்வார்கள்?

டிரைவர்: சுமார் ஐம்பது குடிசை போயிருக்கும்.

காவடிப் பிள்ளை: பட்ட காலிலே படும். எல்லாம் ஏழைகளுக்குத்தான் வருகிறது. இரவு தங்க என்ன செய்வார்களோ?

கூட்டத்தில் ஒருவன்: சாமி! இந்தப் பையன் முதுகு வெந்து போய் விட்டது.

காவடிப் பிள்ளை: எங்கே? எங்கே? கொண்டு வா!

பையனைக் கொண்டு வந்தார்கள். பிள்ளையை பார்த்துவிட்டு உடனே அவனை மோட்டாரில் தூக்கிப் போடச் செய்தார். பின்னர் வண்டி கிளம்பிற்று.

மறுநாள் காவடிப் பிள்ளையிடமிருந்து கூளிப்பட்டி ஜமீன்தாருக்கு ஒரு கடிதமும், 50 ரூபாய் பணமும் கிடைத்தன. “இந்த சிறு தொகையைப் புதிய குடிசைகள் போட்டுத்தர உபயோகப்படுத்துங்கள். பையன் வைத்தியசாலையில் குணமடைந்து வருகிறான் என்று அவன் பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்துங்கள்” என்று பிள்ளை எழுதியிருந்தார்.

மேற்கண்ட சம்பவத்துக்கும் காவடிப் பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா வென்று நான் ஜமீன்தாரை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தேன். அவர் வாயிலிருந்து பதில் வருவிக்க முடியவில்லை. ஆயினும் பின்வரும் விஷயங்களைக் கோவை செய்து நேயர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்:- (1) அந்த நேரத்தில் அந்த ஏழைகளின் குடிசைகள் தீப்பிடிக்கக் காரணமே இல்லை. ஒரு வீட்டிலும் அப்போது அடுப்புக் கூட மூட்டவில்லையென்றும் எல்லாரும் சத்தியம் செய்கிறார்கள். (2) ஒருவர் இருவரைத் தவிர பெரிய ஆட்கள் யாருமில்லாமல் அச்சமயம் மாயமாய்ப் போனார்கள்.

இத்துடன்

அமரர் கல்கியின் தீப்பிடித்த குடிசைகள்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Theepiditha Kudisaigal Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,theepiditha kudisaigal Audiboook,theepiditha kudisaigal,theepiditha kudisaigal Kalki,Kalki theepiditha kudisaigal,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *