BooksKalki TimesStory

Poiman Karadu Kalki | Kalki Times Ch 12 to Ch 21

அத்தியாயம் 21:
உடல் பொருள் ஆவி

செங்கோடன் மீது குற்றம் ஒன்றுமில்லை என்று போலீஸ் அதிகாரிகளே அவனை விடுதலை செய்து விட்டார்கள். கள்ள நோட்டு வழக்கில் அவனைச் சாட்சியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல முகூர்த்தத் தேதியில் செங்கோடனுக்கும் செம்பவளவல்லிக்கும் திருமணம் நடந்தது.

புதிய தம்பதிகள் கேணிக்கரைக் குடிசையில் தனிக் குடித்தனம் நடத்த ஆரம்பித்த அன்று மாலை செங்கோடன் தன் அருமை மனைவியைப் பார்த்து, “செம்பா! நான் இனி மேல் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறதென்று உத்தேசித்திருக்கிறேன். உன்னையும் அழைத்துப் போவேன்!” என்றான்.

“நன்றாயிருக்கிறது! உங்களுக்குப் பைத்தியமா, என்ன? நாளைக்கு நமக்கு இரண்டு குஞ்சு குழந்தைகளைப் பழனியாண்டவன் கொடுக்கமாட்டானா? அவர்களுக்கு ஏதாவது தேடி வைக்க வேண்டாமா? சினிமாவிலும் கினிமாவிலும் பணத்தைத் தொலைத்து விடலாம் என்று பார்க்கிறீர்களா?” என்று செம்பா கேட்டாள்.

“பணம் கிடக்கிறது, பணம்! சின்னமநாயக்கன்பட்டியில் கூடார சினிமா நடந்தால் அதற்கு நான் கட்டாயம் போவேன். இல்லாவிட்டால் சேலத்துக்காவது போய் சினிமா பார்த்துவிட்டு வருவேன்… “

“அதெல்லாம் உதவாது. நான் உங்களைப் போகவிடமாட்டேன். சினிமாவில் பார்க்கிற ராஜா-ராணியாக நாமே இருந்தால் போகிறது. நீங்கள் ராஜா செங்கோடக் கவுண்டர்; நான் ராணி செம்பவளவல்லி… !”

“சேச்சே! என்னையும் உன்னையும் எதற்காக அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்கிறாய்? சினிமாவிலே வருகிற ராணிகள் உன் கால்தூசி பெறுவார்களா, செம்பா? ஒரு நாளும் இல்லை. அதற்காக நான் சொல்லவில்லை. நீ அன்றைக்கு ஒரு நாள் என்னை சினிமா பார்த்துவிட்டு வா என்று சொன்னாயல்லவா? நானும் உன் ஏச்சுக்குப் பயந்து போனேன் அல்லவா? அங்கே பொய்மான் கரடுக்குச் சமீபமாகக் குமாரி பங்கஜா என்பவளைப் பார்த்தேன் அல்லவா? அவளைப் பார்த்துப் பேசி, அவளுடன் பழகிய பிறகுதான் உன்னுடைய மகிமை எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. செம்பா! உன்னைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்! பழனியாண்டவனுடைய கிருபையினால்தான் உன்னை நான் மனைவியாக அடைந்தேன். ஆனாலும் உன்னை அடைந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று அந்தக் கூடார சினிமாவுக்குப் போகாமலிருந்தால்-எனக்குத் தெரிந்திராது. என்னுடைய பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய அபாயமான காரியத்தில் தலையிட்டாய்!” என்று செங்கோடன் மனமுருகிக் கூறினான்.

“நானும் உங்களை அதனால்தான் நன்கு அறிந்து கொண்டேன். என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் கொலைக் குற்றத்தைக்கூட ஒப்புக்கொண்டீர்களே! என் பேரில் உங்களுக்கு எவ்வளவு அந்தரங்க அபிமானம் இருக்கவேண்டும்!” என்றாள் செம்பா.

“அது ஒன்றும் உனக்காக இல்லை. அந்தப் போலீஸ்காரர் திடீரென்று என் முன்னால் தோன்றவே மிரண்டுபோய் அப்படி உளறிவிட்டேன்!” என்றான் செங்கோடன்.

“உடைந்து கிடந்த என் வளையலை அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கொண்டு போய்க் கிணற்றில் போட்டீர்களே, நான் கொலைகாரி என்று எண்ணியபோதும் என் பேரில் பிரியமாயிருந்தீர்களே! இதற்கு நான் எத்தனை ஜ ன்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் போதாது என் கடன் தீராது!” என்றாள் செம்பா.

“தீராமல் என்ன? ஒரு பிள்ளைக் குழந்தையைப் பெற்றுக் கொடு; கடன் அவ்வளவும் தீர்ந்துவிடும். “

“அப்படியானால் பெண் குழந்தையே தரும்படி அம்மனைப் பிரார்த்திப்பேன், பெண் என்றால் மட்டமா? நானும் பெண்தானே!”

“நீ பெண்தான். அதனால் எல்லாப் பெண்களும் உன்னைப்போல ஆ கிவிடுவார்களா? அந்தக் குமாரி பங்கஜாவையே எடுத்துக் கொள்ளேன், அவளைப் பெண் பேய் என்று பங்காரு சொன்னது சரிதான். நான் கூட முதலில் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். பொய்மானை நிஜமான் என்று எண்ணி விட்டேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் அவளிடம் என்னத்தைக் கண்டாரோ, தெரியவில்லை. மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவளைக் கலியாணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் போலீஸ்காரருக்கு வேலை போய்விட்டது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?”

இவ்விதம் செங்கோடக் கவுண்டனும் செம்பாவும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் மாஜி போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரும் குமாரி பங்கஜாவும் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

“அந்தப் பங்காரு, எஸ்ராஜ் இவர்களுடன் சில நாள் பழகியதும் நல்லதாய்ப் போயிற்று. அப்படிப் பழகியிராவிட்டால் உலகில் எவ்வளவு பொல்லாத தூர்த்தர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திராது. உங்களுடைய பெருமையையும் அறிந்திருக்கமாட்டேன். மலாய் நாட்டில் எங்களுடைய சொத்து சுதந்திரமெல்லாம் போனது பற்றி நான் கவலைப்படவில்லை. அதன் பயனாகத்தான் உங்களை அடைய நான் கொடுத்து வைத்திருந்தேன்!” என்றாள் பங்கஜா.

“கொடுத்து வைத்திருந்தவன் நான். ஜப்பான்காரன் மலாய் நாட்டுக்குப் படையெடுத்து வந்ததே உன்னை என்னிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். இல்லாவிட்டால், அந்தப் பட்டிக்காட்டுப் பெண் செம்பவளவல்லியைப் போல் யாராவது ஒருத்தியைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படுவேன்” என்றார் சின்னமுத்துக் கவுண்டர்.

“இன்றைக்கு இப்படிச் சொல்கிறீர்கள்! அன்றைக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைத்தான் ஆ காசத்திலே தூக்கி வைத்துப் பேசினீர்கள், பிரமாத கெட்டிக்காரி என்று… !”

“அவள் ஒன்றும் கெட்டிக்காரி இல்லை. செங்கோடனிடம் அவள் வைத்திருந்த ஆசை அப்படி அவளைக் கெட்டிக்காரியாகச் செய்திருந்தது. “

“அவள் பேரில் நீங்கள் வைத்திருந்த ஆசை உங்களை அவ்வளவு பலசாலியாகச் செய்துவிட்டது; அதனால் தானே பங்காருவின் தலையில் அந்தக் கடற்பாரையைப் போட்டீர்கள்? அவள் உயிரைக் காப்பாற்றினீர்கள்?”

“அவள் பேரில் ஆசையால் அவளை நான் காப்பாற்றவில்லை. உன்பேரில் வைத்த ஆசையினால்தான் காப்பாற்றினேன். என் கண்மணி! இதைக்கேள், கேட்டு நன்றாய் மனத்தில் பதிய வைத்துக்கொள். பங்காரு செய்த தவறையே நானும் செய்தேன். குடிசைக்குள் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருட்டில் ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் செம்பா என்று நான் நினைக்கவேயில்லை. நீ என்று தான் நினைத்தேன். அதனால் தான் என் கைகளுக்கு அவ்வளவு பலம் ஏற்பட்டது. பங்காருவின் மண்டையில் கடப்பாரையைப் போட்டேன்… “

இதைக் கேட்டதும் பங்கஜாவுக்கு உடம்பு புல்லரித்தது. சினிமா கதாநாயகிகளைப் போல் பேசினாள்; காரியத்திலும் நடந்து கொண்டாள்.

“நாதா! இத்தனை நாளும் இதைச் சொல்லவில்லையே? எனக்காக எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்தீர்கள்? என் உடல் பொருள் ஆவியெல்லாம் ஏழேழு ஜ ன்மத்துக்கும் உங்களுடைய உடைமை” என்றாள் பங்கஜா.

அந்த நிமிஷத்தில் மாஜி போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஏழாவது சொர்க்கத்தை அடைந்தார்.

சேலம் ஜங்ஷனின் தீப வரிசைகள் சற்றுத் தூரத்தில் தெரிந்தன. நகருக்குள் புகுந்து சுற்றி வளைத்துக் கார் போக வேண்டியிருந்தது. ரெயில் வண்டி ஒன்று குப் குப் என்ற சத்தத்துடன் வரும் சத்தம் கேட்டது. ‘விஸில்’ ஊதும் சத்தமும் கேட்டது.

“மெட்ராஸ் வண்டி வந்துவிட்டது. ஆனால் கொஞ்ச நேரம் நிற்கும். அவசரமில்லை” என்றார் டிரைவர்.

“அப்படியானால் பாக்கிக் கதையையும் சொல்லி முடித்துவிடு!” என்றேன். “கதைதான் முடிந்துவிட்டதே! செங்கோடக் கவுண்டரும் செம்பவளவல்லியும் ஆனந்தமாக இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் அவர்களுக்கு இருக்கின்றன. செங்கோடக் கவுண்டர் மேலும் கொஞ்சம் நிலம் வாங்கிச் சேர்த்திருக்கிறார். நாலு வருஷமாக மழை பெய்யாமலிருந்தும் அவருடைய கேணியில் நிறையத் தண்ணீர் இருக்கிறது. அவருடைய நிலங்கள் பச்சென்று இருக்கின்றன. சோளம் நன்றாகப் பயிராகிக் கொண்டைவிட்டிருக்கிறது அவருடைய குழந்தைகள் சோளக் கொண்டையைப் பறித்துத் தின்றால் இப்போது செங்கோடக் கவுண்டர் திட்டுவதும் ஆட்சேபிப்பதும் இல்லை. செம்பா சில சமயம் குழந்தைகளைத் தடுக்கிறாள். ஆனால் செங்கோடக் கவுண்டர் அவளுடன் சண்டை பிடிக்கிறார். ‘குழந்தைகள் தின்றால் தின்றுவிட்டுப் போகட்டும்! அவர்களுக்கில்லாத சோளக்கொண்டை வேறு யாருக்கு? அப்படியே அறுவடை செய்து வைத்திருந்தால் யாராவது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்! குழந்தைகள்தான் தின்றுவிட்டுப் போகட்டுமே’ என்று சொல்லுகிறார்!”

“இதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் கேஸ் என்ன ஆயிற்று? குற்றவாளி யார் என்று ஏற்பட்டது?”

“ஏன்? குற்றவாளிகள் எஸ்ராஜுவும் பங்காருசாமியுந்தான். கள்ள நோட்டுப் போட முயன்றதற்காக அவர்களுக்குத் தலைக்கு மூன்று வருஷம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. கள்ள நோட்டுப் போடுவதில் அவர்கள் வெற்றி பெறவும் இல்லை. ஒரு நோட்டையாவது அவர்களால் செலாவணி செய்ய முடியவில்லை. ஆ கையால் தலைக்கு மூன்று வருஷத் தண்டனையோடு போயிற்று. “

“பங்காருவுக்குக் கூடவா தண்டனை கிடைத்தது?”

“ஆமாம்; அவன் தான் கேஸில் முதல் குற்றவாளி. “

“குற்றவாளியை யமலோகத்திலிருந்து யார் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள்? செத்துப் போனவன் மீது கேஸ் போடுவது உண்டா?”

“பங்காரு செத்துப் போனான் என்று யார் சொன்னது? கொட்டறாப்புள்ளி மாதிரி இருக்கிறானே! அவனுடைய தலைக் காயம் சில நாளைக்குள் ஆறிவிட்டது. சிறையில் நன்றாய்க் கொழுத்து வெளியே வந்தான். “

“பின்னே, ‘கொலைக் கேஸ்’, ‘கொலைக் கேஸ்’ என்று சொன்னாயே? ‘கொப்பனாம்பட்டி கொலை’ என்றும் ‘மிக மர்மமான கொலை’ என்றும் சொன்னாயே!”

“சாதாரண கொலைக் கேஸ்களில் கொன்ற குற்றவாளி யார் என்பது மர்மமாயிருக்கும். அதைக் கண்டு பிடிக்கப் போலீஸாரும் துப்பறிவோரும் பாடுபாடுவார்கள். ஆனால் இந்தக் கொப்பனாம்பட்டி கொலைக் கேஸில் கொலை செய்தவன் யார் என்பதும் மர்மம்; கொலையுண்டவன் யார் என்பதும் மர்மம்! உண்மையில் யாரும் சாகவில்லை! ஆ கையால் கொலை செய்யப்படவும் இல்லை! செங்கோடக் கவுண்டன் அன்றிரவு, ‘நான் தான் கொன்றேன்’ ‘நான் தான் கொன்றேன்’ என்று கத்தியதால் ‘கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்’ என்று பெயர் வந்து விட்டது. கொல்லப்பட்டவன் யார் என்பது தெரியாமலேயே ஜ னங்கள், ‘கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்!” என்றார் மோட்டார் டிரைவர்.

“கதை இப்படி முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் போலீஸ்காரர் விஷயம் என்னவாயிற்று? அவர் ஏன் போலீஸ் இலாகாவைவிட்டு விலகினார்?” என்று கேட்டேன்.

“ராஜிநாமா தான். கள்ள நோட்டுக் கேஸில் அவர் சரியான தடையம் கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை என்று அவர்பேரில் புகார் ஏற்பட்டது. கள்ள நோட்டுகள் என்று அவர் குடிசையிலிருந்து திரட்டி மூட்டை கட்டி கொண்டு வந்தவை உண்மையில் உண்மையான நோட்டுகள் என்றும், செங்கோடன் தவலையில் இருந்தவை என்றும் தெரியவந்தன. இதனால் போலீஸ்காரருக்குப் ‘பிளாக் மார்க்’ கிடைத்தது. எதிர்பார்த்தபடி பிரமோஷன் கிடைக்கவில்லை. ஆ கவே கோபங்கொண்டு ராஜிநாமா செய்துவிட்டார். “

“செங்கோடனுக்கு அவனுடைய பணம் கிடைத்து விட்டதாக்கும்!”

“திவ்யமாகக் கிடைத்துவிட்டது. ஆனால் செங்கோடன் இப்போதெல்லாம் பணத்தைப் புதைத்து வைப்பதில்லை. மிச்சமாகும் பணத்தைப் பாங்கியிலோ, சர்க்கார் கடன் பத்திரங்களிலோ போட்டு வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குகிறான். “

“ரொம்ப சந்தோஷம்” என்றேன்.

கடைசியாகக் கேட்க எண்ணியிருந்த கேள்வியையும் கேட்டுவிட்டேன்:

“போலீஸ்காரர் இப்போது என்ன செய்கிறார்?” என்றேன்.

“மாஜி கான்ஸ்டேபிள் 374ஆம் நம்பர் இப்போது மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறார்! கார் ஓட்டும் சமயம் தவிர மற்ற வேளையெல்லாம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பெண்சாதியை அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்!”

இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருந்தது: “அந்த மோட்டார் டிரைவர் நீர்தானா?” என்பது.

ஆனால் நான் அதைக் கேட்கவில்லை. எதற்காகக் கேட்பது? நாயின் உயிரைக் காப்பதற்காக மோட்டாரையும் என்னையும் அவர் வேலை தீர்த்துவிடப் பார்த்ததை நினைத்தாலே தெரியவில்லையா? இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கப் போவானேன்?

இத்துடன்

அமரர் கல்கியின் பொய்மான் கரடு

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Poiman Karadu Kalki Tag

poiman karadu kalki,kalki poiman karadu,poiman karadu story,poiman karadu salem,poiman karadu,poiman karadu audiobook,பொய்மான் கரடு,கல்கியின் பொய்மான் கரடு ,kalki audio,kalki audiobooks,kalki audiobook,kalki story,kalki audio books,kalki audio books free download,kalki novels audio ,kalki tamil audio books,kalki story audiobook,kalki krishnamurthy,poiman karadu pdf,poiman karadu book,poiman karadu audio,poiman karadu audio book,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *