Kalki Short StoriesKalki TimesStory

Cinema Kathai Kalki | Kalki Times

Cinema Kathai Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

ஸினிமாக் கதை

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/

Cinema Kathai Kalki

“தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.

“மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.

கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.

“அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.

“இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.

“சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ?” என்று ராமு தத்துவம் பேசினான்.

“மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ?” என்றாள் தங்கம்.

“கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ” என்றான் ராமு.

தடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது.

“நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்” என்றாள் தங்கம்.

“நானுந்தான்” என்றான் ராமு.

இந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது.

கீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், “சனியன்களா? எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா? கதவைத் திறந்து தொலையுங்கோ!” என்று கத்தினார்.

உடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் “வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்?” என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள்.

“சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது” என்று ராமு சொன்னான்.

“எப்போ முடியப் போகிறதோ?” என்றாள் தங்கம்.

“அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ?” என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள்.

மேற்படி தம்பதிகளின் சச்சரவுகள் எனக்கு மிகவும் உபத்திரவமாயிருந்ததற்கு ஒரு விசேஷ காரணம் இருந்தது.

அப்போது நான் அற்புதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று. “ஆஹா! ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை” என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா? எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா? என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா? எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது?

கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும்? பார்க்கலாமே ஒரு கை!

இம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். ‘ஸினேரியோ’ முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். என்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன்.

இன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது!

அப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், “இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு?” என்று கேட்டார்.

“உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு” என்றாள் ஜானகி அம்மாள்.

“உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது” என்றார் அப்பாதுரை ஐயர்.

“நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்…” என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள்.

“பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே?” என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார்.

“நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்?”

“நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ? இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும்?”

“எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும்! வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது?”

“நான் வருகிறபோது நீ தயாராயிருந்தால்தானே எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகலாம்.”

“இப்போ சொல்லுங்கோ ஸினிமாவுக்குப் போகலாம்னு அரை நிமிஷத்திலே எல்லாம் பண்ணிண்டு தயாராய் வந்துடறேனா, இல்லையா, பாருங்கோ!”

“அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்.”

“அடே ராமு! தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா!” என்று ஜானகி அம்மாள் கூவினாள்.

“நல்ல காலந்தான்” என்று எண்ணி நானும் குதூகலித்தேன். அவர்கள் போய் விட்டால் கதையில் இன்னும் நாலு காட்சிகளாவது இன்றைக்கு எழுதி முடிக்கலாமென்று சந்தோஷப்பட்டேன். மேலும் நான் ஸினிமாக் கதை எழுதுவது பற்றி எனக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று. எப்பேர்ப்பட்ட குடும்பத்துச் சண்டை சச்சரவுகளையெல்லாம் ஸினிமா தீர்த்து வைக்கிறது? எரிச்சலும் விரஸமும் நிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது? சில பேர் எல்லாம் ஏதோ ஸினிமா என்றால் ஒரு மாதிரி முகத்தைச் சுளித்துக் கொண்டு பேசுகிறார்களே, அவர்கள் எவ்வளவு அறியாதவர்கள்?

இம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:-

“ஸினிமாவாம் ஸினிமா! போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே! சவரணைதான்! யாரோ கட்டேலே போறவனும், கட்டேலே போறவளும் நின்னுண்டு வாயிலே வந்ததைக் கன்னாபின்னான்னு பேசுறதாம். அதை எல்லாரும் பார்த்துண்டு வாயைப் பிளந்துண்டு உட்கார்ந்திருக்கிறதாம். உங்களுக்குந்தான் புத்தி போச்சே!”

“சீ! வாயை மூடு! ஸினிமாவுக்குப் போகணும் என்று என் பிராணனை வாங்கினதில் குறைச்சல் இல்லை; இப்போது என் மேல் குற்றம் சொல்கிறாயே?”

“உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன்? புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா?”

“ஏ கழுதை! வாயை இப்போ மூடுகிறாயா இல்லையா?”

“நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ!”

“பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன்? ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு! நான் கண்டேனா!”

“இதைப் போய் ஒரு கதை என்று எழுதினானே ஒரு கட்டையில போறவன், அவனைச் சொல்லுங்கோ!”

“கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்!”

“டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்?”

“உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்?”

“நான் ஒண்ணும் இளிச்சவாய்ச் சுப்பி இல்லை, உங்கம்மா இளிச்சவாய்ச் சுப்பி, உங்க பாட்டி இளிச்சவாய்ச் சுப்பி.”

இதற்குள் மளமளவென்று மாடிப்படி ஏறுகிற சத்தம் கேட்டது. ராமுவும் தங்கமும் ஏறி வந்து தங்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்தார்கள்.

“சண்டைன்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் வச்சிருக்கோ?” என்றான் ராமு.

“ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ?” என்றாள் தங்கம்.

மறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன்.

ஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லை!

இத்துடன்

அமரர் கல்கியின் ஸினிமாக் கதை

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Cinema Kathai Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,cinema kathai Audiboook,cinema kathai,cinema kathai Kalki,Kalki cinema kathai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *