Tamil AudiobooksYoutube

Parthiban Kanavu Audiobook Part1 CH5

Parthiban Kanavu Audiobook Part1 CH5

Parthiban Kanavu Audiobook Part1 CH5

Parthiban Kanavu Audiobook Part1 CH5 பார்த்திபன் கனவு Mr and Mrs Tamilan

Parthiban Kanavu Audiobook பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.

வாசலில் குதிரையில் வந்திறங்கியவன் திடகாத்திரமுள்ள யௌவன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும். ஆடை ஆபரணங்கள் உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசா பாசங்களிலும் மதமாச்சரியங்களிலும் அலைப்புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது. “சேனாதிபதி வரவேணும்” என்று சொல்லிக் கிழவன் வந்தவனை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான். “இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதே! நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என் தகப்பனுக்குப் பிள்ளையே இல்லை!” என்று கோபமான குரலில் சொல்லிக் கொண்டு மாரப்ப பூபதி உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்ந்திருந்த பீடத்தில் அமர்ந்தான். யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பது போல் தெரிகிறது!” “யுவராஜாவா? யார் யுவராஜா? நானா? நேற்றுப் பிறந்த அந்தப் பரதைப் பயல் அல்லவா யுவராஜா? இளவரசர் விக்கிரம சிங்கர் வாழ்க! ஜய விஜயீபவ!” என்று பரிகசிக்கும் குரலில் கூறிவிட்டு மாரப்ப பூபதி ‘இடி இடி’யென்று சிரித்தான். சற்றுப் பொறுத்து, “அது போகட்டும், ஆச்சாரி! உன் சோழி என்ன தெரிவிக்கிறது? அதைச் சொல்லு!” என்றான். வீரபத்திர ஆச்சாரி கொல்லு வேலை செய்ததுடன், சோதிட சாஸ்திரத்தில் வல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான். சோழிகளை வைத்துக் கொண்டு அவன் கணக்குப் போட்டு ஜோசியம் பார்ப்பது வழக்கம்.

“யுவராஜா! எதற்காக இந்தப் பிரமை உங்களுக்கு….?” என்று ஆரம்பித்தான் கிழவன். “அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா? வெறுமனே என்னை அலைக்கழிக்க உத்தேசமா?” “பார்த்தேன் யுவராஜா! உங்களுக்கு என்ன வேணுமோ, கேட்டால் சொல்லுகிறேன்” “முக்கியமான விஷயம் சண்டைதான். அதன் முடிவு என்ன ஆ கும்? இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால் உன் ஜோசியத்தினால் என்ன பிரயோஜனம்? சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி ஆற்றில் எறிந்து விடுகிறேன்!” என்றான் மாரப்பன். “அப்படியே செய்துவிடுங்கள், யுவராஜா! எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள்! என்னுடைய சொந்த விஷயத்தில் இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தை தான் மிஞ்சியிருக்கிறது” “வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி?” என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு விகாரம் காணப்பட்டது. “ஏதோ இருக்கிறாள்” என்றான் கிழவன். “ஆமாம் பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால் வள்ளி என்ன செய்வாள்?” “அதற்கென்ன, யுவராஜா! வள்ளியைக் காப்பாற்றக் கடவுள் இருக்கிறார்; இந்தக் கிழவனும் இருக்கிறேன்!” என்று அழுத்திச் சொன்னான் வீரபத்திர ஆச்சாரி.

“ஆமாம், நீ இருக்கும்போது அவளுக்கு என்ன வந்தது? இருக்கட்டும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சண்டையில் முடிவு என்ன ஆ கும்? உன் சோழிக் கணக்கில் ஏதாவது தெரிகிறதாயிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு!” “கடையை அப்போதே கட்டிவிட்டேன் யுவராஜா! உங்களுடைய தொந்தரவினால்தான் மறுபடியும் அதைத் திறந்தேன்!” “திறந்ததில் என்ன தெரிந்தது?” “கிரகங்களின் சேர்க்கை ரொம்ப பயங்கரமான முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை அடியோடு அழிந்து போகும். யுத்த களத்துக்குப் போனவர்களில் ஒருவராவது திரும்பி வர மாட்டார்கள். ஆனால் எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது” “அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச் சேனை அழியும் என்று சொல்வதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும் வேண்டாம். திரும்பி வராமல் நிர்மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான். அந்தப் பெரும் புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக் கொள்ளப் போகிறார்!” “யுவராஜா! நீங்களே இப்படிச் சொல்லலாமா? நமக்குள் எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் பகைவனுக்கு முன்னால்…” “யார் பகைவன்? பல்லவ சக்கரவர்த்தியா? நமக்குப் பகைவன்? இல்லவே இல்லை! சோழநாட்டுக்கு இப்போது பெரிய பகைவன் பார்த்திபன்தான். இவன் கையிலே வாள் எடுத்து அறியமாட்டான். வேல் வீசி அறிய மாட்டான்! இப்பேர்ப்பட்ட வீராதிவீரன் பல்லவ சைன்யத்துடன் போர் செய்யக் கிளம்புகிறான். பல்லவ சைன்யம் என்றால் லேசா! சமுத்திரத்தின் மணலை எண்ணினாலும் எண்ணலாம். பல்லவ சைன்யத்திலுள்ள வீரர்களை எண்ண முடியாது.

காவேரியிலிருந்து கோதாவரி வரையில் பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே? ஒரு கையகலமுள்ள சோழ நாடு எங்கே? நரசிம்ம சக்கரவர்த்தி தான் லேசுப்பட்டவரா? நூறு யோசனை தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில் வென்று, வாதாபியைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு வந்தவர், அவருடன் நாம் சண்டை போட முடியுமா? யானைக்கு முன்னால் கொசு!” “யுவராஜா! இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள்? மகாராஜாவிடம் சொல்வதுதானே?” “மகாராஜாவிடம் சொல்லவில்லையென்றா நினைத்துக் கொண்டாய் கிழவா? சொன்னதன் பலன் தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி போயிற்று. மகாராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்டு விட்டார். சைனியத்தை அவரே நடத்திக் கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம்! தாராளமாய்ப் போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதி பதவி இல்லையென்று யார் அழுதார்கள்?” “அப்படியானால் யுவராஜா! நீங்கள் யுத்தத்துக்கே போகமாட்டிர்களோ?” “நானா? நானா? என்னைக் கூப்பிட்டால் போவேன்; கூப்பிடாவிட்டால் போக மாட்டேன்; கிழவா! சண்டையின் முடிவைப் பற்றிச் சொன்னாயே, அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு!” “ஆமாம், யுவராஜா! ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் யுத்த களத்தில் அழிந்து போவார்கள். ஒருவராவது உயிரோடு திரும்பி வரமாட்டார்கள்?” “உயிரோடு திரும்பி வரமாட்டார்களா? பின் உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ? ஹா ஹா ஹா ஹா!” என்று மாரப்ப பூபதி உரக்கச் சிரித்தான். பிறகு, “ஆமாம் ஆமாம்; நான் யுத்தத்தில் செத்துப் போனால் நிச்சயமாய்ப் பிசாசாகத் திரும்பி வருவேன்; திரும்பி வந்து வள்ளியைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவேன்” என்று கூறி மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தான்.

சமையலறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி தன் இரண்டு கையையும் நெறித்து, “உன் கழுத்தை இந்த மாதிரி நெறித்துக் கொல்லுவேன்!” என்று முணுமுணுத்தாள். கொஞ்சம் காது மந்தமுள்ள கிழவி “என்ன சொல்லுகிற, வள்ளி?” என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப் பொத்தி, “சும்மா இரு!” என்றாள். “உள்ளே யார் பேசுகிறது?” என்று கேட்டான் மாரப்ப பூபதி. “யார் பேசுவார்கள்? என்னைப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒரு கிழப் பிசாசு அதுதான் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்” என்றான் கிழவன். “சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும். என் கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி! பொய் சொல்லி ஏமாற்றியிருந்தாயோ…!” “தங்களை ஏமாற்றி எனக்கு என்ன ஆ கவேணும் யுவராஜா!” மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தான். முற்றத்தில்அடுக்கி வைத்திருந்த வாள்களையும் வேல்களையும் கத்தி கேடயங்களையும் பார்த்துவிட்டுச் சிரித்தான். “ஆஹா! ரொம்ப முனைந்து வேலை செய்கிறாயாக்கும்! கத்தி! கேடயம்! வாள்! வேல்! இந்த வாழைப்பட்டைக் கத்திகளையும், புல் அரியும் அரிவாள்களையும் வைத்துக் கொண்டுதான் உங்கள் பார்த்திப மகாராஜா, பல்லவ சக்கரவர்த்தியை ஜயித்து விடப் போகிறார்? நல்ல வேடிக்கை! ஹா ஹா ஹா” என்று உரக்கச் சிரித்துக் கொண்டே ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அப்படியே வாசற் பக்கம் போனான். உலைக் களத்தில் கிளம்பும் அனற் பொறிகளைப் போல் கிழவன் கண்களிலே தீப்பொறி பறந்தது.

Credits -:
Book : Audiobook பார்த்திபன் கனவு
Author of book -: Kalki Krishnamurthy
Copyright © Kalki Krishnamurthy, All rights reserved.

Popular Tags

Parthiban Kanavu ,Audiobook பார்த்திபன் கனவு,#ParthibanKanavu,#ParthibanKanavuAudioBook,parthiban kanavu story in tamil,parthiban kanavu story,parthiban kanavu book story,parthiban kanavu full story in tamil,parthiban kanavu audio book,parthiban kanavu audio book free download,parthiban kanavu book,parthiban kanavu pdf book,kalki novels in tamil,kalki novels list in tamil,kalki novels audio,kalki novels,kalki audiobooks,kalki books,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *