Kalki Short StoriesKalki TimesStory

Police Virunthu Kalki | Kalki Times

Police Virunthu Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

போலீஸ் விருந்து

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Police Virunthu Kalki

“சீச்சீ! இது என்ன உலகம்? வரவர எல்லாம் தலை கீழாய்ப் போய்விட்டது” என்று கந்தசாமி தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

“பின்னே என்ன, ஐயா! இரண்டு பூரிக்கும் ஒரு கப் காப்பிக்கும் வழியில்லை என்றால் இது என்ன உலகத்தோடு சேர்த்தி?” என்று அவன் ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டு, அதற்குப் பதில் சொல்வது போல் “தூ!” என்று காறி உமிழ்ந்தான்.

கந்தசாமியின் பொக்கிஷ நிலைமை அப்போது மிகவும் கேவலமாய்த்தான் இருந்தது. பணப் பையைத் திறந்து பார்த்தான். மூன்று காலணாக்கள் இருந்தன. ஒரு வேளை அவற்றில் ஒன்று அரை ரூபாயாய் இருந்துவிடக் கூடாதா என்ற ஆசையுடன் கையில் ஒவ்வொன்றாய் எடுத்து உற்றுப் பார்த்தான். “காலணா, அரையணா, முக்காலணா…” என்று மூன்று ஸ்தாயிகளில் சொல்லி அவற்றைச் சாலையில் விட்டெறிந்தான். கொஞ்ச தூரம் போனவன் மறுபடி ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் திரும்பி அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான்.

சாதாரணமாய்க் கந்தசாமிக்கு இத்தகைய நெருக்கடி ஏற்படுவதில்லை. பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு வழி அவனுடைய தீவிர மூளை கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கும். நம்முடைய பொக்கிஷ மந்திரிகள் என்னவோ தவியாய்த் தவிக்கிறார்களே, வரிகளை எடுத்து விட்டால் சர்க்கார் வரவு செலவுக் கணக்கில் துண்டு விழுந்து விடுமென்று? அவர்கள் கந்தசாமியைக் கூப்பிட்டு, இரண்டு பூரியும் ஒரு கப் காப்பியும் மட்டும் வாங்கிக் கொடுத்து, யோசனை கேட்கட்டும்.

அது தான் ஒரு தொல்லை; கந்தசாமியின் மூளைக்கும் அவனுடைய வயிற்றுக்கும் நெருங்கிய சம்பந்தம் ஏதோ இருந்தது. வயிற்றில் ஒரு கப் காப்பியைப் போட்டுவிட்டு யோசனை கேட்டால், உடனே எவ்வளவு சிக்கலான பொருளாதாரப் பிரச்சனைகளையும் அவனுடைய மூளை தீர்த்து வைத்துவிடும். அந்த ஒரு கப் காப்பி இல்லையென்றால், அவனுடைய மூளையும் வேலை நிறுத்தம் செய்துவிடும்.

அன்று காலை கந்தசாமி தன்னுடைய பொருளாதார நிலைமையைச் சரியாகக் கவனிக்காமல் ஸலூனில் புகுந்து விட்டான். கிராப் செய்து கொண்ட பிறகு பணப்பையை எடுத்துப் பார்த்தால் சரியாக 6 3/4 அணாத்தான் இருந்தது. கேவலம் க்ஷவரக் கடையில் கடன் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை, அதெல்லாம் மரியாதைக் குறைவு. மேலும் தினசரி அங்கே போய்த் தலையை வாரி விட்டுக் கொண்டு வரவேண்டுமல்லவா? ஆகவே ஆறு அணாவைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தான். கையிருப்பு மூன்று காலணா.

கந்தசாமி தன்னுடைய வரவு செலவுக் கணக்கைச் சரிக்கட்டுவதற்குக் கடைசியாகக் கையாண்ட முறை கைரேகை பார்த்துச் சொல்லுதல். யாரோ ஒரு வடக்கத்தியான், தான் கைரேகை சாஸ்திரத்தில் நிபுணன் என்பதாகச் சில பெரிய மனிதர்களிடம் வாங்கி வைத்திருந்த ஸர்ட்டிபிகேட் புஸ்தகத்தைக் கந்தசாமி ‘தஸ்கரம்’ செய்தான். அதை வைத்துக் கொண்டு அவன் ஆறுமாதம் வெகு அமூலாக வாழ்க்கை நடத்தினான். அப்போதெல்லாம் அவனுக்கு நல்ல வரும்படி. அவனுக்கு விருப்பம் இருந்தால் பணம் மீத்துக் கூட இருக்கலாம். ஆனால் பணம் சேர்த்து வைப்பதில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுகிறான்; எதற்காகச் சேர்த்து வைக்க வேண்டும்? இன்று கையில் பணம் இருக்கும் போது, மறு நாளைப் பற்றிய கவலை ஏன்?

நல்ல வருமானம் அளித்து வந்த ரேகை சாஸ்திரத்தைக் கந்தசாமி ஏன் கைவிட்டான் என்று கேட்பீர்கள். முதலாவது, எந்தத் தொழிலையும் நெடுநாள் கடைப்பிடிக்கும் வழக்கம் அவனிடம் கிடையாது. இரண்டாவது, அந்தத் தொழிலில் கடைசியாக நிகழ்ந்த ஒரு சம்பவமாகும். அந்தச் சம்பவத்தினால் அவனுக்கு ஏற்பட்ட வைராக்கியத்தில் சந்நியாசியாகி விடுவதாகக் கூடத் தீர்மானித்து விட்டான். நேரே அவன் பேரானந்த மடத்துப் பெரிய சாமியாரிடம் சென்று தன்னுடைய கருத்தை வெளியிட்ட போது சாமியார் தற்சமயம் தமக்குப் போதிய சிஷ்யர்கள் இருப்பதாகவும், புதிதாய் வரும் சிஷ்யர்களுக்குக் காவி வஸ்திரம் வாங்கிக் கொடுக்க மடத்தின் பொருளாதார நிலைமை இடங் கொடுக்கவில்லையென்றும் தெரிவிக்கவே, “சீ! எங்கே போனாலும் தரித்திரம் பிடித்தப் பொருளாதார நெருக்கடிதானா?” என்று எண்ணி அந்த எண்ணத்தை விட்டொழித்தான்.

கந்தசாமிக்கு மேற் சொன்னவாறு வைராக்கியம் உண்டு பண்ணிய சம்பவம் பின் வருமாறு:

அவனுடைய ரேகை சாஸ்திர அநுபவத்தில் எப்படிப்பட்ட மனுஷ்யரானாலும் சரி, களத்ர பாக்கியத்தைப் பற்றிச் சிலாக்கியமாய்ச் சொன்னால் உச்சி குளிர்ந்து விடுவதைக் கண்டிருக்கிறான். ஆளின் வயதையும், மற்றப்படி வீடு வாசல்களின் நேர்மையையும் பார்த்துக் கொண்டு அவன் சரடு விடுவான். “ஸார்! உங்களுக்குக் கலியாணம், ஆகியிருக்க வேணும். அல்லது கூடிய சீக்கிரம் ஆகவேணும்” என்று சொன்னால், எப்படிப்பட்ட ஆசாமியின் முகமும் சற்று மலர்ந்தே தீரும். இன்னொருவரிடம் கொஞ்சம் தயக்கத்துடன், “நான் சொல்கிறேனே என்று நீங்கள் ஒன்றும் நினைத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு இரண்டு சம்சாரம் உண்டு” என்பான். உடனே அவருடைய முகத்திலே புன்னகை ஏற்படும். வேறொருவரிடம், அவருடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டு, “ஸார்! உங்களுக்குக் கலியாணமான சம்சாரம் ஒன்று; மற்றபடி ‘பிரைவேட்’டாக இரண்டொருவர் இருக்கவேணும். என் மேல் கோபித்துக் கொண்டு உபயோகமில்லை, ரேகை அப்படிச் சொல்கிறது” என்பான். உடனே மேற்படி ஆசாமியின் வாயெல்லாம் பல்லாகத் தெரியும். முழு ரூபாய்க்குக் குறைந்து அவரிடம் வாங்கிக் கொள்ள மாட்டான்.

மற்றொருவரிடம், “உங்களுடைய சம்சாரம் ரொம்ப பாக்கியசாலி; அந்த அம்மாள் கால் வைத்த இடம் எல்லாம் விளங்கும்” என்றும், இன்னொருவரிடம், “உங்கள் சம்சாரம் உங்களிடம் உயிராயிருப்பாள்; ஆனால் நீங்கள் தான் அந்த அம்மாவிடம் அவ்வளவு ஆசையாயிருக்கமாட்டீர்கள்” என்றும், இந்த மாதிரியெல்லாம் சொல்லி, எப்படிப்பட்ட கஞ்சனாயிருந்தாலும் வெள்ளிப்பணத்துக்குக் குறையாமல் கழட்டிவிடுவான்.

கடைசியாக, ஒரு தடவை மட்டும் இந்த யுக்தி பயன்படாமல் போயிற்று. அதாவது, யுக்தியின்மேல் தவறு ஒன்றுமில்லை; உபயோகித்த இடந்தான் தவறாய்ப் போயிற்று. ஒரு மனுஷ்யன் தன்னுடைய கையைக் காட்டி எல்லாம் தெரிந்து கொண்ட பிறகு தன்னுடைய சம்சாரத்தின் கையையும் பார்க்கும்படி சொன்னான். கந்தசாமி தான் சொல்வது இன்னதென்பதை நன்கு உணராமலே, “அம்மா! உங்களுக்கு கலியாணமான புருஷன் ஒன்று, மற்றபடி ‘பிரைவேட்’டாக இரண்டொருவர்…” என்று உளறிவிட்டான். அவ்வளவுதான், அந்த அம்மாள் பத்ரகாளி வடிவெடுத்து, “உன்னைக் கட்டையிலே வைக்க, பாம்பு பிடுங்க!” என்று பிரமாதமாகச் சபிக்கத் தொடங்கினாள். மற்றும், “உன்னிடம் கையைக் காட்டச் சொல்லித்தே, இந்த ஜடம்!” என்று அவள் தன் புருஷனுக்குக் கொடுத்த கொடுப்பில், அந்த மனுஷ்யன் கந்தசாமியின் மேல் கைகூட வைத்து விட்டான்!

கந்தசாமி அன்று எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டான். முதுகெல்லாம் வீங்கும்படி அடிபட்டதுமல்லாமல், மேற்படியாரின் வீட்டில் தான் வெள்ளிச் செம்பைத் திருட முயற்சித்ததாக ஒப்புக் கொண்டு அதற்காகத் தன்னை மன்னிக்க வேண்டுமென்று எழுதியும் கொடுத்துவிட்டு அவன் விடுதலை பெற வேண்டியதாயிற்று.

இதெல்லாம் பழைய கதை. மேற்படி சம்பவத்துக்குப் பிறகு கந்தசாமி ரேகை சாஸ்திரத்தின் மூஞ்சியில் கூட விழிப்பதில்லையென்று சபதம் செய்து கொண்டான். அதன் பயனாகத்தான் இன்று அவன் பையில் மூன்றே மூன்று காலணாக்களுடன் நடந்து போக வேண்டியிருந்தது.

வழியில் சாலை ஓரத்தில் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு பழந்துணி விரித்திருந்தது. அதில் ஓரணா நாணயம் ஒன்றும், இரண்டு காலணாக்களும் கிடந்தன. அந்த ஓரணாவை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கந்தசாமியின் கை ஊறிற்று. எனவே, தன் பையிலிருந்த காலணாவை எடுத்தான் (அதைப் போடுவதாகப் பாசாங்கு செய்துவிட்டு ஓரணாவை எடுத்துக் கொள்ளலாமென்று) ஏதோ சந்தேகம் தோன்றிற்று. சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்தில் முச்சந்தியில் நின்ற போலீஸ்காரன் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கவனித்தான். கையிலெடுத்த காலணாவைப் பிச்சைக்காரன் துணியில் போட்டுவிட்டு மேலே நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் தன்னுடைய கோபத்தையெல்லாம் சேர்த்து வைத்துத் “தூ!” என்று காறி உமிழ்ந்தான்.

ஒரு குருட்டுப் பிச்சைக்காரப் பயலிடங்கூட ஒன்றே முக்காலணா இருக்கிறது. தன்னிடமோ இரண்டு காலணாத் தான் இருக்கிறது என்பதை எண்ண எண்ண அவனுடைய ஆத்திரம் அதிகரித்தது. கையிலுள்ள அரையணாவுக்கு ஏதாவது ஆபத்து வரப்போகிறதே என்று பயம் உண்டாகிச் சட்டென்று அருகிலிருந்த சாயபுவின் ‘சா’க் கடைக்குச் சென்றான். ஒரு கப் ‘சா’ வாங்கிச் சாப்பிட்டான். அரை கப் டீ உள்ளே போனவுடனேயே மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. குடித்து முடித்ததும், “சபாஷ்! அதுதான் வேலைத்தனம்!” என்று தீர்மானித்தான். தெரியாமலா தேயிலைப் பானத்தைப் பற்றி இவ்வளவு பிரசாரம் செய்கிறார்கள்?

நெல்லிப்பாக்கத்தில் பெரும்பாலும் மத்திய வகுப்பினரே குடியிருந்தார்கள். சின்னச் சின்னத் தோட்டங்களுக்கு மத்தியில் சின்னச் சின்ன பங்களாக்கள். அவற்றில் வசித்தவர்கள் அறுபது எழுபது ரூபாய் முதல் முந்நூறு நானூறு ரூபாய் வரையில் மாதச் சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோர். இடையிடையே மாஜி உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் முதலியோரும் உண்டு.

காலை எட்டு மணிக்கு ஸ்ரீமான் கே. ராமகிருஷ்ணய்யர், காமரா உள்ளில் கையில் பத்திரிகையுடன் உட்கார்ந்திருந்தார். வாசல் ஜன்னல் ஓரமாய் ஒரு மனிதன் வந்து நின்று, “ஸார்!” என்று கூப்பிடவே, “யாரடா அது?” என்று அதட்டிய குரலில் எரிச்சலாகக் கேட்டார். “போலீஸ், ஸார்” என்று பதில் வரவும், கொஞ்சம் அடங்கி, “என்ன?” என்றார்.

“ரோந்து டியூட்டி, ஸார்!”

“சரி அதற்கென்ன?”

“எல்லாரும் சேர்ந்து பொங்கல் வைக்கிறோம், ஸார்!”

“சரிதான், அதற்கென்ன செய்யவேணும்?”

“ஏதோ உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுக்கலாம், ஸார்!”

ராமகிருஷ்ணய்யர் ஒரு நிமிஷம் யோசித்தார். முதலில் “போலீஸ்” என்றதும், அவர் நெஞ்சில் ஏற்பட்ட துணுக்கம் இப்போது நிவர்த்தியாகி, அவன் யாசகத்துக்கு வந்திருக்கிறானென்னும் விஷயம் கொஞ்சம் சந்தோஷம் அளித்தது. “ஆமாம்; ஊரெல்லாம் திருட்டுப் பயமாயிருக்கிறது. போலீஸ்காரர்களுடைய ஒத்தாசை எவ்வளவு அவசியமானது?” என்று எண்ணினார். என்ன கொடுக்கலாமென்று சற்றுச் சிந்தித்துவிட்டு, பணப்பையைத் திறந்து நாலு அணா எடுத்தார். “நாங்கள் ஆறு பேர் ரோந்து சுத்தறோம், ஸார்!” என்றான். இன்னும் இரண்டணா சேர்த்துக் கொடுத்து அனுப்பினார்.

அன்று பத்தரை மணிக்குள்ளாக, கந்தசாமி ரூ.24 சொச்சம் சம்பாதித்து விட்டான். வெயில் ஆகிவிட்டது. இன்றைக்கு நிறுத்த வேண்டியது தான். ஆனாலும், முழுசாகக் கால் நூறு ஆக்கிவிட்டு நிறுத்தலாம் என்று எண்ணினான். இன்றைக்கு விழித்த முகத்தில் இன்னும் பத்து நாள் விழித்தால் போதும்; அப்புறம் கௌரவமாய் ஒரு சோடாக் கடை வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்யலாம்; ஏன், கலியாணம் கூடப் பண்ணிக்கலாம்!

“மிஸ்டர் கே.சேனாபதி, ஜி.டி.ஏ.” என்ற போர்டு தொங்கிய வீட்டிற்குள் நுழைந்தான். முன் ஹாலில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் சேனாபதி அல்ல. அவருடைய தமையன் தீர்த்தபதி என்று கந்தசாமிக்குத் தெரியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம் தான்.

“யார்? என்ன வேணும்?” என்று சாவதானமாய்க் கேட்டார் தீர்த்தபதி.

“போலீஸ், ஸார்!” என்றதும், தீர்த்தபதியின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அதன் கருத்து கந்தசாமிக்கு விளங்கவில்லை.

“எந்தப் போலீஸ்?”

“டவுன் போலீஸ்தான்.”

“என்ன வேணும்?”

கந்தசாமி வழக்கமான பாடத்தை ஒப்புவித்து, “உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுக்கலாம்” என்றான்.

“சரி, கொஞ்சம் இரு” என்று தீர்த்தபதி சொல்லிவிட்டு, வேலைக்காரப் பையனை அழைத்து அவனிடம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினார். பிறகு இன்னும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். கந்தசாமியும் நின்று கொண்டேயிருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் உடுப்புத் தரித்த ஒரு போலீஸ்காரன் வந்தான். தீர்த்தபதியின் முன் வந்து ஸலாம் வைத்து நின்றான்.

தீர்த்தபதி அவனைப் பார்த்து, “என்ன வேலையடா பார்க்கிறீர்கள், நீங்கள்? சுத்த சோம்பேறிக் கழுதைகள்!” என்று திட்டிவிட்டு, “வாசலில் போய் நில்லு!” என்றார். வாசற்படிக்கு அருகில் நின்ற கந்தசாமி அந்த போலீஸ்காரனை இரகசியமாய், “எஜமான் யார்?” என்று கேட்டான். “தெரியாதா? சப்-இன்ஸ்பெக்டர் ஐயா” என்றான் போலீஸ்காரன்.

இம்மாதிரி நெருக்கடிகளில் தான் கந்தசாமி எவ்வளவு தீர புருஷன் என்பது வெளியாகும். எத்தகைய ஆபத்திலும் அவன் பதற்றம் அடைவது கிடையாது. இப்போது அவன் மளமளவென்று இன்ஸ்பெக்டர் அருகில் சென்று சட்டைப் பைகளில் இருந்த பணம், சில்லறை எல்லாவற்றையும் எடுத்து மேஜை மீது வைத்தான். “எஜமான் மன்னிக்க வேணும்” என்றான்.

“இவ்வளவு தானாடா? இன்னும் பாக்கி ஏதாவது வைத்துக் கொண்டிருக்கிறாயோ?”

“தம்பிடி கூட இல்லை, எஜமான்!”

“சரி, ஓடிப் போ! இனி இம்மாதிரி செய்தாயோ தொலைத்து விடுவேன்!”

“எஜமான்!”

“என்னடா?”

“வயிறு பசிக்கிறது. நாஸ்தாவுக்கு ஏதாவது…”

“சரி; தொலைத்துக் கொண்டு போ!” என்று ஸப்-இன்ஸ்பெக்டர் இரண்டணாவை எடுத்தெரிந்தார். கந்தசாமி அதை எடுத்துக் கொண்டு வெளியேறினான். வாசலில் நின்ற போலீஸ்காரனைப் பார்த்து, “எஜமான் உன்னைப் போகச் சொல்கிறார். அண்ணே! இனி உனக்கு வேலையில்லையாம்” என்று கூறிவிட்டுப் போனான்.

ஸப்-இன்ஸ்பெக்டர் தீர்த்தபதி, கையோடு கையாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மலையப்பெருமாளுக்கு ஒரு கடிதம் எழுதினார்:

“….மாற்றலாகிப் போகும் டிபுடி சூபரின்டென்டண்ட் துரைக்கு நாம் கொடுக்க எண்ணியிருக்கும் விருந்துக்காக, என்னுடைய சந்தா ரூ.24 இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.

இப்படிக்குக் கீழ்ப்படிந்துள்ள ஊழியன் தீர்த்தபதி.”

கந்தசாமி கையில் இரண்டணாக் காசுடன் வீதியில் நடந்து சென்ற போது, ‘உலகம் ரொம்ப சரியாய்த்தான் நடந்து வருகிறது; எல்லாம் அதது, அப்படியப்படி சேர வேண்டிய இடத்தில் தான் கணக்காய்ப் போய்ச் சேர்கிறது” என்று சொல்லிக் கொண்டு போனான்.

இத்துடன்

அமரர் கல்கியின் போலீஸ் விருந்து

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Police Virunthu Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,police virunthu Audiboook,police virunthu,police virunthu Kalki,Kalki police virunthu,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *