BooksKalki TimesStory

Magudapathi Kalki Ch 21 to Ch 27

இருபத்தேழாம் அத்தியாயம்
ஓடைக்கரை

சிங்கமேட்டு ஓடைக்கரை இந்த வரலாற்றில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிக்கிறது. அந்த அழகான இடத்துக்கு இன்னொரு தடவை போகாமல் கதையை முடிப்பதற்கு மனம் வரவில்லை.

மாலை நாலு மணி இருக்கும். ஓடை ஜலம் நிர்மலமாயிருந்தது. ஆங்காங்கே கரையோரத்தில் உட்கார்ந்திருந்த வெண் கொக்குகள் நீரில் பிரதிபலித்தன. ஓடைக் கரையில் இருபுறமும் வளர்ந்திருந்த கல்யாண முருங்கை மரங்களில் இளந்தளிர்களும் சிவப்புப் பூக்களும் குலுங்கிக் கொண்டிருந்தன. மந்தமாகத் தவழ்ந்து வந்த குளிர்ந்த காற்றில் அவை இலேசாக ஆடின. மரக் கிளைகளில் உட்கார்ந்திருந்த குருவிகள், ஒன்றின் மூக்கை ஒன்று கொத்திக் கலகலவென்று சப்தித்தும், அவ்வப்போது ஜிவ்வென்று பறந்து போய்த் திரும்பி வந்து உட்கார்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தன.

குருவிகள் குரலுடன் போட்டியிடுவது போல் கலகலவென்று பெண்கள் சிரிக்கும் ஒலி கேட்டது. பங்களாவின் பக்கமிருந்து இரண்டு இளம் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். கைகோத்துக் கொண்டு நடந்த அவர்களுடைய முகத்தில் குதூகலம் தாண்டவமாடியது. அவர்கள் வேறு யாருமில்லை, செந்திருவும் பங்கஜமுந்தான்.

பங்கஜத்தின் குரல்தான் ஓங்கியிருந்தது. “எந்த மரமடி அது? அதோ தெரிகிறதே, அதுவா? நீ எப்படிப் படுத்துக் கொண்டிருந்தாய்? கண்ணை எவ்விதம் மூடிக் கொண்டிருந்தாய்? அவன் என்ன செய்தான்? என்றெல்லாம் நடந்தது போலவே காட்டவேண்டும். நீ என்ன பேசினாய்? அவன் என்ன பதில் சொன்னான் என்பதையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் சொல்ல வேண்டும்” என்று பங்கஜம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தாள்.

செந்திரு சிரித்துக் கொண்டே ஓடி, ஒரு மரத்தடிக்கு வந்ததும், “இந்த மரந்தானடி” என்றாள்.

“சரி; நான் தான் அந்தக் காந்திக் குல்லாக்காரன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்தாய்? அந்த மாதிரியே செய்து காட்டு!” என்றாள் பங்கஜம்.

செந்திரு தரையில் படுத்துக் கொண்டு கண்ணையும் மூடிக் கொண்டாள்.

அப்போது பங்கஜம், நாடகமேடைக் கதாநாயகனுடைய தோரணையில் செந்திருவின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து, “என் கண்ணே! கண்மணியே! தாமரை இதழையும், கருவண்டையும், மீனையும், வேலையும் ஒத்த உன் அழகான கண்களைத் திறந்து என்னைப் பாராயோ?” என்று சொல்லிக் கொண்டு சட்டென்று குனிந்து செந்திருவின் கன்னத்தில் முத்தமிட்டாள். குபீரென்று சிரித்துக் கொண்டு செந்திரு எழுந்து உட்கார்ந்தாள்.

பங்கஜம் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அடியே! நிஜமாகச் சொல்! இப்படித்தானே அவன் உண்மையில் செய்தான்? நீ என்னிடம் சொன்னதெல்லாம் பொய் தானே?” என்றாள்.

பதினாறு, பதினேழு வயதுப் பெண்கள் இரண்டு பேர் சேர்ந்தால் அவர்களுடைய பேச்சு, கொஞ்சம் அசட்டுப் பிசட்டு என்றும், தத்துப் பித்து என்றும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? எனவே, இவர்களும் அம்மாதிரி பேசுவதற்குப் பதினைந்து நிமிஷம் கொடுத்து விடுவோம். ஓடைக்கரையை ஒரு சுற்றுச் சுற்றுவிட்டு வருவோம்.

பதினைந்து நிமிஷம் கழித்து நாம் திரும்பி வந்து பார்க்கும் போது காட்சி ஒருவாறு மாறியிருப்பதைக் காண்கிறோம். அதே இரண்டு பெண்கள் அதே மரத்தடியில்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவர் முகத்திலும் குதூகலத்துக்குப் பதிலாகச் சோகக் குறி காணப்படுகிறது.

செந்திருவின் கண்களில் ஜலம் ததும்பிக் கொண்டிருக்கிறது. “மறுபடியும் இந்த ஓடைக் கரையில் இவ்வளவு சந்தோஷமாக ஒருநாள் உட்கார்ந்திருப்போம் என்று நான் சொப்பனத்திலும் எண்ணவில்லை, பங்கஜம்!” என்றாள் செந்திரு.

“போனதைப் பற்றி இனிமேல் என்ன? கடவுள் அருளால் எல்லாந்தான் சந்தோஷமாக முடிந்து விட்டதே!” என்றால் பங்கஜம்.

“கடவுள் அருள்தான்; சந்தேகம் என்ன? ஒரு தடவையா? இரண்டு தடவையா? கடைசியில் தான் பாரேன்! பெரியண்ணக் கவுண்டன் இன்னும் ஐந்து நிமிஷம் கழித்து வந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? ஐயோ! நினைப்பதற்கே பயமாயிருக்கிறது” என்று செந்திரு கூறியபோது, அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

“என்ன ஆ கியிருக்கும், சொந்தப் பிள்ளையைத் தகப்பன் சுட்டுக் கொன்றிருப்பான்! எனக்கு என்ன அதிசயம் என்றால், அப்பேர்ப்பட்ட தகப்பனிடத்தில் திடீரென்று பிள்ளைக்கு இவ்வளவு வாஞ்சையும், பக்தியும் எப்படி உண்டாயிற்று என்பதுதான். உலக இயற்கைக்கே மாறாய்த் தோன்றுகிறது எனக்கு. “

“கடவுள்தான் அவரைத் தண்டித்து விட்டாரே, பங்கஜம்! இனிமேல் சாகிற வரையில் அவர் படுத்த படுக்கையாய்த் தான் கிடக்க வேண்டுமாம். கை கால் சுவாதீனமே இராதாம். படுக்கையில் எழுந்து உட்கார வேண்டுமானால் இரண்டு பேர் பிடித்துத் தூக்கிவிட வேண்டுமாம். இப்படியாகி விட்ட தகப்பனாரிடம் எந்தப் பிள்ளைக்குத்தான் கோபம் இருக்க முடியும்? அவரையாவது என்னையாவது பார்த்துவிட்டால் போதும், கவுண்டருடையை கண்களில் ஜலம் பெருகிவிடுகிறது. ஏதோ பேசுவதற்கு முயற்சிக்கிறார். வாய் குழறுகிறது. உடனே அழுது விடுகிறார். எனக்கே எல்லாம் மறந்து போய் அவரிடம் பரிதாபமாயிருக்கிறது. பெற்ற பிள்ளைக்கு எப்படி இருக்கும்?”

“ஆமாமடி! நீ கோயமுத்தூருக்கு ஓடி வந்த கதையை அப்புறம் சொல்வேனென்றாயே; சொல்லவே யில்லை, பார்த்தாயா? இப்போது சொல்லிவிடு. நாளைக்குக் கல்யாணம் ஆ கிவிட்டால் அப்புறம் உன்னோடு பேசுவதற்கு சமயம் கிடைக்குமா? என்னைத் திரும்பித்தான் பார்ப்பாயா?”

“நாங்கள் ஒன்றும் அப்படிப்பட்டவர்கள் அல்ல”

“நாங்களா? அதற்குள்ளே பாத்யதை கொண்டாடுவதைப் பார்த்தாயா?

“பரிகாசம் இருக்கட்டுமடி! கல்யாணம் ஆ கிக் கையில் கங்கணத்துடன் அவர் சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போகப் போகிறார்; ஆறு மாதமோ ஒரு வருஷமோ, எப்போது திரும்பி வருவாரோ, தெரியாது. “

“கல்யாணம் ஆ கியும் பிரம்மச்சாரி, கடன் வாங்கியும் பட்டினி என்கிற கதைதான் அப்படி அவர் போகும் பக்ஷத்தில், நீ எங்களுடன் இருந்திரு, செந்திரு!”

“அது முடியாதே, அம்மா! அவர் ஜெயிலுக்குப் போனால் நானும் கூட வருவேன் என்று சொன்னேன். ‘கூடாது; நீதான் என் தகப்பனாரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார். அப்படியே பார்த்துக் கொள்வதாக வாக்களித்து விட்டேன். “

“ஆஹா! தகப்பனாரிடம் தான் என்ன பக்தி! பிள்ளையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!… “

“பல நாள் கழித்துக் கிடைத்த அப்பா அல்லவா பங்கஜம்? மேலும் இவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பாரதியார் பாடியிருப்பதன் கருத்து இப்போதுதான் இவருக்கு விளங்குகிறதாம். மஹாத்மா காந்தி போதிக்கும் அஹிம்சா தர்மத்தின் மேன்மையும் இப்போதுதான் நன்றாய்த் தெரிகிறதாம்… “

“அஹிம்ஸையாவது, தர்மமாவது! நல்ல பைத்தியத்தை நீ கட்டிக் கொள்ளப் போகிறாயடி! நீ மட்டும் என்ன இலேசா? ஏண்டி சுட்டி! ரொம்ப நன்றாய் பைத்தியம் வேஷம் போட்டாயாமே! அதோடேயா? யாரோ ஒரு சாமியார் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டாயாமே?” என்று பங்கஜம் சொல்லி வரும்போது, செந்திருவின் கண்களிலே ஜலம் ததும்பிற்று.

“அசடே! இதென்ன? எல்லாம் முடிந்த பிறகு இப்போதென்ன கண்ணீர்?” என்றாள் பங்கஜம்.

“உனக்கு வேடிக்கையாக இருக்கிறதடி அம்மா! ஐயோ! அந்த மலை பங்களாவில் நான் பட்ட கஷ்டத்தை நினைத்தால்… “

“போடி போ! ஜாலக்காரி! நீ பட்ட கஷ்டங்களைப் போல் நூறு மடங்கு கஷ்டங்களை நான் அனுபவிக்கத் தயார் தெரியுமா?… ” என்று பங்கஜம் கூறி, செந்திருவின் காதண்டை வாயை வைத்து, மெதுவாக, “உனக்குக் கிடைத்தது போல், ஒரு காதலன் எனக்குக் கிடைப்பதாய் இருந்தால்!” என்றாள்.

செந்திருவின் முகம் மலர்ந்தது. அவள் பங்கஜத்தின் கன்னத்தைக் கிள்ளினாள்.

அச்சமயத்தில் ஏதோ சத்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். சற்று தூரத்தில் மகுடபதி ஓடையில் இறங்கித் தண்ணீரில் கையால் சலசலவென்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தான்.

உடனே, பங்கஜம், “கிள்ளாதேடி! இதோ நான் போகிறேன்! இதோ நான் போகிறேன்! ‘அவர் வந்து விட்டார், நீ போய்த் தொலை’ என்று மரியாதையாய்ச் சொல்லுவதுதானே?” என்று எழுந்திருந்து போகத் தொடங்கினாள். வழியில் ஓடை அருகில் நின்று மகுடபதியைப் பார்த்து, “ஓய் தவசுப்பிள்ளை! முன்மாதிரியெல்லம் இனிமேல் ஏய்க்கமுடியாதே. நன்றாய்ச் சமையல் செய்ய வேணும். இல்லாவிட்டால் செந்திரு உம்மை லேசில் விடமாட்டாள்” என்றாள்.

மகுடபதி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“அதோ பார்த்தீரா? அங்கே ஒரு பைத்தியம் இருக்கிறதே ஜாக்கிரதை! ஒரே கூச்சல் போடும். அப்புறம் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டாலும் போடும்! கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு வாயை இறுக்கி மூடிவிடும்!” என்று சொல்லிவிட்டு விரைவாக பங்களாவை நோக்கிச் சென்றாள்.

அவள் மரங்களின் பின்னால் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மகுடபதி செந்திரு இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

செந்திரு அவன் வருவதைக் கடைக் கண்ணால் பார்த்தாள். உடனே சட்டென்று, முன்னைப் போல் தரையில் படுத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள். அவளுடைய இதழ்களில் வெட்கத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது; அவளுடைய அழகிய கன்னங்களில் குழி விழுந்தது.

அந்த மரத்தின் மேலே இரண்டு தூக்கணாங் குருவிகள் உட்கார்ந்திருந்தன. அவை தலையைச் சாய்த்துச் சிறிது நேரம் கீழே உற்றுப் பார்த்தன. பிறகு ஒன்றையொன்று பார்த்து பறவைகளின் பாஷையில் கலகலவென்று சிரித்தன.

இத்துடன்

அமரர் கல்கியின் மகுடபதி

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Magudapathi Kalki Tags

magudapathi,magudapathi novel, magudapthi free book,magudapathi pdf,magudapathi read online,magudapathi free download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *