BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part4 Ilavenil

அத்தியாயம் 6
பூர்வ ஞாபகம்

குழந்தைகள் போன பிறகு உமாவுக்கு அடிக்கடி அவர்களுடைய ஞாபகம் வந்து கொண்டிருந்தது. முக்கியமாக, சாருவின் மலர்ந்த முகமும், கலீரென்ற சிரிப்பும், வெடுக்கென்ற பேச்சும், கண்ணீர் ததும்பிய கண்களும் உமாவின் மனக்கண்ணின் முன்னால் எப்போதும் தோன்றிக் கொண்டிருந்தன.

அந்தக் குழந்தையை மறுபடி எப்போது பார்ப்போம் என்று இருந்தது. டிக்கெட் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். நாடகம் நடப்பதற்கு இன்னும் மூன்று நாள் இருப்பது தெரிய வந்தது. ‘அடாடா! இன்று ராத்திரியே இருக்கக் கூடாதா?’ என்று தோன்றிற்று.

சாருவின் பேச்சுக்களும் செய்கைகளும் ஒவ்வொன்றாய் உமாராணிக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன. அவை அவ்வளவு தூரம் தன்னுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டன என்பது உமாவுக்கு அதிசயமாயிருந்தது. குழந்தை எதிரில் இருந்தபோதும், அவள் போனபோதுங்கூட அவ்வளவு தெரியவில்லை. அவள் போய்விட்ட பிறகு தான் தன்னுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்து விட்டாள் என்பது நன்றாய்த் தெரிந்தது.

குழந்தை தான் என்ன சமர்த்து! என்ன சூடிகை! முகத்திலே எவ்வளவு களை! எவ்வளவு சாதுர்யமாய்ப் பேசுகிறது! – இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கே சமர்த்து அதிகம்.

அந்த வயசில் தான் எப்படி இருந்தாள் என்பதை உமா யோசித்துப் பார்த்தாள். அதை நினைக்கவே அவளுக்கு வெட்கமாயிருந்தது. கிழிச்சல் பாவாடையைக் கட்டிக்கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்து வீடு கட்டி விளையாடியதெல்லாம் ஞாபகம் வந்தது. சிவராத்திரிக்குக் கண் விழிப்பதற்காக, “சீசந்தி அம்பாரம் சிவராத்திரி அம்பாரம்” என்று பாடிக் கொண்டு வீடு வீடாகப் போய் எண்ணெய் தண்டியதும் நினைவு வந்தது. அப்போது தனக்கு அ, ஆ என்று எழுதக் கூடத் தெரியாது. இந்தக் காலத்துக் குழந்தைகளோ ஏழு, எட்டு வயதில் டிராமா போடுகின்றன!

ஆமாம்; சாருவுக்கு ஆறு, ஏழு வயதுதான் இருக்கும். ஆறு, ஏழு, வயது! ஆறு – ஏழு-! அந்தக் குழந்தை இருந்தால் அதற்கும் இப்போது ஏழு வயது தான் இருக்கும்.

உமாவுக்கு, சொப்பனத்தில் கண்டது போல், ஏழு வருஷத்துக்கு முந்தி நடந்த அந்த அதிசயச் சம்பவம் ஞாபகம் வந்தது.

ஒரு யுவதி கையில் ஒரு சின்னஞ் சிறு குழந்தையுடன் சென்னை நகரின் வீதிகளில் வெறி பிடித்தவள் போல் ஓடுகிறாள். கொஞ்ச நேரம் வரையில் அவள் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய தேகத்துக்கும் பலம் அளித்து வருகிறது. திடீரென்று அவளுடைய சக்தி குன்றுகிறது; மூச்சு வாங்குகிறது. இனிமேல் ஓடினால் உயிர் போய் விடுமென்று தோன்றுகிறது.

அவளுக்கு உயிரை விடுவதைப் பற்றிக் கவலையில்லை. உண்மையில் அவள் மரணத்தை மனப்பூர்வமாக வேண்டுகிறாள். ஆனால், தனக்குப் பின்னால் அந்தக் குழந்தையை இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போக மட்டும் மனம் வரவில்லை. ஆகவே, இரண்டு பேரும் ஏக காலத்தில் மரணமடைய வேண்டுமென்று தீர்மானிக்கிறாள். ஜன சஞ்சாரமில்லாத ஜலப் பிரதேசத்தைத் தேடிச் செல்கிறாள்.

உலகந்தான் எவ்வளவு ஆச்சரியமானது! எப்போது நாம் யாராவது மனுஷ்யர்களைப் பார்க்க மாட்டோ மா, யாரேனும் வந்து உதவி செய்யமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கிறோமோ, அப்போது நம் கண்ணில் யாரும் எதிர்படுவதில்லை. கண்ணில் எதிர்ப்படுகிறவர்கள் கூட நம்மருகில் வராமல் தூரமாய் ஒதுங்கிப் போகிறார்கள். ஆனால், எப்போது நாம் ஒருவரையும் பார்க்க வேண்டாம். ஒருவர் கண்ணிலும் படவேண்டாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அப்போது எங்கிருந்தோ மனுஷ்யர்கள் வந்து சேர்கிறார்கள். அந்தப் பெண்ணின் அநுபவம் அப்படித்தான் இருந்தது. அவள் ஜன நெருக்கமுள்ள சென்னையின் வீதிகளில் அலைந்த போதெல்லாம், யாரும் ஏனென்று கேட்பாரில்லை. யாருடைய அருகிலாவது சென்று பேச முயன்றாலும், அவள் பிச்சை கேட்க வருவதாக நினைத்து, “போ! போ!” என்று எரிந்து விழுந்தார்கள். ஆனால், இப்போது அவள் ஜன சஞ்சாரமில்லாத இடத்தைத் தேடிப் போன போது, அதற்கு நேர் விரோதமான அனுபவம் ஏற்பட்டது. எவ்வளவு தூரம் நடந்து போனாலும், அங்கேயும் யாராவது ஒருவர் இருவர் எதிர்ப்பட்டனர். அவர்கள் வெகு அக்கறையுடன் அவளருகில் வந்து “ஏம்மா, எங்கேம்மா போறே, இந்தக் குழந்தையை எடுத்துக்கிட்டு?” என்று கேட்டார்கள். பாவம்! இவர்கள் பட்டணத்துக்கு வெளியே கிராமங்களில் வசிக்கும் ஜனங்கள் என்பதும், இவர்களுடைய உள்ளத்தில் இரக்கமும், கருணையும் இன்னும் அடியோடு வற்றிப் போய் விடவில்லையென்பதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. ஆகவே, தன்னுடைய நோக்கத்துக்கு இடையூறு செய்யவே அவர்கள் அப்படிப் பரிவுடன் வந்து கேட்கிறார்கள் என்று நினைத்தாள். சிலருக்குப் பதில் சொல்லாமல் நடந்தாள். வேறு சிலருக்கு, “போங்கோ, உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு!” என்று எரிந்து விழுந்தாள்.

கடைசியில் அவளுடைய எண்ணம் நிறைவேறுவதற்குரிய இடத்தை அடைந்தாள். ஒரு விஸ்தாரமான சவுக்கு மரத்தோப்பு. நெருங்கி வளர்ந்திருந்த சவுக்கு மரங்களில் காற்று அடித்து ‘சோ’ என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மற்றபடி நிச்சப்தமாயிருந்தது. சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மனுஷ சஞ்சாரமே இல்லை. சவுக்கு மரங்களின் வழியாகப் பார்த்தால், வெகு தூரத்தில் உருக்கிய வெள்ளியைப் போல் ஜலம் தெரிந்தது. ஜலம் காணப்பட்ட திக்கை நோக்கி அவள் நடந்தாள். அது பெரிய ஆறு; சற்றுத் தூரத்தில் சமுத்திரத்தில் போய்ச் சங்கமம் ஆயிற்று. சங்கமம் ஆகும் இடத்தில் சமுத்திரத்தில் அடித்த அலைகளின் வெண்ணுரை இங்கிருந்தே நன்றாய்த் தெரிந்தது.

தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இது தான் தகுந்த இடம் என்று தீர்மானித்தாள். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினாள். ஜலம் முழங்காலுக்கு வந்தது, இடுப்புக்கு வந்தது; இன்னும் மேலே ஏறிக் கொண்டிருந்தது. அப்போது அவளுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஒரு க்ஷணம் நின்றாள். முதலிலே தண்ணீரில் யார் முழுகுவது? ஐயோ! குழந்தை தண்ணீரில் அமுங்கி அது மூச்சுத் திணறிச் சாவதைத் தன்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? இந்த எண்ணத்தினால் அவள் உடம்பெல்லாம் நடுங்கிற்று. முடியாது, முடியாது! பின்னே, என்ன செய்வது? முதலில் தான் தண்ணீரில் மூழுகிவிட வேண்டியது. அப்புறம் எப்படியாவது நடக்கட்டும்!-இந்த எண்ணத்துடன் மார்பில் அணைத்திருந்த குழந்தையைத் தூக்கித் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டாள். இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்தாள். ஆச்சு! ஜலம் மார்பளவுக்கு வந்து விட்டது. இன்னும் க்ஷண நேரத்தில் எல்லாம் முடிந்து விடும்.

ஸ்வாமி! பகவானே! நீதான் கதி; அடுத்த ஜன்மத்திலாவது என்னை இம்மாதிரி கதிக்கெல்லாம் ஆளாக்காதே!…

ஆ! இதென்ன?

யார் பாடுகிறார்கள்?

குரலில் அந்த நடுக்கமும் உருக்கமும் வேறு யாருக்கு உண்டு?

ஸ்வாமி! இதென்ன சோதனை?

அப்பா இங்கே எப்படி வந்து சேர்ந்தார்? கால்கள் மேலே தண்ணீருக்குள் செல்ல மறுத்தன; கரையை நோக்கித் தாமே நடக்கத் தொடங்கின.

கரை ஏறினாள்! இன்னும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. எங்கேயோ சமீபத்தில் தான் இருக்கிறார். இப்போது என்ன செய்வது? யோசிக்கலாமென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள். குனிந்து கையிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். அது பல் இல்லாத தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து சிரிக்க முயன்றது.

சீ! தாத்தா வந்து உன்னைக் காப்பாற்றி விட்டார் என்று சந்தோஷப்படுகிறாயாக்கும்? தாத்தாவுக்கு என்ன வந்தது? பிறத்தியாருடைய கஷ்டம் அவருக்கு என்ன தெரியப் போகிறது?

அந்தச் சமயத்தில் பாட்டு நின்றது.

அவள் குதித்து எழுந்தாள். ஓகோ! அப்பா! சாகப் போனவளைத் தடுத்து மறுபடியும் சந்தியில் நிறுத்தி விட்டு, ஓடிப் போய்விடலாமென்று பார்க்கிறீர்களா? சற்று முன்பு குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.

சட்டென்று மறுபடியும் நின்றாள். கொஞ்ச தூரத்தில் மரங்களின் வழியே அவள் கண்ட காட்சி தான் அப்படி அவளை நிற்கச் செய்தது. அப்பா தான்; சந்தேகமில்லை. அந்தத் தோப்புக்கு நடுவே ஒரு சிறு குளமும் குளத்தின் கரையில் ஒரு பழைய மேடையும் காணப்பட்டன. மேடையில் அப்பா தலைப்பை விரித்துப் போட்டுக் கொண்டு படுத்தார்.

அப்பா இங்கே தான் இருக்கிறார். மறைந்து ஓடிவிடவில்லையென்றதும் அவசரம் குறைந்தது. அவர் எதிரில் போகத் தயக்கமாயிருந்தது. அவரிடம் என்னமாய்ப் போவது? என்ன சொல்வது? தன்னுடைய கதையையெல்லாம் கேட்டால் அவர் என்ன நினைப்பார்? எதற்காகச் சொல்ல வேண்டும்? சொல்லி என்ன பிரயோஜனம்? மறுபடி கல்கத்தாவுக்குப் போ என்று தானே அவர் சொல்லப் போகிறார்? ‘பதியே தெய்வம்’ என்று தானே உபதேசிக்கப் போகிறார்?

முடியாது, முடியாது! பேசாமல் இந்தக் குழந்தையை அவர் தலையிலே கட்டி விட்டு, நாம் போய் மறுபடியும் ஜலத்தில் இறங்கிச் சாகலாம்.

ஆனால்…? பளிச்சென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று.

குழந்தையை அவர் தலையில் கட்டி விட்டால் அப்புறம் நாம் எதற்காகச் சாக வேண்டும்?

“பம்பாயிலுள்ள ஓர் உயர் குடும்பத்துப் பெண்மணிக்குத் தோழியாயிருக்க ஒரு தமிழ்நாட்டுப் பெண் தேவை. குழந்தையுள்ளவர்கள் விண்ணப்பம் போட வேண்டியதில்லை.”

அவள் மனத்தில் பதிந்து போயிருந்த இந்தப் பத்திரிகை விளம்பரம் இதோ கண்ணெதிரில் தோன்றிற்று.

சரி! அது தான் சரி!

மெதுவாக மேடைக்கு அருகில் சென்றாள். அப்பா அசந்து தூங்குவதைப் பார்த்தாள். அவருடைய தலை மாட்டில் குழந்தையை மெதுவாகக் கீழே விட்டாள். விரைந்து ஓடிக் கொஞ்ச தூரத்தில் மரத்தின் மறைவில் ஒளிந்து கொண்டாள். இத்தனை நேரம் தாயின் மார்போடு அணைந்திருந்த குழந்தை இப்போது வெறுந் தரையில் விடப்பட்டதும் ‘வீல்’ என்று கத்திற்று.

தூங்கினவர் கண் விழித்தெழுந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். குழந்தையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தார். “இது என்ன இது?” “இது என்ன இது?” என்று சொல்லிக் கொண்டு தடுமாறினார்.

அவருடைய தடுமாற்றம் மரத்தின் மறைவில் இருந்தவளுக்குக் குதூகலத்தையளித்தது. ‘படட்டும்; நன்றாக அவஸ்தைப் படட்டும்!’ என்று எண்ணினாள்.

அந்த மனுஷர் குழந்தையின் அருகில் போய் அதை எடுத்தார். மறுபடி அதைக் கீழே விட்டு விட்டு நாற்புறமும் பார்த்தார். “யாரம்மா, இது? குழந்தை யாருது?” என்று கூவினார்.

மீண்டும் குழந்தையிடம் வந்து அதை எடுத்துக் கொண்டார். “அம்பிகே! பராசக்தி! இந்த உலகத்தைத் துறந்து சந்நியாசியாகலாமென்று இருந்தவனுக்கு இப்படி புத்தி கற்பிக்கிறாயோ?” என்றார்.

‘அப்படியா அப்பா எண்ணினீர்கள்? என்னை இம்மாதிரியெல்லாம் கஷ்டத்துக்கு ஆளாக்கிவிட்டு நீங்கள் சந்நியாசியாகலாமென்று பார்த்தீர்களா? ரொம்ப லக்ஷணம்’ என்று மரத்தின் மறைவிலிருந்தவள் எண்ணிக் கொண்டாள்.

குழந்தையை எடுத்துக் கொண்டு அவர் அந்தத் தோப்பைக் கடந்து போகிற வரையில் அவள் அங்கேயே இருந்தாள்.

உமா திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். மேற்சொன்ன சம்பவம் தன்னுடைய வாழ்க்கையில் உண்மையாக நடந்தது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அப்போது தனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும்! பட்ட கஷ்டங்களினால் தன் மனம் அவ்வளவு கசந்து போயிருந்தது. பிறருடைய கையை எதிர்பாராமல், தானே சுதந்திரமாகச் சம்பாதித்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற ஆசை ஒரு வெறி மாதிரியே பிடித்திருந்தது. இல்லாவிட்டால், அத்தனை நாளைக்குப் பிறகு பார்த்த அப்பாவுடன் பேசாமல் போக மனம் வந்திருக்குமா? குழந்தையை அப்படி விட்டுவிட்டுப் போகத்தான் மனம் வந்திருக்குமா?

இந்த ஏழு வருஷத்தில் குழந்தை வளர்ந்திருக்குமல்லவா? கிட்டத்தட்ட, இன்று டிக்கெட் விற்பதற்கு வந்த குழந்தைகளின் வயது ஆகியிருக்கும். சாருவைப் போல் இருந்தாலும் இருக்கும்.

ஒரு வேளை…! சீ! என்ன பைத்தியக்கார எண்ணம்? அந்த மாதிரியெல்லாம் கதைகளில் வேணுமானால் நடக்கும். நிஜமாக நடக்குமா? சென்னைப் பட்டணத்தில் ஏழு வயதுக் குழந்தைகள் எத்தனையோ ஆயிரம் இருக்கலாம். இந்தக் குழந்தை யாரோ, என்னவோ?

உமா மறுபடியும் டிக்கெட்டை எடுத்துப் பார்த்தாள். டைரியை எடுத்து அந்தத் தேதியில் “மியூஸியம் தியேட்டர்: குழந்தைகள் நாடகம்: மாலை 6 மணி என்று எழுதி வைத்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *