BooksTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Ch9 சோலைமலை இளவரசி Audiobook

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Ch9 Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch9 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch9 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan,

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.


அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அத்தியாயம் 9. வெறி முற்றியது!

அன்று பிற்பகலில், அஸ்தமிக்க இன்னும் ஒரு ஜாமம் இருந்த போது, சோலைமலை இளவரசி தன்னுடைய படுக்கையறை மஞ்சத்தில் விரித்திருந்த பட்டு மெத்தையில் படுத்து அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். சூரியன் எப்போது மலைவாயில் விழுந்து தொலையும், எப்போது சந்திரன் குன்றின் மேலே உதயமாகும் என்று அவளுடைய இதயம் ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தது. இளம் பிராயம் முதல் மாணிக்கவல்லியை எடுத்து வளர்த்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி வந்த செவிலித்தாய் அப்போது அங்கு வந்தாள். மாணிக்கவல்லியின் நிலையைப் பார்த்துவிட்டு, "அம்மணி! ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா? முகம் ஒரு மாதிரி பளபளவென்று இருக்கிறதே? கண் சிவந்திருக்கிறதே?" என்று கேட்டாள்.


 
"ஆமாம், வீரம்மா! உடம்பு சரியாகத்தான் இல்லை. அதோடு மனமும் சரியாக இல்லை!" என்றாள் இளவரசி.

 "உடம்பு சரியில்லாவிட்டால், மகாராஜா வந்ததும் வைத்தியனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாம். ஆனால் மனத்தில் என்ன வந்தது? ஏதாவது கவலையா, கஷ்டமா? குறையா குற்றமா? மகாராஜா அப்படியெல்லாம் உனக்கு ஒரு குறையும் வைக்கவில்லையே? கண்ணுக்குக் கண்ணாய் வைத்து உன்னைக் காப்பாற்றி வருகிறாரே?" என்று வீரம்மா கேட்டாள்.

 "அப்பா எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை தான். என்னைப் பற்றிய கவலை ஒன்றுமில்லை. சற்று முன்னால் மாறனேந்தல் சண்டையைப் பற்றி ஞாபகம் வந்தது. அதனால் வருத்தமாயிருக்கிறது" என்றாள் இளவரசி.

 "லட்சணந்தான், போ! மாறனேந்தல் சண்டைக்கும் உனக்கும் என்ன வந்தது? அதைப்பற்றி நீ ஏன் வருத்தப்பட வேண்டும்?" என்று கேட்டாள் வீரம்மா.

 "ஏன் என்று நீயே கேட்கிறாயே? மாறனேந்தல் மகாராஜா குடும்பத்தைப்பற்றி நீதானே வருத்தப்பட்டாய்? மாறனேந்தல் கோட்டையை நம்முடைய வீரர்களும் வெள்ளைக்காரர்களும் சேர்ந்து முற்றுகை போட்டிருக்கிறார்களாமே? மாறனேந்தல் மகாராஜாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி நேர்ந்ததோ என்று நினைத்தால் வருத்தமாயிருக்கிறது" என்றாள் மாணிக்கவல்லி.

 "அதற்காக நீயும் நானும் வருத்தப்பட்டு என்ன செய்வது, கண்ணே! எல்லாம் விதியின்படி நடக்கும். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இரண்டு வம்சத்தாரும் எவ்வளவோ ஒற்றுமையாயிருந்தார்கள். அக்கரைச் சீமையிலிருந்து தலையிலே கூடையைக் கவிழ்த்துக் கொண்டு இந்த வெள்ளைக்காரச் சாதியார் வந்த பிறகுதான் இரண்டு வம்சங்களுக்கும் இப்படிப்பட்ட விரோதம் ஏற்பட்டது. மூன்று மாதத்துக்கு முன்னாலே கூட என் தங்கச்சியைப் பார்க்க மாறனேந்தல் போயிருந்தேன். அங்கு எல்லாரும் உலகநாதத்தேவரைப்பற்றி எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? மன்மதன் மாதிரி லட்சணமாம்! குணத்திலே தங்கக் கம்பியாம்! அவர் வாயைத் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசினால் பசி தீர்ந்துவிடுமாம்!.."

 "போதும் வீரம்மா, போதும்! இப்படியெல்லாம் பேசிப் பேசித்தான் என் மனத்தில் என்னவெல்லாம் ஆசையை நீ கிளப்பி விட்டுவிட்டாய்?"

 "அதற்கென்ன செய்யலாம், கண்ணே! உலகமெல்லாம் தேடினாலும் உலகநாதத்தேவரைப் போன்ற மாப்பிள்ளை கிடைப்பது சிரமம். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கைப்பட நீ கொடுத்து வைக்கவில்லை. இரண்டு ராஜ்யங்களுக்கும் ராணியாகும் பாக்கியம் உனக்குக் கிடைக்கவில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. நான் சொன்னதை எல்லாம் அடியோடு மறந்துவிடு!.."

 "சொல்லுவதையெல்லாம் சொல்லிவிட்டு, 'மறந்து போய்விடு' என்று சொன்னால் எப்படி மறக்க முடியும் வீரம்மா? அது போகட்டும்; சண்டை சமாசாரம் ஏதாவது உனக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லு" என்று இளவரசி கேட்டாள்.

 "மாறனேந்தல் கோட்டை இன்று காலையே பிடிபட்டுவிட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள். பாவம்! மாறனேந்தல் மகாராஜாவும் மகாராணியும் இரண்டு ராஜகுமாரர்களும் என்ன கதி அடைந்தார்களோ?" என்று வீரம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது, சோலைமலை மகாராஜாவின் பாதரட்சைச் சத்தம் சமீபத்தில் 'கிறீச்' 'கிறீச்' என்று கேட்டது. உடனே வீரம்மா தன் வாயை மூடி அதன்மேல் விரலை வைத்து, 'பேசாதே!' என்று சமிக்ஞை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 மகாராஜா அறைக்குள்ளே வந்ததும் இளவரசி எழுந்து நின்று வணங்கினாள். "மாணிக்கம்! ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது?" என்று மகாராஜா கேட்டார்.

 மாணிக்கவல்லி உள்ளுக்குள் பயத்துடனே, "ஒன்றுமில்லை, அப்பா!" என்று சொன்னாள்.

 "ஒன்றுமில்லையென்றால் முகம் ஏன் வாடியிருக்கிறது? வீரம்மா எங்கே? அவள் உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லைபோல் இருக்கிறது" என்று கோபக் குரலில் மகாராஜா கூறினார்.

 "இல்லை, அப்பா! வீரம்மா எப்போதும் என்னுடனே தான் இருக்கிறாள். சற்று முன் கூட இங்கே இருந்தாள். நீங்கள் வரும் சத்தம் கேட்ட பிறகுதான் சமையற்கட்டுக்குச் சென்றாள். அப்பா! முன்னேயெல்லாம் நீங்கள் அடிக்கடி என்னைப் பார்க்க வருவீர்கள். என்னுடன் பேசிக்கொண்டிருப்பீர்கள். என்னைக் கதை வாசிக்கச் சொல்லிக் கேட்பீர்கள். அங்கே இங்கே அழைத்துப் போவீர்கள்! இப்போதெல்லாம் நீங்கள் என்னைப் பார்க்க வருவதேயில்லை. வந்தாலும் நின்றபடியே இரண்டு வார்த்தை பேசிவிட்டுப் போய்விடுகிறீர்கள். எனக்குப் பொழுதே போகிறதே இல்லை. அதனாலே தான் உடம்பும் ஒரு மாதிரி இருக்கிறது" என்றாள் மாணிக்கவல்லி.

 "ஆமாம், குழந்தை! நீ சொல்வது மெய்தான். இப்போது நான் எடுத்திருக்கும் காரியம் மட்டும் ஜயத்துடன் முடியட்டும்; அப்புறம் முன்போல் அடிக்கடி இங்கே வந்து உன்னுடன் பேசிக் கொண்டிருப்பேன். உனக்குத் தகுந்த மாப்பிள்ளை கூடிய சீக்கிரம் நான் பார்த்தாக வேண்டும். இந்தச் சண்டை முடிந்த உடனே அதுதான் எனக்குக் காரியம்" என்று மகாராஜா சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார்.

 இளவரசி முகத்தைச் சுளித்துக் கொண்டு, "அதற்கு அவசரம் ஒன்றுமில்லை, அப்பா! உங்களை விட்டுப் பிரிந்து எங்கேயாவது தொலைதூரத்துக்குப் போவதற்கு எனக்கு மனமில்லை. ஆனால், சண்டை இன்னமும் முடியவில்லையா? மாறனேந்தல் கோட்டை இன்று காலை பிடிபட்டுவிட்டதென்று வீரம்மா சொன்னாளே?" என்றாள்.

 "ஆமாம், கோட்டை பிடிபட்டு விட்டது. அந்த மடையன் மாறனேந்தல் மகாராஜாவும் கடைசியில் தன்னந் தனியாக வாளேந்திச் சண்டை போட்டுச் செத்தொழிந்தான். ஆனால் நான் எந்தக் களவாடித் திருட்டுப் பயலைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ, அவன் பிடிபடவில்லை. இரவுக்கிரவே தப்பி ஓடிவிட்டான். ஆனாலும் எங்கே ஓடிவிடப் போகிறான்? எப்படியும் அகப்பட்டுக் கொள்வான்! அவன் மட்டும் என் கையில் சிக்கும்போது.." என்று சொல்லிச் சோலைமலை மகாராஜா பற்களை 'நற நற'வென்று கடித்தார்.

 இளவரசி சகிக்க முடியாத மனவேதனையடைந்தாள். அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாததனால் வேதனை அதிகமாயிற்று. பேச்சை மாற்ற விரும்பி, "மகாராணியும் இரண்டாவது பிள்ளையும் என்ன ஆனார்கள்?" என்று கேட்டாள்.

 "அவர்கள் இருவரையும் வெள்ளைக்காரத் தடியர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சென்னைப் பட்டணத்துக் கோட்டைக்குப் பந்தோபஸ்துடன் அனுப்பி வைக்கப் போகிறார்களாம்! இல்லாவிட்டால் அங்கேயிருக்கும் பெரிய துரை கோபித்துக் கொள்வாராம்! அவர்களை மட்டும் என்னிடம் ஒப்படைத்திருந்தால் இந்தத் திருட்டுப் பயல் உலகநாதத்தேவன் எங்கே போனான் என்பதை அவர்கள் வாய்மொழியாகவே கறந்திருப்பேன். இப்போது தான் என்ன? அவன் நேற்று இரவு நமது கோட்டைக்கு அருகாமையில் வந்தவரைக்கும் தடையம் கிடைத்திருக்கிறது. நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலே தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் எப்படித் தப்புவான் என்று பார்க்கலாம்!"

 இவ்விதம் சொல்லி மகாராஜா, "ஹா, ஹா, ஹா" என்று சிரித்தது, பேய்களின் சிரிப்பைப்போல் பயங்கரமாக ஒலித்தது.

 மாணிக்கவல்லியின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த வேதனை, கவலை இவற்றுடன் இப்போது ஆவலும் பரபரப்பும் சேர்ந்து கொண்டன.

 "மாறனேந்தல் இளவரசர் அகப்பட்டால் அவரை நீங்கள் என்ன செய்வீர்கள் அப்பா?" என்று கேட்டாள்.

 "நல்ல கேள்வி கேட்டாய், மாணிக்கம்! நல்ல கேள்வி! அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். யோசித்து ஒரு முடிவும் செய்து விட்டேன். அவனை நமது கோட்டை வாசலுக்கு அப்பாலுள்ள ஆலமரத்தின் கிளையில் தூக்குப் போடப் போகிறேன். தூக்கில் மாட்டியவுடனே அவன் செத்து விடுவான். ஆனாலும் அவன் உடலை மரக்கிளையிலிருந்து இறக்க மாட்டேன். அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருப்பான். கழுகும் காக்கையும் அவன் சதையைக் கொத்தித் தின்றபிறகு எலும்புக்கூட்டைக் கூட எடுக்க மாட்டேன்! சோலைமலை மகாராஜாவை அவமதித்தவனுடைய கதி என்ன ஆ கும் என்பதை உலகம் எல்லாம் அறியும்படி, அவனுடைய எலும்புக்கூடு ஒரு வருஷமாவது நமது கோட்டை வாசலில் தொங்க வேண்டும்!" என்றார் மகாராஜா.

 சொல்லமுடியாத பயங்கரத்தையும் அருவருப்பையும் அடைந்த மாணிக்கவல்லி கம்மிய குரலில், "அப்பா! இது என்ன கோரமான பேச்சு?" என்றாள்.

 "பேச்சு இல்லை, மாணிக்கம்! வெறும் பேச்சு இல்லை! நான் சொன்னபடியே செய்கிறேனே, இல்லையா என்று பார்த்துக் கொண்டிரு! இதோ, நான் போய் இராத்திரி வேட்டைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். நீ என் உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். வீரம்மா உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளாவிட்டால், அந்தக் கழுதையைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேறொருத்தியை வைக்கிறேன், தெரிகிறதா?" என்று சொல்லிவிட்டுச் சோலைமலை மகாராஜா மறுபடியும் பாதரட்சை 'கிறீச்' 'கிறீச்' என்று சப்திக்க வெளியேறினார்.

 மகாராஜா போனபிறகு இளவரசி சிறிது நேரம் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சங் கொஞ்சமாகப் பிரமை நீங்கிப் புத்தி தெளிவடைந்தது.

 இன்று முதல் மாறனேந்தல் மகாராஜாவாகி விட்ட உலகநாதத் தேவருக்கு நேர்ந்துள்ள பெரிய அபாயத்தை நினைக்க நினைக்க அவரை அந்த அபாயத்திலிருந்து எப்படியாவது தப்புவிக்க வேண்டும் என்பதில் அவளுடைய உறுதி வலுவடைந்தது.

 அன்று காலையிலேயே அவளுடைய உள்ளத்தில் உதித்திருந்த காதல் வெறி வளர்ந்து முதிர்ந்தது.

 யோசித்து யோசித்துப் பார்த்து, உலகநாதத் தேவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு என்பதை அவள் உணர்ந்தாள். அவரைச் சில நாள் வரையில் கோட்டைக்குள்ளேயே இருக்கும்படி செய்தாக வேண்டும். தந்தையின் கோபம் சிறிது தணிந்தபிறகு, அவருக்குத் தன்னிடம் உள்ள அன்பைப் பயன்படுத்தி, அவருடைய பழிவாங்கும் உத்தேசத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். இந்த வழியைத் தவிர வேறு வழி கிடையாது என்று இளவரசி உறுதி செய்து கொண்டாள். பிறகு முன்னைவிட அதிக ஆவலுடன் அவள் இரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,

mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,

kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,

solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,

kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *