BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part4-2 Ilavenil

அத்தியாயம் 23
மங்களத்தின் மரணம்

சம்பு சாஸ்திரி நெடுங்கரையை அடைந்ததும், தீக்ஷிதர் மங்களத்தைப் பற்றிச் சொன்னது உண்மைதானென்று அறிந்தார். அப்போது, பகவானுடைய கருணையின் ஒரு முக்கியமான அம்சம் அவருக்குப் புலப்பட்டது. இந்த உலகத்தில் சம்பு சாஸ்திரி யாராவது ஒரு மனிதரை வெறுத்தார், தம்முடைய சத்துருவாகக் கருதினார் என்றால், அந்த மனிதர் சங்கர தீக்ஷிதர்தான். அப்பேர்ப்பட்ட சங்கர தீக்ஷிதர் மூலமாக ஈசன் தம்மை மங்களத்தின் மரணத்தறுவாயில் அவளிடம் கொண்டு சேர்த்ததை நினைத்து நினைத்துச் சாஸ்திரி மனம் உருகினார். இந்த ஓர் உதவி செய்ததன் பொருட்டு, தீக்ஷிதர் தமக்கு ஏற்கெனவே செய்துள்ள அபசாரங்களையெல்லாம் அவர் மன்னித்துவிடவும், அவரிடம் நன்றி பாராட்டவும் தயாராயிருந்தார். ஆறு ஏழு வருஷமாக மங்களத்தைத் தாம் கை விட்டுவிட்டு இருந்ததே பிசகு. ஐயோ! இந்தச் சமயத்திலாவது தாம் வந்திராவிட்டால், அவள் கதி என்ன ஆகியிருக்கும்? தமக்குத்தான் அப்புறம் அடுத்த ஜன்மத்திலாவது மனச்சாந்தி உண்டாக முடியுமா?

தாம் பட்டணத்துக்குப் போன பிறகு மங்களத்தின் வாழ்க்கை எப்படி நடந்தது என்பதைப் பற்றி அவளே சொல்லிச் சாஸ்திரி தெரிந்து கொண்டார். சாஸ்திரியின் வாழ்க்கை எவ்வளவு விசேஷ சம்பவங்கள் நிறைந்ததோ, அவ்வளவு மங்களத்தின் வாழ்க்கை விசேஷமற்றதாயிருந்தது. நாலைந்து மாதத்துக்கெல்லாம் அவள் தன் தாயாருடனும் செவிட்டு வைத்தியுடனும் நெடுங்கரைக்குத் திரும்பி வந்தாள். அப்போதிருந்து நெடுங்கரையில் தான் வசித்தாள். தான் இல்லாதபோது சாவித்திரி பூரண கர்ப்பவதியாய் நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செய்தியை ஊரார் சொல்லத் தெரிந்து கொண்டபோது அவள் மனம் ரொம்பவும் புண்பட்டது. சாஸ்திரியிடமிருந்தும் கடிதம் ஒன்றும் வராமல் போகவே, தானும் தன் தாயாருமாகச் சேர்ந்து செய்த சதியை அவர் தெரிந்து கொண்டு தான் அடியோடு தன்னை வெறுத்து விட்டார் என்று மங்களம் எண்ணத் தொடங்கினாள். அது முதலே, மங்களத்துக்கும் அவள் தாயாருக்கும் ஒத்துக் கொள்ளாமல் போயிற்று. “பாவி! பழிகாரி! நீதானே அவரை ஊரைவிட்டு விரட்டினாய்!” என்று மங்களம் அடிக்கடி அம்மாவை வைவதும், “நன்றியற்ற நாயே! எல்லாம் உனக்காகத்தானேடி செய்தேன்?” என்று அம்மா திருப்பி வைவதும் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. இந்த மாதிரி சண்டையினால், சொர்ணம்மாள் சில சமயம் மங்களத்தினிடம் கோபித்துக் கொண்டு ஊரைப் பார்க்கப் போய்விடுவதும் உண்டு. அந்த மாதிரியே இந்தச் சமயமும் அவள் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தாள். செவிட்டு வைத்தி மட்டுந்தான் அக்காவுக்குத் துணையாயிருந்தான்.

சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பினாள் என்னும் செய்தி சம்பு சாஸ்திரியைக் கதிகலங்கச் செய்தது. ஆனாலும், சாவித்திரியைப் பற்றி நினைக்க இப்போது தருணமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். படுத்த படுக்கையாய்க் கிடக்கும் மங்களத்தைப் பராமரிப்பதுதான் இப்போது தம்முடைய முதன்மையான கடமை என்று கருதி, அந்தக் கடமையில் பூரணமாய் ஈடுபட்டார்.

மங்களம் சென்ற இரண்டு வருஷ காலமாக மிகக் கொடிய தலைவலியினால் அடிக்கடி பீடிக்கப்பட்டு வந்தாள். அதற்குச் செய்து கொண்ட நாட்டு வைத்தியங்கள் ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. தான் செய்த கர்மத்தினால் தான் இந்த வியாதி தன்னைப் பீடித்திருக்கிறது என்று அவள் நம்பியபடியால், வைத்தியம் சாதாரணமாய்ப் பலிக்கக்கூடிய அளவுகூடப் பலிக்கவில்லை. இப்போது தலைவலியுடன் சுரமும் சேர்ந்து அவளைப் பீடித்திருந்தது. ரொம்பவும் துர்பலமாயுமிருந்தாள்.

அந்த நிலைமையில் தன் கணவர் வந்து சேர்ந்தது அவளுக்கு எவ்வளவோ சந்தோஷம் அளித்தது. சாஸ்திரியும் மிகவும் சிரத்தையுடன் அவளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார். ஆனால், இதனாலெல்லாம் அவளுடைய வியாதி குணப்படவில்லை; அதிகமே ஆயிற்று.

“சாகிறதற்கு முன்னால் அவரை ஒரு தடவை பார்க்கும்படி கிருபை செய்யவேணும், ஸ்வாமி!” என்று மங்களம் பகவானை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அந்தப் பிரார்த்தனைக்குப் பகவான் மனமிரங்கித்தான் இப்போது சாஸ்திரியைக் கொண்டு வந்து சேர்ந்ததாக அவள் நினைத்தாள். ஆகவே, இனிமேல் தான் பிழைக்கப் போவதில்லையென்றும், சீக்கிரம் மரணம் நேர்ந்துவிடும் என்றும் அவளுக்கு நம்பிக்கை உண்டாயிற்று.

சம்பு சாஸ்திரி வந்ததிலிருந்து அவளுடைய அலட்டலும் அதிகமாயிற்று. ஓயாமல் தான் சாவித்திரிக்குச் செய்த கெடுதலைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினாள். அப்போதெல்லாம் சாஸ்திரி அவளுக்குக் கூடியவரையில் சமாதானம் சொல்ல முயன்றார். சாஸ்திரி வந்த ஒரு வாரத்துக்குள் மங்களத்தினுடைய பலஹீனம் ரொம்பவும் அதிகமாகிவிட்டது. இனிமேல் அவள் பிழைப்பதரிது என்று சாஸ்திரிக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. ஆகவே, அந்தண்டை இந்தண்டை போகாமல் சாஸ்திரி அவள் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார்.

ஒரு மாதிரி மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மங்களம் கண்ணை விழித்தாள். சாஸ்திரியைப் பார்த்து, “நீங்க நிஜமாகவே வந்திருக்கேளா? நான் சொப்பனம் காணலையே?” என்று பலஹீனமான குரலில் கேட்டாள்.

“நான் நிஜமாத்தான் வந்திருக்கேன், மங்களம்! இத்தனை நாளும் உன்னை நான் விட்டுவிட்டிருந்ததே பிசகு. அந்தப் பாவத்தை நான் எப்படித் தீர்க்கப் போறேனோ, தெரியவில்லை” என்றார்.

“நீங்களா பாவம் செய்தவர்? இல்லவே இல்லை! நான் தான் பாவி! அம்மா பேச்சைக் கேட்டுண்டு அந்தக் குழந்தையைப் படுத்தாத பாடும் படுத்தினேன். அவள் எழுதின கடுதாசையெல்லாம் நீங்க பார்க்காமே கிழிச்சு நெருப்பிலே போட்டேன். அந்தப் பாவந்தான் என்னை இப்படி வதைக்கிறது! – ஐயோ! யாரோ கோடாலியாலே தலையிலே போடறாப்பலேயிருக்கே!”

“வேண்டாம், வீணா, அலட்டிக்காதே, மங்களம்! ஸ்வாமியை நினைச்சுக்கோ. எப்பேர்ப்பட்ட பாவமாயிருந்தாலும் பகவான் மன்னிச்சுடுவார்” என்று சொல்லி சாஸ்திரி கொஞ்சம் விபூதி எடுத்து மங்களத்தின் நெற்றியில் இட்டார்.

“ஐயோ! ஸ்வாமின்னா பயமாயிருக்கே!” என்றாள் மங்களம். பிறகு, “சாவித்திரி! சாவித்திரி! உன்னைச் சூடு போடறதற்கு வந்தேனே? பத்து மாஸத்துப் பிள்ளைத்தாச்சியா நீ வந்தபோது, உன்னைத் தெருவிலே நின்னு திண்டாட விட்டேனே? அந்தப் பாவந்தாண்டி என்னை இந்தப் பாடு படுத்தறது, சாவித்திரி! ஒரு வார்த்தை. ‘உன் மேலே எனக்குக் கோபமில்லை, சித்தி’ன்னு சொல்லேண்டி!…” என்று புலம்பினாள்.

மங்களத்தின் துயரம் சாஸ்திரியின் மனத்தை உருக்கிவிட்டது. அவர் அவளைக் கருணையுடன் பார்த்து, “மங்களம்! குழந்தை சாவித்திரி இங்கே இல்லை. அவள் மட்டும் இங்கே இருந்தால், கட்டாயம் உன்னை…” என்று சொல்லிக் கொண்டு வருகையில், “தாத்தா! பாட்டிக்கு உடம்பு என்னமாயிருக்கு?” என்று கேட்டுக் கொண்டே சாரு உள்ளே வந்தாள்.

அவளை மங்களம் வெறிக்கப் பார்த்து, “சாவித்திரி இதோ இருக்காளே! இல்லைன்னு சொன்னேளே! சாவித்திரி! சாவித்திரி! சித்தே எங்கிட்ட வாடி, அம்மா!” என்றாள். சாஸ்திரிக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் சாருவைப் பார்த்து விட்டு, ‘பாவம்! இவளுக்குப் பிரமை!’ என்று எண்ணிக் கொண்டார்.

சாரு ஒன்றும் புரியாதவளாய்த் தாத்தாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, “என் பேர் சாவித்திரி இல்லை, பாட்டி! என் பேரு சாரு!” என்றாள்.

மங்களத்தின் வெளுத்துப் போன இதழ்களில் ஒரு புன்னகையின் சாயை காணப்பட்டது.

“எனக்குத் தெரியாதா? – நீ சாவித்திரிதான் – என் மேலே உனக்கு இன்னும் கோபம் போலேயிருக்கு” என்று மங்களம் தட்டுத் தடுமாறிப் பேசினாள்.

சாரு பளிச்சென்று, “கோபமா? உன் மேலே எனக்கு ஒரு கோபமும் இல்லையே, பாட்டி! தாத்தாவை வேணாக் கேட்டுப் பாரு!” என்றாள்.

இதைக் கேட்டதும், மங்களத்தின் ஒளியிழந்த கண்களில் சிறிது பிரகாசம் உண்டாயிற்று.

“இல்லையா? உனக்கு என் மேலே கோபம் இல்லையா? நீ மகராஜியாயிருப்பே! நன்னாயிருப்பே! – தலையைப் பிளந்தது சட்டுனு நின்னு போச்சே!” என்றாள் மங்களம். அப்போது அவளுடைய கண்கள் செருகத் தொடங்கின. சீக்கிரத்தில் அவள் பிரக்ஞை இழந்தாள்.

பிறகு, மங்களத்துக்குச் சுய ஞாபகம் உண்டாகவேயில்லை. அன்று மாலை அவள் உயிர் தன்னுடைய சிறையிலிருந்து விடுதலை அடைந்து சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *