Kalki Short StoriesKalki TimesStory

Tharkolai Kalki | Kalki Times

Tharkolai Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

தற்கொலை

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/



Tharkolai Kalki

தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு உயிர் வைத்திருக்கக் கூடும்? ஒரு பாகமேனும் தேறியிருக்கக் கூடாதா? அதிலும் இது இரண்டாம் தடவை. இண்டர்மீடியட் பரீட்சையில் ஜெகந்நாதன் முதல் தரத்தில் தேறியவன். அதுவரை ஒரு வகுப்பிலாவது பரீட்சையில் தவறியது கிடையாது. பி.ஏ. வகுப்பில் முதல் முறை இரண்டு பாகத்திலும் தவறியபோது அவன் அடைந்த ஏமாற்றமும் துயரமும் சொல்லத்தரமல்ல. ஆயினும் எப்படியோ சகித்துக் கொண்டு இரண்டாம் முறை அதிகக் கவலையுடன் படித்தான். ஆயினும் பயனென்ன? ‘மேல் மாடி காலி’ என்பதற்காக அவன் கேலி செய்த ‘மண்டுக்கள்’ எல்லாரும் தேறிவிட்டார்கள். அவன் மட்டும் அம்முறையும் தவறிவிட்டான் – இரண்டு பாகத்திலும். அவமானம்! அவமானம்! தற்கொலையினாலன்றி இந்த அவமானம் தீருமா?

இது ஒரு புறம் இருக்கட்டும். செல்லத்தின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? தன்னிடம் அளவிறந்த காதல் வைத்துள்ள அப்பேதை இவ் அவமானத்தை எங்ஙனஞ் சகிப்பாள்? பரீட்சைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு செல்லத்தைப் பிறந்தகத்துக்கு அனுப்பியபோது அவளுக்கும் தனக்கும் நிகழ்ந்த விவாதம் ஜெகந்நாதனுக்கு நினைவு வந்தது.

அவள் அப்போது கூறினாள் – “என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? நான் உங்கள் படிப்புக்கு எவ்விதத்திலாவது குறுக்கே வருகிறேனோ? நான் இருந்தால் உங்களுக்கு எவ்வளவோ சௌகரியமாயிற்றே! உங்கள் அறையைப் பெருக்கி சுத்தமய் வைக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைக்கிறேன். குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறேன். இரவில் நீங்கள் படிக்கும் போது உங்கள் படுக்கையை விரித்து விட்டே நான் சென்று படுத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் மீதியாகிறது? ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு தனியறையில் இருந்தால் இவைகளையெல்லாம் நீங்கள்தானே செய்யவேண்டும்? இவ்வளவு சௌகரியம் இருக்குமா? எனக்காக நீங்கள் அதிக நேரம் செலவிடுவதேனும் உண்டா? மாலைப் பொழுதினில் நீங்கள் வெளியிலிருந்து வந்ததும் அரைமணி நேரம் மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எப்போதாவது உங்கள் படிப்புக்குக் குறுக்கே நான் வருகிறேனா? மேலும், உங்கள் தேக சௌக்கியத்தை என்னைப் போல் யார் கவனிப்பார்கள்.”

செல்லம்மாளின் இவ்வளவு வாதமும் அப்போது ஜகந்நாதன் செவியில் ஏறவில்லை. சென்ற வருஷம் பரீட்சையில் தவறியதும், அவனது நண்பர்களும் மற்றவர்களும், “ஆம்படையாள் ஆத்துக்கு வந்ததும் பையன் சுழி போட்டு விட்டான்” என்று கேலி செய்தது அவன் மனதை விட்டு அகலவில்லை. இந்தக் கேலிப்பேச்சு அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. கடைசியில் தான் பரீட்சையில் தவறியதற்குத் தன் மனைவியே காரணம் என்னும் நம்பிக்கையை உண்டு பண்ணிவிட்டது. எனவே, இம்முறை அவளை ஊருக்கு அனுப்பியே தீரவேண்டுமென்றும், இல்லாவிடில் தனக்குப் பரீட்சை தேறாதென்றும் அவன் நிச்சயம் செய்து கொண்டிருந்தான். இப்போதோ? “அவ்வளவு பிடிவாதமாக என்னை ஊருக்கு அனுப்பினீர்களே? பரீட்சையில் தேறி விட்டீர்களா?” என்று செல்லம் கேட்டால், என்ன விடையளிப்பது? தன் புண்பட்ட மனதை இன்னும் புண்படுத்தக் கூடாதென்று அவள் இவ்வாறு கேளாமலிருக்கலாம்; தேறுதலும் சொல்லலாம். இருந்தாலும், அவள் மனதில் இவ்வெண்ணம் இருக்கத் தானே செய்யும்? அவள் முகத்தில் விழிப்பதெப்படி?

இனி, கிராமத்திலுள்ள பெற்றோர்களோ? அவர்களைப் பற்றி எண்ணியபோதே ஜகந்நாதனுக்கு வயிரு பகீர் என்றது. தகப்பனார் உழையாத உழைப்பும் உழைத்து மூத்த புதல்வனான தன்னைப் படிக்க வைத்தார். இப்போது அவருக்கு தள்ளாத வயது வந்து விட்டது. குடும்பத்துக்கு 1,500 ரூபாய் கடன் இருந்தது. இன்னும் இரண்டு புதல்விகளுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும். ஒரு பையனைப் படிக்க வைத்தாக வேண்டும். நிலத்தில் கிடைக்கும் வருமானம் காலட்சேபத்துக்கே போதும் போதாததாயிருந்தது. ஜகந்நாதனுக்கு வாங்கின வரதட்சணை ரூ. 2000-த்தில் ஒரு பைசாக் கூடத் தொடாமல் அவன் பி.ஏ. படிப்பதற்காகக் கொடுத்து விட்டார். அவன் உத்தியோகம் செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையே குடும்பத்துக்கு இப்போது ஆதாரமாயிருந்து வந்தது. போன வருஷமே அவர்கள் அடைந்த ஏமாற்றம் வருணிக்குந் தரமன்று. இம்முறையும் தவறிப்போன செய்தி கேட்டால் அந்தோ! அவர்கள் மனம் இடிந்தே போய்விடும். அவர்கள் துயரத்தை பார்த்து எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பது. நல்ல வேளை, உயிரை விடுவதும் வைத்துக் கொண்டிருப்பதும் ஒருவனுடைய விருப்பத்தைப் பொறுத்ததாயிருக்கிறதே, அதை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டியதுதான்.

அவமானத்தைப் பொருட்படுத்த வேண்டாம்; மனைவியையும் பெற்றோர்களையும் கவனிக்க வேண்டாம்; எனினும் அடுத்தாற்போல் செய்வதற்கென்ன இருக்கிறது? வரதட்சிணைப் பணம் ரூ. 2000-மும் இந்த மூன்று வருஷங்களில் செலவழிந்து போயிற்று. பாங்கிக் கணக்கில் 30 ரூபாயோ என்னவோதான் பாக்கி. இன்னமொரு வருஷம் படையெடுத்து சென்று பரீட்சைக் கோட்டையை முற்றுகை போடுவதென்பது இயலாத காரியம். மாமனாரிடம் பணம் கேட்கலாமா? சை! அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிர் விடலாம். உத்தியோகத்துக்குப் போவதென்றாலோ, பரீட்சையில் தவறிய பி.ஏ.க்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள்? 30, 35-க்கு மேல் இல்லை. இந்த 35 ரூபாயைக் கொண்டு பட்டணத்தில் மனைவியுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது? சென்ற வருஷத்தில் மாதம் 60 ரூபாய் போதாமல் கஷ்டப்பட்டோ மே? பின்னர், பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவதெப்படி? தம்பியைப் படிக்க வைப்பதும் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எங்ஙனம்?

“ஆ! பரீட்சையில் மட்டும் தேறியிருந்தால்! நினைத்தபடி இன்கம்டாக்ஸ் ஆபீஸில் ஓர் உத்தியோகமும் கிடைத்திருந்தால்! ‘சம்பளத்தைக் கொண்டு நீ உன் காலட்சேபத்தை நடத்திக் கொள். மேல் வரும்படியை மட்டும் மாதாமாதம் எனக்கு அனுப்பிவிடு’ என்று தந்தை அடிக்கடி கூறியது அவனது நினைவுக்கு வந்தது. ‘மேல் வரும்படி’ விஷயத்தில் தானாக யாரையும் ஒரு பைசாவேனும் கேட்பதில்லையென்று அப்போதே தீர்மானித்திருந்ததும் ஞாபகம் வந்தது. இன்கம்டாக்ஸ் ஆபீஸில் உத்யோகம் அகப்படாவிட்டாலும் ரயில்வேயில் ரூ.100 சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தால் போதுமே!… சை, சை என்ன வீண் நினைவுகள்! இவைகளைப் பற்றி இப்போது எண்ணி என்ன பயன்! தற்கொலை! தற்கொலை! தற்கொலை! அதைப் பற்றியன்றோ இப்போது சிந்திக்க வேண்டும்!

ஒரே ஒரு யோசனை, நாம் போய்விட்டால் மனைவி பெற்றோர்களின் கதி என்ன? நல்ல வேளையாக மனைவியின் பெற்றோர்கள் கொஞ்சம் பணக்காரர்கள். எனவே அவளைப் பற்றிக் கவலையில்லை. உயிரோடிருந்தாலும் பெற்றோர்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எல்லாரும் அளவு கடந்த துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்பது உண்மையே. ஆனால், உயிரோடிருந்து அவர்கள் துயரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட இறந்து போய் விட்டால், பிறகு யார் எப்படிப் போனால் நமக்கென்ன தெரியப் போகிறது?

இவ்வளவு எண்ணங்களும் ஜகந்நாதன் மனதில் கோர்வையாக எழுந்து மறைந்தன. அவனுடைய அறிவு அந்த நெருக்கடியான தருணத்தில் மிகத் தெளிவு பெற்றிருந்தது. அச்சமயத்தில், “நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?” என்னும் விஷயமாக ஒரு கட்டுரை வரையச் சொல்லியிருந்தால் அவன் மிக நன்றாக எழுதியிருப்பான். இவ்வளவு தெளிந்த அறிவுடன் பரீட்சையில் எழுதியிருந்தால் எந்தக் குருட்டுப் பரீட்சகனும் அவனைத் தேர்தல் செய்யத் தவறியிரான்!

தற்கொலை செய்துகொள்ளும் விதத்தைப் பற்றி ஜகந்நாதன் அதிகமாகச் சிந்திக்கவேயில்லை. ஒரே கணத்தில் இந்த விஷயத்தில் முடிவுக்கு வந்துவிட்டான். இரவு ஏழு மணியாயிற்று. மனைவிக்கொரு கடிதமும், தந்தைக்கொரு கடிதமும் எழுதினான். மனைவிக்கெழுதிய கடிதம் வருமாறு:-

“என் அன்பே! நான் பரீட்சையில் இம் முறையும் தவறி விட்டேன். இனி உன் முகத்தில் விழிக்க என்னால் முடியாது. தற்கொலை செய்து கொண்டு இன்றிரவு உயிர் விடப் போகிறேன். ஜகந்நாதன்”

தந்தைக் கெழுதிய கடிதமும் இவ்வளவு சுருக்கமானதுதான். இரண்டையும் மடித்து உறையில் போட்டு விலாசம் எழுதி மேஜையின் மீது வைத்தான். மரண விசாரணையில் அடையாளம் தெரிவதற்காகத் தன்னுடைய விலாசம் எழுதிய ஒரு காகிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். (என்ன முன்யோசனை) அறையை பூட்டி விட்டு வெளியே கிளம்பினான்.

இரவு ஒன்பது மணி அமாவாசை இருட்டு. தென் இந்திய ரயில் பாதையில் ஒரு சிறு வாய்க்காலின் பாலத்தின் மீது ஜகந்நாதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நிர்மலமான நீல வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டி மனிதர்களின் அறியாமையைக் குறித்துக் கேலி செய்து கொண்டிருந்தன. மேல்வான வட்டத்தின் அடிவாரத்தைக் கரிய மேகத்திரள் மறைந்திருந்தது. ஒவ்வொரு சமயம் அம்மேகத்திரளை மீறிக்கொண்டு ஒரு பொன் மின்னற்கொடி வெளிக் கிளம்பி ஒரு கணம் கண்ணைப் பறித்துவிட்டு உடனே மறைந்தது. கிழக்கே வெகு தூரத்தில் பட்டணத்தில் மின்சார விளக்குகள் மங்கலாகக் காணப்பட்டன. வெறுப்புத் தரும் வாடைக் காற்றில் கலந்து, காட்டில் ஊளையிடும் நரியின் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மத்திம ஸ்தாயியில் இடிகள் உறுமின. பக்கத்திலிருந்த புளிய மரத்தில் ஒரு கோட்டான் கோரமாகக் கத்திக் கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டேஷனிலிருந்து போட்மெயில் புறப்பட்டுவிட்டதென்பதற்கு அறிகுறியான ஊதல் சத்தம் கேட்டது. ஜகந்நாதன் எழுந்து சென்று தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டான். இதயம் ‘பட்பட்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் அவன் செவியில் நன்றாகக் கேட்டது. அவன் மனைவியும், மாமனாரும், மாமியாரும், தந்தையும், தாயும், தம்பியும், தங்கைகளும் ஒவ்வொருவராக அவன் முன்பு தோன்றி, “ஐயோ பைத்தியமே! இப்படி செய்யாதே” என்று கெஞ்சுவதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இந்தப் பிரமையினின்று விடுபடும் பொருட்டு அவன் கண்களைத் திறந்து ரயில் வரவேண்டிய திக்கை நோக்கினான். அவ்விடத்தில் இரயில் பாதை நேராக அமைந்திருந்தபடியால் வெகுதூரத்தில் ரயில் வருவது காணப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கொள்ளிக் கண்ணன் என்னும் இராட்சதனைப் பற்றிக் கேட்ட கதை அவனுக்கு நினைவு வந்தது.

பெரிய கரிய வடிவமும் கொள்ளிக் கண்களும் உடைய ஒரு பூதம் பயங்கரமாக உறுமிக் கொண்டு தன்னை விழுங்க வருவது போல் அவனுக்குத் தோன்றிற்று. இத்தோற்றத்தினால் பீதியடைந்து அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ளப் போனான். ஆனால், அச்சமயத்தில் சுமார் ஐம்பது அடி தூரத்தில் ரயில் பாதை ஓரமாக வெள்ளைத் துணியால் முக்காடணிந்த உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டுவிட்டான்.

பேய், பிசாசுகளிடம் ஜகந்நாதனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் அப்போது அவன் உடலும் நடுங்கிவிட்டது. வியர்வை வியர்த்து துணிகள் எல்லாம் ஒரு கணத்தில் சொட்ட நனைந்து போயின. அச்சமயத்தில் அவன் உணர்வு போனவழி காரியம் செய்தானேயன்றி, அறிவைப் பயன்படுத்தி யோசித்து எதுவும் செய்யவில்லை. அவ்விடத்திலிருந்து உடனே போய்விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து பக்கத்திலிருந்த பாலத்துக்கு வந்து அங்கிருந்து கீழே வாய்க்காலில் சத்தமின்றி இறங்கி விட்டான். ஏற்கெனவே காரிருள்; அதிலும் பாலத்தின் நிழல். அங்கிருந்து அவ்வுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். என்ன அதிசயம்! அவ்வுருவம் சற்று முன் ஜகந்நாதன் படுத்திருந்த இடத்துக்கே வந்து நின்றது. முக்காடு போட்டிருந்த துணியை எடுத்துக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் பண்ணும்போது செய்வது போல் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டது. பின்னர் தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்தது.

அத்தகைய நிலைமையிலும் ஜகந்நாதனால் புன்னகை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்வுருவம் தன்னைப் போலவே ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள வந்த துரதிர்ஷ்டசாலியான ஒரு மனிதனே என்பதை அவன் தெள்ளத் தெளியக் கண்டான். அவனுயிரை அச்சமயம் தான் காப்பாற்றாவிட்டால், அக்கொலை பாதகத்துக்கு உடந்தையாயிருந்த பாவம் தன்னைச் சாரும் என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. ரயிலோ சமீபத்தில் வந்து விட்டது. அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தேறிச் சென்று படுத்திருந்த உருவத்தை முதுகில் தொட்டான். அவ்வுருவம் அப்படியே வீறிட்டுக் கொண்டு துள்ளி விழுந்தது. பாவம்! ரயில் வண்டி தன்மீது ஏறிவிட்டதாக அந்த துரதிர்ஷ்டசாலி நினைத்திருக்க வேண்டும். ஜகந்நாதன் அதனைப் பாதிதூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக் கொண்டும் கீழே பாலத்தின் அடியில் கொண்டு வந்து சேர்த்தான்.

“ஆம், மூன்று ஆண்டுகளாக நான் அலையாத இடமில்லை. நான் போகாத ஆபீஸ் இல்லை. விண்ணப்பம் எழுதி எழுதி கையும் சலித்துவிட்டது. நடந்து நடந்து காலும் ஓய்ந்து விட்டது. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியாக வேண்டும். பாங்கியில் இரண்டாயிரம் தான் பாக்கி. அதை வைத்துக் கொண்டு எங்கேயாவது கிராமத்திற்கு போய் அவர்களாவது சௌக்கியமாயிருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் இரண்டு வருஷம் நான் இந்த நகரத்தில் இருந்து வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்தப் பணமும் தொலைந்து போய் விடும். பின்னர், என் மனைவி குழந்தைகளின் கதி என்ன? ஆகையினாலேயே இன்று முடிவாக பி.ஏ. பட்டத்துக்குரிய பத்திரத்தை சர்வகலாசாலை ரிஜிஸ்ட்ராருக்கே திருப்பியனுப்பிவிட்டு, உயிரைவிடும் துணிவுடன் புறப்பட்டு வந்தேன். நீர் அதற்குக் குறுக்கே நின்றீர்” என்று கூறி முடித்தார் மகாதேவஐயர். ஜகந்நாதன் கொல்லென்று சிரித்தான். அவர்கள் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார்கள். “என் வரலாற்றை உம்மிடம் கூறியது குறித்து வருந்துகிறேன். பிறர் துன்பத்தைக் கேட்டு சிரிக்கும் குணமுள்ளவர் நீர் என்பதே எனக்குத் தெரியாது போயிற்று” என்று மகாதேவ ஐயர் சற்றுக் கோபத்துடன் கூறினார்.

“தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூறப்போவதைக் கேட்டால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டென்று நீங்களே சொல்வீர்கள். நான் சென்ற வருஷமும் இவ்வருஷமும் பி.ஏ. பரீட்சைக்குச் சென்று தவறிவிட்டேன். இதன் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே நானும் இங்கு வந்தேன். நீங்கள் திடுக்கிடுகிறீர்களல்லவா! எந்த இடத்தில் நீங்கள் படுத்துக்கொண்டீர்களோ, அதே இடத்தில் ஒரு நிமிஷத்திற்கு முன்பு நான் படுத்துக்கொண்டிருந்தேன். தங்களைக் கண்டு பயந்துகொண்டு கீழிறங்கினேன். பி.ஏ. பரீட்சையில் முதன்மையாகத் தேறிய தாங்கள் அப்பட்டத்தினால் ஒரு பயனுமில்லையெனக் கண்டு அதைத் திருப்பி அனுப்பி விட்டு உயிர் துறக்கத் துணிந்திருக்கையில், அப்படிப்பட்ட பட்டம் கிடைக்கவில்லையேயென்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்ததை எண்ணிய போது, என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள். நான் சிரித்ததில் தவறு உண்டா என்று” என்றான் ஜகந்நாதன்.

இதைக் கேட்டதும் மகாதேவ ஐயருக்கு கூட நகைப்பு வந்துவிட்டது. சற்றுநேரம் இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள். அந்த நிர்மானுஷ்யமான இடத்தில், அந்த நள்ளிரவில் அவர்களுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டு, அதுவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்த பூச்சிகள், தவளைகள் முதலியன பயந்து வாய் மூடிக் கொண்டன. அருகிலிருந்த புளிய மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை கண் விழித்துக் ‘கிறீச்’ என்று கத்திற்று.

“உயிர் விடும் யோசனையை மறந்துவிடுவோம்” என்று மகாதேவ ஐயர் கூறினார்.

“ததாஸ்து” என்றான் ஜகந்நாதன். பின்னர் அவன் சொன்னான்:- “இன்றிரவிலிருந்து, நாம் இருவரும் உயிர் நண்பர்களானோம். நாமிருவரும் ஒரே நோக்கங்கொண்டு இருவரும் ஒருவரது உயிரை ஒருவர் காப்பாற்றினோம். இருவரும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கிறோம். நம்மிருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்பது கடவுளுடைய திருவுள்ளம்போல் தோன்றிற்று.”

“ஆம். நண்பர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே, நான் இவ்வளவு விரைவில் மனஞ் சோர்ந்து விட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. தங்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இனி இருவரும் சேர்ந்து புதிய பலத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்குவோம்.”

“அப்படியேயாகட்டும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.”

“இனி பரீட்சைக்குப்போகும் எண்ணத்தை விட்டு விடுங்கள். என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறதென்று சொன்னேனல்லவா? அதை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் நடத்துவோம்.” இவ்வாறு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் கை கோர்த்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.

மறுநாள் ஜகந்நாதனுக்கு, அவனுடைய காதல் மனைவி செல்லத்தினிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அதன் பிற்பகுதியை இங்கே தருகிறோம்:- “…இந்த துக்க சமாசாரத்தில் நமக்கு ஒரு சந்தோஷமான அம்சமும் இல்லாமற் போகவில்லை. அத்தைக்கு என்னிடம் எப்போதுமே நிரம்பப் பிரியம் என்று தங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா?

அந்திய காலத்தில் நான் அவளுக்குச் செய்த பணிவிடை அந்தப் பிரியத்தைப் பதின்மடங்கு வளர்ந்துவிட்டது. எனவே அவளுடைய மரண சாசனத்தில் பாங்கியில் அவள் பெயரால் இருந்த ரூபாய் மூவாயிரத்தையும் எனக்கு கொடுத்து விட்டதாக எழுதி வைத்திருக்கிறாள். இந்தப் பணம் தங்களாலேயே எனக்குக் கிடைத்தது என்பதை நினைவூட்டுகிறேன். தாங்கள் என்னை வற்புறுத்தி பிறந்தகத்துக்கு அனுப்பியிராவிடில் அத்தைக்குப் பணி விடை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்திராது. அப்போது அவள் பணத்தை எனக்குக் கொடுத்திருப்பது நிச்சயமில்லை. ஆதலின், அந்தப் பணம் முழுதும் தங்களுக்கே உரியதாகும். இன்னொரு சமாசாரம், தங்கள் பரீட்சையின் முடிவு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். தேறியிருந்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. பட்டம் பெற்றவர்களுக்கும் கூட இக்காலத்தில் உத்தியோகம் இலேசில் கிடைப்பதில்லையென்று எல்லாரும் சொல்லுகிறார்கள். மேலும் கைகட்டுச் சேவகம் செய்யும் பிழைப்பு தங்கள் இயல்புக்கு ஒத்ததன்று. எனவே இந்த மூவாயிரம் ரூபாயும் மூலதனமாக வைத்துக்கொண்டு, தாங்கள் ஏதேனும் ஒரு தொழில் ஆரம்பித்து நடத்தினாலென்ன? அடியாள் தங்களுக்குப் பிடியாவிட்டால் அதற்காக என்னைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தாங்கள்தான் செல்லங் கொடுத்துக் கொடுத்துத் தங்கள் செல்லத்தைக் கெடுத்து விட்டீர்கள். பிற விஷயங்கள் தங்களை நேரில் தரிசிக்கும்போது.”

மேற் சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மகாதேவ ஐயரும் ஜகந்நாதனும் “மகாநாதன் கம்பெனி” என்ற பெயருடன் புத்தக வியாபாரமும், பிரசுரமும் நடத்தி, நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்களென அறிகிறோம். ஜகந்நாதனுடைய தந்தை மட்டும் “என்னதான் இருந்தாலும், மாதா மாதம் சம்பளமும் அதன் மீது கொஞ்சம் மேல் வரும்படியும் கிடைப்பதுபோல் ஆகுமா?” என்று சொல்லி வருகிறாராம்.

இத்துடன்

அமரர் கல்கியின் தற்கொலை

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Tharkolai Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,tharkolai Audiboook,tharkolai,tharkolai Kalki,Kalki tharkolai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *