Kalki Short StoriesKalki TimesStory

Governor Vijayam Kalki | Kalki Times

Governor Vijayam Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

கவர்னர் விஜயம்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Governor Vijayam Kalki

ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், “பொய்கையாற்றுத் தேக்கம்” “கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்” என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். செட்டியாருக்கு மயிர் கூச்சல் உண்டாயிற்று. மார்பு சிறிது நேரம் ‘பட்’ ‘பட்’ என்று அடித்துக் கொண்டது. சற்று சமாளித்துக் கொண்டு அத்தலைப்புகளின் கீழ் இருந்த செய்தியை முற்றும் படித்தார். அம்மாதம் 20ம் நாள் காலை 7 மணிக்கு கவர்னர் துரை …. ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பொய்கையற்றுத் தேக்கத்துக்கு மோட்டாரில் செல்வாரென்பதும், மற்றும் பலவிவரங்களும் இருந்தன. செட்டியார் உடனே தமது பிரதம காரியஸ்தர் ஜெயராமையரைக் கூப்பிட்டனுப்பினார். காரியஸ்தர் வந்து சேர்ந்ததும், “ஐயரே, சங்கதி தெரியுமா?” என்றார்.

“தெரியாதே! என்ன விசேஷம்?”

“உமக்கேனையா தெரியும்? இதற்குத்தான் பத்திரிகை படியுமென்று உமக்குப் படித்துப் படித்துச் சொல்கிறேன். வருஷத்தில் ரூ.250 செலவழித்து இவ்வளவு பத்திரிகைகள் தருவிக்கிறோமோ, பின் எதற்காக? நான் மட்டும் ஜாக்கிரதையாகப் படித்துக் கொண்டு வராவிட்டால் இப்போது என்ன ஆகியிருக்கும்?”

“விஷயம் என்னவென்று எஜமான் சொல்லவில்லையே?”

“நம்மூருக்கு 20-ந்தேதி கவர்னர் வருகிறார்!”

காரியஸ்தர் இடி விழுந்தது போல் வாயைப் பெரிதாகத் திறந்தார். “ஓ ஓ…” என்ற சத்தத்தைத் தவிர வேறு வார்த்தை அவர் வாயினின்றும் வரவில்லை.

“சரி, மேலே என்ன செய்கிறது?” என்று செட்டியார் கேட்டார்.

“எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட வேண்டியது தான்.”

“20-ந்தேதி காலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். நமது மோட்டார் வண்டியில் ஒரு தூசு இல்லாமல் பளபளவென்று தேய்த்து வைக்கச் சொல்லும்.”

“பார்த்தீர்களா? நான் பிடிவாதமாக மோட்டார் வண்டி வாங்கத்தான் வேண்டுமென்றது இப்போது எவ்வளவு பயன்படுகிறது?”

“இந்த முன்யோசனைக்காகத்தானே ஐயரே உம்மிடத்தில் எனக்கு இவ்வளவு பிரியம்? இருக்கட்டும். நமது வீட்டு வாசலை அலங்கரிக்க வேண்டாமா?”

“நமது வீதி வழியாகக் கவர்னர் போகிறாரா?”

“நிச்சயமில்லை. ஒரு வேளை ஸ்டேஷனில் இறங்கி நேரே போய்விடலாம். கலெக்டர் துரையிடம் சொல்லி நமது வீதி வழியாய்ப் போக ஏற்பாடு செய்ய வேண்டும்.”

“முடியாவிட்டாலும் பாதகமில்லை. எப்படியும் நமது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிடுமல்லவா?”

“அதுவும் உண்மைதான். இருக்கட்டும். கூர்மாவதாரம் ஐயங்காருக்கு இச்செய்தி தெரியாமலிருக்க வேண்டுமே? அவர் தினம் பத்திரிகை என்னைப்போல் கவனமாகப் படிக்கிறாரா?”

“அவருக்குத் தெரிந்தாலும் பாதகமில்லை. தாங்கள் யோசனை செய்ய வேண்டாம். முதலில் அவரிடம் மோட்டார் கிடையாது. பழைய கர்நாடக கோச்சு வண்டியில்தான் அவர் வரவேண்டும். மேலும் தங்களுக்கு நினைவில்லையா? கலெக்டர் தர்பாரிலே அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டபோது, அவருடைய வேஷத்தையும், அவர் திரும்பத் திரும்பச் சலாம் போட்டதையும் பார்த்து எல்லாரும் ‘கொல்’ என்று சிரிக்கவில்லையா? அந்த மாதிரிதான் இப்போதும் ஆகும்” என்றார் காரியஸ்தர்.

அச்சம்பவத்தை நினைத்துச் செட்டியார் இப்போதும் சற்று நகைத்தார். “இருந்தாலும், நாம் வீடு அலங்காரம் செய்யும் விஷயம் அவருக்குத் தெரியக்கூடாது. எல்லா ஏற்பாடும் செய்து தயாராய் வைத்துக் கொண்டு, 19-ந்தேதி இரவு பத்து மணிக்கு அலங்காரஞ் செய்துவிடுவோம். ஐயங்காரைக் காலையில் எழுந்து விழிக்கும்படிச் செய்யலாம்” என்றார்.

இன்னும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதைப் பற்றிச் செட்டியாரும் காரியஸ்தரும் நீண்ட நேரம் யோசித்தார்கள். மறுநாள் நடக்கும் நகரசபை கூட்டத்தில் கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தைத் தாம் கொண்டு வரப்போவதாகச் செட்டியார் எழுதி நகர சபையின் தலைவருக்கனுப்பினார். பின்னர், காரியஸ்தர் தமது காரியத்தைப் பார்க்கச் சென்றார்.

ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் பெரிய வியாபாரி. அவர் வசித்த சிறு பட்டணத்தில் மூன்று மாடி வைத்த மாளிகை அவர் ஒருவருக்கே உண்டு. இளமையில் அவர் ஒரு ஏழையாகவே இருந்தார். முதலில் ஓர் இரும்புக் கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். லக்ஷ்மிதேவியின் கடைக் கண் பார்வை அவர் மீது விழுந்தது. தனிக்கடை வைத்து வியாபாரம் நடத்தவே, செல்வம் நாளுக்கு நாள் பெருகிற்று. மகாயுத்தத்திற்குச் சற்று முன்பு ஏராளமான இரும்புச் சரக்குகள் அவருடைய கடையில் தங்கியிருந்தன. யுத்தம் ஆரம்பித்த பின்னர், இரும்புச் சாமான்களின் விலை இருமடங்கு, மும்மடங்காயிற்று. செட்டியார் ஒரேயடியாக லட்சாதிபதியாகிவிட்டார். பின்னர், கௌரவங்களில் ஆசை விழுந்தது. அடுத்த வீட்டு வக்கீல் ராவ்பகதூர் கூர்மாவதாரம் ஐயங்காரைத் தமது வாழ்க்கை உதாரணமாகக் கொண்டார். நடை, உடை, பாவனைகளில் அவரைப் பின்பற்றினார். ஆங்கில ஆசான் ஒருவரை அமர்த்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். நாகரிகவாழ்க்கைக்குரிய ஆடம்பரங்களனைத்தையும் ஒவ்வொன்றாகக் கைக்கொண்டார். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி விருந்து நடத்தினார். பெருந்தொகை செலவு செய்து நகரசபை அங்கத்தினராகவும் ஆனார். இப்போது அவருடைய மனம் முழுவதும் ‘ராவ்பகதூர்’ பட்டத்தைப் பற்றி நின்றது. இதனோடு, தாம் ராவ் பகதூர் பட்டம் பெறுவதற்குள், ஐயங்கார், மேல்வகுப்புக்கு, அதாவது திவான் பகதூர் பட்டத்துக்குப் போய்விடாமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் அவருக்குண்டு. எனவே, கவர்னர் தமது ஊருக்கு விஜயம் செய்யும்போது ஐயங்காரை எந்த விஷயத்திலாவது முந்திக் கொண்டு கவர்னரின் கவனத்தைக் கவர்ந்து பட்டம் பெற்றுவிட வேண்டுமென்பது அவருடைய நோக்கம். மேலே குறிப்பிட்ட சம்பாஷணையில் கூர்மாவதாரம் ஐயங்காரின் பெயர் அடிக்கடி அடி பட்டதற்கு இதுதான் காரணமாகும்.

மறுநாள், ஸ்ரீமான் செட்டியார், மகிழ்ச்சி ததும்பிய முகத்துடனே நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார். கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானத்தைப் பிரேரணை செய்து பேசுவதற்கு ஒரு பிரசங்கத்தைத் தயாரித்துத் தமது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருந்தார். அப்பிரசங்கத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதல் பகுதியிலே, இந்தியாவுக்கு ஆங்கில ஆட்சியின் பயனாக ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி வருணித்திருந்தார். இரண்டாவது பகுதியில் கவர்னர் துரையின் பூர்வோத்தரங்கள், குலப்பெருமை, குணச்சிறப்பு மற்றும் கல்யாண குணங்கள் எல்லாவற்றையும் பற்றி விரித்துக் கூறியிருந்தார். மூன்றாம் பகுதியில் கவர்னர் துரை இம்மாகாணத்தில் வந்து பதவியில் அமர்ந்த பின்னர் செய்த செய்யாத எல்லா நன்மைகளையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் மேலான கவனத்துக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது தமது வருந்தத்தக்க கடமையாயிருக்கிறதென்றும், அவருடைய ஆதிக்கத்தில் இராஜ விசுவாசிகளுக்கு ஆதரவு போதாதென்றும், பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் ஆசாமிகளின் யோக்கியதாம்சங்களைச் சற்றுக் கவனித்து கருணை புரியவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இந்தப் பிரசங்கத்திற்கு நகல்கள் எடுத்துத் தமது காரியஸ்தர் மூலம் எல்லாப் பத்திரிகை நிருபர்களுக்கும் அனுப்பி, பிரசங்கம் முழுவதையும் பத்திரிகைகளுக்கு தந்தியில் அனுப்பும் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், கவர்னர் விஜயத்துக்கு மறுநாள் தமது வீட்டுக்கு வந்து தம்மைக் கண்டுபோகும்படியும் சொல்லியனுப்பினார்.

ஆனால், அந்தோ! அவர் நகரசபைக் கட்டிடத்தை அடைந்து ஆசனத்திலமர்ந்ததும், அவர் மகிழ்ச்சி அவ்வளவும் துயரமாகவும், கோபமாகவும் மாறிற்று. ஏனெனில், ராவ்பகதூர் ஐயங்கார் தம்மை முந்திக்கொண்டு கவர்னர் வரவேற்புத் தீர்மானம் கொண்டு வருவதாக முன்னாடியே அறிவித்துவிட்டாரென்றும், ஆதலால் அவருடைய தீர்மானந்தான் முதலில் வருமென்றும் தெரிய வந்தன. ஆனாலும் செட்டியார் தோல்வியைக் கண்டு அஞ்சி விடுபவரல்லர். முயற்சி திருவினையாக்குவதை அவர் தமது வாழ்க்கையில் கண்டறிந்தவர். எனவே ஐயங்காருக்கு அடுத்தாற்போல் தாமே தீர்மானம் அனுப்பியிருந்ததால் ஐயங்காரின் தீர்மானத்தை ஆமோதிக்கும் உரிமையாவது தமக்கு அளிக்க வேண்டுமெனப் போராடி அவர் வெற்றியடைந்தார். அதன்பின் தீர்மானத்தை ஆமோதிக்கும் வாயிலாக, தாம் எழுதி வைத்திருந்த பிரசங்கம் முழுவதையும் படித்துவிட்டார்.

செட்டியார் மறுநாள் தபாலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து வந்ததும் பத்திரிகைகளை உடைத்துப் பிரித்தும் பார்த்தார். அந்தோ! அவர் ஏமாற்றத்தை என்னவென்று சொல்வது? ஒரு பத்திரிகையிலாவது இவருடைய பிரசங்கம் வெளியாகவில்லை. “ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் தீர்மானத்தை ஆமோதித்தார்” என்ற பாடமே எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்பட்டது. செட்டியாரின் பிரசங்கத்தைப் பத்திரிகைகளுக்கு அனுப்பாமலிருப்பதற்கு வேண்டிய வேலை முன்னமேயே ஐயங்கார் செய்துவிட்டது, பாவம் அவருக்குத் தெரியாது.
அவர் உலகிலுள்ள எல்லாரையும், கடவுளையுங்கூடச் சேர்த்துத் திட்டிக்கொண்டிருக்கையில், காரியஸ்தர் வந்து சேர்ந்தார். அவர் கொண்டு வந்த செய்தி செட்டியாருக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது.

“சங்கதி கேட்டீர்களா? கவர்னர் துரை காலை ஏழு மணிக்குத்தான் ஸ்டேஷனுக்கு வரப்போகிறாராம். ஒன்பது மணிக்குப் பொய்கையாற்றுத் தேக்கத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்குத் திட்டம் செய்யப் பட்டிருக்கிறதாம். சுமார் ஐம்பது மைல் இதற்கிடையில் பிரயாணஞ் செய்தாக வேண்டும். ஆதலால் நகரசபை உபசாரப் பத்திரத்தை, நகரமண்டபத்துக்கு வந்தோ அல்லது ரயில்வே ஸ்டேஷனிலேயோ பெற்றுக் கொள்ளுவதற்கு நேரமில்லையாம். இச்செய்தி இப்போதுதான் கவர்னரின் அந்தரங்க காரியதரிசியிடமிருந்து வந்ததாம். தாங்கள் அத்தீர்மானத்தைப் பிரேரணை செய்யாததே நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இப்போது எவ்வளவு அவமானம் பாருங்கள்” என்றார் காரியஸ்தர்.

“ஆ! கூர்மாவதாரம் ஐயங்காருக்கு நன்றாய் வேண்டும். முந்திக் கொள்ளப் பார்த்தாரல்லவா” என்று கூறிச் செட்டியார் உவகையடைந்தார்.

“ஆனாலும், 20-ந்தேதி காலையில் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமல்லவா?” என்று காரியஸ்தர் கேட்டார்.

“சந்தேகமில்லாமல், மற்ற எல்லா ஏற்பாடுகளும் முன்னரே திட்டம் செய்துள்ளபடி நடத்த வேண்டியதே.”

கடைசியில், குறிப்பிட்ட தினம் வந்தது. சிவகுருநாதஞ் செட்டியார் அதிகாலையிலேயே எழுந்திருந்து ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டார். பின்னர், நிலைக் கண்ணாடியின் முன்பு நின்று அரைமணி நேரம் உடை தரித்துக் கொண்டார். அவருடைய அருமை மனையாள், அருகிலிருந்து துணிகளைத் தட்டிக் கொடுத்தும், நகைகளைத் துடைத்துக் கொடுத்தும் உதவி புரிந்தாள். அலங்காரம் செய்து கொண்டு முடிந்ததும், காரியஸ்தரை விட்டு மோட்டாரைக் கொட்டகையிலிருந்து கொண்டு வரச் சொன்னார். செட்டியாரின் மனைவி வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். நல்ல சகுனமான தருணத்தில் நல்ல நேரத்தில் செட்டியார் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு மோட்டாரில் அமர்ந்தார். மோட்டார் வண்டியின் முனையில் பெரியதொரு யூனியன் ஜாக் கொடி அழகாக ஆடிக்கொண்டிருந்தது. அடுத்த ஐயங்கார் வீட்டைப் பார்த்ததும், செட்டியாருக்குக் கொஞ்சம் ‘சொரேல்’ என்றது. தம்மைப் போலவே ஐயங்காரும், முதல் நாள் மாலை வரை பேசாமலிருந்துவிட்டு, இரவுக்கிரவே வீட்டு வாசலைத் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரித்திருப்பதைக் கண்டார். இதற்குள் மோட்டார் வண்டி புறப்பட்டு விட்டபடியால், அதிகமாகச் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் வண்டி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. தமக்கு முன்னால் ஐயங்கார் அங்கு வந்து தயாராகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உள்ளுக்குள் அவர்களிடையே இவ்வளவு போட்டி நடந்து கொண்டு வந்ததாயினும் வெளிக்கு அவர்கள் அத்தியந்த நண்பர்கள். எனவே செட்டியார் “என்ன ஐயங்கார்வாள்! ஏது இவ்வளவு அதிகாலையில் விஜயம் செய்தது?” என்று கேட்டார். “இங்கு ஒரு சிறு காரியமாக வந்தேன். தாங்கள் சென்னைப் பட்டணம் போவதாகக் கேள்விப்பட்டேன். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்கு வந்தீர்களோ?” என்று கேலி செய்யும் பாவனையாக ஐயங்கார் வினவினார். “அதிருக்கட்டும். தாங்கள் வீட்டு வாசலை இரவுக்கிரவே அலங்காரம் செய்திருப்பதாகக் காண்கிறதே! என்ன விசேஷம்?” என்றார் செட்டியார். “தாங்கள் வீட்டு வாசலிலும் இன்று காலையில் தோரணங்களைப் பார்த்தேன். தங்களுக்கு இன்று சஷ்டியப்த பூர்த்தி விவாகம் என்று சொன்னார்கள். அப்படித்தானோ” என்று கிருதக்காய்க் கேட்டார் ஐயங்கார். செட்டியார் இதற்கு கடுமையாகப் பதில் சொல்ல எண்ணினார். ஆனால் அதற்குள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கூட்டம் வந்து நின்றுவிட்டது. நகரசபை அங்கத்தினர்களும், சில வக்கீல்மார்களும், உத்தியோகஸ்தர்களும், பந்தோபஸ்துக்காக வந்த போலீஸ்காரர்களும், பகிஷ்காரப் பிரசாரம் செய்ய வந்து ஏதோ இந்தத் தமாஷையும் கொஞ்சம் பார்க்கலாமே என்று உள் நுழைந்த தொண்டர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த இரகசியப் போலீசாரும், புகைவண்டி நிலைய மேடையில் எள்ளுப் போட்டால் கீழே விழாத வண்ணம் நெருங்கிக் கூடினார்கள். எல்லாரும் கண் பூத்துப் போகும்படி ரயில் பாதையை நோக்கிய வண்ணமாய் நின்றார்கள்.

கடைசியாக, கவர்னர் துரையின் ஸ்பெஷல் வண்டி வந்து சேர்ந்தது. போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்கும் அலைந்து அமைதியை நிலைநாட்டினார்கள். கவர்னர் பிரபு வண்டியை விட்டுக் கீழிறங்கினார். அவர் போவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது. என்னென்னவோ மனோராஜ்யம் செய்துகொண்டு அங்கு வந்திருந்தவர் அனைவரும், அந்த வினாடியில் கெட்டியாக மூச்சுக்கூட விடாமல், மார்பு படபடவென்று அடித்துக்கொள்ள மிக்க ஆவலுடன் அவரை நோக்கி நின்றனர். எங்கே துரை முகமெடுத்துக்கூடப் பாராமல் போய்விடுவாரோ என்று எண்ணி அவர்கள் நடுநடுங்கினார்கள். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவர் உணர்ச்சி மேலீட்டினால் மூர்ச்சையாகி விட்டாரென்றும், ஆயினும் மூர்ச்சை நிலையிலும் அவருடைய தீவிர இராஜபக்தியின் காரணமாக, கீழே விழுந்து குழப்பம் விளைவியாமல் தூணைப் பிடித்துக் கொண்டு மறைவில் நின்று கொண்டிருந்தாரென்றும், பின்னால் தெரியவந்தன.

நிற்க, துரை கீழிறங்கியதும், தொப்பியை மரியாதைக் குறியாகக் கையில் எடுத்துக்கொண்டு, ஒரு மூலையிலிருந்து வரிசையாக எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்தார். அங்கிருந்தோர் அனைவரும், தங்கள் வாழ்வின் இலட்சியம் நிறைவேறி விட்டதென்னும் எண்ணங் கொண்டனர். அவருடைய பார்வை தம்மீது விழக்கூடிய கணத்திலும் குறைந்த நேரத்தில் தாம் சலாம் செய்யத் தவறி விட்டால் என்ன செய்வதென்று எல்லாருக்கும் பயம். எனவே, முதலில் அவர் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து, அவர் கண்கள் கடைசி வரை சென்று முடித்துப் பிறகு அவர் நடக்கத் தொடங்கிய வரையில், அங்கிருந்தோர் அனைவரும் சலாம் செய்து கொண்டேயிருந்தனர். மேலக் காற்று, வீசி அடிக்கும்போது மரங்கள் நிறைந்த தோப்பில் எவ்வாறு கிளைகள் இடையீடின்றி ஆடி அசைந்து கொண்டிருக்குமோ அவ்வாறு ஐந்து நிமிஷ நேரத்திற்கு அங்கிருந்தோர் அனைவருடைய கரங்களும் நெற்றிக்குச் சென்று கீழே வந்த வண்ணமாயிருந்தன.

இவ்விதம் ஒரு முறை இராஜ பார்வை பார்த்து விட்டுக் கவர்னர் துரை வேகமாக நடந்து போய் வெளியில் தயாராய் நின்ற மோட்டாரில் ஏறிச் சென்றார். அவரைத் தரிசிக்க வந்து கூடியிருந்தோர் எல்லோரும் தங்கள் தங்கள் இல்லங்களுக்கு ஏகினர். ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியாரும் சௌக்கியமாக வீடு போய்ச் சேர்ந்தார். உடனே அவருடைய மனைவி, குழந்தைகள், காரியஸ்தர், வேலைக்காரர்கள் எல்லாரும் சூழ்ந்து கொண்டு “என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்கள். செட்டியார் சற்று இளகிய மனம் கொண்டவர். இவ்வளவு பேருடைய உள்ளங்களையும் அவர் வீணில் புண்படுத்த விரும்பவில்லை. எனவே அவர், “இன்றைய விசேஷம் இவ்வளவு நன்றாக நடந்தேறியதற்காகக் குருக்களைக் கூப்பிட்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும்” என்றார். செட்டியாரின் மனைவி முதலியோர், இன்னும் மிகுந்த ஆவலுடன், “கவர்னர் தங்களுடன் பேசினாரா? தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? விசேஷம் என்ன நடந்தது?” என்று ஒரே மூச்சாகக் கேட்டனர். செட்டியார் சொன்னதாவது:- “கவர்னர் வண்டியை விட்டுக் கீழே இறங்கியதும், ஜில்லா கலெக்டர் முதலிய ஒருவர் இவருடன் சற்றுப் பேசிவிட்டு, நேரே என்னிடம் வந்தார். நான் கொஞ்சமாவது பயப்பட்டேன் என்கிறீர்களோ? இல்லவே இல்லை. என்னருகில் வந்ததும் துரை என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு ‘செட்டியார்வாள்! தங்களைப் பற்றி நிரம்பவும் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களும் தாங்கள் பந்து மித்திரர்களும் சுகந்தானே?’ என்று கேட்டார். உங்களுக்குத்தான் தெரியுமே? நான் பேச ஆரம்பித்தால் இலேசில் விடுகிற பேர்வழியா? துரையவர்களே! தங்கள் ஆட்சியிலே எவ்வித குறைவுமின்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஒரு விஷயத்தில்தான் தங்கள் அரசாங்கத்தின் மீது குறை சொல்ல வேண்டியதாயிருக்கிறது. பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் மட்டும் தாங்கள் தராதரங்களைக் கவனித்து வழங்குவதில்லை என்று நான்…”

“ஐயையோ! இவ்வளவு கடுமையாய் பேசி விட்டீர்களே? துரை கோபித்துக் கொள்ளவில்லையா?” என்று காரியஸ்தர் பரிந்து வினவினார்.

“ஹும் கோபித்துக் கொள்ளவா? உனக்கு என்ன தெரியும்? நான் இவ்வாறு சொன்னவுடன் கவர்னர் துரை என் கையை மீண்டும் பிடித்துக் கொண்டு ‘செட்டியார்வாள், இந்த விஷயத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக நிரம்ப வந்தனம். உடனே கவனித்துத் தக்கது செய்கிறேன்’ என்று சொன்னார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் கரகோஷம் செய்தார்கள். ஆனால் நமது ராவ்பகதூர் ஐயங்காரைப் பார்க்க வேண்டுமே? அவர் முகத்தில் ஈயாடவில்லை. அவரை ஒருவரும் கவனிக்கவில்லை. ஒரு மூலையில் பேசாமல் நின்று கொண்டிருந்தார்” என்று செட்டியார் சரமாரியாகப் பொழிந்தார்.

அதே சமயத்தில் ராவபகதூர் கூர்மாவதாரம் ஐயங்கார் வீட்டு அந்தப்புரத்துக்கு யாராவது சென்று ஒட்டுக் கேட்டிருந்தால், ஸ்ரீமான் ஐயங்கார் தமது அருமைக் காதலியிடம், “ஆனால் சிவகுருநாதஞ் செட்டியாரைக் கவர்னர் முகமெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பாவம்! சிவனே என்று இவர் மூலையில் நின்று கொண்டிருந்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்” என்று கூறி முடித்ததும் காதில் விழுந்திருக்கும்.

இத்துடன்

அமரர் கல்கியின் கவர்னர் விஜயம்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Governor Vijayam Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,governor vjjayam Audiboook,governor vjjayam,governor vjjayam Kalki,Kalki governor vjjayam,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *