BooksKalki TimesStory

Magudapathi Kalki Ch 21 to Ch 27

இருபத்தாறாம் அத்தியாயம்
காணாமற் போன குழந்தை

“என் அருமைத் தோழி பங்கஜத்துக்கு உன் அன்பும் ஆறுதலும் நிறைந்த கடிதம் கிடைத்தது. ஆமாம்; என் வாழ்க்கையில் மகா அதிசயமான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. நீ கற்பனை செய்து எழுதிய எந்த நாவலிலும் இம்மாதிரி அற்புத சம்பவங்கள் நடந்திருக்க முடியாது. கடிதத்தில் விரிவாக எழுதுவதற்கில்லை. நேரில் பார்க்கும் போது எல்லாம் சொல்லுகிறேன். என்னுடைய காதலருக்கு நீ அன்றிரவு செய்த ஒத்தாசையைப் பற்றிச் சொன்னார். ரொம்ப ரொம்ப ரொம்ப வந்தனம். மற்றவை நேரில்.

இப்படிக்கு செந்திரு”

மேற்படிக் கடிதத்தைப் பங்கஜம் கையில் வைத்துக் கொண்டு அதைத் திரும்பத் திரும்ப படிப்பதும், எழுந்து அறைக்குள் நடமாடுவதும், ஜ ன்னல் வழியாய் எட்டிப் பார்ப்பதுமாயிருந்தாள். “இன்னும் அப்பா வரக் காணோமே?” என்று அதிருப்தியுடன் முணுமுணுத்துக் கொண்டாள்.

கடைசியில், வாசலில் வண்டி வந்து நின்றது. அய்யாசாமி முதலியார் வண்டியிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். பங்கஜம் ஓடி அவரை வரவேற்றுக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து ஈஸிசேரில் உட்கார வைத்தாள்.

“சொல்லுங்கள்; உடனே சொல்லுங்கள். ஒன்று விடாமல் சொல்ல வேணும்!” என்றாள்.

“மூச்சு விடுவதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடேன்!” என்றார் முதலியார்.

“அதெல்லாம் முடியாது. உடனே சொல்ல வேணும். என்ன ஆச்சரியம் அப்பா! மகுடபதி கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய சொந்தப் பிள்ளையாமே? நிஜந்தானா?” என்று பங்கஜம் துடித்தாள்.

“நிஜந்தான் அம்மா, நிஜந்தான். இன்னும் எவ்வளவோ அதிசயம். கேட்டாயானால், நீ கதை எழுதுவதையே விட்டு விடுவாய்?” என்றார்.

பிறகு முதலியார் நீட்டி முழக்கி வளர்த்திக் கூறிய வரலாற்றின் சாராம்சம் பின்வருமாறு:

மகுடபதியின் தாயார் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய இரண்டாவது மனைவி. மகுடபதிக்கு நாலு வயதாயிருந்த போது அவள் அடுத்த பிரசவத்துக்காகச் சேவல் பாளையத்திலிருந்த தன் தாயார் வீட்டுக்குப் போனாள். மகுடபதியையும் பின்னோடு அழைத்துப் போயிருந்தாள். கவுண்டருடைய மற்ற மனைவிமாருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. ஆ கையால் அவர்களுக்கெல்லாம் மகுடபதியின் தாயிடம் ரொம்பவும் வயிற்றெரிச்சல். இரண்டாவது, கர்ப்பத்தின் போது அவர்கள் சாப்பாட்டில் விஷ பதார்த்தம் கலந்து தனக்குக் கொடுத்து விட்டதாக அவள் சந்தேகங் கொண்டிருந்தாள். அதற்குத் தகுந்தாற்போல், இரண்டாவது குழந்தை செத்துப் பிறந்தது. தானும் பிழைப்பது துர்லபம் என்று அவளுக்குத் தெரிந்து போகவே, அவளிடம் அந்தரங்க விசுவாசம் வைத்திருந்த பெரியண்ணனைக் கூப்பிட்டு, “மாமா! இந்தக் குழந்தையை நீதான் காப்பாற்ற வேண்டும். கள்ளிப்பட்டியிலிருந்தால் கட்டாயம் என் சக்களத்திமார்கள் கொன்று விடுவார்கள். எங்கேயாவது கண்காணாத சீமைக்குக் கொண்டு போய் விடு. வயதான பிறகு அழைத்துக் கொண்டு வந்து இவனுடைய அப்பனிடம் ஒப்புவி. அடையாளத்துக்கு இதைக் காட்டு!” என்று சொல்லி, குழந்தையின் இடது காதுக்குப் பின்னால் முக்கோணம் போல் இருந்த மூன்று மச்சங்களையும் காட்டினாள். தான் ரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் தன் நகைகளையும் கூடப் பெரியண்ணனிடம் கொடுத்து, தான் சொன்னபடி செய்வதாக அவனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் அவளுடைய பிறந்த வீட்டில் கூட யாருக்குமே தெரியாது.

பெரியண்ணன் அன்றிரவே குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். ரயிலில் ஏறினால் தெரிந்து போய்விடுமென்று கால்நடையாகவே சில நாள் பிரயாணம் செய்து கொண்டு போனான். குழந்தைக்குப் பெரியண்ணனிடம் ஆசை உண்டு என்றாலும், தாயார், பாட்டி முதலியவர்களைப் பிரிந்ததனாலும் ஊர் ஊராய்ப் போனதனாலும் ரொம்பவும் அழுது தவித்துக் கொண்டிருந்தது. பெரியண்ணன் பழனிக்குப் போனபோது, அங்கே கிருத்திகை உற்சவம் பலமாக நடந்து கொண்டிருந்தது. ஏகக் கூட்டம். பெரியண்ணன் எவ்வளவோ நல்லவன் தான்; ஆனால் மதுபானப் பழக்கமுள்ளவன். ஒரு கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் குழந்தையை விட்டு விட்டுக் கடைக்குள் போனான். திரும்பி வந்து பார்த்தால் குழந்தையைக் காணோம். அலறிப் புடைத்துக் கொண்டு அந்த உற்சவக் கூட்டத்தில் தேடுதேடென்று தேடினான். பிரயோசனப்படவில்லை. உற்சவம் முடிந்த பிறகும் ஒரு மாதம் வரையில் பழனியில் தங்கித் தெருத் தெருவாய்ப் பைத்தியக்காரன்போல் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். பிரயோசனப்படவில்லை. ஊருக்குத் திரும்பிப் போகவும் மனம் வரவில்லை. ஆ கவே, கண்டிக்குப் போய்விட்டான். பலவருஷங் கழித்துத் திரும்பி வந்து கோயமுத்தூர் ஜில்லாவிலேயே பெரிய குடிகாரன் பெயர் வாங்கினான். இப்படிப்பட்ட சமயத்திலேதான் அவன் காங்கிரஸ் தொண்டு செய்து வந்த மகுடபதியைச் சந்தித்தான். முதலில் பரம விரோதியாயிருந்து, கேஸில் தனக்குச் சாதகமாகப் பேசி விடுதலை செய்த பிறகு, அவனுக்கு ரொம்ப வேண்டியவனாகி, மதுவிலக்குப் பிரச்சாரமும் செய்துவந்தான். மகுடபதி ஒரு நாள் தனக்குத் தாய் தகப்பன் இல்லையென்றும், தன்னுடைய வளர்ப்புப் பெற்றோர்கள் பழனி உற்சவக் கூட்டத்தில் தன்னைக் கண்டெடுத்தார்கள் என்றும் சொன்னபோது, பெரியண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மகுடபதி நன்றாய்த் தூங்கும் சமயத்தில் அவனுடைய இடது காதை மடித்துப் பார்த்து அடையாளமிருப்பதைத் தெரிந்து கொண்டான். அதைத் தக்க சமயத்தில் வெளியிட வேண்டுமென்று காத்திருந்தான்.

கூனூர் மடத்திலிருந்து மகுடபதி கிளம்பியபோது, பெரியண்ணனுக்கு மனது சமாதானம் ஏற்படவில்லை. கொஞ்ச தூரம் பின்னாலேயே அவனைத் தொடர்ந்து போனான். தக்க சமயத்தில் பங்களாவுக்குள் தோட்டக்காரனை மீறிக் கொண்டு நுழைந்து, உண்மையை வெளியிட்டு மகுடபதியின் உயிரைக் காப்பாற்றியதுடன், கள்ளிப்பட்டிக் கவுண்டரையும் புத்திர ஹத்தி பாவத்திலிருந்து காப்பாற்றினான்.

எல்லாம் கேட்ட பிறகு, “சரி அப்பா! இப்போது எப்படி இருக்கிறார்கள் எல்லோரும், சந்தோஷமாயிருக்கிறார்களா?” என்று பங்கஜம் கேட்டாள்.

“சந்தோஷத்துக்கு என்ன குறைவு? கார்க்கோடக் கவுண்டர் மட்டுந்தான் படுத்த படுக்கையாகிவிட்டார். ஏற்கெனவே, அவருக்குக் கொஞ்சம் பட்ச வாத ரோகம் உண்டாம். இந்த அதிர்ச்சியினால் அது முற்றிவிட்டது. கைகால்கள் கூட அசைக்க முடியாமல் கிடக்கிறார். ஆனாலும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டார். சொத்தையெல்லாம் மகுடபதிக்கே ‘உயில்’ எழுதி வைத்திருக்கிறார். பையன் இருக்கிறானே, உத்தமமான குணம், உயர்ந்த நோக்கம். பூர்வீகமான சொத்தை மட்டும் தான் வைத்துக்கொண்டு, கள்ளுக்கடையில் வந்த பணத்தை யெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்து விடுகிறானாம். கூனூர் சச்சிதானந்த மடத்துக்கு நல்ல வேட்டை. நமது சைவ சித்தாந்தக் கழகத்துக்குக் கூட நன்கொடை கேட்டிருக்கிறேன். இருக்கட்டும். பங்கஜம்! அந்தப் பையன் நம்ம வீட்டில் வந்து ஒருநாள் சமையல் பண்ணினானாம். நீதான் அவனுக்குப் பணங் கொடுத்துக் கூனூருக்கு அனுப்பினாயாமே?” என்றார்.

“ஆமாம் அப்பா!”

“பலே கைகாரி நீ! உன் தோழிக்கு உன்னை உடனே பார்க்க வேணுமாம். இன்னும் எத்தனையோ அந்தரங்கம் உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கிறதாம். நாளைக்கே புறப்பட்டு வரச் சொல்லியிருக்கிறாள். “

“நாளைக்கா அப்பா! இன்றைக்கே புறப்படக் கூடாதா?” என்றாள் பங்கஜம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *