Kalki Short StoriesKalki TimesStory

Kailasamiyar Kaabaraa Kalki | Kalki Times

Kailasamiyar Kaabaraa Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

கைலாசமய்யர் காபரா

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Kailasamiyar Kaabaraa Kalki

எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள் “அச்சமில்லை; அச்சமில்லை” என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டுக் கைலாசமய்யர் பயந்து கட்டிலிருந்து கிழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்!

மற்றொரு சமயம், அவர் தமது மேஜையில் உட்கார்ந்து எழுதப் போனவர், திடீரென்று ‘பாம்பு’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்தார். எல்லாரும் கம்பும் கையுமாய் ஓடி வந்து ‘எங்கே பாம்பு?’ என்று கேட்டார்கள். “அதோ! மேஜை மேலே!” என்றார். மேஜைமேல் பாம்பைக் காணோம். அப்புறம் கிட்ட நெருங்கிப் பார்த்த போது, மேஜை மேல் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் ‘பாம்பு’ என்று எழுதி இருந்தது தெரிந்தது. இந்த வேலை செய்தது யார் என்று விசாரித்ததில் கைலாசமய்யருடைய ஏழு வயதுப் பையன் மணி விஷமத்துக்காக அப்படி எழுதி வைத்திருந்தான் என்று வெளியாயிற்று. பாம்பை அடிக்க வேலைக்காரன் கொண்டு வந்த தடியைக் கைலாசமய்யர் பிடுங்கிக் கொண்டு பையனை அடிக்கப் போனார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் ஜோஷனாரா பிகம் வந்து குறுக்கிட்டதால் பையன் பிழைத்தான்!

ஜோஷனாரா பீகம் என்றதும், சில பேருக்குச் சுவாரஸ்யம் தட்டலாம். ஏதோ இந்தக் கதையில் நவாபுகளும் அவர்களுடைய அந்தப்புரத்து அழகிகளும் வரப் போகிறார்கள் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கைலாசமய்யருக்கு வடக்கத்தி ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அதிகப் பிரியம். “பயமில்லாமல் கேட்கக் கூடியது ஹிந்துஸ்தானி சங்கீதந்தான்” என்பார். ரேடியோவில் அவர் அடிக்கடி லக்னௌ ஜோஷனாரா பீகத்தின் சங்கீதத்தைக் கேட்பதுண்டு. ஆனால், வீட்டிலே மற்றவர்களுக்கு – முக்கியமாக அவருடைய மனைவிக்கு – ஜோஷனாரா பீகமும், அவளுடைய சங்கீதமும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. எனவே, அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு கறுப்புப் பூனைக்கு ‘ஜோஷனாரா பீகம்’ என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த ஜோஷனாரா பீகத்தைக் கண்டால் கைலாசமய்யருக்குக் குலை நடுக்கம்! அச்சமயம் அந்தப் பூனை வந்ததினால் தான் அவருடைய பையன் மண்டை உடையாமல் தப்பிப் பிழைத்தான்.

பட்ட காலிலே படும் என்பது போல், அவ்வளவு பயந்தவரான கைலாசமய்யருக்கு, அந்த மகா பயங்கரமான அநுபவம் ஏற்பட்டது. ஏற்கனவே தும்பைப் பூவைப் போல் நரைத்திருந்த அவருடைய தலை மயிர், அந்த ஒரு நாள் இரவில் ‘ஜாப்கோ’ மசியைப் போல் கறுத்து விட்டதென்றால், அந்த அநுபவம் எவ்வளவு பயங்கரமாயிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்!

அவருடைய தலைமயிரைச் சுட்டிக் காட்டி “இது எப்படி நேர்ந்தது?” என்று நான் கேட்ட போது கைலாசமய்யர் முதலில் சிறிது நேரம் தலை முதல் கால் வரையில் நடுங்கினார். பிறகு கொஞ்ச நேரம் கால் முதல் தலை வரை நடுங்கினார்.

அவருக்கு நான் தைரியம் கூறிச் சமாதானப்படுத்தி ஒருவாறு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு தான் இது.

கைலாசமய்யருடைய மனைவி, தம் தம்பியின் தலை தீபாவளிக்காக குடும்பத்துடன் ஊருக்குப் போக விரும்பினாள். கைலாசமய்யர், “உன் தம்பிக்கு தலை தீபாவளி என்றால் அவன் தலை எழுத்து; நமக்கு என்ன வந்தது?” என்று எவ்வளவோ சொல்லியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. இப்போதெல்லாம் சொர்க்கத்தில் இடம் கிடைத்தாலும் ரயிலில் கிடைக்காது என்பதைக் கைலாசமய்யர் நன்கு அறிந்தவராதலால் ஐந்தாறு நாள் முன்னாலேயே டிக்கெட் வாங்கி இடம் ரிஸர்வ் செய்திருந்தார். கிளம்ப வேண்டிய அன்றைக்குக் கொட்டு கொட்டு என்று மழை கொட்டியது. கைலாசமய்யர் “இன்றைக்குப் புறப்படுவது அவ்வளவு உசிதமல்ல, ரயில் பாதைகள் எப்படி இருக்குமோ, என்னமோ! மொத்தத்தில் கொஞ்ச காலமாகவே ரயில் பாதைகளுக்கு ஏழரை நாட்டுச் சனியன் பிடித்திருக்கிறது” என்றார். அவர் மனையாள், அதைக் கேட்காமல் “கட்டாயம் போகத்தான் வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தாள். கடைசியாகச் சாயங்காலம் அவர்கள் குழந்தை குட்டிகளுடன் காரில் ஏறிக் கொண்டு கிளம்பினார்கள். வழியில் மவுண்ட் ரோட்டில் கார் தண்ணீரில் நீந்த வேண்டியதாயிருந்தது. அப்போதெல்லாம் கைலாசமய்யர் “போனால் உயிர் தானே போகும்! அதற்கு மேலே போவதற்கு ஒன்றுமில்லையே?” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “அழகாயிருக்கிறது அபசகுனம் மாதிரிப் பேசறது” என்று முணுமுணுத்துக் கொண்டேயிருந்தாள் மிஸ்ஸஸ் கைலாசமய்யர். கடைசியில் எப்படியோ உயிரோடு எழும்பூர் போய்ச் சேர்ந்தார்கள்.

எழும்பூரிலே நல்ல சந்தோஷமான சமாசாரம் தெரிய வந்தது. அதாவது பல்லாவரத்து மலை, மழைக்குப் பயந்து இடம் பெயர்ந்து வந்து பல்லாவரம் ஸ்டேஷனுக்குள் தண்டாவளத்தில் உட்கார்ந்து கொண்டதென்றும், டி.டி.எஸ். முதலிய பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாம் வந்து எவ்வளவோ பிரார்த்தனை செய்தும் அது நகரவில்லை என்றும் தெரிய வந்தது. இன்னும் சிலர், மேற்படி தகவல் ஆதாரமற்றதென்றும் கோடம்பாக்கத்துக்கும் மாம்பலத்துக்கும் நடுவில் ஒரு ஐம்பதடி தண்டவாளத்தை மழை ஜலம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்றும் சொன்னார்கள். காரணம் எதுவானாலும் ரயில்கள் எழும்பூரிலிருந்து அன்று கிளம்பாதென்று நிச்சயம் தெரிந்தது. அதோடு எல்லா ரயில்களும் தாம்பரத்திலிருந்து கிளம்புகின்றன என்றும் தெரியவந்தது. அப்போதுதான் கைலாசமய்யரை அன்று தைரியப் பிசாசு பிடித்திருந்தது என்பது வெளியாயிற்று!

“விடு காரை தாம்பரத்துக்கு!” என்றார் கைலாசமய்யர். அவருடைய சம்சாரம். “வேண்டாமே! பேசாமல் வீட்டுக்குப் போய்ச் சேர்வோமே” என்று ஆன மட்டும் முணுமுணுத்துப் பார்த்தாள். கைலாசமய்யரிடம் ஒன்றும் பயன்படவில்லை. அவர் “உயிர் தானே போகும்? அதற்கு மேல் ஒன்றுமில்லையே?” என்றும் “அந்த ராஸ்கல் ஜப்பான்காரன் வந்து குண்டு போட மாட்டேன் என்கிறானே?” என்றும், “குண்டு விழாவிட்டால் இடி விழுந்தாலும் போதும்” என்றும், “விழுகிற இடி இந்தக் காரின் தலையில் நேரே விழ வேண்டும்; அப்போது தெரியும் தம்பி தலை தீபாவளிக்குப் போகிற இலட்சணம்!” என்றும் – இம்மாதிரியெல்லாம் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனார். குழந்தைகள் “இன்றைக்கு அப்பாவுக்கு ஆவேசம் வந்திருக்கிறது” என்று அறிந்து, வாயை மூடிக் கொண்டு வந்தார்கள். மழை ஜலத்தை கிழித்துக் கொண்டு கார் தாம்பரத்தை நோக்கிப் போயிற்று.

தாம்பரம் ஸ்டேஷனும் வந்தது. அதிக மழையினால் மின்சாரக் கோளாறு ஏற்பட்டிருந்தபடியால் ஸ்டேஷனில் விளக்குகள் இல்லை. ஒரே கும்மிருட்டு ஆனாலும் கைலாசமய்யர் பின் வாங்கவில்லை. அவருடைய கைநாடி மட்டும் நிமிஷத்துக்கு 350 தடவை வீதம் அடித்துக் கொண்டதே தவிர, மற்றபடி வெகு தைரியமாய்க் காரிலிருந்து இறங்கி மச்சுப்படி ஏறிப் போனார். பின்னால் மனைவி மக்கள் வருகிறார்களா, சாமான்கள் என்ன ஆகின்றன என்று கூடக் கவனிக்கவில்லை. எப்படியோ பிளாட்பாரத்தில் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். ரயிலும் தயாராக நின்று கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டிகள் காலியாகத்தான் இருந்தன. ஒரு வண்டியில் கைலாசமய்யரும் அவருடைய குடும்பத்தாரும் ஏறிக் கொண்டார்கள். வண்டிக்குள் ஒரே மௌனம்; வண்டிக்கு வெளியே கும்மிருட்டு.

சற்று நேரத்துக்கெல்லாம் அவருடைய மனையாள் “இன்றைக்கு ரயிலே காலி போலிருக்கே! கூட்டமே இல்லையே” என்று சொல்லி மௌனத்தைக் கலைத்தாள்.

கைலாசமய்யர் உடனே “ஆமாம், ஆமாம்; அதனாலென்ன? வண்டியிலே தனியாய்ப் போனால் கொலைகாரனா வந்து விடப் போகிறான்! யாரையோ, எப்பவோ ஒரு நாளைக்கு ரயிலுக்குள்ளே கொலை செய்து விட்டால், அதற்காக எப்போதும் அதே ஞாபகமா?” என்று ‘டோ ஸ்’ கொடுக்க ஆரம்பித்தார்.

“போதுமே, பேசாம இருங்களேன். குழந்தைகள் பயப்படப் போகிறது!” என்றாள் மிஸ்ஸஸ் கைலாசமய்யர்.

அப்பாவுக்குக் கோபம் என்று தெரிந்த குழந்தைகள் ரயில் ஓரமாய்ப் போய் வாயைத் திறக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தன.

வண்டி நகரத் தொடங்கியது. அதே சமயத்தில் அந்தத் தடுக்க முடியாத சம்பவம் நடந்து விட்டது. அலங்கோலமாக ஒரு மனிதர் அவர்களுடைய வண்டியருகில் வந்து, “கதவைத் திறவுங்கள்! அவசரம்!” என்று கதறிக் கொண்டே ரயிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். ரயிலின் வேகமோ அதிகமாயிற்று. கைலாசமய்யருக்கு மனத்தில், “நல்லவேளை. ஒரு துணை கிடைத்தது” என்ற எண்ணம் பளிச்சென்று எழுந்தது. தட்டுத் தடுமாறிக் கதவைத் திறந்தார். வந்த மனுஷர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து உள்ளே வந்து கைலாசமய்யருக்கு எதிர் ஆசனத்தில் தொப்பென்று விழுந்தார். அதே பெஞ்சின் ஓரத்தில் இருந்த மிஸ்ஸஸ் கைலாசமய்யர், சற்று அவசரமாகவே எழுந்திருந்து இன்னொரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

ஆம்; அந்தப் புதிய மனிதரின் தோற்றம் யாரையும் அவசரமாக எழுந்திருக்கச் செய்வதாகத்தானிருந்தது. ரயில் அச்சமயம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க் கொண்டிராவிட்டால், கைலாசமய்யர் மூட்டை முடிச்சுகள், மனைவி, மக்களுடன் அந்த வண்டியிலிருந்தே கிழே குதித்திருப்பார்.

அந்த மனிதரின் கிராப்புத் தலை எண்ணெய் கண்டு ஒரு யுகம் ஆகியிருக்கும். அந்த மாதிரி ரோமங்கள் குத்திட்டு நின்றன. கண்கள் செக்கச் செவேலென்று சிவந்து திறுதிறுவென்று விழித்தன. மேல் கோட்டு நனைந்திருந்தது. உள் ஷர்ட் கிழிந்திருந்தது. இரண்டிலும் பொத்தானகள் கழன்று போயிருந்தன. மூக்குக் கண்ணாடி ஒரு காதில் மட்டும் மாட்டிக் கொண்டு தொங்கிற்று. இத்தனை அலங்கோலத்திலும் அந்த மனுஷருடைய வாய் மட்டும் வெற்றிலை பாக்குப் புகையிலையை விடாமல் அரைத்துக் கொண்டிருந்தது.

அந்த அவசரக்காரர் தம்முடைய நனைந்த கோட்டைக் கழற்றினார். கழற்றும் போது அதிலிருந்து சாமான்கள் பொலபொலவென்று விழுந்தன. அப்படி விழுந்த சாமான்களில் ஒரு பெரிய பேனா கத்தியும் கிடந்தது.

“அட சனியனே!” என்று அந்த மனிதர் கிழே குனிந்து அந்தச் சாமான்களைத் திரட்டி எடுத்தார். மணிப்பர்ஸ், பேனா முதலியவைகளைப் பெஞ்சில் வைத்து விடுக் கத்தியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார். கைலாசமய்யரைப் பார்த்துக் கேட்டார்.

“ஏன் ஸார்! இந்த மாதிரி சின்னப் பேனாக் கத்தியினாலேயே ஒரு மனுஷனைக் கொன்று விடலாம் என்று சொல்கிறார்களே? அது முடியுமா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்றார்.

கைலாசமய்யருக்கு அப்போது தாம் ஓர் ஆகாச விமானத்திலிருப்பது போலவும், அந்த விமானம் தலைகீழாகக் கீழே அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போலவும் தோன்றிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக, அவருடைய பத்தினி அந்தப் பிரமையைக் கலைத்தாள். “ஏன்னா? அடுத்த ரயில்வே ஸ்டேஷன் எப்போது வரும்?” என்றாள். அதற்குக் கைலாசமய்யர், “சற்று வாயை மூடிண்டு இருக்க மாட்டாயா?” என்று வள்ளென்று விழுந்தார். பிறகு எதிரில் உள்ள மனுஷரைப் பார்க்க இஷ்டமில்லாமல் தாம் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு முயற்சி செய்தாரே தவிர, படிக்க முடியவில்லை. பத்திரிகை இங்கிலீஷ் பத்திரிகைதான். ஆனால் அச்சமயம் அதிலிருந்த எழுத்துக்கள் கிரீக் பாஷையோ லாடின் பாஷையோ என்று தெரியாதபடி கைலாசமய்யர் கண்ணுக்கு ஒரே குழப்பமாயிருந்தன.

ஆனால், எதிரிலிருந்த மனுஷரின் கண்கள் மட்டும் வெகு துல்லியமாயிருந்தது போல் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தபடியே கைலாசமய்யர் கையிலிருந்த பத்திரிகையின் பின்புறத்தைப் படிக்கத் தொடங்கினார். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் “ஹா!” என்று சொல்லி பத்திரிகையைத் தாமும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு படித்தார். இலேசாகக் கைலாசமய்யர் கையிலிருந்து எடுத்துக் கொண்டு உற்றுப் பார்த்துப் படித்தார். “ஹா!ஹா!ஹா!” என்றார். கைலாசமய்யரால் வாயைத் திறந்து ஒரு ‘ஹா!’ கூட சொல்ல முடியவில்லை.

வந்த மனுஷர், “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியாது” என்று பளிச்சென்று கைலாசமய்யர் பதில் சொன்னார்.

“தெரியாதா? என் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்றார் அந்த மனிதர்.

“சத்தியமாய் இல்லை” என்று கைலாசமய்யர் அழுத்தமாய்க் கூறினார்.

“ரொம்ப வந்தனம். இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?” என்று வந்த மனிதர் பத்திரிகையில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார்.

கைலாசமய்யர் அந்த இடத்தைப் பார்த்தார். அது மரணச் செய்திகள் போடும் இடம். பின்வரும் செய்தி அங்கே காணப்பட்டது.

“ஒரு நிருபர் எழுதுகிறார்: பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளரும், ‘பிரகஸ்பதி சுப்பன்’ என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவருமான ஸ்ரீ பிரணதார்த்தி ஹரன் இன்று காலை மரணமடைந்த செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூரில் அவருடைய சொந்த ஜாகையில் திடீரென்று உயிர் போன காரணத்தினால் அவருடைய வருந்தத்தக்க மரணம் நேரிட்டது. அவருடைய அந்திம ஊர்வலத்துக்குக் கணக்கற்ற ஜனங்கள் – சுமார் ஒன்பது பேர் இருக்கலாம் – வந்து கௌரவித்ததிலிருந்து, இந்த எழுத்தாளர் தமிழ் வாசகர்களின் உள்ளத்தில் எவ்வளவு மகத்தான இடத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஊகிக்கலாம். அவருடைய அருமையான ஆத்மா சாந்தி அடைவதாக!”

கைலாசமய்யருக்குப் ‘பிரகஸ்பதிச் சுப்பன்’ என்று எங்கேயோ, எப்போதோ, கேட்டிருப்பதுபோல ஞாபகம் வந்தது. நல்ல வேளையாகப் பேசுவதற்கு வாகாய் ஒரு விஷயம் அகப்பட்டதென்று உற்சாகமடைந்தவராய், “அடடா! நம்ம பிரஹஸ்பதிச் சுப்பனா இறந்து போனார்? எனக்குத் தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் நான் கூட மழையைப் பார்க்காமல் அவருடைய ஊர்வலத்துக்குப் போயிருப்பேனே?” என்றார்.

அவசரக்காரர் இன்னும் சில தடவை ‘ஹா, ஹா’ காரம் செய்துவிட்டு, மேற்படி பத்திரிகைச் செய்தியை மீண்டும் சுட்டிக் காட்டி, “இது சாதாரணச் சாவு இல்லை ஸார்! சாதாரணச் சாவில்லை. இது கொலை!” என்றார்.

“என்ன?” என்று கைலாசமய்யர் கத்திய போது ரயிலையே தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது.

“ஆமாம்; நான் சொல்கிறதை நம்புங்கள், இது கொலை!”

கைலாசமய்யர் அப்போது தாம் பயப்படுவதாகக் காட்டிக் கொண்டால் காரியம் மிஞ்சிவிடும் என்பதை அறிந்தார். எனவே, தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “கொலையாவது, கொத்தவரங்காயாவது? உமக்கு எப்படி ஐயா தெரியும்?” என்று கேட்டார்.

“ஆகா! அப்படிக் கேளுங்கள்; கேட்டால்தானே சொல்லலாம்? இது கொலைதான். சாதாரண மரணமில்லை என்பதை நிரூபிக்கிறேன். ரொம்ப ரொம்ப ஆச்சரியமான கதை. தூங்காமல் மட்டும் கேட்க வேண்டும்” என்றார்.

அந்தச் சமயம் கைலாசமய்யர் குழந்தைகள் இருவரும் அவரிடம் வந்து “கதை சொல்லுங்கள் மாமா! நாங்கள் கேட்கிறோம்” என்றன. கைலாசமய்யர் கண் விழி பெயரும்படியாக அக்குழந்தைகளை உற்றுப் பார்த்தார். ஆனால் குழந்தைகள் அவரைப் பார்க்கவேயில்லை.

அவசரக்காரர் குழந்தைகளை விழித்துப் பார்த்து “பயங்கரமான கதை; நீங்கள் பயப்படுவீர்கள்!” என்றார்.

“நாங்கள் பயப்பட மாட்டோம், மாமா! எங்களுக்குப் பயமே கிடையாது. அப்பாதான் பயப்படுவா!” என்றான் போக்கிரி மணி.

“அடே என் கண்மணிகளா! அப்படியானால் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த மனிதர் கதையை ஆரம்பித்தார்.

“ஆயிரம், பதினாயிரம், லட்சம், முந்நூறு லட்சம் வருஷங்களுக்கு முன்னால் போங்கள். அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. உலகமெல்லாம் காடும், மலையும், தண்ணீருமாய் இருந்தன. பெரிய பெரிய மிருகங்கள், விநோதமான மிருகங்கள் அக்காடுகளில் ஊர்ந்து திரிந்தன. அந்த மிருகங்களுக்கு நீண்ட வாலும், குட்டைச் சிறகுகளும் உண்டு. அவை வாலினால் பறக்கும்; சிறகுகளினால் நடக்கும். இந்த மிருகங்களில் ஒன்றுக்கு ரொமாண்ட மல்லன் என்று பெயர். இன்னொன்றுக்கு பிரமாண்டமல்லன் என்று பெயர். ஒரு நாளைக்கு ரொமாண்டமல்லன், பிரம்மாண்டமல்லனைப் பார்த்து, ‘உன் வாலைக் காட்டிலும் என் வால் தான் நீளம்’ என்றது. ‘இல்லை உன் வால் தான் குட்டை!’ என்றது பிரம்மாண்டமல்லன். உடனே இரண்டுக்கும் பயங்கரமான போர் மூண்டது. வாலினால் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு, முந்நூறு வருஷம் அவை சண்டை போட்டன. போட்டும் ஜயம் தோல்வி ஏற்படவில்லை. அப்போது ரொமாண்டமல்லன், இனிமேல் என்னால் சாப்பிடாமல் சண்டை போட முடியாது; “இதோ பிராணனை விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பிராணனை விட்டது. பிரமாண்டமல்லன், “நானும் இதோ பிராணனை விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு பிராணனை விடப் பார்த்த போது, தன்னுடைய பிராணன் ஏற்கனவே போய்விட்டதென்பதைப் பார்த்து அதிசயித்தது. தெரிந்ததா, குழந்தைகளே! அப்புறம் இரண்டு லட்சம் வருஷத்தைத் தள்ளுங்கள்!”

“தள்ளிவிட்டோ ம்!” என்றான் போக்கிரி மணி.

“எங்களுக்குப் பயமாகவே இல்லை!” என்றாள் ஸரோஜா.

அவசரக்காரர் மேலும் சொன்ன கதை விசித்திரமாயும் பயங்கரமாயும் இருந்தது. அந்த இரண்டு பழங்கால மிருகங்களும் வெகு காலத்துக்குப் பிறகு ஒன்று கிஷ்கிந்தா புரியில் வானரமாகவும், இன்னொன்று இலங்கையில் ராட்சதனாகவும் பிறந்தனவாம். இராவண சம்ஹாரம் ஆகி, சீதையை இராமன் சேர்த்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் எல்லாரும் கிளம்பும் வரையில் மேற்படி வானரமும் ராட்சதனும் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். இதைப் பார்த்த அனுமார் இரண்டு பேரையும் பிடித்துத் தலைக்கு நாலு குட்டுக் குட்ட வானரமும் ராட்சதனும் அவமானப்பட்டு ஓடி, அனுமான் கொண்டு வந்திருந்த சஞ்சீவி மலையில் தடுக்கி விழுந்து செத்துப் போனார்களாம்.

அப்புறம் பல்லாயிரம் வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் மகாபாரதக் காலத்தில் பூமியிலே பிறந்தார்கள். குருக்ஷேத்திரத்தில் ஒருவன் பாண்டவர் சைன்னியத்தில் இருந்தான். இன்னொருவன் துரியோதனன் கட்சியில் இருந்தான். அவர்கள் அந்தப் பெரும் போரில் மாண்ட விதம் மகா விசித்திரமானது. தென்னாட்டிலிருந்து மதுரைப் பாண்டியன் சாப்பாடு கொண்டு வந்து குருக்ஷேத்திர யுத்த களத்தில் இரண்டு கட்சி வீரர்களுக்கும் சோறு போட்டானல்லவா? அந்தச் சாப்பாட்டைப் போட்டி போட்டுக் கொண்டு அளவுக்கு மீறிச் சாப்பிட்டு வயிறு வெடித்து அவர்கள் இறந்து போனார்களாம்!

பிறகு, அந்த மகாவீரர்கள் நாநூறு வருஷத்துக்கு முன்பு வீர இராஜபுத்திர நாட்டில் பிறந்தார்களாம். பிறந்து பேசத் தெரிந்ததும் முதல் காரியமாக அவர்கள் ஒருவரையொருவர் கொன்று விடுவதாகச் சபதம் செய்து கொண்டார்களாம்! சபதத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சீக்கிரத்திலே சமயம் கிடைத்தது. ஓர் இராஜபுத்திரப் பெண் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் ஒரு செய்தி சொல்லியனுப்பினாள். தன்னை ஒரு பாதுஷா பலாத்காரமாய் அபகரித்துச் சென்று அந்தப்புரத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்து அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாள். உடனே மேற்படி இரண்டு ராஜகுமாரர்களும் அந்த இராஜகுமாரியை யார் காப்பாற்றுவது என்று தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். அந்தச் சண்டையில் ஒருவன் தன்னுடைய தலை முண்டாசில் கத்தி பாய்ந்ததின் பலனாக இறந்து போனான். இன்னொருவன் மேற்படி இராஜகுமாரியைப் பாதுஷாவின் அந்தப் புரத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து, அன்றிரவே அவள் கொடுத்த விஷத்தைக் குடித்து விட்டு இறந்து போனான்.

இன்னும் மேற்கண்ட விதமாகப் பல ஜன்மங்களில் போராடிய பிறகு, அவர்கள் கடைசியாக இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அவதரித்தார்கள். இவர்கள் குழந்தைகளாயிருந்த போதே மசியைக் கொட்டி மெழுகுவதும், பேனாவை விழுங்குவதுமாயிருந்ததைப் பார்த்தவர்கள் எல்லாம், “வருங்காலத்தில் இவர்கள் சிறந்த எழுத்தாளர் ஆகி, உலகத்தையே ஒரு கலக்கு கலக்கப் போகிறார்கள்” என்று சொல்லி விட்டுக் கண்ணீர் விடுவதுண்டு! அவர்கள் பயந்தபடியே வாஸ்தவத்தில் நடந்தது.

‘பிரகஸ்பதி சுப்பன்’, ‘அதிர்வெடிக் குப்பன்’ என்னும் புனைப் பெயர்கள் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உலகப் பிரசித்தி அடைந்து வந்தன! இவர்கள் பத்திரிகை நடத்தாத போது புத்தகம் எழுதுவார்கள். புத்தகம் எழுதாதபோது பத்திரிகை நடத்துவார்கள்.

‘பிரகஸ்பதி சுப்பன்’ பத்திரிகை நடத்தும் போது ‘அதிர்வெடிக் குப்பன்’ எழுதிய புத்தகங்களையெல்லாம் எழுத்தெழுத்தாகப் பிய்த்து எறிந்து விடுவார். ‘அதிர்வெடிக் குப்பன்’ பத்திரிகை நடத்தும் சமயத்தில் ‘பிரகஸ்பதி சுப்ப’னின் புத்தகங்களையெல்லாம் கடித்துத் தின்று உமிழ்ந்து விடுவார். இவ்விதமாக அவர்களுடைய ஆங்காரம் முற்றிக் கொண்டே வந்தது. கடைசியாக நேற்றைய தினம் ‘பிரகஸ்பதி சுப்ப’னுக்கு ‘அதிர்வெடிக் குப்ப’னிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்து “ஜாக்கிரதை! நாளைய தினம் உன்னை நான் உன்னுடைய ஆயுதத்தினாலேயே கொல்லப் போகிறேன். ஓடித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் விடமாட்டேன்” என்று எழுதியிருந்தது.

அவசரக்கார மனிதர் மேற்படி கட்டத்திற்கு வருவதற்குள், அவர் கூறிய கதையின் பயங்கர சுவாரஸ்யத்தில் மதிமயங்கிக் கைலாசமய்யரின் குழந்தைகளும் மனைவியும் தூங்கிப் போய்விட்டார்கள். கைலாசமய்யர் மட்டும் தூங்காமல் அடங்காத ஆவலுடன் சொல்ல முடியாத பயத்துடனும் கதையைக் கேட்டு வந்தார்.

“அப்புறம் என்ன ஆச்சு? கடிதப்படி நடந்ததா!” என்று கேட்டார்.

“ஆமாம், நடந்தது. கடிதத்தைப் பெற்றவர் தப்பித்து ஓடிவிடலாமென்று பார்த்தார்; முடியவில்லை. கடைசியில், கடிதம் எழுதியவர் அவரைக் கொன்றே தீர்த்தார்.”

“ஐயோ, அப்படியானால்….?” என்று கைலாசமய்யர் பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக் காட்டினார்.

“ஆம்? ‘பிரகஸ்பதி சுப்பன்’ என்னும் பிரணதார்த்தி ஹரன் தான் கொல்லப்பட்டு இறந்தவர்.”

“ஆ!” என்றார் கைலாசமய்யர். அவருக்கு எல்லா விஷயமும் புரிந்து விட்டது. இந்த மனுஷன் தான் பிரணதார்த்தி ஹரனைக் கொன்று விட்டு வந்திருப்பவன். இவனுடைய அவசரத்துக்கும் படபடப்புக்கும் காரணம் அதுதான். இவனுடைய மூளை குழம்பிப் போய் ஏதேதோ பயங்கரமான கதை சொல்வதின் காரணமும் அதுதான்.

கைலாசமய்யருக்குத் திடீரென்று ஒரு அசட்டுத் தைரியம் பிறந்தது. இந்தக் கொலைகாரனைப் பிடித்து ஏன் போலீஸாரிடம் ஒப்புவிக்கக் கூடாது? – நல்லவேளை; செங்கற்பட்டு ஸ்டேஷன் இதோ வரப் போகிறது. வண்டி நின்றதும் போலீஸ்காரனைக் கூப்பிட வேண்டியதுதான். அது வரையில் இவனுடன் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டு வரவேண்டும்.

“இவ்வளவெல்லாம் சொல்கிறீரே! உமக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது?” என்று கைலாசமய்யர் கேட்டார்.

“எப்படித் தெரிந்ததா? ஹாஹாஹா எனக்குத் தெரியாமல் வேற யாருக்குத் தெரியும்? நான் தானே…!”

“நீர்தானே…?”

“நான் யார் என்று இன்னுமா தெரியவில்லை?”

“தெரியாமலென்ன? பேஷாத் தெரியும். நீதான் அதிர்வெடிக் குப்பன். நீதான் கொலைகாரன். உன்னை இதோ…”

“இல்லை ஐயா! இல்லை. நான் கொலைகாரன் இல்லை!” என்று அவன் கூறிக் கொண்டே மேற்படி பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக் காட்டினான். “இதோ போட்டிருக்கிறதே, ‘பிரகஸ்பதிச் சுப்பன்’ என்னும் பிரணதார்த்தி ஹரன் காலமானார் என்று – அந்த சாக்ஷாத் பிரணதார்த்தி ஹரன் நான் தான்!” என்றான்.

கைலாசமய்யரைத் தூக்கிப் போட்ட போட்டில் மேலே எழும்பிய மனுஷர் கீழே வருவதற்குள் வண்டி செங்கற்பட்டு ஸ்டேஷனில் வந்து நின்றது. வண்டி நின்றதும் நிற்காததுமாய்க் கதவைத் திறந்து கொண்டு, அந்த மனுஷன் பளிச்சென்று கீழே குதித்தான். அடுத்த கணத்தில் அவன் மாயமாய் மறைந்து போனான்.

கைலாசமய்யர் படக்கென்று கதவைச் சாத்தி இறுக்கித் தாழ்ப்பாள் போட்டார். அந்தச் சத்தத்தில் அவர் மனையாள் விழித்தெழுந்து, “என்ன? என்ன?” என்று கேட்டாள். “ஒன்றுமில்லை; பிரகஸ்பதி சுப்பன் என்ற பிரணதார்த்தி ஹரனின் பிசாசு!” என்றார் கைலாசமய்யர்.

மேற்கூறிய வரலாற்றையெல்லாம் சொல்லிவிட்டு கைலாசமய்யர், “ஏற்கனவே நான் பயந்த மனுஷன் என்று தான் உமக்குத் தெரியுமே? இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேட்க வேண்டுமா? அன்று முதல் எனக்கு இராத் தூக்கம் கிடையாது. கண்ணை மூடினால் ரயில் பிரயாணம் செய்வது போலும், பிசாசு வருவது போலும் கதை சொல்வது போலும் சொப்பணம், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்டார்.

“எதைப் பற்றி?” என்றேன்.

“பிரணதார்த்தி ஹரன் சாதாரண மரணமடைந்தாரா? கொலையுண்டு செத்தாரா?”

“நீர் அப்புறம் பத்திரிகை படிக்கவில்லையா, என்ன?”

“பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது. தொடவே இல்லை” என்றார் கைலாசமய்யர்.

“மறுநாள் பத்திரிகையிலேயே ‘பிரணதார்த்தி ஹரன் மரணமடையவில்லை; ஆகையால் பிரேத ஊர்வலமும் நடக்கவில்லை!’ என்று திருத்தம் வெளியாகியிருந்ததே!”

“அப்படியா? ஓ ஹோ ஹோ! நானல்லவா ஏமாந்து போயிருக்கிறேன்? – அப்படியானால் அன்று என்னைக் காபராப்படுத்திய மனுஷன் தான் யார்?”

“சாஷாத் பிரணதார்த்தி ஹரன் தான்!”

“அடே அப்பா! ஒரே புளுகாய்ப் புளுகினானே? எழுத்தாளி என்றாலே எல்லாரும் இப்படித்தான் புளுகுவார்களோ?”

“அவர் சொன்னதில் கொஞ்சம் நிஜமும் உண்டு. அவருடைய எதிரி அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்திக் கடிதம் எழுதியது உண்மை. அதை அவன் நிறைவேற்றியும் விட்டான்!”

“நிறைவேற்றி விட்டானா? அதெப்படி ஐயா! மூளை குழம்புகிறதே!”

“பிரணதார்த்தியின் ஆயுதத்தினாலேயே அவரைக் கொல்வதாக அவனுடைய எதிரி சொன்னானல்லவா? பிரணதார்த்தியின் ஆயுதம் என்ன? பேனா! அந்தப் பேனாவைக் கொண்டுதான் அவனைக் கொன்றான்!”

“கொன்றானா?”

“ஆமாம்; பிரணதார்த்தி ஹரன் காலமானதாகப் பத்திரிகைகளுக்கு எழுதி விட்டானல்லவா? இது பேனாவினால் கொன்றதுதானே?”

கைலாசமய்யருக்கு அவரையறியாமல் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. விழுந்து விழுந்து சிரித்தார். இடையிடையே ‘அதிர்வேட்டுச் சுப்பன் நல்ல அதிர்வெடி போட்டானையா?’ என்று சொல்லிக் கொண்டு சிரித்தார். “அந்தப் பிரகஸ்பதிக்கு நன்றாய் வேண்டும்! என்னை காபராப் படுத்தினானோ, இல்லையோ?” என்றும் இடையிடையே சொல்லிக் கொண்டார்.

கைலாசமய்யர் அவ்விதம் சிரித்த போது, அவர் தலைக்கு மேலே ஓர் அதிசயம் நடந்து கொண்டிருந்தது.

பயங்கரப் பிரயாண இரவில், ‘ஜாப்கே’ மசியைப் போல் கறுத்த அவருடைய தலைமயிரானது என் கண்ணெதிரே மளமளவென்று ‘ரோம வர்த்தினி’ தடவிய கூந்தலைப் போல வெளுத்து வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டது!

“கைலாசமய்யர்வாள்! இந்த வருஷம் நடந்தது உங்கள் மைத்துனன் தலை தீபாவளி அல்ல; உங்களுடைய தலை தீபாவளிதான்!” என்றேன்.

இத்துடன்

அமரர் கல்கியின் கைலாசமய்யர் காபரா

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Kailasamiyar Kaabaraa Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,kailasamiyar kaabaraa Audiboook,kailasamiyar kaabaraa,kailasamiyar kaabaraa Kalki,Kalki kailasamiyar kaabaraa,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *