BooksKalki TimesStory

Magudapathi Kalki Ch 12 to Ch 20

இருபதாம் அத்தியாயம்
கல் விழுந்தது!

இத்தனை காலமும் நமது கதாநாயகி செந்திருவை அந்தரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன். அவளைப் பற்றி ஒன்றும் சொல்லாததனால் வாசகர்கள் பலர் பெரிதும் கவலை யடைந்திருப்பார்கள். என்மேல் கூட கோபங்கூட அவர்களுக்கு வந்திருக்கும். செந்திரு மகுடபதியின் உள்ளத்தை மட்டுந்தானா கவர்ந்தாள்? ஆயிரக்கணக்கான நேயர்களின் அன்பையும் அனுதாபத்தையும் அல்லவா, கவர்ந்திருக்கிறாள்?

ஆனாலும் இந்தக் கதையில் தயவு செய்து இது கதை தான் என்பதை மறந்துவிட வேண்டாம் பல சம்பவங்கள் ஏக காலத்தில் வெவ்வேறு இடங்களில் நடப்பதால், ஒவ்வொன்றாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் சொல்லும்போது, பாவம், அந்த அனாதைப் பெண்ணின் துயரத்தைக் கடைசியில் வைத்துக் கொள்ளலாமே என்று தள்ளிப் போடத் தோன்றுகிறது.

கவுண்டர்கள் இருவரும் செந்திருவைத் தேவகிரி எஸ்டேட் பங்களாவில் கொண்டு வந்து விட்டுப் போனதையும், செந்திரு தன்னை அடைந்திருந்த அறையின் கதவைப் படீர் படீர் என்று அடித்ததையும் பதினோராம் அத்தியாயத்தில் பார்த்தோம். கதவை அடிப்பதனால் கை நோவதைத் தவிர வேறு பயனில்லையென்று அவள் கண்ட போது, திரும்பிச் சென்று அந்த அறையில் கிடந்த கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி அழுதாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக்கி வெகுநேரம் அழுது கொண்டே யிருந்தாள். அழுகையின் போது எப்படியோ வெறி சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டு வந்தது. மனதில் ஒருவித அமைதி உண்டாயிற்று. அப்படியே நித்திரையில் ஆழ்ந்தாள்.

“அம்மா! அம்மா!” என்ற மிருதுவான குரலைக் கேட்டுச் செந்திரு கண் விழித்தபோது பத்து மணிக்கு மேலிருக்கும். அவளை எழுப்பியவள் பங்களாவின் வேலைக்காரி பவளாயி. அறிவு தெளிந்தபோது, செந்திரு தான் ரொம்பவும் பலவீனமாயிருப்பதை உணர்ந்தாள். முதல் நாள் இரவு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த பயங்கரச் சம்பவங்களினாலும், அவற்றினால் உள்ளத்தில் ஏற்பட்ட பீதி, கோபம், துன்பம் முதலிய கிளர்ச்சிகளினாலும், போதிய உணவும் உறக்கமும் இல்லாதபடியாலும், அவள் தேகம் மிகவும் சோர்வு அடைந்திருந்தது; உள்ளமும் களைபடைந்திருந்தது. அவளுடைய திக்கற்ற நிலைமையை உள்ளபடி உணர்ந்து துக்கப்படுவதற்கு வேண்டிய சக்திகூட அவளுக்கு அச்சமயம் இல்லாமலிருந்தது. அவளுடைய தேகமும் மனமும் அவ்வளவு பலவீனப்பட்டிருததன் காரணமாக, அச்சமயம் யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடிய நிலைமையில் அவள் இருந்தாள். வேலைக்காரி சொன்னபடி எழுந்திருந்து பல் துலக்கி முகம் கழுவினாள். அவள் கொண்டு வந்திருந்த ஆப்பத்தையும் காப்பியையும் சாப்பிட்டாள்.

பவளாயி பாத்திரங்களை எடுத்துப் போன பிறகு அறையின் கதவு திறந்திருப்பதைச் செந்திரு கவனித்தாள். மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். ஒருவரும் அவளைத் தடை செய்யவில்லை. ஹாலைக் கடந்து பங்களாவின் வாசற்புறம் வந்து பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள். சிறிது சிறிதாக அவளுடைய உடம்பில் ஜீவசக்தி உண்டாகி வந்தது. உள்ளமும் வேலை செய்ய ஆரம்பித்தது. ஒரு புறத்தில் அவள் கண்முன் தோன்றிய அழகிய அற்புதமான இயற்கைக் காட்சி அவளை வசீகரித்தது. “ஆ கா! என்ன அழகான இடம்!” என்று மனம் வியந்தது. மற்றொரு புறத்தில், அந்த அழகான இடத்தில் தான் சிறைப்பட்டிருப்பதும் அங்கிருந்து ஒரு வேளை கார்க்கோடக் கவுண்டரின் மனைவியாகத்தான் வெளியே போகக் கூடுமென்பதும் நினைவு வந்தன. அப்போது அவளுடைய நெஞ்சை யாரோ முறித்துப் பிழிவது போல் இருந்தது.

பங்களாவின் முன் வாசல் தோட்டத்தில் வந்து அங்கு மிங்கும் உலாவினாள். அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஒரு வழியுண்டா என்னும் எண்ணம் அவள் மனதில் அடிக்கடி உதயமாயிற்று. சுற்றுமுற்றும் பார்க்கப் பார்க்க, அது எவ்வளவு அசாத்தியமான காரியம் என்பதுதான் நிச்சயமாய்த் தெரிந்தது. பங்களாவுக்கும் தோட்டத்துக்கும் இடது புறத்தில் சரிவாக மலை உயர்ந்திருந்தது. அந்தச் சரிவில் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யுகலிப்டஸ் மரங்கள் வானளாவி உயர்ந்திருந்தன. பங்களாவுக்குப் பின் பக்கத்தில் மலை, சுவரைப் போல் உயர்ந்திருந்தது. வலது புறத்தில் திடீரென்று செங்குத்தான பள்ளமாயிருந்தது. அதன் ஓரத்தில் இரும்பு வேலை எடுத்திருந்தது. வேலி வழியாக எட்டிப் பார்த்தால் சுமார் நாலு ஆள் உயரத்துக்குக் கீழே ஒரு பாதை போவது தெரிந்தது. அப்பாதை வளைந்து வளைந்து குறுக்கும் நெடுக்குமாய்ச் சென்று, வெகு தூரத்துக்கப்பால் தெரிந்த பெரிய மலைச் சாலையை அடைந்தது.

பங்களாவுக்கு எதிரே பலமான இரும்புக் கேட் போட்டிருந்தது. அதன் வழியாகத்தான் அந்தப் பங்களாவிலிருந்து வெளியே போகலாம். அப்படிப் போகும் பாதைதான் சிறிது தூரத்தில் மடங்கி, பங்களாவின் வலது புறமாகக் கீழே இறங்கிப் போயிற்று.

செந்திருவுக்கு நீலகிரி புதியதில்லை. ஏற்கெனவே அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் கூனூரில் அவள் கோடை வாசம் செய்ததுண்டு. ஆ கவே சுற்று முற்றும் பார்த்த பின்னர், இந்தப் பங்களாச் சிறையிலிருந்து பிறருடைய ஒத்தாசையில்லாமல் தப்பிச் செல்வது இயலாத காரியம் என்பதைத் தெரிந்து கொண்டாள். ஆனால் அத்தகைய ஒத்தாசை தனக்கு எப்படிக் கிடைக்கும்? இந்தத் தனிமையான மலை உச்சிக்குத் தன்னைத் தேடிக் கொண்டு யார் வரப்போகிறார்கள்? தன் பேரில் உண்மையாகப் பிரியம் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கார்க்கோடக் கவுண்டரின் கத்திக்கு இரையானார். இன்னொருவர் மேல் பாவிகள் கொலைக் குற்றம் சுமத்தப் போகிறார்கள்! ஆ கவே தான் விடுதலையாகிச் சென்று அவரைக் காப்பாற்றினால் தான் உண்டு. அவர் வந்து தன்னைக் காப்பாற்றப் போவதில்லை. பின் யார் தனக்கு ஒத்தாசை செய்யப் போகிறார்கள்? ஐயோ! மூன்று வருஷம் சித்தப்பாவின் வீட்டில் சிறை இருந்த பிறகு தப்பித்துச் செல்ல முயன்றதன் பலன் இதுதானா? அதைவிடக் கடுமையான மலைச் சிறைக்கு அல்லவா வந்து சேர்ந்து விட்டோ ம்? என்று எண்ணிச் செந்திரு விம்மினாள். இதிலிருந்து தப்புவதற்கு வழியே கிடையாதா? தன்னிடம் அன்புடன் பேசிய வேலைக்காரி பவளாயியின் ஞாபகம் வந்ததும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்று பழமொழி ஆயிற்றே? ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் இரங்கமாட்டாளா?

இந்த எண்ணத்துடன் செந்திரு வேலைக்காரியுடன் சிநேகம் செய்து கொள்ளத் தொடங்கினாள். பவளாயியும் செந்திருவிடம் அன்பும், அனுதாபமுமாய்ப் பேசினாள். செந்திரு தன்னுடைய மனத்தைத் திறந்த போது, பவளாயி அவளுக்காகக் கசிந்துருகுவதாய்க் காட்டிக் கொண்டாள். “ஆனால், நான் என்ன செய்வேன், தாயே! இந்தப் பங்களாவை விட்டு அந்தண்டை இந்தண்டை நான் போகக்கூடாது. உனக்கு மட்டுமா, எனக்குங்கூட இது ஜெயில் தான். என் புருஷனோ ரொம்ப முரடு, ஏதாவது சந்தேகம் தட்டினால் என்னைக் கத்தியால் குத்தி விடுவான்!” என்றாள்.

பவளாயி தன் புருஷனைப் பற்றிச் சொன்னது என்னமோ ரொம்ப சரிதான். இவனுடைய முகத்தைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. செந்திருவிடம் அவன் ஒரு வார்த்தை பேசவுமில்லை; செந்திரு பேசினால் அவன் காது கொடுத்துக் கேட்பானென்றும் தோன்றவில்லை. அவன் பாட்டுக்கு அவன் காரியத்தைச் செய்து கொண்டிருந்தான். பங்களாவுக்கு உள்ளே இருக்கும்போது அவன் தோட்டத்தின் இரும்பு கேட்டைப் பூட்டிச் சாவியைப் பத்திரமாய் மடியில் வைத்திருந்தான். வெளியே போகும்போதும் கேட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போனான்.

மூன்று தினங்கள் கழித்து ஒருநாள் இரண்டு கவுண்டர்களும் வந்தார்கள். செந்திரு அவர்களுடைய காலில் விழுந்து தன்னுடைய சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு, தன்னை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாள். இதனால் அவர்களுடைய கோபந்தான் அதிகமாயிற்று. கல்யாணத் தேதி குறிப்பிட்டாகி விட்டதென்றும், அவள் நல்லபடியாய்ச் சம்மதிக்காவிட்டால் பலவந்தமாகக் கல்யாணம் நடத்தப்படுமென்றும் தெரியப்படுத்தினார்கள். அதோடு, அடுத்த தடவை தாங்கள் வரும்போது அவளே இஷ்டப்பட்டுக் கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டுமென்றும் கூறிவிட்டுப் போனார்கள்.

செந்திருவுக்குப் பிராணனை விட்டு விடலாமா என்ற எண்ணம் அடிக்கடி உதித்தது. ஆனால் மகுடபதியின் மீது கொலைக் குற்றம் சாத்தியிருக்கிறார்கள் என்பது நினைவு வந்த போது, அவள் சாக விரும்பவில்லை. தனக்காக இந்தப் பெரிய கஷ்டத்துக்குள்ளானவரை, எப்படியாவது காப்பாற்ற வேண்டும்; அதற்காக தான் உயிரோடிருக்க வேண்டியது அவசியம். ஆனால், கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்வது கனவிலும் நினைக்க முடியாத காரியம். கல்யாணத்தை எப்படித் தடை செய்வது? இம்மாதிரி யோசித்து யோசித்துக் கடைசியில் பங்கஜம் ஊகித்த வண்ணமே தனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்தாள். வேலைக்காரப் பவளாயியிடம் இதைச் சொல்லி, தனக்கு உண்மையில் பைத்தியந்தான் என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்வதற்கு உதவி புரிய வேண்டுமென்றும், அவளுடைய புருஷன் குப்பண்ணக் கவுண்டனிடம் கூட ரகசியத்தைச் சொல்லக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டாள். பவளாயியும் இதற்குச் சம்மதித்தாள். ஆனால், இவர்களுடைய பேச்சைக் குப்பண்ணக் கவுண்டன் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த விவரம் செந்திருவுக்காவது பவளாயிக்காவது தெரியாது.

கார்க்கோடக் கவுண்டரிடம் மேற்படி சூழ்ச்சியைக் குப்பண்ணக் கவுண்டன் தெரியப்படுத்திய போது, அவருடைய முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.

மாஜி ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரும், டிபுடி ஸுபரிண்டெண்ட் சங்கநாதம் பிள்ளையும் செந்திரு விஷயமாகப் புலன் விசாரிக்கிறார்களென்று கார்க்கோடக் கவுண்டருக்குத் தெரிந்தது. அவர்களைச் சரிப்படுத்துவதற்குச் செந்திருவின் நடிப்புத் பைத்தியம் உபயோகமாக யிருக்குமென்று அவர் கருதினார். அவ்விதமே அவர் உபயோகித்து வெற்றியடைந்தார் என்பதை முன்னொரு அத்தியாயத்தில் பார்த்தோம்.

மேற்படி பிரமுகர்கள் தேவகிரிக்கு வந்த அன்று காலையில் வேலைக்காரி பவளாயி செந்திருவிடம் வந்து, “அம்மா! என்னத்தைச் சொல்ல? இன்றைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்வதற்காக யாரோ வரப் போகிறார்களாம்” என்று தெரிவித்தாள். செந்திருவுக்குப் பகீர் என்றது. வழக்கத்தைவிட அதிகமாகப் பைத்திய நடிப்பு நடிப்பதென்று அவள் தீர்மானித்தாள். மத்தியானம் அவள் அறைக்குள் போன சமயம் பார்த்துக் குப்பண்ணக் கவுண்டன் அறைக் கதவைச் சாத்தி வெளிப்புறம் தாளிட்டதுடன், பவளாயிக்குக் “கதவைத் திறக்காதே!” என்றும் உத்தரவு போட்டு விட்டான்.

அந்தச் சமயத்திலேதான் அய்யாசாமி முதலியாரும் சங்கநாதம் பிள்ளையும் கவுண்டர்களுடன் வந்தார்கள். வந்து பார்த்து இல்லை, பார்க்காமலே பரிதாபப்பட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் திரும்பிப் போக, மோட்டார் ஏறும் சமயத்தில் பேசிக் கொண்டிருந்ததைப் பவளாயி வந்து தெரிவித்தபோது, செந்திரு, “ஐயையோ! இது என்ன விபரீதம்?” என்று அரண்டு போனாள். வந்திருந்தவர்களில் ஒருவர் “இந்தப் பெண்ணை குற்றாலத்துக்கு அழைத்துப் போங்கள்” என்றாராம். இன்னொருவர், “சென்னைப் பட்டணத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலேயே கொண்டு விட்டு விடுவதுதான் நல்லது” என்றாராம். “ஆமாம்; சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பலாம் என்றுதான் உத்தேசம்” என்று கார்க்கோடக் கவுண்டர் பதில் சொன்னாராம்.

“கடவுளே! பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே!” என்று செந்திரு கதிகலங்கினாள். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போனால் நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிடும் என்பார்களே? தனக்கு அந்தக் கதிதான் நேருமோ?

வந்திருந்த பெரிய மனுஷர்கள் யார் என்று ஏதாவது தெரியுமா எனச் செந்திரு பவளாயியைக் கேட்டாள். “எனக்குத் தெரியாதம்மா! ஒருத்தர் முதலியார் போலிருக்கு. ‘முதலியார்’ ‘முதலியார்’ என்று கூப்பிட்டுக் கொண்டாங்க” என்று பவளாயி சொன்னதும், செந்திருவுக்கு மறுபடியும் கல்லைத் தூக்கித் தலையில் போட்டது போலிருந்தது. ஏனென்றால், வந்திருந்தவர்கள் போகும்போது பேசிய இரண்டொரு வார்த்தைகள் அவள் காதில் விழுந்தபோது, “ஏதோ தெரிந்த குரல் போலிருக்கிறதே!” என்ற சந்தேகம் ஒரு வினாடி அவளுக்கு உண்டாயிற்று. எனவே, இப்போது, “ஐயோ! ஒரு வேளை அவர் பங்கஜத்தின் தந்தை அய்யாசாமி முதலியார்தானோ? அப்படியிருந்தால், என்னுடைய பைத்திய நடிப்பு உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமாக அல்லவா ஏற்பட்டுவிட்டது! சுவாமி! பழனி ஆண்டவனே! இப்படியா என்னைச் சோதிக்க வேண்டும்?” என்று செந்திரு கதறினாள்.

இப்படி வெகு நேரம் கவலைப்பட்ட பிறகு, பழனியாண்டவனே வழிகாட்டினார் என்று சொல்லும்படியாக, ஒருவழி தென்பட்டது. செந்திரு அங்கே வந்தது முதல் தினம் சாயங்காலத்தில் ஒரு காட்சியைக் கண்டு வந்தாள். அந்த பங்களாவுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் தோன்றிய ஒரு மலை மேலிருந்து ஒரு சுவாமியாரும் அவருடன் ஒரு பையனும் இறங்கி வருவார்கள். சாமியார் காவி உடை தரித்தவர்; இளம் வயதினர்; கையில் ஒரு தடி வைத்திருந்தார். பின்னோடு வந்த பையனுடைய கையில் ஒரு பெட்ரோமக்ஸ் விளக்கும், சில புத்தகங்களும் இருந்தன. இரண்டு பேரும் மலை உச்சியிலிருந்து இறங்கி, அந்தப் பங்களா வாசலில் இரும்புக் கேட்டுக்கு அப்பால் கொஞ்ச தூரம் வரையில் வந்து, அங்கிருந்து கீழே இறங்கிச் சென்ற பாதை வழியாகப் போனார்கள். தினம் மாலை ஐந்து மணிக்கு இது நடந்தது. “அவர்கள் யார்?” என்று செந்திரு கேட்டதற்கு, கூனூரிலிருக்கும் சச்சிதானந்த மடத்துச் சுவாமியாரென்றும், ரொம்பப் படித்தவரென்றும், அங்கிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள மலைக் கிராமத்தில் இராப் பள்ளிக்கூடம் நடத்துகிறாரென்றும், அதற்காக இப்படிக் குறுக்கு வழியாய்த் தினம் போகிறார் என்றும் பவளாயி தெரிவித்தாள். தன்னுடைய விடுதலைக்கு அந்தச் சுவாமியாருடைய ஒத்தாசையைக் கோருவதென்று செந்திரு இப்போது தீர்மானித்தாள்.

பவளாயியின் உதவியைக் கொண்டு ஒரு துண்டுக் காகிதமும் பென்சிலும் சம்பாதித்தாள். தன்னுடைய நிலைமையைச் சுருக்கமாக எழுதி, எப்படியாவது தன்னை விடுதலை செய்து காப்பாற்ற வேண்டுமென்று வேண்டினாள். அந்தக் காகிதத்தை ஒரு கல்லில் நாரினால் சேர்த்துக் கட்டி எடுத்துக் கொண்டு அன்று சாயங்காலம் இரும்பு வேலி ஓரமாகப் போய் நின்று கொண்டிருந்தாள். வழக்கம்போல சுவாமியாரும் பையனும் எதிர்புறத்து மலையிலிருந்து இறங்கி வந்து பங்களாப் பாதையை அடைந்து அதன் வழியே கீழே சென்றார்கள். செந்திரு பங்களா வாசல் தோட்டத்தில் வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். தான் நின்ற இடத்துக்குக் கிட்டத்தட்ட நேர் கீழே அவர்கள் வந்ததும், காகிதம் கட்டிய கல்லைக் கீழே போட்டாள். என்ன துரதிர்ஷ்டம்! காகிதம் கட்டிலிருந்து நழுவி எங்கேயோ பறந்து சென்றது. கல் மட்டும் நேரே கீழ் நோக்கிப் போயிற்று. க்ஷவரம் செய்யப்பட்டு பளபளவென்று கண்ணாடிபோல் விளங்கிய சுவாமியாரின் மொட்டைத் தலையில் குறிபார்த்து விழுந்தது!


Magudapathi Kalki Tags

magudapathi,magudapathi novel, magudapthi free book,magudapathi pdf,magudapathi read online,magudapathi free download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *