BooksKalki Short StoriesKalki TimesStory

Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times


அத்தியாயம் 3
புதுமைப் பெண் வருகை

மறுநாள் காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அத்தனை பேருக்கும் சேர்ந்தாற்போல் என்ன காரியந்தான் இருக்கும்? ரகுராமன் டிக்கட் கொடுக்கும் குமாஸ்தாவின் அறையில் உட்கார்ந்து, அவருடன் வெகு சுவாரஸ்யமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கண் அடிக்கடி கடிகாரத்தின் முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வைத்தியநாதன், போர்ட்டர் சின்னப்பனுடன் ஏதோ ரஸமான சம்பாஷணையில் ஆழ்ந்திருந்தான். ஸ்ரீதரன், ஸ்டேஷன் பிளாட்பாரத்தைச் சென்னைக் கடற்கரையாகப் பாவித்து உலாவிக் கொண்டிருந்தான். கல்யாணசுந்தரம், எடை போடும் இயந்திரத்தின் மேல் உட்கார்ந்து நேற்று வந்த தினசரிப் பத்திரிகையின் விளம்பரப் பத்திகளை ஏகாக்கிர சிந்தையுடன் படித்துக் கொண்டிருந்தான்.

வண்டி வந்து நின்றது. ரங்கநாதம் ஸ்திரீகளின் பிரத்தியேக வண்டியை நோக்கி விரைவாய்ச் சென்றார். அவர் அவ்வளவு வேகமாக நடந்ததை ரகுராமன் பார்த்ததேயில்லை. அடுத்த கணம் ஸ்திரீகளின் வண்டிக்குள்ளிருந்து ஒரு சந்திர பிம்பம் வெளியே தோன்றுவதை அவன் கண்டான். ‘இதென்ன பிம்பத்தின் மத்தியில் திடீரென்று முத்து வரிசை தோன்றுகிறது! அடடே! ஒரு பெண்ணின் முகமா அது? அவளுடைய இளநகையா அப்படிப் பளீரென்று ஒளி வீசுகிறது!’ “அப்பா! இதோ இருக்கிறேன்!” என்று அவள் சொன்ன சொற்கள் தேனிற் குழைத்தவையா? அல்லது தேவாமிர்தத்துடன் தான் கலந்தவையா? ரகுராமனுடைய கால்கள் அவனையறியாமல் அந்தப் பக்கம் நோக்கி நடந்தன.

சாமான்கள் இறக்கப்பட்டு, சகுந்தலை வண்டியிலிருந்து கீழே இறங்குவதற்குள், கணையாழியில் கதாநாயகர்களாவதற்குத் தகுதிவாய்ந்த அவ்வளவு இளைஞர்களும் அங்கே சூழ்ந்து விட்டார்கள். போர்ட்டர் சின்னப்பன் தனது உத்தியோக வாழ்க்கையில் என்றும் காணாத அதிசயத்தை அன்று கண்டான். சாதாரணமாய் ஒரு சிறு கைப்பெட்டியைத் தூக்குவதற்குக் கூடத் தன்னைத் தேடிப் பிடிக்கும் வழக்கமுடைய சின்ன எஜமான்கள் எல்லாம் தலைக்குத் தலை பெட்டியோ, படுக்கையோ, வேறு சாமானோ எடுத்துக் கொண்டு போவதை அவன் அன்று பார்த்தான்.

சாமான்கள் ஏற்றப்பட்டு, ரங்கநாதமும் சகுந்தலையும் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், “சரி, சாயங்காலம் வருகிறோம். மற்ற விஷயங்கள் பேசிக் கொள்ளலாம்” என்று வைத்தியநாதன் சொன்னான்.

“சரி, சாயங்காலம் வாருங்கள்” என்று ரங்கநாதமும் சொன்னார். ஆனால் வழியில் சகுந்தலை, “மற்ற விஷயங்கள் என்ன?” என்று கேட்டபோது, அவர் தமது வழுக்கை மண்டையைச் சொறியத் தொடங்கினார்.

அன்றைய தினத்துச் சாயங்காலமானது, மத்தியான்னம் இரண்டு மணிக்கே வந்துவிட்டதாகத் தோன்றியது. மணி மூன்று அடிப்பதற்குள் ரகுராமன், வைத்தியநாதன் முதலான ஏழெட்டுப் பேரும் ரங்கநாதம் அவர்களின் வீட்டுக் கூடத்தில் கூடிவிட்டார்கள். ரங்கநாதமும் அவர்களை எப்போதையும் விட அதிக உற்சாகத்துடன் வரவேற்றார். ஒரு நாளும் இல்லாத திருநாளாக அவர்களுக்கெல்லாம் காப்பிக் கொண்டு வரும்படி சமையற்காரனுக்கு உத்தரவிட்டார்.

காப்பியுடன் சகுந்தலையும் வந்தாள். அவள் உட்கார்ந்ததும், “நேற்றுச் சொன்னேனல்லவா? என்னுடைய பெண் இவள் தான்” என்று ரங்கநாதம் கூறினார்.

“காலையிலேயே தெரிந்து கொண்டோம்” என்றான் கல்யாணசுந்தரம்.

“காலையில் நீங்களாக அல்லவா தெரிந்து கொண்டீர்கள்! இப்போது நான் முறைப்படி அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றார்.

“எனக்கு இவர்களை இன்னார் என்று அறிமுகப்படுத்தவில்லையே, அப்பா?” என்றாள் சகுந்தலை.

“ஆமாம், அதைத்தான் இப்போது செய்யப் போகிறேன். இதோ இவர் தான் வைத்தியநாதன்” என்றதும், எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஏனென்றால், அவரால் சுட்டிக் காட்டப்பட்டவன் பெயர் கல்யாணசுந்தரம்.

“இல்லை, என் பெயர் கல்யாணசுந்தரம். அதோ அவர் பெயர் வைத்தியநாதன்” என்றான் கல்யாணசுந்தரம்.

“வைத்தியநாதன், எம்.ஏ.” என்றான் அவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டவன். “எம்.ஏ.” என்று பரிகாசமாயச் சேர்த்ததாக அவனுடைய எண்ணம். சமயத்தில் அதையும் போட்டு வைத்துவிடலாமென்று உத்தேசமும் உண்டு.

“அப்பா எப்போதுமே இப்படித்தான். அவருக்குப் பெயர், ஊர் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை. ஏன், அப்பா! என் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று சகுந்தலை கேட்டாள்.

உடனே ஒரு பலமான அதிர்வேட்டுச் சிரிப்பு கிளம்பிற்று. அதில் ரங்கநாதமும் சமையற்காரனும் கூடக் கலந்து கொண்டார்கள். ஆனால் ரகுராமன் மட்டும் சிரிக்கவில்லை. காரணம், அரை நாழிகையாக அவன் வேறொரு யோசனையில் ஆழ்ந்திருந்தான். சகுந்தலையிடம் ஏதாவது பேச வேண்டுமென்பது அவனுக்கு எண்ணம். ஆனால் என்னத்தைப் பேசுவது?…

கடைசியாக தைரியம் கொண்டு, “கல்கத்தாவிலே என்ன விசேஷம்?” என்று கேட்டு விட்டான். இந்த மூன்று வார்த்தைகளை வெளியே கொண்டு வருவதற்குள் அவனுக்கு மூச்சு முட்டிவிடும் போல் இருந்தது.

“கல்கத்தாவிலா? எவ்வளவோ விசேஷம்!” என்றாள் சகுந்தலை. அப்போது தேசமெங்கும் சுதந்திர இயக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. கல்கத்தாவில் வெகு மும்முரமாயிருந்தது. அது சம்பந்தமான நிகழ்ச்சிகளைச் சகுந்தலை கூறலானாள். வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை என்பார்களே, அந்த மாதிரி எல்லாரும் அவ்விவரங்களைக் கேட்கலாயினர்.

சாயங்காலம் அவர்கள் வீடு திரும்பிச் சென்றபோது, “பாரதியார் புதுமைப் பெண் என்று பாடியிருக்கிறாரே, அவள் இவள் தான் போல் இருக்கிறது” என்றான் கல்யாணசுந்தரம். அந்தச் சமயந்தான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்ட சம்பாஷணை அவர்களுக்குள் நடந்தது. அன்றிரவேதான் ரகுராமன், வைத்தியநாதன் முதலியோர் இன்பக் கனவுகள் கண்டார்கள்.

இரவு படுக்கைக்குப் போகுமுன் சகுந்தலை, ரங்கநாதம் அவர்களிடம், “அப்பா! இந்த ஊர்ப் பிள்ளைகள் கொஞ்சம் பைத்தியமாயிருப்பார்கள் போல் இருக்கிறதே!” என்று சொன்னாள்.

“என்ன? பைத்தியம் என்றா சொன்னாய்?” என்று ரங்கநாதம் கேட்டார்.

“ஆமாம்.”

“ரொம்ப சந்தோஷம்.”

“அதில் சந்தோஷம் என்ன, அப்பா?” என்று சகுந்தலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“இல்லை, நான் அவர்களை அசடுகள் என்று நினைத்தேன், நீ பைத்தியம் என்கிறாயே?”

சகுந்தலை இன்னும் அதிகமாகச் சிரித்துவிட்டு, “அதென்ன அப்பா! அசடைவிடப் பைத்தியம் மேலா?” என்று கேட்டாள்.

“ஆமாம்! அசடுகளினால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பைத்தியங்களினால் ஏதாவது காரியம் செய்ய முடியும்.”

“அவர்களைக் கொண்டு கொஞ்சம் காரியம் செய்விக்கலாமென்றுதான் நினைக்கிறேன்! பார்க்கலாம்” என்றாள் சகுந்தலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *