BooksKalki Times

Magudapathi Kalki

Magudapathi kalki

Mr and Mrs Tamilan Presents Kalki Times

மகுடபதி

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Magudapathi Kalki

முதல் அத்தியாயம்
திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் ‘ஜே ஜே’ என்ற ஜ னக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜ ன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜ ன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜ னவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929 ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆ கவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.

முதல் நாள் கோயமுத்தூரில் பிரசித்தி பெற்ற ஒரு காங்கிரஸ் தொண்டர், தம்பதி சமேதராய்ச் சத்தியாக்கிரகம் செய்தார். அவர்களைப் போலீஸார் காங்கிரஸ் ஆபீஸ் வாசலிலேயே கைது செய்து கொண்டு போனார்கள்.

அதற்குப் பிறகு நகரின் முக்கிய தெருக்களில் போலீஸ் ‘மார்ச்’ நடந்தது.

மறுநாள் ஆறு தொண்டர்கள் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பினார்கள். கிளம்பி, ‘வந்தேமாதரம்’ முதலிய கோஷங்களைச் செய்து கொண்டு கடைத்தெரு வரையில் சென்றார்கள். வேடிக்கை பார்ப்பதற்கு ஏக ஜ னக் கூட்டம் கூடிவிட்டது.

அப்போது பலமான போலீஸ் படை அங்கு வந்து சேர்ந்தது. முன்னால் போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் குண்டாந்தடி சகிதமாக சாதாரண போலீஸ் ஜவான்கள் அவர்களுக்குப் பின்னால் துப்பாக்கி சகிதமாக மலபார் ஸ்பெஷல் போலீஸ் இப்படியாக அந்தப் போலீஸ் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. தொண்டர்கள் நின்ற கடைத் தெரு முனைக்கு வந்ததும், தலைமைப் போலீஸ் அதிகாரி பயங்கரமான குரலில் போலீஸ் படையைப் பார்த்து உத்தரவுகள் போட்டார். நாலாபுறமும் கூடியிருந்த ஜ னங்களைப் பார்த்ததும் ஏதோ சொன்னார். அவர் சொன்னது இன்னதென்று யாருக்கும் தெரியவில்லை. கூட்டத்திலிருந்தவர்களில் பொறுப்பற்ற இளம் பிள்ளைகள் சிலர் போலீஸ்காரர்களைப் பரிகசிக்கும் பாவனையாகக் கூச்சலிட்டார்கள்.

அடுத்த நிமிஷம் போலீஸ் குண்டாந்தடி கைவரிசையைக் காட்டத் தொடங்கிற்று.

சில போலீஸ் ஜவான்கள் தொண்டர்களைச் சூழ்ந்து கொண்டு அடிக்கத் தொடங்கினார்கள். அடி ஆரம்பமான போது, தொண்டர்கள் கூட்டத்திலிருந்து ‘வந்தேமாதரம்’ என்று கிளம்பிய வீர கோஷத்தின் ஸ்வரம் வர வரக் குறைந்து வந்தது. ஒவ்வொரு தொண்டராகக் கீழே விழுந்து வந்தார்கள். சிலருக்கு உணர்வு தப்பிவிட்டது.

தொண்டர்களைச் சாதாரணப் போலீஸார் ஒரு புறம் கவனித்துக் கொண்டிருக்கையில், மலபார் ஸ்பெஷல் போலீஸ் வீரர்கள், சுற்றுமுற்றும் கூடியிருந்த ஜ னங்களை ஸ்பெஷலாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். பயங்கரமான ஊளைச் சத்தம் போட்டு அவர்கள் பாய்ந்துவந்து ஜ னங்களைக் குண்டாந்தடியினால் விசாரிக்கத் தொடங்கவே, ஜ னங்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அப்படி ஓடினவர்களைத் தொடர்ந்து ஜவான்கள் துரத்தினார்கள். துரத்தப்பட்டவர்களில் சிலர் கடைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் நுழைந்தார்கள். போலீஸார் அவர்களுக்குப் பின்னால் புகுந்து தாக்கினார்கள்.

தெருவிலே போனவர்கள், வந்தவர்கள் வண்டிக்காரர்கள், வீட்டுக்காரர்கள், கடைக்காரர்கள், கடைக்கு வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள், பார்க்காமல் ஓடியவர்கள் ஆ கிய சகலரும் பட்சபாதமின்றி அன்றையத் தினம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் மகத்துவத்தை மண்டையிலும் முதுகிலும் தோள்பட்டைகளிலும் முழங்கால் சில்லுகளிலும் அனுபவித்தார்கள்.

கடைத்தெருவில் சில கடைகளுக்குள் போலீஸார் புகுந்த செய்தியைக் கேட்டதும், எல்லாக் கடைகளும் மளமளவென்று சாத்தப்பட்டன.

இதற்குள் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. மலபார் போலீஸார் வீதியில் யாரைக் கண்டாலும் அடிக்கிறார்களென்றும், அடிக்கப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர் இறந்து போனார் என்றும் வதந்தி பரவியது. இதனால் நகரம் முழுவதும் கதிகலங்கிப் போய்விட்டது.

சற்று நேரத்திற்கெல்லாம் நகரின் வீதிகளில் போலீஸார், ‘மார்ச்’ செய்துகொண்டு போனதனால் ஜ னங்களின் பீதி அதிகமாயிற்று. யாரும் வெளியில் தலைகாட்டத் துணியவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய வீடுகளுக்குள் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு முனிசிபல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால், அவையும் பயத்தால் மங்கலாகப் பிரகாசித்தது போலவே தோன்றின.

இந்த மங்கிய வெளிச்சத்தில் அனுமந்தராயன் தெருவில், சுமார் இருபது பிராயமுள்ள ஓர் இளைஞன் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே விரைவாகப் போய்க் கொண்டிருந்தான். அனுமந்தராயன் தெரு மிகவும் குறுகலான தெரு. இதில் வீடுகளைக் காட்டிலும், வியாபாரிகள் சாமான்களை நிரப்பி வைக்கும் கிடங்குகள் தான் அதிகமாயிருந்தன. ஆதலால், சாதாரணமாகவே இந்தத் தெருவில் அஸ்தமித்த பிறகு ஜ ன நடமாட்டம் குறைவாக இருக்கும். இப்போதோ, அந்தத் தெரு முழுவதும் சூனியமாகவே காணப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபன், தான் யாருடைய கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற கவலையுடன் ஒளிந்து ஒளிந்து போவதாகத் தோன்றியது. களை பொருந்திய அவன் முகத்தில், பயத்தின் அறிகுறி தென்பட்டது. அவனுடைய உடையைச் சற்றுக் கவனித்தோமானால், அவன் அவ்விதம் பயந்துகொண்டு செல்வது நமக்கு ரொம்பவும் ஆச்சரியமளிக்கும். அவன் கதர் உடை தரித்து, தலையிலும் கதர்க் குல்லா வைத்திருந்தான். அவன் தேசத்தொண்டில் ஈடுபட்டவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தத் தேசத்தொண்டன் அவ்விதம் பயத்துடன் ஒளிந்து ஒளிந்து செல்வதேன்? போலீஸ் தடியடிக்குப் பயந்து ஓடி வந்தவனோ? ஆனால், தடியடி உற்சவந்தான் சாயங்காலமே தீர்ந்து போய் விட்டதே? இப்போது என்னத்திற்காக அவன் இவ்விதம் பயப்பட்டு ஒளிய வேண்டும்?

அதே சமயத்தில் அனுமந்தராயன் தெரு முனையை நாம் அடைந்தோமானால், மேற்படி மர்மத்தை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். ஆமாம்; அந்த முனையில் இரண்டு தடியர்கள் வீதி ஓரத்தில் நின்று மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தோற்றத்தில் தடியர்களாயிருந்ததுடன், கையிலும் தடி வைத்திருந்தார்கள்.

“இந்தச் சந்திலேதான் புகுந்தான்” என்று ஒருவன் சொன்னான்.

“அப்படியானால், வா! அவனை இன்றைக்குத் தீர்த்தேயாக வேண்டும். “

இப்படிப் பேசிய தடியர்கள் இருவரும் தெருவுக்குள் நுழைந்தார்கள்.

அச்சமயம் தெருவின் மத்தியில் போய்க்கொண்டிருந்த இளைஞன் திரும்பிப் பார்த்தான். ஒரு முனையில் போட்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் அந்தத் தடியர்களின் உருவங்கள் தெரிந்தன. அவர்களைப் பார்த்ததும் இளைஞனின் உடம்பு சிறிது நடுங்கிற்று. வீதியோரத்து இருண்ட நிழலில் இன்னும் நன்றாய் நகர்ந்து கொண்டு அவன் மேலே விரைந்து சென்றான். ஓடினால் கால் சத்தம் கேட்குமே என்றும் அவனுக்குப் பயமாயிருந்தது. ஆ கையால், சத்தம் கேட்காதபடி கூடியவரையில் வேகமாக நடந்தான்.

நாலு வீடு தாண்டியதும், ஒரு வீட்டு வாசற் கதவண்டை யாரோ ஒருவன் நிற்பது போல் தோன்றியது. அருகில் நெருங்கியபோது, அவன் ஒரு வயதான கிழவன் என்று தோன்றியது. அவன் வாசற்புறத்திலிருந்து வீட்டுக்கதவின் பூட்டைத் திறந்து கொண்டிருந்தான். தேசீய உடை தரித்த வாலிபன் அந்த இடத்துக்கு வந்ததும் கிழவன் வீட்டின் கதவைத் திறந்ததும், சரியாக இருந்தது.

கதவைத் திறந்துவிட்டு, கிழே விழுந்திருந்த கைத்தடியை எடுப்பதற்காக அந்தக் கிழவன் குனிந்தபோது, வாலிபன் சட்டென்று அந்தத் திறந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *