BooksTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Ch8 சோலைமலை இளவரசி Audiobook

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Ch8 Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch8 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch8 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.


அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அத்தியாயம் 8. கண்ணீர் கலந்தது!

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் 'குமாரலிங்கம் மாறனேந்தல் இளவரசனாக மாறினான் என்று குறிப்பிட்டிருந்தோம். உண்மையில் மாறனேந்தல் மகாராஜாவாக மாறினான்' என்று சொல்லியிருக்க வேண்டும்.

அன்றைய தினம் பகலில் மாறனேந்தல் கோட்டையில் நடந்த துக்ககரமான சம்பவங்களின் காரணமாக இளவரசன் உலகநாதத் தேவனை இனி நாம் 'மகாராஜா உலகநாதத்தேவர்' என்று அழைப்பது அவசியமாகிறது.

 மாலை எப்போது வரும், மதியம் எப்போது உதயமாகும், மாணிக்க வல்லியின் பாத சலங்கை ஒளி எப்போது கேட்கும் என்று உலகநாதத்தேவர் பிற்பகல் எல்லாம் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். கடைசியாக மாலையும் வந்தது. பின்னர் உலகநாதத் தேவரின் ஆவல் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு வேளை தம்முடைய ஆவல் பூர்த்தியாகாமலேயே போய்விடுமோ, எதிர்பாராத தடை ஏதேனும் நேர்ந்து மாணிக்கவல்லி வராமலிருந்து விடுவாளோ என்ற பயமும் அவருடைய மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

 ஆனால், அம்மாதிரி உலகநாதத் தேவர் ஏமாற்றமடையும்படி நேரிடவில்லை. கீழ்த்திசைக் குன்றின் மேல் சந்திரன் தோன்றிய சிறிது நேரத்துக்கெல்லாம் அரண்மனைப் பக்கத்திலிருந்து ஒரு பெண்ணின் உருவம் வருவதை அவர் கண்டார்.

 இளவரசி நெருங்கி வர வர அவளுடைய நடையிலே ஒரு வித்தியாசம் இருப்பது தெரிந்தது. முன்னே அவளுடைய நடையில் தோன்றிய மிடுக்கும் கம்பீரமும் இப்போது இல்லை. அது மட்டுந்தானா வித்தியாசம்? அன்று காலையும் மத்தியானமும் இளவரசி நடந்த போதெல்லாம் அவளுடைய காற்சிலம்பு 'கலீர் கலீர்' என்று சப்தித்தது. அந்த ஒலி இப்போது ஏன் கேட்கவில்லை?

 வஸந்த மண்டபத்தின் குறட்டில் உட்கார்ந்திருந்த உலகநாதத் தேவர் விரைந்து எழுந்து இளவரசி மாணிக்கவல்லியை எதிர்கொண்டு அழைப்பதற்காகச் சென்றார். ஏதோ ஒரு கெட்ட செய்தியைக் கேட்கப் போகிறோமென்ற உள்ளுணர்ச்சி அவருடைய நெஞ்சில் அலைமோதி எழுந்து மார்பை விம்மி வெடிக்கச் செய்தது.

 மாலை நேரத்தில் மடலவிழ்ந்து மணம் விரித்த அழகிய மலர்கள் குலுங்கிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் மாணிக்கவல்லியின் முகமலரை உலகநாதத்தேவர் பார்த்தார்.

 அவளுடைய விசாலமான கரிய விழிகள் இரண்டிலும் இரண்டு கண்ணீர்த்துளிகள் ததும்பி நின்று, வெண்ணிலவின் ஒளியில் நன்முத்துக்களைப் போல் பிரகாசித்தன.

 அதைக்கண்ட உலகநாதத்தேவர் தம்முடைய உள்ளத்தில் உதித்த உற்பாத உணர்ச்சி உண்மைதான் என்று எண்ணமிட்டார். ஏதோ ஒரு கெட்ட செய்தி, அதுவும் தம்மைப்பற்றிய கெட்ட செய்தி, இளவரசியின் காதுக்கு எட்டியிருக்க வேண்டும்! அதில் சந்தேகமில்லை.

 இளவரசியை மறுபடி சந்தித்ததும் ஏதேதோ பரிகாசமாகப் பேசவேண்டுமென்று உலகநாதத்தேவர் யோசித்து வைத்திருந்தார். அவையெல்லாம் இப்போது மறந்து போயின.

 "உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது?" என்று கேட்பதற்குக் கூட அவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினாலும் பதின்மடங்கு அழகு பெற்று விளங்கிய மாணிக்கவல்லியின் முகத்தைப் பார்த்தது பார்த்த படியே திகைத்துப்போய் நின்றார்.

 எனவே, மாணிக்கவல்லிதான் முதலில் பேசும்படியாக நேர்ந்தது. நீண்ட பெருமூச்சுகளுக்கும் விம்மல்களுக்குமிடையில் "இந்தக் கோட்டையை விட்டுப் போக முடியாது! இங்கேதான் இருந்தாக வேண்டும்!" என்றாள்.

 அவள் சொல்ல வந்த கெட்ட செய்தியை இன்னும் சொல்லவில்லை. என்று ஊகித்துக் கொண்ட உலகநாதத்தேவர், "இன்றிரவு இங்கே நான் எப்படி இருக்க முடியும்? இரவு நேரத்தில் தப்பிச் சென்றால்தானே செல்லலாம்? எனக்குத் தலைக்குமேலே எத்தனையோ வேலை இருக்கிறதே!" என்றார்.

 "அதெல்லாம் எனக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் நீங்கள் இன்றிரவு போக முடியாது. இந்தக் கோட்டையைச் சுற்றிலும் உள்ள மலைகளிலும் காடுகளிலும் இன்று இரவெல்லாம் இருநூறு வீரர்கள் தொண்ணூறு நாய்களுடன் உங்களைத் தேடி வேட்டையாடப் போகிறார்கள்!" என்று இளவரசி சொன்னதும், அதுவரையில் பயமென்பதையே இன்னதென்று அறியாத வீரர் உலகநாதத்தேவரின் நெஞ்சில் பீதிப் பிசாசின் நீண்ட விரல் நகங்கள் தோண்டுவது போல் இருந்தது.

 விரைவிலேயே அந்த உணர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு "தேடினால் தேடட்டுமே; அவர்களிடம் நான் அகப்பட்டுக்கொள்ள மாட்டேன். அப்படியே அகப்பட்டுக் கொண்டாலும் என்னதான் செய்துவிடுவார்கள்? சாவுக்குப் பயப்படுகிறவன் நானல்ல!" என்றார் தேவர்.

 "ஐயா! தாங்கள் சாவுக்கு பயப்படாதவர் என்பதை நன்கு அறிவேன். நானும் சாவுக்குப் பயப்படவில்லை. ஆனால், தங்களை உயிரோடு பிடிக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள். தங்களைப் பிடித்த பிறகு என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்தால், இப்படி அலட்சியமாகப் பேசமாட்டீர்கள்!" என்று மாணிக்கவல்லி சொன்னபோது அவளுடைய குரல் நடுங்கியது.

 உலகநாதத் தேவர் பரிகாசம் தொனித்த குரலில் "என்னை உயிரோடு பிடித்து என்னதான் செய்யப் போகிறார்களாம்? பழைய காலத்துக் கதைகளில் செய்தது போல் பூமியில் குழிவெட்டிப் புதைத்து யானையின் காலால் இடறச் செய்யப் போகிறார்களோ?" என்று கேட்டார்.

 "அப்படிச் செய்தால் கூடப் பாதகமில்லை. இன்னும் கொடுமையான காரியம் செய்யப் போகிறார்கள். அதைச் சொல்லுவதற்கே என்னால் முடியவில்லை. அவ்வளவு பயங்கரமான காரியம்!" என்றாள் மாணிக்கவல்லி.

 இவ்விதம் சொல்லியபோதே அவளுடைய உடம்பு நடுங்குவதையும் அவள் முகத்திலே தோன்றிய பயங்கரத்தின் அறிகுறியையும் பார்த்துவிட்டு, உலகநாதத்தேவர் பரிகாசத்தையும் அலட்சிய பாவத்தையும் விட்டுவிடத் தீர்மானித்தார்.

 "எந்தவிதப் பயங்கர தண்டனையாக இருந்தாலும் இருக்கட்டும், அதற்காக நீ இப்படி மனம் கலங்க வேண்டாம். எல்லாம் சோலைமலை முருகன் சித்தப்படி தான் நடக்கும். இதையெல்லாம் உனக்கு யார் சொன்னார்கள்?" என்று தேவர் கேட்டார்.

 "அரண்மனை அந்தப்புரத்தைத் தேடி வந்து வேறு யார் என்னிடம் சொல்லுவார்கள்? என் தகப்பனார்தான் சொன்னார்!" என்று இளவரசி கூறியபோது, அவளுடைய கண்களிலேயிருந்து கண்ணீர் அருவி அருவியாகப் பெருகிற்று.

 அந்தக் காட்சியானது உலகநாதத் தேவரின் உள்ளத்தை உருக்கிவிட்டது. தாம் இருந்த அபாயகரமான நிலைமையைக்கூட அவர் மறந்து, இளவரசியின் மீது இரக்கம் கொண்டார். அந்த இரக்க உணர்ச்சியே அழியாத காதலுக்கு விதையாக உருக்கொண்டது.

 சட்டென்று தம்முடைய தாய் தந்தையரைப் பற்றிய நினைவு அவருடைய உள்ளத்தில் உதித்தது. மாறனேந்தல் கோட்டை பிடிப்பட்டதோ, என்னவோ? தம்முடைய பெற்றோர்களின் கதி என்னவாயிற்றோ? தன் அருமைத் தம்பியைப் பாவிகள் என்ன செய்தார்களோ?

 இளவரசியின் விம்மலும் கண்ணீரும் நிற்கும் வரையில் சிறிது பொறுத்திருந்துவிட்டு, "நீ கூறியதிலிருந்து உன் தந்தை திரும்பி வந்துவிட்டார் என்று தெரிகிறது. மாறனேந்தல் கோட்டைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லையா? என் தாய் தந்தையரைப் பற்றி ஒரு செய்தியும் கூறவில்லையா?" என்று கேட்டார்.

 "ஐயோ! இந்தப் பாவியின் வாயினால் அதையெல்லாம் எப்படிச் சொல்லுவேன்?" என்று கதறினாள் மாணிக்கவல்லி.

 தாம் எதிர்பார்த்த கெட்ட செய்தி இப்போதுதான் வரப்போகிறது என்பதை உணர்ந்த மாறனேந்தல் மன்னர், "மாணிக்கவல்லி! எப்படிப்பட்ட கெட்ட செய்தியானாலும் சொல்லு! நான் எதற்கும் மனங் கலங்கமாட்டேன். உண்மையை அறிந்து கொள்ள என் மனம் துடிக்கிறது" என்றார்.

 "ஐயா! தாங்கள் இப்போது மாறனேந்தல் இளவரசர் அல்ல. இன்று முதல் தாங்கள்தான் மாறனேந்தல் மகாராஜா" என்று மாணிக்கவல்லி விம்மிக்கொண்டே கூறினாள்.

 இளவரசி கூறியதன் பொருள் இன்னதென்று உலகநாதத்தேவருக்கு விளங்கச் சிறிது நேரம் பிடித்தது. விளங்கியவுடனே தேவரின் தலையில் ஒரு பெரிய மலையே விழுந்தது போல் ஆயிற்று. ஏதோ ஒரு துயரச் செய்தியை அவர் எதிர்பார்த்தவர்தான். என்றாலும், தந்தை இறந்தார் என்னும் செய்தி தனயரை ஓர் ஆட்டம் ஆட்டிவிட்டது! இதுவரையில் நின்று கொண்டே பேசியவர் திடீரென்று உடல் ஓய்ந்து தரையில் உட்கார்ந்தார். எவ்வளவு அடக்கப் பார்த்தும் முடியாமல் தேம்பலும் விம்மலும் பொங்கி வந்தன.

 இளவரசியும் அவர் அருகில் உட்கார்ந்து அவரைத் தேற்றுவதற்கு முயன்றாள். அப்போது அவ்விருவருடைய கண்ணீரும் கலந்து ஒன்றாகும்படி நேர்ந்தது.

 உலகநாதத்தேவர் சீக்கிரத்திலேயே தம்மைத் தேற்றிக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக இளவரசியைத் தூண்டிக் கேட்டு, அவளுடைய தந்தையின் மூலம் அவள் அறிந்த எல்லா விவரங்களையும் தாமும் நன்றாகத் தெரிந்து கொண்டார்.

Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,

mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,

kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,

solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,

kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *