BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part1 Kodai

Thyaga Bhoomi Kalki Part1 Kodai

Mr and Mrs Tamilan Presents Kalki Times

தியாக பூமி

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Thyaga Bhoomi Kalki

முதல் பாகம்
கோடை

அத்தியாயம் 1
ரயிலடி

டிங்! டிங்! டிங்!

டிணிங்! டிணிங்! டிணிங்!

போர்ட்டர் கண்ணுசாமி மணியைக் கீழே வைத்து விட்டுக் கைகாட்டி மேடைக்கு ஓடினான். ‘டக்-டக்’, ‘டக்-டக்’ என்று இழுத்தான். ஒரு கைகாட்டி சாய்ந்தது. இன்னொரு கைகாட்டியும் சாய்ந்தது.

தூரத்தில் ‘ஜிகுஜிகு’ ‘ஜிகுஜிகு’ என்று பத்தரை மணி வண்டி வந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்புக்கு அறிகுறிகள் காணப்பட்டன. படுத்துக் கொண்டிருந்த ரயிலடி நாய் எழுந்து நின்று உடம்பைச் சிலிர்த்தது.

தூங்கி வழிந்த ரயிலடிக் கடைக்காரன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். அவன் எதிரே ஒரு தட்டில் நாலைந்து எள்ளுருண்டையும் மூன்று வாழைப்பழங்களும் இருந்தன. அவற்றின் மீது மொய்த்த ஈக்களைப் பரபரப்புடன் ஓட்டினான்.

வெளியே, தூங்குமூஞ்சி மரங்களின் குளிர்ந்த நிழலில் இரண்டு கட்டை வண்டிகளும், ஒரு வில் வண்டியும் கிடந்தன. வண்டியில் படுத்திருந்த வண்டிக்காரர்கள் கையில் தார்க் கழியுடன் கீழே குதித்தார்கள். படுத்து அசை போட்டுக் கொண்டிருந்த மாடுகளும் ஒவ்வொன்றாக எழுந்து நிற்கத் தொடங்கின.

அந்த வண்டிக்காரர்களில், வில் வண்டியிலிருந்து குதித்தவனை மட்டும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். அவன் கவனிக்கப்பட வேண்டியவன். அவன் பெயர் நல்லான். ஆமாம்; நெடுங்கரை சம்பு சாஸ்திரியின் பட்டிக்காரன் நல்லான்தான்.

ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கட் மேஜையை இழுத்துப் பூட்டினார். ஆணியில் மாட்டியிருந்த தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார். கையில் ரயில் சாவியுடன் வெளியில் வந்தார்.

ஒரு கிழவனும், ஒரு ஸ்திரியும், ஒரு சிறுவனும் அப்போதுதான் மூட்டை முடிச்சுகளுடன் பிளாட்பாரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாதாரணமாய், இவ்வளவு பெரிய கூட்டத்தை அந்த ஸ்டேஷனில் பார்ப்பது அபூர்வமாதலால், ஸ்டேஷன் மாஸ்டருக்கு உற்சாகமாக இருந்தது. பின்னால் தங்கிய சிறுவனைப் பார்த்து அவர், “அடே அரை டிக்கட்! சீக்கிரம் போ! உனக்காக ரயில் காத்துக் கொண்டு நிற்காது!” என்று அதட்டினார். அவர் கூறியதை ஆமோதிப்பதைப்போல், கைகாட்டியினருகில் வந்துவிட்ட ரயில் கீச்சுக் குரலில் ‘வீல்’ என்று சத்தம் போட்டது!

ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய நிழலடர்ந்த சாலை கொஞ்ச தூரத்துக்கு ரயில் பாதையை யொட்டியே போயிற்று. அந்தச் சாலையில் சுமார் ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு பிராம்மணர் தலையில் ஒரு மூட்டையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் ஏற்கனவே விரைவாகத்தான் நடந்து வந்தார்; ரயில் வீலிட்ட சத்தத்தைக் கேட்டதும் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு ‘லொங்கு லொங்கு’ என்று ஓடி வரத் தொடங்கினார்.

ரயிலுக்கும் அவருக்கும் ஒரு நிமிஷம் போட்டி. அதன் முடிவில், அந்தோ! ரயில் தான் வெற்றி பெற்றது. இதோ பிளாட்பாரத்துக்கு வண்டி வந்துவிட்டது! இவ்வளவு சின்ன ஸ்டேஷனில்கூட நிற்கவேண்டியிருக்கும் தன் தலை விதியை நினைத்துத்தானோ என்னவோ, இரண்டு தடவை பெருமூச்சு விட்டுவிட்டு நின்றது.

ஸ்டேஷன் மாஸ்டரின் பார்வை, வண்டியில் ஏறத் தயாராய் நின்ற இரண்டரை டிக்கட்டுகளின்மேல் விழுந்தது. அப்போது அவர், ‘ஒருவேளை இன்றைக்கு யாராவது இறங்கக்கூட இறங்குவார்களோ!’ என்று எண்ணமிட்டார். அவர் அப்படி எண்ணிக் கண்ணிமைக்கும் நேரம் ஆகவில்லை; ரயிலின் கதவு ஒன்று திறந்தது. அதிலிருந்து ஒரு மனுஷர் இறங்கினார். ரயில் நின்றதும் நிற்காததுமாய் அவர் இறங்கிய அவசரத்தைப் பார்த்தால் முந்திய ஸ்டேஷனிலேயே அவர் இறங்குவதற்குத் தயாராகக் கதவோரமாய் வந்து நின்றிருக்க வேண்டுமென்று தோன்றியது.

இறங்கிய பிரயாணி நெற்றியில் விபூதியும், முகத்தில் புன்சிரிப்பும், கழுத்தில் துளசி மணிமாலையும், கக்கத்தில் மடிசஞ்சியுமாகக் காணப்பட்டார். “ஓகோ! நம்ப சம்பு சாஸ்திரின்னா?” என்று ஸ்டேஷன் மாஸ்டர் தமக்குள் சொல்லிக்கொண்டார்.

‘படீர்’ என்று ரயில் கதவு சாத்தும் சத்தம்; அப்புறம் ‘விஸில்’ ஊதும் சத்தம்; ரயில் ‘குப்’ ‘குப்’ என்று புகை விட்டுக் கொண்டு கிளம்பிற்று.

“என்ன, சம்பு சாஸ்திரியார்! இந்த வருஷத்து வெயில் எல்லாம் உங்கள் தலையிலேதான் போலிருக்கே!” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.

சாஸ்திரியார் இடுப்பில் செருகியிருந்த டிக்கட்டை எடுத்துக்கொண்டே, “ஆமாம்; அப்படித்தான். ஆனால் பெரியவாள், ‘நிழலருமை வெயிலில்’ என்று சொல்லியிருக்காளில்லையா? அந்த மாதிரி ஏதோ பகவான் கிருபையினாலே கடைசியாகக் குழந்தைக்கு வரன் நிச்சயமாச்சு…!” என்றார்.

“வரன் நிச்சயமாச்சா? ரொம்ப சந்தோஷம்.”

“முகூர்த்தம்கூட வைத்தாச்சு!”

“அப்படியானால், கொஞ்ச நாளைக்கு நம்ம ஸ்டேஷன் கலகலப்பாயிருக்கும்… நல்ல வரன் தானே?”

“ஏதோ மனசுக்குப் பிடிச்ச வரன். பையன் பி.ஏ. பாஸ் பண்ணியிருக்கான். கல்யாணக் கடுதாசி வரும் நீங்கள் அவசியம் கல்யாணத்துக்கு வரவேணும்.”

“நானா, சாஸ்திரிகளே! என் சொந்தக் கல்யாணமாயிருந்தாக்கூட இந்தப் பாழாப்போன ரயில் வேலையிலே லீவு கொடுக்க மாட்டானே? பர்த்திவச்சு நடத்திக்கோ என்பானே? கேளுங்கள். போன வருஷத்திலேதான் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் சீமந்தக் கல்யாணத்துக்காக லீவு கேட்டார்…!”

“அப்படியெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. ஒரு நாளைக்காவது கட்டாயம் வந்துவிட்டு வரவேணும். நான் வண்டி அனுப்புகிறேன்.”

இப்படிப் பேசிக் கொண்டே இருவரும் பிளாட்பாரத்திலிருந்து ஸ்டேஷனுக்குள் வந்தார்கள். அதே சமயத்தில் ரயிலுடன் போட்டி போட்டுக்கொண்டு சாலையில் ஓடி வந்த பிராம்மணர் இரைக்க இரைக்க ஸ்டேஷனை வந்து அடைந்தார். வந்தவர் சம்பு சாஸ்திரியைப் பார்த்ததும், “ஏங்காணும் சம்பு சாஸ்திரி! இந்த ரயிலிலேதானே இறங்கினீர்? ஏதடா ஒரு மனுஷன் ஓடி வருகிறானேயென்று அந்த கார்டு கிட்ட சொல்லி வண்டியை ஒரு நிமிஷம் நிறுத்தி வைக்கக் கூடாதா?” என்றார்.

“தீக்ஷிதர்வாள்! பரிகாசம் இருக்கட்டும். குழந்தை சாவித்திரிக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு…”

“என்ன, கல்யாணம் நிச்சயமாயிடுத்தா? அட எழவே! முன்னமே ஏங்காணும் சொல்லித் தொலைக்கலை? வரன் எந்த ஊர்? என்ன குலம்? என்ன கோத்திரம்? பையன் என்ன பண்றான்? கையிலே எவ்வளவு கொடுக்கிறீர்? மேற்கொண்டு எவ்வளவு செய்கிறீர்? சீர் செனத்தி என்ன? எதிர் மரியாதை எப்படி? எல்லாம் விவரமாய்ச் சொல்லும்.”

“விவரமாய்ச் சொல்றதற்கு இப்போது சாவகாசமில்லை, தீக்ஷிதர்வாள்! பையன் பி.ஏ. பாஸ் பண்ணியிருக்கான்…”

“பி.ஏ.யா? அடி சக்கை! உத்தியோகம் ஆயிருக்கோ?”

“இன்னம் ஆகலை; அதுக்கென்ன, குழந்தை அதிர்ஷ்டத்துக்குச் சீக்கிரம் ஆயிடறது.”

“உத்தியோகம் ஆகலையா? வெறும் வறட்டு பி.ஏ.தானா? போகட்டும்; நிலம் நீச்சு வீடு வாசல் ஏதாவது இருக்கோ, அதுவும் இல்லையோ?”

“நிலம் அவ்வளவாக இருப்பதாகத் தெரியலை. தகப்பனார் கல்கத்தாவிலே பெரிய உத்தியோகம் பார்த்தவர். பென்ஷன் இருநூறு ரூபாய் வர்றது; கையிலே ரொக்கம் ஏதாவது இருக்கும்.”

“இவ்வளவுதானா? ஏங்காணும், நிலம் நீச்சு இல்லை, உத்தியோகம் கிடையாது, கையிலே ‘காஷ்’ இருக்குன்னு ஊரிலே சொல்லிக்கிறா!-கடைசியிலே இந்த வரன் தானா உமக்குக் கிடைத்தது? முப்பது வேலி மிராசுதார் ஜாதகம் நான் வாங்கிண்டு வந்தேன்; பரம்பரை பெரிய மனுஷன், வயது நாற்பத்தைந்துதான் ஆச்சு; அது உமக்குப் பிடிக்கலை பாரும்! கெட்ட ஜாதகம் என்கிறது இதுதாங்கணும்.”

“தீக்ஷிதர்வாள்! இனிமேல் அதைப்பற்றிப் பேசி என்ன லாபம்? கல்யாணம் நிச்சயமாகி முகூர்த்தமும் வச்சாச்சு! நீங்கள்ளாம் கூடமாட இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும். நான் போய் வர்றேன்.”

“என்ன போய் வர்றீரா, ஏங்காணும்? ரயிலைத்தான் ஒரு நிமிஷம் நிறுத்தி வைக்கத் துப்பு இல்லை; அடுத்த ரயில் வருகிற வரையில் பேச்சுத் துணைக்காவது இருந்துட்டுப் போகக்கூடாதா? என்னங்கணும் அப்படித் தலைபோற அவசரம்? பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிட்டாத்தான் என்ன? அதுக்காக இப்படியா சப்பட்டை கட்டிண்டு பறக்கணும்?…அடே! மனுஷன் சொல்லாமல் போறதைப் பார்த்தாயா? ஓஹோ! அவ்வளவு கர்வம் வந்துட்டதா!… ஸ்டேஷன் மாஸ்டர்வாள்! கேட்டயளா கதையை!…..” என்று தீக்ஷிதர் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசத் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *