Kalki Short StoriesKalki TimesStory

Srikanthan Punarjanmam Kalki | Kalki Times

Srikanthan Punarjanmam Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

ஸ்ரீ காந்தன் புனர்ஜன்மம்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/

Srikanthan Punarjanmam Kalki

ஸ்ரீகாந்தன் பெரிய மனுஷாள் வீட்டுப் பிள்ளை. அவனைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அது தெரிந்து போய்விடும். அவனைப் பெரிய மனுஷாள் வீட்டுப் பையன் என்பதாக லவலேசமும் சந்தேகிப்பதற்கு இடமிராது.

ஸ்ரீகாந்தனுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இவ்வுலகில் சேர்ந்தாற்போல் ஜனனம் ஏற்பட்டது. வளர்வதிலும் அவர்களுக்குள் இந்தப் போட்டி இருந்து வந்தது. ஸ்ரீகாந்தனுக்கு ஒரு வயது நிறைந்தால், இருபதாம் நூற்றாண்டுக்கும் ஒரு வருஷம் பூர்த்தியாகும். இப்படியாக இருபதாம் நூற்றாண்டு 1931 ஆம் வருஷத்தையடைந்த போது, ஸ்ரீகாந்தனும் 31 ஆவது பிராயத்தை அடைந்தான் மேலே போவதற்கு முன்னால் இந்த முப்பது வருஷத்தில் ஸ்ரீகாந்தனுடைய சரித்திரத்தையும், அவனைச் சேர்ந்தவர்களின் சரித்திரத்தையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

அப்பா: ஸ்ரீகாந்தன் பிறந்தபோது ஏகாம்பரய்யர் ஜில்லா முனிசீப்; சீக்கிரத்தில் அவருக்கு ஸப் ஜட்ஜ் உத்தியோகம் ஆகவே, அய்யர்வாளைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் “ஸ்ரீகாந்தன் பிறந்த வேளை” என்று சொன்னார்கள். பல வருஷம் உத்தியோகம் பார்த்த பின்னர், அவர் ஐம்பத்தைந்து என்று சொல்லப்படுகிற ஐம்பத்தெட்டாவது வயதில் பென்ஷன் பெற்று, இன்று வரை வாங்கிக் கொண்டு வருகிறார். ஒரு மாதமாவது வேண்டாமென்று சொல்லவில்லை. வைதிக காரியங்களை மிகவும் சிரத்தையாகப் பண்ணுகிறவர். அந்த ஊர் பஞ்சாமி கனபாடிகள் தம்முடைய பெண்ணின் கல்யாணச் செலவுக்கு அய்யர்வாளையே நம்பியிருக்கிறார். கனபாடிகளின் விரோதிகள், அய்யர்வாளின் வருஷாப்திகத்தை அவர் மேற்படி காரியத்துக்கு நம்பியிருப்பதாகச் சொல்வார்கள்.

அம்மா: ஸ்ரீகாந்தனுடைய தாயாரைப் பார்த்தவர்கள், ‘மகாலக்ஷ்மிக்குச் சகோதரி ஒருத்தி இருக்க முடியுமானால், அவள் இவள் தான்; இவள் அவள் தான்’ என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள். பெரிய குடும்பத்தில் பிறந்தவள் இந்த மாதரசி. (இவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் பதினொரு பேரும், கூடப் பிறக்காதவர்கள் இன்னும் அநேகரும் உண்டு) புகுந்த குடும்பமும் இவளால் பெரிதாகியே வந்தது. இந்த அம்மாளுக்குக் கச்சேரிக்குப் போகும் புருஷனும், நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்ட நாலு குமாரிகளும், அவர்களைக் கண்ணையும் கண்ணாடியையும் போல் பாதுகாக்கும் நாலு மாப்பிள்ளைகளும், திரளான பேரன் பேத்திகளும், மற்றும் பல சௌபாக்கியங்களும் இருந்தும், ஒரே ஒரு மனக்குறை மட்டும் இருந்தது. வாசலில் வந்து, “அம்மா! பிச்சை” என்று கேட்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி “இல்லை!” என்று சொல்லியனுப்ப வீட்டில் ஒரு மாட்டுப் பெண் இல்லையே என்பதுதான் அந்த குறை. இத்தனைக்கும் காலாகாலத்தில் பிள்ளையாண்டானுக்குக் கலியாணம் பண்ணி வைத்ததில் குறைச்சல் உண்டா?

சகோதரிகள்: ஸ்ரீகாந்தனுக்கு முன்னால் அவனுடைய பெற்றோர்களுக்கு பிறந்த நாலு புதல்விகளும் ஸ்ரீகாந்தனுடைய மூத்த சகோதரிகளாகவும் ஏற்பட்டது ஒரு விசித்திரமே. அவர்கள் ஸ்ரீகாந்தன் மேல் வைத்திருந்த பிரியத்தையோ கேவலம் மரக்கால் படியினால் அளவிட முடியாது. அவன் கைக்குழந்தையாயிருந்தபோது ஒரு நிமிஷம் அவனை அவர்கள் தரையில் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அவனுக்குப் பல் முளைத்த பிறகு யார் அவனுக்குப் பல் தேய்ப்பது என்பது பற்றிப் பலத்த போட்டி அவர் வளர்ந்த பிறகு யார் அதைப் பின்னுவது என்று சண்டை போடுவார்கள். அவனுக்குக் கலியாணம் நடந்த போது, யார் அவனுடைய கண்களுக்கு மையிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டு, கடைசியில் நாலு பேரும் மையிடவே, அவனுடைய கண்கள் – எப்போதும் மற்ற அவயங்களின் துன்பத்துக்காக அழுகிற கண்கள் – தங்கள் சொந்தத்திற்கே அழ வேண்டியதாயிற்று. உண்மையில் அந்த நாலு நாள் கலியாணத்தின் போது தான் பட்ட கஷ்டங்களை நினைத்துக் கொண்டால் ஸ்ரீகாந்தனுக்கு இப்போது கூடக் கதிகலங்கத்தான் செய்யும்.

ஸ்ரீகாந்தனுடைய மனைவியைப் பற்றிச் சொல்வதில் இன்னும் நான் காலந் தாழ்த்தினால் கதை மேலே ஓடாது.

ஸஹதர்மினி: ஸ்ரீகாந்தனுக்குப் பதினெட்டாவது வயதிலேயே கலியாணம் நடந்தது. அதாவது, ஐந்நூறு வேலி மிராசுதாருடைய ஒரே கடைக்குட்டிப் பெண். அப்போது அவளுக்கு வயது பன்னிரண்டு. அழுகையில் அவள் ரதிக்குச் சமமாயிருந்தாள். ஆமாம், அழுகையில் தான். (மன்மதன் இறந்ததும் ரதி அழுதது ஜகப் பிரசித்தமன்றோ?) குடுகுடுவென்று அவள் ஓடும்போது நாம் பார்த்திருந்தால், “சுவரில் எழுதிய எந்தத் திவ்ய சித்திரந்தான் இப்படி ஓட முடியும்?” என்று ஆச்சரியப்பட்டிருப்போம்.

ஆகவே ஸ்ரீகாந்தன் அவள் பேரில் கணக்கு வழக்கில்லாத காதல் கொண்டிருந்ததில் ஆச்சரியமென்ன? அவர்களுடைய சாந்தி கலியாணத்தன்று இரவு, ஸ்ரீகாந்தனும் அவனுடைய மனைவியும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு, விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு, சீட்டாடிய விவரம் கேள்விப்பட்டவர்களுக்கெல்லாம் தெரிந்தேயிருக்கும்.

ஆனால், அவர்களைப் பார்த்து எந்தப் பாவி பொறாமை பட்டானோ, எந்தத் துஷ்டை திருஷ்டி வைத்தாளோ, தெரியாது; சீக்கிரம் அவர்களுடைய காதல் வாழ்க்கை முடிவுற்றது. ஸ்ரீகாந்தன் மனைவிக்கு என்னவோ வந்துவிட்டது. சிலர், “வியாதி” என்றார்கள். சிலர் “இல்லை; ஹிஸ்டீரியா” என்றார்கள். வேறு சிலர், “பிசாசு பிடித்திருக்கிறது” என்றார்கள். “ஏவல், சூனியம்” என்றவர்களும் உண்டு. “மாமியார் மருந்திட்டாள்” என்றார்கள் சில பொல்லாத் துஷ்டர்கள். யார் என்ன சொன்னால் என்ன? கணவன் வீட்டுக்கு வந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் அந்தப் பெண் பிறந்த வீட்டுக்குப் போனாள். போனவள் மறுபடி திரும்பி வரவேயில்லை. ஐந்தாறு வருஷம் தகப்பனார் வீட்டிலேயே நோயும் நொடியுமாய்க் காலந் தள்ளிவிட்டுக் கடைசியில் இந்தத் துக்க உலகத்தை நீத்துச் சென்றாள். அவள் புத்திசாலி என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இனிமேல் பயமின்றி நாம் ஸ்ரீகாந்தனைப் பற்றியும் சிறிது கவனிக்கலாம்.

ஸ்ரீகாந்தன்: உருவத்தில் அவன் ஏறக்குறைய மன்மதனையொத்திருந்தான். மன்மதனுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண் ஒரு மூக்கு எல்லாம் (அவன் எரிந்து போவதற்கு முன்) இருந்தது போல் ஸ்ரீகாந்தனுக்கும் இருந்தன. மற்றபடி குண விசேஷங்களில் அவன் மன்மதனுடன் முற்றிலும் மாறுபட்டான். சாயங்கால வேளைகளில், கரும்பு வில்லும் கையுமாக, பிரிந்திருக்கும் ஸ்திரீ புருஷர்களைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதில் அவன் டவுன் ஹால் கிளப்பை நோக்கிச் சென்றான். அங்கே போய், பிங்-பாங் விளையாடினான். உண்மையில் மனைவி பிறந்தகத்திற்குப் போன பிறகு அவனுக்கு வாழ்க்கையில் இருந்த ருசியெல்லாம் இந்தப் பிங்-பாங்கின் மேல் ஏற்பட்டதேயாகும். அந்த விளையாட்டில் வெகு தேர்ச்சியடைந்து அநேக பந்தய ஆட்டங்களில் வெற்றி பெற்றுப் பல ‘கப்’ களும் வாங்கினான். அவையெல்லாம், அவனுடைய கலியாணத்தின் போது பரிசாக வந்த கண்ணாடி பீரோவில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்ரீகாந்தன் பி.ஏ. பாஸ் செய்து எப்.எல். வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய மனைவிக்கு மேற்கூறியபடி சித்தப் பிரமை ஏற்பட்டது. அத்துடன் படிப்பை அவன் விட்டுவிட்டான். உத்தியோகத்துக்கு முயற்சி செய்யவுமில்லை. பையன் மனம் ஒடிந்து போகாமல் எப்படியாவது பிள்ளையாய் இலட்சணமாய் இருந்தால் போதும் என்றிருந்த அவன் தகப்பனாரும் அவனை வற்புறுத்தவில்லை.

மனைவி காலஞ்சென்ற பிறகு, அவன் தாயாரும் சகோதரிகளும் புனர் விவாகத்தைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்துவார்கள். அதற்கு ஸ்ரீகாந்தன், “உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். கலியாணம் என்ற பேச்சை எடுக்காதீர்கள்” என்று கூறுவான். அவனுடைய குரலில் தொனித்த பரிதாபமும் பிடிவாதமும் அவனுடைய தாயார், சகோதரிகளின் வாயைக் கூட அப்போதைக்கு அடைத்துவிடும்.

இப்படிப்பட்ட ஸ்ரீகாந்தனுடைய வாழ்க்கையில்தான் அந்த 1931-ஆம் வருஷத்தில் ஓர் அதிசய சம்பவம் நேர்ந்தது.

ஸ்ரீகாந்தன் பிறந்து வளர்ந்து பிங்-பாங் ஆடிய அந்நகரத்தில் அவ்வருஷ ஆரம்பத்தில், சாத்வீக மறியல் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சர்க்கார் பிரதிநிதிகள் தங்கள் கடமையைத் தடி கொண்ட மட்டும் நடத்தி வந்தனர். அவர்கள் இன்னும் பல தீவிரமான நடவடிக்கைகளையும் கைக்கொண்டனர். காங்கிரஸ் ஆபீஸ்களையும், தொண்டர் ஜாகைகளையும் பூட்டிவிட்டார்கள். தொண்டர்களுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ கொடுக்கக் கூடாதென்ற உத்தரவைத் தண்டோ ராப் போட்டுப் பகிரங்கப்படுத்தினார்கள்.

சில நாளைக்கு நகரமே கதிகலங்கிக் கிடந்தது. தூரத்தில் எங்கேயாவது வெள்ளைக் குல்லாவைப் பார்த்துவிட்டால் கிருகஸ்தர்கள் உடனே கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டார்கள்.

இப்படிப்பட்ட அதிகார அமுலை மீறுவதற்குறிய ஆண்மை அந்த நகரில் ஒரே ஒருவருக்குத்தான் இருந்ததென்று வெளியாயிற்று. அந்த ஒருவரோ பெண்ணாய்ப் பிறந்தவராயிருந்தார். அவர் பெயர் ஸ்ரீமதி வஸுந்தரா தேவி.

இந்நகரத்திற்கு ஸ்ரீமதி வஸுந்தராதேவி வந்து சில மாத காலந்தான் ஆகியிருந்தது. அந்நகரின் முனிசிபாலிடியினால் நடத்தப்பட்ட பெண்கள் பள்ளிக்கூடமொன்றுக்குத் தலைமை உபாத்தியாயினியாக அவள் வந்திருந்தாள். வயது இருபது, இருபத்திரண்டு தானிருக்கும். அவளும் அவளுடைய வயது முதிர்ந்த தந்தையும் ஒரு சிறிய தனி வீட்டில் குடித்தனம் இருந்தார்கள். ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்துக் கொண்டு சாப்பிட்டார்கள். வஸுந்தரா பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கும் சமயங்களில், அவள் தகப்பனார் ஒரு பழைய பிடிலை வைத்துக் கொண்டு அப்பியாசம் செய்து கொண்டிருப்பார்.

இவர்களுடைய வீட்டு வாசலில் ஒரு நாள் தடியடியால் நொந்து, பசியினால் மெலிந்த இரண்டு சத்தியாக்கிரஹத் தொண்டர்கள் வந்து சேர்ந்தார்கள். அச்சமயம் கிழவர் பிடில் அப்பியாசம் செய்ததைக்கூட அவர்கள் பொருட்படுத்தாமல், திண்ணையில் சோர்ந்து விழுந்தார்கள். ஏறக்குறைய அதே சமயத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து வஸுந்தரா திரும்பி வந்தாள். ஊரில் நடப்பதெல்லாம் அவள் கேள்விப் பட்டிருந்தாள். இதனால் ஏற்கனவே அவள் மனம் இளகியிருந்தது. இப்போது நேருக்கு நேர் அத்தொண்டர்களைப் பார்த்ததும் அவளால் சகிக்க முடியவில்லை. அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தங்களுக்கு வைத்திருந்த ஹோட்டல் சாப்பாட்டை அவர்களுக்கு இட்டாள்.

இந்தச் செய்தி நகரமெங்கும் பரவியது. அன்று முழுதும் எல்லாரும் இதைப் பற்றியே பேசினார்கள். டவுன் ஹால் கிளப்பில் பிங்-பாங் ஆடுமிடத்தில் கூட இந்தப் பேச்சு எட்டிற்று. “இதற்குத்தான் தைரியம் வேண்டுமென்கிறது. தைரியமில்லாவிட்டால் ஒருவன் என்ன மனுஷனோடு ஸார், சேர்த்தி? இத்தனைக்கும் அவள் ஒரு பெண் பிள்ளைதான். இந்த ஊரில் எந்த மீசை முளைத்த ஆண்பிள்ளைக்காவது அவளுடைய தைரியம் இருந்ததா? நான் கேட்கிறேன்” என்று ஒருவர் ஆவேசமாய்க் கேட்டார். இதெல்லாம் ஸ்ரீகாந்தனுடைய காதில் விழுந்தது. ஆனால் மனத்தில் இலேசாகத்தான் பதிந்தது. உண்மையில் அவன் அதைப் பற்றிச் சிறிதாவது சிரத்தை கொண்டான் என்று சொல்வதற்கே இல்லை.

இரண்டு வாரங்கழித்து அதே மனுஷர் வஸுந்தரா என்னும் பெயரை மறுபடி பிரஸ்தாபித்தபோதுதான் ஸ்ரீகாந்தன் சிறிது கவனிக்கத் தொடங்கினான். “கேட்டயளா ஸார்! இன்று பெரிய மீட்டிங் கூடப் போகிறதாம். அதில் வஸுந்தரா தேவி தேசிய கீதம் பாடப் போகிறாளாம்” என்றார் அந்தச் சினேகிதர்.

“அதென்ன, ஸார்! புதுப் பெயராயிருக்கிறது? அவள் வங்காளியா, குஜராத்தியா?” என்று ஸ்ரீகாந்தன் கேட்டான்.

“அதுதானே வேடிக்கை? அவள் தமிழ்நாட்டு ஸ்திரீ தான்! பெயரை அப்படி மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தகப்பனார் பெயர் ராமகிருஷ்ணய்யர். தகப்பனும் பெண்ணுந்தான் தனியாக வசிக்கிறார்கள்.”

“நிஜமாகவா? எதற்காக அப்படிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டாள்? அவர்கள் யார்? எந்த ஊர்?”

“அதெல்லாம் ஒன்றும் தெரியாது. அவர்களுடைய பூர்வீகம் பெரிய மர்மமாயிருக்கிறது. அவளுக்குக் கல்யாணமாகவில்லையென்கிறார்கள் சிலர். புருஷன் செத்துப் போய்விட்டான் என்கிறார்கள் சிலர். புருஷன் எங்கேயோ இருக்கிறான் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். மொத்தத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டவர்கள் என்று தெரிகிறது.”

ஸ்ரீகாந்தன் அன்று பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந்தான். அந்தப் பொதுக்கூட்டம், காந்தி-இர்வின் ராஜி உடன்படிக்கையைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப் பெற்றது. வஸுந்தரா தொண்டர்களுக்கு அன்னமளித்த மறுநாளே, மகாத்மா விடுதலையடைந்து வைஸ்ராயின் மாளிகைக்குப் பிரயாணமானார். இது காரணமாகவே வஸுந்தராவின் மீது நடவடிக்கை எதுவும் அதிகாரிகள் எடுக்கவில்லை. சில நாளைக்கெல்லாம் ராஜி உடன்படிக்கையில் காந்திமகானும் வைஸ்ராய் இர்வினும் கையொப்பமிட்டார்கள். இந்தச் சந்தோஷச் செய்தியின் நிமித்தம் அந்த ஊரில் நடந்த கொண்டாட்டங்களில், ஸ்ரீமதி வஸுந்தரா நடுநாயமாக விளங்கினாள். அந்தப் பிரமாண்டமான ஜனசமுத்திரத்தின் மத்தியில் வஸுந்தரா தேசியகீதம் பாட ஆரம்பித்ததும் ஏதோ மந்திரசக்தியினால் சமுத்திரம் திடீரென்று அலை ஓய்ந்தது போல், நிசப்தம் ஏற்பட்டது. சென்ற இரண்டு மாத காலமாக யாரைப் பற்றி இடைவிடாமல் பேசியும் சிந்தித்தும் வந்தார்களோ, அப்படிப்பட்டவளை முதன் முதலாக நேருக்கு நேர் பார்க்கும்போது, அதிலும் அவள் சௌந்தர்யமும், கம்பீரமும், நாகரீகமும் வாய்ந்த யௌவன ஸ்திரீயாகவும் இருந்துவிட்டால் எவரும் பேச்சிழந்து பிரமித்து நிற்பதில் வியப்பில்லையல்லவா? ஸ்ரீகாந்தனும் இப்படித் தன் வசமிழந்து நின்றான்.

அன்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசங்கி ஒருவராவது ஸ்ரீமதி வஸுந்தரா தேவியின் துணிவைக் குறிப்பிட்டு அதை உதாரணமாக எடுத்துக் காட்டாமல் முடிக்க வில்லை. மத்தியில் ஓர் உற்சாகமுள்ள இளைஞன் எழுந்திருந்து, “ஸ்ரீமதி வஸுந்தரா தேவி நாலு வார்த்தையாவது பேசவேண்டுமென்று இங்கு அனேகருடைய கோரிக்கை” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூவினான். உடனே அந்தப் பெரிய கூட்டத்தின் எல்லாப் புறங்களிலிருந்தும் காது செவிடுபடும்படியான கோஷம் எழுந்தது. மேடையிலிருந்த தலைவர்களும் வற்புறுத்தியதன் பேரில் வஸுந்தரா எழுந்து ஒரு கும்பிடு போட்டு விட்டுப் பின்வரும் ஐந்தாறு வாக்கியங்களைச் சொன்னாள்: “சகோதரிகளே, சகோதரர்களே! நீங்கள் எல்லாரும் இவ்வளவு தூரம் என்னைக் கௌரவப்படுத்தியதற்காக மிகவும் வந்தனம். நீங்கள் எனக்குச் செய்யும் கௌரவத்தைத் தேசத் தொண்டுக்குச் செய்யும் கௌரவமாகவே நான் பாவிக்கிறேன். வாஸ்தவத்தில் நான் அப்படிப் பிரமாதமான காரியம் ஒன்றும் செய்துவிடவில்லை. பசித்து வந்தவர்களுக்குச் சாப்பாடு போடுவதென்பது நம்முடைய புராதன தர்மம். அதை நாம் ஒரு நாளும் கைவிட முடியாது. பசியுடன் என்னுடைய வீட்டு வாசலுக்கு வந்த இரண்டு தொண்டர்களுக்குச் சாப்பாடு போட்டதில் நான் என்னுடைய கடமையைச் செய்தேனே தவிர வேறொன்றுமில்லை. அத்தகைய சந்தர்ப்பம் உங்களுக்கு வந்திருந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே உங்கள் கடமையை நிறைவேற்றியிருப்பீர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் கிடையாது. வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே!”

அன்று பொதுக்கூட்டம் முடிந்து திரும்பிப் போகும் போது எல்லோரும் வஸுந்தராவைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்களென்று சொல்ல வேண்டியதில்லை.

“ஒரு சூடு கொடுத்தாள், பார்த்தயளா, ஸார்! ‘சந்தர்ப்பம் வந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்திருப்பீர்கள், என்று சொன்னாளே! பயந்து கதவை மூடிக் கொண்ட பயல்களுக்கெல்லாம் அது மனதிலே நன்றாய்த் தைத்திராதா?” என்றார் ஒருவர்.

“பிறத்தியாரைச் சொல்லப் போய்விட்டீரே! நீரும் நானும் என்ன செய்து விட்டோம்?” என்றார் இன்னொருவர்.

“நான் சொல்கிறேன், கேளுங்கள்; இனிமேல் நாமெல்லாம் வளையல் போட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துவிட வேண்டியதுதான்” என்று மிகவும் உற்சாகத்தோடு ஒருவர் கூறினார்.

“பாருங்களேன், ஸார்! ஒரு புடவை உடுத்திய ஸ்திரீக்குள்ள தைரியம் இந்த ஊரிலே வேஷ்டி கட்டிய ஆண் பிள்ளைகளுக்கெல்லாம் இல்லையே? என்ன பிரயோஜனம்?” என்று ஒருவர் வைராக்கியமாய்ப் பேசினார்.

“அவள் புடவை உடுத்திக் கொண்டிருந்தாளே, அது ஒன்று போதும்! நம் வீடுகளிலும் தரித்திரங்கள் பதினெட்டு முழத்தைப் பிரி மாதிரி சுத்திக்கிறதே!” என்றார் இன்னும் பரவச நிலையிலிருந்த மற்றொருவர்.

ஸ்ரீகாந்தன் வீட்டுக்குச் சென்றதும் அன்றைய பொதுக்கூட்டத்தைப் பற்றித் தன் தாயாரிடமும் சகோதரிகளிடமும் சொன்னான். (நாலு சகோதரிகளில் இரண்டு பேராவது எப்போதும் பிறந்த வீட்டில் இருப்பார்கள்) ஒரு பொம்மனாட்டி பேசினாள் என்று கேட்டதும் அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

“ஏண்டா அப்பா, அவாள் என்ன ஜாதிப் பேரோ?” என்று கேட்டாள் தாயார்.

“சாக்ஷாத் பிராமணாள்தான் அம்மா! அதிலும் ஸ்மார்த்தாள்!” என்றான் ஸ்ரீகாந்தன்.

“அதுவும் அப்படியா? வடமாளோ, அஷ்டசஹஸ்ரமோ! அஷ்டசஹஸ்ரத்தில்தான் இப்படித் துணிந்து வருவார்கள்.”

“பார் எவ்வளவு புத்திசாலித்தனமாய்ப் பேசுகிறாய்! ஜாதி தான் ரொம்ப முக்கியமான விஷயமாக்கும்? நீங்களும் பொம்மனாட்டியென்று பிறந்தீர்களே!” என்று வெறுப்புடன் கூறினான் ஸ்ரீகாந்தன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு சகோதரி, “அவளுக்கு எத்தனை வயது இருக்கும்?” என்று கேட்டாள்.

வஸுந்தராவைப் பற்றி யாருடனாவது ஏதாவது பேச வேண்டுமென்றிருந்தது ஸ்ரீகாந்தனுக்கு. எனவே, “இருபத்தைந்து வயதுக்குள்ளிருக்கும்” என்று பதில் சொன்னான்.

“ஆம்படையான், கீம்படையான் ஒருவரும் கிடையாதா?” என்று இன்னொரு சகோதரி கேட்டாள்.

“அதெல்லாம் உங்களுக்கென்ன கவலை?”

“ஏண்டா? பின்னே கவலையில்லையா? பிராமணாளாய்ப் பிறந்து காலாகாலத்திலே கலியாணம் செய்து கொள்ளா விட்டால் நன்றாயிருக்கோ?” என்றாள் தாயார்.

அதற்குள் சகோதரிகளில் ஒருத்தி அம்மாவின் காதில் வந்து ஏதோ சொன்னாள். உடனே அவள், “சிவ! சிவ! காலம் கெட்டுப் போயிற்று. ஏண்டா! அவள் கழுத்தில் தாலி இருக்கோ, பார்த்தயோடா?” என்றாள். பின்னோடு, “நான் பார்த்தேன்னாக் கேட்டுடுவேன். அவள் யாராய்த் தானிருக்கட்டுமே? எனக்கென்ன பயம்!” என்று தலையை ஆட்டினாள்.

ஸ்ரீகாந்தன், “நீங்கள் நாசமாய்ப் போனயள்!” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து சென்றான்.

அது முதல் ஸ்ரீகாந்தன் காங்கிரஸ் கூட்டங்களுக்கு வழக்கமாகப் போய் வரலானான். இதனால் காங்கிரஸ்காரர்கள் சிலரோடு அவனுக்குச் சினேகம் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் காங்கிரஸ் ஆபீஸுக்கும் போகத் தொடங்கினான். ஒரு மாஜி ஸப்ஜட்ஜின் புதல்வன் – பணக்கார இளைஞன் – காங்கிரஸில் ஊக்கம் காட்டுவது பற்றி அவ்வூர்க் காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாயிருந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டபோது ஸ்ரீகாந்தன் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாக நியமிக்கப்பட்டான்.

அதற்கு மறுநாள் அவன் வஸுந்தராவின் வீட்டுக்குப் போனான். (அடிக்கடி பொதுக்கூட்டங்களில் சந்தித்ததில் அவர்களுக்குள் சொற்பப் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது) அவளிடம், “நான் காரியதரிசி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதை நன்கு நிறைவேற்றுவதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்களால் தான் நான் இந்த காங்கிரஸ் வேலையில் ஈடுபட்டதே, தெரியுமல்லவா?” என்றான்.

வஸுந்தராவின் உள்ளத்தில் உவகை பொங்கிற்று துயரம் நிறைந்த தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

“என்னால் இந்த உதவி செய்யத் தடையில்லை. அதைவிட வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்கிறது. ஆனால் முனிசிபல் சேர்மன் ஏதாவது ஆட்சேபிப்பாரோ என்று தான் யோசனை செய்கிறேன்” என்றாள்.

“முனிசிபல் சேர்மனை நான் போய்ப் பார்க்கிறேன். அவர் வேண்டுமானால் ஆட்சேபிக்கட்டும், பார்க்கலாம். அப்படியே நேர்ந்தால் இந்த வேலை என்ன பிரமாதம்? இந்த ஊரில் நாங்கள் இவ்வளவு பேர் இல்லையா? சும்மா விட்டுவிடுவோமா?” என்றான் ஸ்ரீகாந்தன்.

முனிசிபல் சேர்மன் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் காந்தி-இர்வின் உடன்படிக்கை அமுலிலிருந்த அந்த வருஷத்தில் ரொம்பப் பேர் திடீரென்று காங்கிரஸ் அநுதாபிகள் ஆனார்கள். சர்க்கார் அதிகாரிகள் கூடக் காங்கிரஸ் நிர்வாகிகளின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற விரும்பினார்கள்.

இந்த 1931ஆம் வருஷத்தில் தமிழ்நாடெங்கும் காங்கிரஸ் நிர்மாண வேலைகள் தீவிரமாகத்தான் நடைபெற்றன. ஆனாலும் ஸ்ரீகாந்தன் காரியதரிசியாயிருந்த தாலுகா கமிட்டியைப் போல் அவ்வளவு வேலை எந்தக் கமிட்டியும் செய்யவில்லை என்று சொல்லலாம். இந்தப் பெருமை முழுவதும் வஸுந்தராதேவிக்கே சேரவேண்டுமென்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அசந்தர்ப்பத்திலும் ஸ்ரீகாந்தன் சொல்லி வந்தான்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தனியாயிருக்க நேர்ந்த போது, “நாம் இவ்வளவு நாள் பழகிய பிறகும் உங்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னைப் பற்றி ஒரு விவரம் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறேன். உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொன்னதில்லை. இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம். ஆனால் எனக்கென்னவோ தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது” என்றான் ஸ்ரீகாந்தன்.

வஸுந்தரா, “உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் சொல்கிறேன்” என்றாள்.

“உங்களுக்குக் கலியாணமே ஆகவில்லையா?”

“பேஷாய் ஆகியிருந்தது. அதற்கு அடையாளம் வேண்டுமானால் பார்க்கிறீர்களா?” என்றாள். அப்புறம் திரும்பி முதுகிலிருந்த துணியைச் சிறிது விலக்கினாள். செம்பொன் நிறமுடைய அம்முதுகின் மத்தியில் கறேலென்று இரண்டு நீளமான வடுக்கள் இருந்தன.

ஸ்ரீகாந்தன் கண்களை மூடிக்கொண்டான். அவை நெருப்புச் சுட்ட வடுக்கள் என்பதை உணர்ந்த அவன், “எனக்குப் பார்க்கச் சகிக்கவில்லை” என்றான்.

“என் மாமியார் சூடுபோட்ட வடுக்கள். அவளுடைய பிள்ளைக்கு மருந்திட்டேனென்பது என்னுடைய முதல் குற்றம். கொடுமை பொறுக்காமல் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதியது இரண்டாவது குற்றம்” என்றாள்.

“அப்படிப்பட்ட கஷ்டம் அனுபவித்த நீங்கள் எப்படித்தான் இவ்வளவு உற்சாகமாகயிருக்கிறீர்களோ? எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!” என்றான் ஸ்ரீகாந்தான்.

“முதலில் சங்கீதந்தான் எனக்கு மன ஆறுதல் அளித்தது. இந்த ஊருக்கு வந்த பிறகு உற்சாகத்திற்குப் புதிதாக இரண்டு காரணங்கள் ஏற்பட்டன. ஒன்றுதான் தேசத்தொண்டு; இன்னொன்று – இன்னொன்று உங்களுக்கே தெரியும்.”

இதற்கு ஸ்ரீகாந்தன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால் தொண்டை அடைத்துக் கொண்டது. ஏதோ தெளிவில்லாத சப்தந்தான் வெளி வந்தது.

கொஞ்ச நேரங் கழித்து, “உங்களைப் போன்றவர்களுடைய கதையைக் கேட்கும்போது, தேச விடுதலை கூட அவ்வளவு முக்கியமல்ல; சமூகத்திலுள்ள ஊழல்களை நீக்கப் பாடுபடுவதுதான் முக்கியமெனத் தோன்றுகிறது” என்றான்.

“இரண்டுக்கும் விரோதம் ஒன்றுமில்லையே. தேசத் தொண்டு, சமூகத் தொண்டு இரண்டும் சேர்ந்தாற்போல் செய்யலாமே?” என்றாள் வஸுந்தரா.

ஒருநாள் ராமகிருஷ்ணய்யர் வஸுந்தராவை அருகில் உட்கார வைத்துக் கொண்டு, “அம்மா, உன்னையும் ஸ்ரீகாந்தனையும் பற்றி உலகில் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்களே? இந்தக் கிழவன் காதுக்குக் கூட அது எட்டியிருக்கிறது. அதன் உண்மை என்ன, அம்மா?” என்று கேட்டார்.

“என்ன, அப்பா பேசிக்கொள்கிறார்கள்?”

“நீங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய்ச் சொல்கிறார்கள்.”

“அவ்விதம் நேர்ந்தால் உங்களுக்கு அது இஷ்டமாயிராதா, அப்பா! அப்படியானால் நான் கனவில் கூட…”

ராமகிருஷ்ணய்யர் ஒரு பெருமூச்சு விட்டு, “குழந்தாய்! நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும். அது தான் பகவானிடம் இரவு பகலாக நான் பிரார்த்தித்து வருவது” என்றார்.

ஏறக்குறைய அதே சமயத்தில் தேசத்தின் அரசியல் நிலைமையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. மகாத்மா காந்தி இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போனவர் சீமையிலிருந்து திரும்பி வந்தார். அவரை வரவேற்பதற்கு அதிகார வர்க்கத்தார் ஆயத்தமாயிருந்தார்கள். மகாத்மா காந்தி வைஸ்ராய் வில்லிங்டனை பேட்டி கேட்டதும், அது மறுக்கப்பட்டதும், பின் அவர் கைது செய்யப்பட்டதும், மீண்டும் சத்தியாக்கிரஹம் தொடங்கப்பட்டதும் சரித்திர சம்பவங்கள்.

இந்த நாட்களில், “ஸ்ரீகாந்தன் என்ன செய்யப் போகிறான்? ஸ்ரீகாந்தன் என்ன செய்யப் போகிறான்?” என்றே ஊரெங்கும் பேச்சாயிருந்தது. அதைப் பற்றி இரண்டு பேருக்கு மட்டும் எவ்விதச் சந்தேகமும் ஏற்படவில்லை. அவர்கள் ஸ்ரீகாந்தனும் வஸுந்தராவுந்தான்.

“நாளையதினம் நானும் இன்னும் ஐந்து தொண்டர்களும் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பி மறியலுக்குப் போகின்றோம். ஆனால் கடைத்தெரு வரையில்கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது. தடியைத் தாராளமாகவே உபயோகிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறதாம்” என்றான் ஸ்ரீகாந்தன்.

“நானும் உங்களுடன் வருவேன்” என்று தழதழத்த குரலில் கூறினாள் வஸுந்தரா.

“கூடவே கூடாது. நாம் இருவரும் முதல் நாளே போய்விட்டால் அப்புறம் ஒன்றுமே நடக்காது. குறைந்தது இரண்டு மாதமாவது நீங்கள் வெளியில் இருக்க வேண்டும்.”

கொஞ்ச நேரம் விவாதம் நடந்த பிறகு, ஸ்ரீகாந்தன் சொல்லுவதுதான் சரியென்று வஸுந்தரா ஒப்புக்கொண்டு அப்படியே செய்வதாக வாக்களித்தாள்.

“நாளைக்கு நான் எப்படிச் சகிக்கப் போகிறேனோ தெரியவில்லை. உங்கள் மேல் விழும் அடி ஒவ்வொன்றும் என் இருதயத்தில் விழுவது போலவே எனக்கிருக்கும்” என்றாள்.

“அப்படி நீங்கள் சொன்னால் எனக்கு இருக்கிற தைரியமும் போய்விடும்.”

“நான் சொன்னது தவறுதான்; மன்னியுங்கள், என்ன இருந்தாலும் ஸ்திரீ புத்திதானே?”

“நான் வேறுவிதமாய் எண்ணிக்கொள்வேன். என் மேல் அடிவிழும்போது உங்கள் மேல் அடிகள் விழாமல் தடுப்பதாக எண்ணிக் கொள்வேன். அப்போது மும்மடங்கு தைரியம் எனக்குண்டாகும். உண்மையும் அதுதானே? என் இருதயத்தில் நீங்கள் இருக்கிறீர்களல்லவா?”

அந்த 1932ஆம் வருஷத்தில் பாரதநாட்டில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் – ஏதோ தெய்வீக சக்தியினால் – மகத்தான வீர புருஷர்கள் ஆனார்கள். தடியடி, படுகாயம், பலநாள் ஆஸ்பத்திரிச் சிகிச்சை, அதற்குப் பிறகு வருஷக் கணக்கில் சிறைவாசம் இவற்றை எதிர்பார்த்துக் கொண்டு அவர்கள் பத்தி பத்தியாய்ச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்களில் ஸ்ரீகாந்தனும் அவனுடைய ஐந்து சகாக்களும் சேர்ந்தவர்கள். கஷ்டமென்பதையும் நொவென்பதையும் இன்னதென்று அறியாமல் உருண்டு திரண்டு வளர்ந்திருந்த அவனுடைய தோள்களிலும், முதுகிலும், கால்களிலும் அடி விழ விழ, அவனுடைய வாய் ‘வந்தே மாதரம்!’ என்று பன்மடங்கு உரத்த சப்தத்துடன் கோஷித்தது.

கடைசியில் அவர்கள் ஸ்மரணையற்று விழுந்த பிறகு போலீஸார் அடிப்பதை நிறுத்தி அவர்களைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போனார்கள். மறுநாள் அவர்கள் எல்லாரும் ஆறு ஆறு மாதம் சிறைத் தண்டனை அடைந்தனர்.

அந்த இரண்டு நாளும் ஸ்ரீகாந்தனுடைய வீட்டில் அல்லோலகல்லோலமாயிருந்தது. அவனுடைய தமக்கைமார் பட்ட கவலைக்கு அளவேயில்லை. “ஐயோ! அப்பாவின் பென்ஷனுக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே?” என்று அவர்கள் பரிதபித்தார்கள். “அப்பவே ஒரு கால்கட்டைக் கட்டிவிடு என்று சொன்னேனே! என் வார்த்தையை ஒருவரும் கேட்கவில்லையே!” என்று அம்மா கதறினாள்.

அந்த மாஜி ஸப்ஜட்ஜின் நிலைமையை நான் என்னவென்று சொல்லட்டும்? ‘இனிமேல் காங்கிரஸ்காரர்கள் தானே அரசாங்கத்தில் அதிகாரம் வகிக்கப் போகிறார்கள்? அந்த லயனிலாவது பையனுக்கு ஏதாவது உத்தியோகம் ஆகட்டும்’ என்று அவர் எண்ணியிருந்தார். அதனால் தான், ஸ்ரீகாந்தன் காங்கிரஸ் காரியதரிசி ஆனதையெல்லாம் அவர் ஆட்சேபிக்கவில்லை. இப்போது அது விபரீதமாய் முடிந்தது.

ஸ்ரீகாந்தனுடைய துணிவையும் தியாகத்தையும் பற்றி ஊரில் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவனைப் பின்பற்றுவதற்கு ரொம்பப் பேர் தயாராயில்லை. “நாம் ஜெயிலுக்குப் போவதாயிருந்தால் வேறு வழிகளை அனுசரிக்கலாம்; திருடலாம்; போர்ஜரி செய்யலாம்; வேறு ஏதாவது பண்ணலாம். இந்த மறியல் சமாசாரம் மட்டும் வேண்டாம்” என்று அவர்களெல்லாம் எண்ணியதாகத் தோன்றியது.

இந்த நிலைமையை வஸுந்தராவினால் சகிக்க முடியவில்லை. ஒரு வாரம் வரையில் ஏதோ முயற்சி செய்து பார்த்தாள்; அதற்குப் பிறகு, தான் வெளியில் இருப்பதில் பயன் ஒன்றுமில்லையென்று கண்டு இன்னும் இரண்டு ஸ்திரீ தொண்டர்களுடன் மறியலுக்குப் புறப்பட்டாள். புறப்பட்ட இடத்திலேயே அவர்களைக் கைது செய்து கொண்டு போனார்கள். மற்ற இருவருக்கும் மூன்று மாதமும், வஸுந்தராவுக்கு மட்டும் ஒன்பது மாதமும் சிறைவாசம் கிடைத்தது. தள்ளாத வயதில் தன்னைத் தவிர வேறு ஆதரவில்லாத தந்தையைத் தனியே விட்டுப் போவது அவளுக்கு எத்தனையோ கஷ்டமாய்த்தானிருந்தது. ஆனால் அப்போது நம் தேசத்தில் இம்மாதிரி வெறி கொண்ட செயல்களை அநேகர் செய்யத் துணிந்தனர்.

வேலூர் ஸ்திரீகள் சிறைச்சாலையில் அவ்வருஷம் வைக்கப்பட்டிருந்த தேச சேவிகைகளில் வஸுந்தராவைப் போல் உற்சாகமாயிருந்தவர்கள் வேறு யாருமில்லையென்றே சொல்லலாம்.

அவளுடைய சிந்தனைகளில் ஸ்ரீகாந்தன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான் என்று சொல்லவேண்டியதில்லை. வருங்காலத்தைப்பற்றி எவ்வளவு விதமாக அவள் யோசித்தாலும், அது ஸ்ரீகாந்தனில் வந்தே முடிந்தது. கடைசியில், தங்களிருவரையும் பகவானே ஒன்று சேர்த்தாரென்றும், சமூகத்தின் எதிர்ப்பு எப்படியிருந்தபோதிலும் தாங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்தே தேச சேவையில் வாழ் நாளைக் கழிக்க வேண்டுமென்றும் அவள் உறுதி கொண்டாள்.

ஏறக்குறைய ஆறு மாதம் சென்றபோது அவளுடைய உள்ளத்தில் பரபரப்பு அதிகம் ஏற்பட்டது. ஸ்ரீகாந்தன் சீக்கிரம் விடுதலையடைந்துவிடுவான். தன்னைப் பார்க்க வருவான் என்ற எண்ணம் அவள் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. ஆறு மாதம் முடியவும் அவள் தினந்தோறும் அவனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்க்கத் தொடங்கினாள். இன்று வரும், நாளை வரும் என்று எதிர்பார்த்துப் பார்த்து ஒரு மாதம் சென்றுவிட்டது; “ஒரு வேளை விடுதலையாகி வந்ததும் மறுபடியும் சட்டமறுப்புச் செய்து சிறை புகுந்து விட்டாரோ” என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சு துணுக்குற்றது. ‘ஐயோ! தான் விடுதலையடையும் வரையிலாவது அவர் வெளியிலிருக்கக் கூடாதா?’

இந்த எண்ணம் தோன்றிய பிறகு அவளால் சும்மா இருக்க முடியவில்லை. “ஊரில் முக்கிய விசேஷங்களையெல்லாம் அடுத்த கடிதத்தில் கட்டாயம் எழுதவும்” என்று தகப்பனாருக்கு எழுதினாள். தகப்பனாரிடமிருந்து பதில் வந்தது. அதில் சில வரிகள் ஜெயில் அதிகாரிகளினால் அடிக்கப்பட்டிருந்தன. அந்த வரிகளில் இரண்டு இடத்தில் ஸ்ரீகாந்தன் என்னும் பெயர் இருப்பதாக வஸுந்தராவுக்குத் தோன்றிற்று. இதனால் அவளுடைய மனச் சஞ்சலம் இன்னும் அதிகமாயிற்று.

தகப்பனாருடைய கடிதத்தில் இன்னொரு விஷயமும் இருந்தது; சென்னையில் வஸுந்தரா கல்வி பயின்று தேறிய ஸேவாசிரமத்தில் ஓர் உபாத்தியாயினி வேலை காலியாயிருப்பதாகவும், வஸுந்தரா விடுதலை பெற்றதும் சென்னைக்கு வந்து அந்த வேலையை ஒப்புக் கொள்ளும்படியாகவும் தகவல் வந்திருப்பதாய் அவர் எழுதியிருந்தார்.

மேற்படி ஸேவாசிரமத்தின் தலைவி ஓர் அபூர்வமான ஸ்திரீ. முக்கியமாக வஸுந்தராவிடம் அவர் விசேஷ பிரியம் வைத்திருந்தார். அவள் சிறை சென்றதையும், இனிமேல் முனிசிபல் பள்ளிக்கூடங்களில் அவளுக்கு வேலை கிடைப்பது கஷ்டமென்பதையும் அறிந்து தாமாகவே இந்த ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் வஸுந்தராவுக்கு இதைப் படித்ததும் புன்னகை உண்டாயிற்று. சென்னைக்குத் திரும்புவதா? ஸேவாசிரமத்தில் வேலையா? – தன்னுடைய வாழ்க்கை இப்போது ஸ்ரீகாந்தனுடைய வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் என்ன கண்டார்கள்?

ஒன்பது மாதமும் சென்றது. வஸுந்தரா விடுதலையடைந்தாள். விடுதலையில் எவ்வளவு குதூகலத்தை எதிர் பார்த்தாளோ, அதில் ஒரு பகுதி கூட ஏற்படவில்லை. சிறை வாசலில் ஒரு வேளை யாரையாவது எதிர்பார்த்திருந்து அவர் வராததனால் ஏமாற்றம் அடைந்தாளோ?

வழக்கம் போல் வேலூரிலிருந்து சில காங்கிரஸ் அபிமானிகள் அவளை வரவேற்று அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றி விட்டார்கள்.

இரவு ஒரு நிமிஷங்கூட அவள் தூங்கவில்லை. இடையிடையே வண்டி நிற்கும் போதெல்லாம் பிளாட்பாரத்தில் குறுக்கே நெடுக்கே போகிறவர்களைக் கூப்பிட்டு, “ஸ்ரீகாந்தனைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்கலாமாவென அவளுக்குத் தோன்றும்.

ஒன்பது மாதத்துக்கு முன்பு கைதியாக ரயிலேறிய அதே ஸ்டேஷனில் இப்போது வஸுந்தரா சுதந்திரமுள்ள ஸ்திரீயாக வந்து இறங்கினாள். ஆனால் அப்போது மனத்திலிருந்த குதூகலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை.

பிளாட்பாரத்தில் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மனிதர் எங்கும் காணப்படவில்லை. ஆனால் அவளுடன் கைதியான இரண்டு ஸ்திரீகளும் வந்திருந்தார்கள். அவர்கள் அவளை வெகு பிரியத்துடன் தழுவிக் கொண்டு அழைத்துச் சென்றார்கள். வெளியே வந்ததும், அவர்கள் அமர்த்தியிருந்த வண்டியில் மூவரும் ஏறிக்கொண்டனர்.

சிறைச்சாலை யோக ஷேமங்களை விசாரித்த பிறகு, “இப்போது யார் இங்கே காங்கிரஸ் காரியதரிசி?” என்று வஸுந்தரா கேட்டாள்.

“இங்கே இப்போது காங்கிரஸுமில்லை; காரியதரிசியுமில்லை.”

“நிஜமாகவா? ஸ்ரீகாந்தன் கூடவா ஒன்றும் செய்யவில்லை?”

“ஸ்ரீகாந்தனா? உனக்குச் சமாசாரம் தெரியாதா?”

“தெரியாதே. என்ன சமாசாரம்? மறுபடியும் ஜெயிலுக்குப் போய் விட்டாரா, என்ன?”

வஸுந்தராவின் நெஞ்சு அப்போது உண்மையாகவே துடிதுடித்தது.

“அவர் ஏன் ஜெயிலுக்குப் போகிறார்? அவருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?”

வஸுந்தரா கொஞ்சம் ஆறுதலடைந்தாள். ‘இவர்களுக்கென்ன, பிறத்தியார்மேல் புகார் சொல்வதுதான் வேலை. அவர் ஏன் அவசரப்பட்டுக் கொண்டு ஜெயிலுக்குப் போக வேண்டும்?’

“இப்போது ஊரில் இருக்கிறாரா?” என்று கேட்டாள்.

“ஊரில் எப்படி இருப்பார்? அவருக்கு இன்றைக்குப் பாண்டிச்சேரியில் கல்யாணம். பாவம், அது உனக்கு எப்படித் தெரியும்?”

ஐந்து நிமிஷம் கழித்துத் தழதழத்த குரலில் வஸுந்தரா கேட்டாள்: “எதற்காகப் பாண்டிச்சேரியில் கல்யாணம்?”

“பெண்ணுக்குப் பதிமூன்று வயது; சாரதா சட்டத்தை ஏமாற்றுவதற்காக அங்கே போய்ப் பண்ணுகிறார்கள்!”

வஸுந்தராவின் வீட்டு வாசலிலேயே அந்தச் சிநேகிதர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். ராமகிருஷ்ணய்யர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தவர், வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் பிடிலை நிறுத்தினார்.

“குழந்தாய்!” என்றார்.

“அப்பா!” என்று அலறிக் கொண்டு வஸுந்தரா ஓடி வந்து அவருடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள். இருவரும் கண்ணீரைப் பெருக்கி விம்மி விம்மி அழுதார்கள்.

அரை மணி நேரம் கழித்து அழுகை ஒருவாறு நின்ற பொழுது வஸுந்தரா, “அப்பா! ஸேவாசிரமத்துக்குக் கடிதம் எழுதிவிடுங்கள்; நாம் நாளைக்கே சென்னைக்குப் புறப்படலாமல்லவா?” என்றாள்.

இத்துடன்

அமரர் கல்கியின் ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Srikanthan Punarjanmam Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,srikanthan punarjanmam Audiboook,srikanthan punarjanmam,srikanthan punarjanmam Kalki,Kalki srikanthan punarjanmam,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *