BooksKalki Short StoriesKalki TimesStory

Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times

அத்தியாயம் 6
பெருமழை

மற்றொரு நாள் சகுந்தலை வாழ்க்கையிலே வெறுப்புக் கொண்டவள் போல் பேசினாள்!

“இந்த உலகத்தில் ஏன் உயிர் வாழ வேண்டுமென்று தோன்றுகிறது. அதிலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். முன்னெல்லாம், நம் தேசத்தில் பெண் பிறந்தால் கங்கையில் எரிந்து விடுவது வழக்கமாமே? ஏன், அப்பா! என்னை ஏன் அப்படி நீங்கள் செய்யவில்லை?” என்று கேட்டாள்.

ரங்கநாதத்தின் முகத்தில் திகைப்புக் குறி காணப்பட்டது. அருகிலிருந்த ரகுராமன், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம் முதலியோரின் நெஞ்சுகள் துடிதுடித்தன. அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சமயம் தங்கள் தங்கள் உயிர்களைக் கொடுத்துச் சகுந்தலையின் உயிரைக் காப்பாற்றுவதென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

“ஏன் அம்மா, அப்படிச் சொல்லுகிறாய்?” என்று ரங்கநாதம் கனிந்த குரலில் கேட்டார்.

“நான் உங்கள் பெண்ணாய்ப் பிறந்ததால் சுகமாய் இருந்து கொண்டிருக்கிறேன். அப்படியின்றி, சொர்ணம்மாளாய்ப் பிறந்திருந்தால்?”

“சொர்ணம்மாள் யார்?” என்று ஸ்ரீதரன் கேட்டான். எல்லாருக்கும் அந்தச் சொர்ணம்மாளின் பேரில் சொல்ல முடியாத இரக்கமுண்டாயிற்று.

“சொர்ணம்மாள் எங்கள் வீட்டு வேலைக்காரி” என்றாள் சகுந்தலை. உடனே, அந்த இளைஞர்களுக்குக் கொஞ்சம் அலட்சிய புத்தி ஏற்பட்டது.

“அவளுக்கு என்ன இப்போது வந்துவிட்டது?”

சகுந்தலை சொல்லத் தொடங்கினாள்: “சொர்ணம்மாளுக்கு என்னுடைய வயதுதான். அவள் ஏழு மாதம் கர்ப்பமாயிருக்கிறாள். இன்று காலையில், இனிமேல் அவள் வேலைக்கு வர வேண்டாமென்றும், வேறு வேலைக்காரி வைத்துக் கொள்கிறேனென்றும் சொன்னேன். உடனே அழத் தொடங்கிவிட்டாள். வேலையை விட்டுப் போனால் அவள் புருஷன் அவளைக் கொன்று விடுவானாம். அவள் உடம்பின் மீதிருந்த காயங்களையும், வீங்கியிருந்த இடங்களையும் காட்டினாள். நேற்றுச் சாயங்காலம் அவள் புருஷன் நன்றாய்க் குடித்துவிட்டு வந்து, ‘கண்ணே! நம்முடைய லோகிதாட்சன் எங்கே! கொண்டா இங்கே’ என்றானாம்…”

ரகுராமன் முதலியோர் சிரித்தார்கள். “எனக்கும் அதைக் கேட்ட போது முதலில் சிரிப்பு வந்தது. ஆனால் சொர்ணத்தின் உடம்பிலிருந்த காயங்களை மறுபடி பார்த்ததும் அழுகை வந்துவிட்டது. பிறகு பொன்னன், ‘அடி பாதகி! என்னுடைய அருமைக் கண்மணி லோகிதாட்சனைக் கொன்றுவிட்டாயல்லவா?’ என்று சொல்லிக் கொண்டே அவளை அடி அடியென்று அடித்தானாம். வேலைக்குப் போகாவிட்டால் கொன்று போட்டே விடுவான் என்று சொன்னாள்” – அப்போது சகுந்தலையின் கண்களில் நீர் துளித்தது.

“இப்படி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ? பாழும் கள்ளுக் குடியை ஒழிப்பதற்கு வழியொன்றும் இல்லையா? இந்த ஊரில் பெரிய மனிதர்கள் எல்லாரும் கூடத் தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடுகிறார்களாமே? என்ன அநியாயம்?” என்றாள்.

மறுநாள் குடிகாரப் பொன்னன் பக்கத்தில் ரகுராமனும் கல்யாணசுந்தரமும் நின்றார்கள். பொன்னன் சொல்கிறான்: “அதோ வாரும் பிள்ளாய், மதிமந்திரி சத்தியகீர்த்தியே! நம்முடைய அருமை நாயகியான சூர்ப்பணகாதேவியை நீ ஒளித்து வைத்துக் கொண்டு அனுப்ப மாட்டேன் என்கிறாயல்லவா? இந்த நிமிஷத்தில் அவளை இங்கே கொண்டுவிட்டால் ஆயிற்று. இல்லாவிடில் இந்திரஜித்திடம் சொல்லி உம்மைச் சிரச்சேதம் செய்து விடுவோம். பிள்ளாய்!…”

“பொன்னா! இதோ பாரு. மதுபானம் குடி கெடுக்கும். ரொம்பப் பொல்லாதது. குடிப்பதை விட்டு விடு” என்றான் ரகுராமன்.

“எஜமான்களே, இதோ பாருங்க! நீங்கள் காலைக் காப்பி குடிக்கிறதை நிறுத்திவிடுங்க. நானும் மாலைக் காப்பி குடிக்கிறதை விட்டுடறேன்” என்றான் பொன்னன்.

இம்மாதிரியாக ஒவ்வொரு குடிகாரனையும் இரண்டு மூன்று படித்த, நாகரிக இளைஞர்கள் சுற்றிக் கொண்டு பிரசங்கப் பெருமழை பொழியும் காட்சிகள் மாலை நேரங்களில் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *