Kalki Short StoriesKalki TimesStory

Bhavani B.A.B.L Kalki | Kalki Times

Bhavani B.A.B.L Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

பவானி, B.A, B.L

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Bhavani B.A.B.L Kalki

அத்தியாயம் 1: கூனூர் பங்களா

“பொய்களில் எல்லாம் பெரிய பொய்யை சிருஷ்டித்தவனுக்கு ஒரு பரிசு கொடுப்பதாயிருந்தால், அந்தப் பரிசு நிராட்சேபணையாக ஈசுவரனைத்தான் சேரும். அது விஷயத்தில் பகவானுடன் போட்டி போடுவதற்கு யாராலும் முடியாது” – இம்மாதிரி சொல்லுகிறார்கள் வேதாந்திகள்.

இந்த உலகத்தைவிடப் பெரிய பொய் வேறு ஒன்றும் இல்லையென்பது அவர்களுடைய கொள்கை. இந்த உலகத்தின் இன்ப துன்பகளெல்லாம் பொய்; தேகம் பொய்; மனம் பொய்; விருப்பு வெறுப்பு, ஆசை பகைமை, கோபம் தாபம் எல்லாம் பொய் என்று சொல்லுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்கள், இதை நம்புவது இலேசான காரியமல்ல. இவ்வுலகின் சுக துக்கங்களெல்லாம் நமக்கு ரொம்பவும் வாஸ்தவமாயிருக்கின்றன. அந்தந்தச் சமயத்தில் அததை விட நிஜமானது வேறு ஒன்றுமில்லையென்று தோன்றுகிறது.

ஆனால் வேறொரு விதத்தில் இந்த உலகம் பொய்யுலகம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். உலக வாழ்க்கையில் நாம் அநேக சம்பவங்களைக் கண்ணால் பார்க்கிறோம்; காதால் கேட்கிறோம். அவற்றை நாம் உண்மையென்றும் நம்பி விடுகிறோம். நம் கண்களும் காதுகளும் நம்மை அநேக முறைகளில் ஏமாற்றி விடுகின்றன. “கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்தறிவதே மெய்” என்னும் பழமொழி மிகவும் உண்மையானது.

சாதாரணமாய் வாழ்க்கையின் வெளிப்படையான நிகழ்ச்சிகள்தான் நமது கவனத்தைக் கவருகின்றன. நாம் பார்க்கும் வெளி உலகத்துக்குப் பின்னால் மனோலோகம் ஒன்றிருக்கிறதென்பதை மறந்து விடுகிறோம். ஆற்று வெள்ளத்தில் மேலே மிதந்து வரும் நுரைத்திரள்களும், உதிர்ந்த இலைகள், மலர்களும், குப்பை கூளங்களும் நம் கண்ணில் படுகின்றன. ஆனால் ஜலப் பரப்பின் அடியில் உள்ள சுழிகளையும் சுழல்களையும் நாம் அறிவதில்லை. தினந்தோறும் நாம் பார்த்துப் பழகிவரும் மனிதர்களைப் பற்றி நமக்கு எல்லாந் தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமற்ற வெளிப்படையான அம்சந்தான் நமக்குத் தெரிந்தது. அவர்களுடைய உள்ளத்தில் பொங்கிக் குமுறும் ஆசாபாசங்கள், விரோத வைஷம்யங்கள், இன்ப துன்பங்கள் இவை ஒன்றும் நமக்குத் தெரியாது.

சில சமயம் வாழ்க்கையின் வெளிப்படையான சம்பவங்களைப்பற்றிக் கூட நாம் பொய்யை மெய்யாக நினைத்து ஏமாறுவதுமுண்டு. உதாரணமாக, ஸ்ரீமதி பவானியைப் பற்றி உலகினர் அறிந்திருந்ததைக் குறிப்பிடலாம். அவளுக்கும் பாரிஸ்டர் சேஷாத்ரிக்கும் ஏற்பட்ட நேசத்தைக் குறித்து அறியாத வக்கீல் இருக்க முடியாது. மூன்று நான்கு வருஷத்துக்கு முன்னால், இரண்டு வக்கீல்கள் சேருமிடமெல்லாம் இதைப் பற்றியே பேசினார்கள். கிளப்புகளிலும் ஹோட்டல்களிலும், கடற்கரைகளிலும், டிராம்வண்டியிலும் வேறு வம்பு கிடையாது. கடைசியாக, பவானியும் சேஷாத்ரியும் கப்பலேறி உலக யாத்திரை சென்றார்கள் என்று அறிந்த பின்னர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பேச்சு ஓய்ந்தது. அவர்களைப் பற்றித் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை யென்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். ஆனாலும் ஜனங்கள் நினைத்ததற்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம்?

அகஸ்மாத்தாக, நான் சற்றும் எதிர்பாராத முறையில், எனக்கு அவர்களைப்பற்றிய உண்மை தெரியவந்தது. சென்றவருஷம் கோடைக்காலத்தில், நான் ஒரு பிசகு செய்தேன். ஒரு வார காலம் காரியாலயத்தில் விடுமுறை பெற்றுக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் வீட்டிலே இருந்து விட்டேன். இதனால் உடம்பு கெட்டுப் போய் விட்டது. டாக்டரிடம் காட்டியதில், அவர், “அடடா! உங்களுக்கு அவ்வளவு பெரிய வியாதி எப்படி வந்தது? இது ரொம்ப ரொம்ப பெரிய மனுஷர்களுக்கு அல்லவா வரும்? இதற்கு ‘வேலையில்லாத வியாதி’ என்று பெயர். பூரண ஓய்வு எடுத்துக் கொள்வதுதான் இதற்குச் சிகிச்சை! அதுவும் குளிர்ந்த இடத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். போங்கள்; நீலகிரிக்கு உடனே போங்கள்” என்று ஆக்ஞாபித்தார். அப்படியே நான் போய் நீலகிரியில் சில காலம் தங்கியிருந்தேன். அப்போது, ஒரு நாள் கூனூரில் மாஜி புரொபஸர் பிரணதார்த்தி அவர்களின் பங்களாவுக்குப் போக நேர்ந்தது. சென்னையிலே இவரிடம் எனக்குச் சொற்பப் பழக்கமுண்டு. நீலகிரிக்கு வந்தால் தம்மை வந்து கட்டாயம் பார்க்க வேண்டுமென்று அவர் வற்புறுத்திச் சொல்லியிருந்தபடியால் போனேன். அவருடைய பங்களா கூனூரில் மிகவும் அழகான, ஏகாந்தமான ஓரிடத்தில் அமைந்திருக்கிறது. அந்தப் பங்களாவுக்கு அவர், ‘சாந்தி நிலையம்’ என்று பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார்.

“வெயிலின் அருமை குளிரில் தெரியும்” என்ற பழமொழியின் உண்மையை நீலகிரியில் நன்கு தெரிந்து கொள்ளலாம். நான் போயிருந்த அன்று மாலை நாலு மணிக்கு நானும் புரொபஸரும் பங்களாவின் வாசல் புறத்தில் இளம் வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம். அங்கிருந்து பார்த்தால், சுற்றிலும் வெகு தூரத்துக்கு வரிசை வரிசையான மலைத் தொடர்களும், பசுமையான காடுகளும், பள்ளத்தாக்குகளும், மலை வீழருவிகளுமே காட்சியளித்தன. யூகலிப்டஸ் மரங்களின் கிளைகளில் ஜிலு ஜிலுவென்று இளங்காற்று வீசியபோது ஏற்பட்ட ‘ஙொய்’ என்ற மனோகரமான சப்தத்தைத் தவிர வேறு சப்தமே கிடையாது. இதைச் சற்று நேரம் கவனித்து விட்டு, “அடாடா! இந்த இடந்தான் எவ்வளவு அமைதியாயிருக்கிறது!” என்று நான் என்னையறியாத உற்சாகத்துடன் சொன்னேன். அப்போது புரொபஸர் பிரணதார்த்தி “ஆமாம்; இந்த இடம் இப்போது அமைதியாய்த்தான் இருக்கிறது. ஆனால் மூன்று வருஷத்துக்கு முன்னால் இங்கே ஒரு சமயம் பெரும் புயல் அடித்தது; பூகம்பம் நிகழ்ந்தது; எரிமலை நெருப்புக் கக்கிற்று; ஆமாம், இதெல்லாம் மனோலோகத்திலேதான் நடந்தது” என்றார்.

உடனே, எனக்கு பவானி சேஷாத்ரி இவர்களின் ஞாபகம் வந்தது. ஸ்ரீமதி பவானியினுடைய சித்தப்பாதான் பேராசிரியர் பிரணதார்த்தி என்பது நினைவுக்கு வந்தது. மூன்று வருஷத்துக்கு முன்பு பவானியும் சேஷாத்ரியும் கூனூரில் இந்தப் பங்களாவில் இருந்தபோதுதான் இங்கே தப்பியோடிய கைதி ஒருவன், பிடிபட்டான். அச்சமயம் பத்திரிகைகளில் இதைப்பற்றிச் சில விவரங்கள் வெளியாயின. ஆனால் வெளியாகாத விஷயங்கள் சில கட்டாயம் இருந்திருக்க வேண்டும் என்று மட்டும் எனக்கு அப்போதே தோன்றிற்று. அந்தச் சம்பவத்தையடுத்து உலக யாத்திரை சென்ற பவானியும் சேஷாத்ரியும் இன்னும் திரும்பி வந்து சேரவில்லை.

இன்றைய தினம் ஏனோ புரொபஸர் பிரணதார்த்திக்குத் தமது மனக்கதவைத் திறக்க வேண்டுமென்று தோன்றியது. எல்லாவற்றையும் விண்டுவிண்டு அவர் சொல்லவில்லையென்றாலும், உண்மையை நான் தெரிந்து கொள்ளும் அளவுக்கு விஷயங்களை வெளியிட்டார். அது தான் எப்படிப்பட்ட உண்மை! எவ்வளவு பயங்கரமானது! எவ்வளவு ஆச்சரியமானது!

ஏற்கனவே எனக்குத் தெரிந்த விஷயங்களையும், ஆசிரியர் பிரணதார்த்தி அன்று சொன்னவற்றையும் வைத்துக் கொண்டு, பெயர்களை மட்டும் மாற்றி, இந்தக் கதையை எழுதுகிறேன்! – என்ன, கதையென்றா சொன்னேன்? ஆமாம்; கதைதான்! நிஜமென்றால் யார் நம்புவார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *