BooksTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Ch4 சோலைமலை இளவரசி

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Ch4 Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch4 Audiobook அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch4 Audiobook அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Mr and Mrs Tamilan,

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.


அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அத்தியாயம் 4 – வன்மம் வளர்ந்தது!

சோலைமலை சமஸ்தானத்துக்கு ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்த சமயம், சோலைமலை மகாராஜாவுக்கும் அந்தச் சமஸ்தானத்தை அடுத்திருந்த மாறனேந்தல் மகாராஜாவுக்கும் கொஞ்சம் மனத்தாங்கள் ஏற்பட்டிருந்தது. எல்லைத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனத் தாங்கல்தான். மேற்படி தகராறில் இரண்டு மூன்று தடவை சோலைமலை வீரர்களை மாறனேந்தல் வீரர்கள் முறியடித்துத் துரத்தியடித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் மாறேனந்தல் மகாராஜாவின் மூத்த புதல்வனான யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவனின் துடுக்கும் அகம்பாவமுந்தான் என்று தெரிய வந்தது.

 சோலைமலை மகாராஜா தம்முடைய ஏக புதல்வியான பரிமள மாணிக்கவல்லி தேவியை மாறனேந்தல் இளவரசனுக்குக் கல்யாணம் செய்விக்கலாம் என்று ஒரு காலத்தில் எண்ணியிருந்ததுண்டு. மாறனேந்தல் வம்சம் அந்தஸ்திலும் பூர்வீகத்திலும் சோலைமலை வம்சத்துக்குக் கொஞ்சம் தாழ்ந்ததாயிருந்தபோதிலும், பக்கத்துச் சமஸ்தானமாயிருப்பதால் தம் உயிருக்குயிரான அருமைப் புதல்வியை அடிக்கடி பார்ப்பதற்கு வசதியாயிருக்கும் என்ற அந்தரங்க ஆசையினால் மேற்கண்ட யோசனை அவர் மனத்தில் உதித்தது. ஆனால் அந்த எண்ணமெல்லாம் இப்போது அடியோடு மாறிவிட்டது. தன் அருமை மகள் வாழ்நாள் எல்லாம் கன்னிகையாகவே இருக்க நேர்ந்து, சோலைமலை சமஸ்தானம் சந்ததியின்றி அழிந்து போனாலும் சரி, மாறனேந்தல் இளவரசனுக்கு அவளை மணம் செய்து கொடுப்பதில்லையென்று தீர்மானித்தார். தம்மை அவமதித்த மாறனேந்தல் மகாராஜாவையும் அவருடைய மகனையும் பழிக்குப் பழி வாங்கி அந்த வம்சத்தையே பூண்டோ டு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் அவர் மனத்தில் தோன்றி வைரம் பாய்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.

மாறனேந்தல் சமஸ்தானத்தைப் பற்றிச் சோலை மலை மகாராஜாவின் மனோ நிலையைத் தெரிந்து கொண்ட அவருடைய வெள்ளைக்காரச் சிநேகிதர்கள் கொஞ்சங் கொஞ்சமாக அந்த வன்மத்துக்குத் தூபம் போட்டு வளர்த்தார்கள். மாறனேந்தலைப் பழி தீர்க்கத் தங்களுடைய உதவியை அளிக்கவும் முன் வந்தார்கள். இதன்பேரில் சோலைமலை மகாராஜாவுக்கும் கும்பெனியாருக்கும் சிநேக உடன்படிக்கை ஏற்பட்டது. ஒருவருடைய சிநேகிதர்களும் பகைவர்களும் மற்றவருக்கும் சிநேகிதர்கள் பகைவர்கள் என்றும், யுத்தம் நேர்ந்தால் ஒருவருக்கொருவர் சகாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும், முக்கியமாக மாறனேந்தல் வம்சத்தின் கொட்டத்தை அடக்கச் சோலைமலை மகாராஜாவுக்குக் கும்பெனியார் உதவி செய்வார்கள் என்றும் உடன்படிக்கையில் கண்டிருந்தது. அதற்குப் பதிலாகச் சோலைமலை சமஸ்தானத்தில் கும்பெனியாருக்குச் சிற்சில விசேஷ உரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன.

 இந்தச் செய்திகள் எல்லாம் மாறனேந்தல் யுவராஜ உலகநாதத் தேவனுக்குத் தெரிய வந்தபோது, அந்த இளங் காளையின் அகம்பாவமும் வாய்த்துடுக்கும் பன்மடங்கு அதிகமாயின. சோலைமலை ராஜாவைப் பற்றி அவன் நாலுபேர் முன்னிலையில் பகிரங்கமாக அவதூறு சொல்லவும் பரிகாசமாய்ப் பேசவும் ஆரம்பித்தான். சோலைமலை ராஜாவின் மூளை கலங்கிவிட்டது என்றும், அரண்மனைக் கோயிலில் இருந்த அம்மன் விக்கிரகத்தை அப்புறப்படுத்திவிட்டு அங்கே விக்டோ ரியா மகாராணியின் படத்தை வைத்துத் தினம் மூன்று தடவை பூசை செய்கிறார் என்றும், வெள்ளைக்காரனைக் கண்டால் உடனே விழுந்து கும்பிடுகிறார் என்றும் வெள்ளைக்காரனைப் பார்த்துக் குரைத்த குற்றத்துக்காக அவருடைய அரண்மனையில் இருந்த வேட்டை நாய்கள் எல்லாவற்றையும் சுட்டுக் கொன்றுவிட்டார் என்றும், லண்டனில் தெருக்கூட்டிக் கொண்டிருந்த வெள்ளைக்காரத் தோட்டியின் மகனுக்குச் சோலைமலை இளவரசியைக் கலியாணம் செய்து கொடுக்கப் போகிறார் என்றும், அர்த்த ராத்திரியில் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து மேற்குத் திசையை நோக்கிப் 'பளீர் பளீர்' என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார் என்றும்  இப்படியெல்லாம் மாறனேந்தல் இளவரசன் நாலுபேர் முன்னிலையில் பரிகாசமாகப் பேசிச் சிரித்த செய்திகள் காற்றிலே மிதந்து வந்து சோலைமலை மகாராஜாவின் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் பாய்ந்தன.

 மேற்படி செய்திகளினால் எல்லாம் மகாராஜா வீரராமலிங்கத் தேவருக்குத் தம்முடைய புதிய சிநேகிதர்களான வெள்ளைக்காரத் துரைகள் மீதோ கும்பெனி சர்க்கார் மீதோ கோபம் வரவில்லை. மாறனேந்தல் மகாராஜாவிடமும் யுவராஜாவிடமுந்தான் அளவில்லாத கோபம் பொங்கிப் பெருகிற்று. அவர்களை நினைக்கும்போதெல்லாம் அவர் இரணியகசிபு, இராவணன், சூரபத்மன் முதலான இராட்சஸர்களுடைய சுபாவத்தை அடைந்து அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டிக் கொன்று தின்றுவிட வேண்டும் என்பதாக அளவு கடந்த வெறிகொள்ளத் தொடங்கினார்.

 உரிய காலத்தில் சோலைமலை மகாராஜாவுக்குத் தமது மனோதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ஏதோ ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு கும்பெனியாரின் படைகள் மாறனேந்தல் கோட்டையைத் தாக்கின. அந்தப் படைகளில் சோலைமலை மகாராஜாவின் வீரர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. மாறனேந்தல் வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து ஒப்பற்ற வீரத்துடனே போர் புரிந்தார்கள். ஆனாலும் கும்பெனிக்காரர்கள் கொண்டு வந்த நெருப்பைக் கக்கும் பீரங்கிகளுக்கு முன்னால் எந்தக் கோட்டைதான் அதிக காலம் தாக்குப் பிடித்து நிற்க முடியும்? எத்தகைய வீரர்கள்தான் எதிர்த்து நிற்க முடியும்?

 கோட்டை விழுந்தது! விழுவதற்கு முன்னால் மாறனேந்தல் மகாராஜா தம் முத்த புதல்வனான இளவரசனைக் கூப்பிட்டு, "குழந்தாய்! இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை. மாறனேந்தல் வம்சம் விளங்குவதற்கு நீ ஒருவனாது பிழைத்திருக்க வேண்டும். கோட்டையின் இரகசிய வழியின் மூலமாகத் தப்பி ஓடிச் சிலகாலம் தலைமறைவாக இருந்துகொள். தக்க சந்தர்ப்பம் பார்த்து அந்தச் சோலைமலை ராட்சதனையும், அவனுக்குத் துணையாக வந்த வெள்ளை மூஞ்சிக் குரங்குகளையும் பழி வாங்கு!" என்று சொல்லி, அவ்விதமே அவனிடம் வாக்குறுதி பெற்று கொண்டார். பதிலுக்கு இளவரசன், "அப்பா! நீங்களும் எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும். நான் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு சண்டையை நிறுத்தி விடுங்கள். வீரப்போர் புரிந்து தோல்வியடைவதில் அவமானம் ஒன்றும் இல்லை. சோலைமலை மகாராஜா எப்படியும் இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவர். பழைய மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர். தங்களையும் நம் குடும்பத்தாரியும் அந்நியர்களாகிய வெள்ளைக்காரர்கள் அவமதிப்பாக நடத்துவதற்கு அவர் சம்மதிக்க மாட்டார். நமக்கும் ஒரு காலம் கூடிய சீக்கிரத்தில் வந்தே தீரும். வட தேசத்திலே இந்த வெள்ளை மூஞ்சிகளை நாட்டை விட்டுத் துரத்துவதற்காக அநேக பெரிய பெரிய மகாராஜாக்களும் நவாப்புகளும் சேர்ந்து யோசனை செய்து வருகிறார்களாம். அவர்களிடம் போய் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். பெரிய படை சேர்த்துக் கொண்டு திரும்பி வருகிறேன். அதுவரையில் தாங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டான்.

 தந்தை அதற்குச் சரியான பதில் சொல்லாமல், "சமயோசிதம் போல் பார்த்துக் கொள்கிறேன். எங்களைப் பற்றிக் கவலைப்படாதே! நீ உடனே புறப்படு!" என்றார். வெளி நாட்டிலிருந்து வந்த பகைவர்களாவது தயவு தாட்சண்யம் காட்டுவார்கள். உள்ளூர்ப் பகைவர்களிடம் சிறிதும் கருணையை எதிர்பார்க்க முடியாது என்னும் உண்மையை வயது முதிர்ந்த மாறனேந்தல் மகாராஜா அறிந்திருந்தார். ஆனால் அந்தச் சமயம் அதைப்பற்றித் தம் குமாரனிடம் வாக்குவாதம் செய்ய அவர் விரும்பவில்லை.

 மாறனேந்தல் இளவரசன் கோட்டையின் இரகசிய வழியாக அன்றிரவே வெளியேறினான். கோட்டையிலிருந்து இரண்டு காத தூரத்தில் இருந்த மேற்கு மலைத் தொடரை அடைந்து அங்குள்ள காடுகளில் சில காலம் ஒளிந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் விரைந்து சென்றான். ஆனால் பொழுது புலரும் சமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து மாறனேந்தல் முற்றுகையில் சேர்ந்து கொள்வதற்காக வந்த கும்பெனிப் படை வீரர்களில் ஒருவன் சாலை ஓரமாக ஒளிந்து சென்ற இளவரசனைப் பார்த்து விட்டான். யுத்தகால தர்மப்படை, "யாரடா அங்கே போகிறவன்?" என்று கேட்டான். அவனுக்கு மறுமொழி சொல்லாமல் இளவரசன் காட்டிலே புகுந்து ஓடினான். கும்பெனி வீரர்களின் சந்தேகம் அதிகமாயிற்று. படைத் தலைவன் அவனைத் துரத்திப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆறு வீரர்களை நிறுத்திவிட்டு மற்றவர்களுடன் மேலே சென்றன.

 தன்னைத் தொடர்ந்து ஆறு வீரர்கள் தான் வருகிறார்கள் என்பது இளவரசனுக்குத் தெரியாது. தான் மாறனேந்தல் இளவரசன் என்பதாகத் தெரிந்து கொண்டு ஒரு பெரிய படை தன்னைத் தொடர்ந்து வருவதாகவே நினைத்தான். அவர்களிடம் எப்படியும் அகப்படக் கூடாது என்று மனத்தை உறுதி செய்து கொண்டு அடர்ந்த காடுகளில் புகுந்து ஓடினான். கடைசியாக, சோலைமலையின் அடிவாரத்தை அடைந்தான். சற்றுத் தூரத்தில் சோலைமலைக்கோட்டை தென்பட்டது. அதன் சமீபத்தில் போவதற்கே அவனுக்கு இஷ்டமில்லாமலிருந்தாலும், வேறு வழி ஒன்றும் காணவில்லை. அந்தக் கோட்டை மதிலின் ஓரமாகச் சென்று கோட்டையைக் கடந்து போனால் தான் அப்பால் மலை மேல் ஏறுவதற்குச் சௌகரியமான சரிந்த பாறை இருந்தது. இளவரசன் அப்போது வந்து சேர்ந்திருந்த இடத்தில் பாறை செங்குத்தாகக் கிளம்பியது. சற்று நின்று யோசித்த பிறகு, பின்னால் சமீபத்தில் கேட்ட காலடிச் சத்தத்தினால் உந்தப்பட்டவனாய், இளவரசன் மேலும் விரைந்தான். அவனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத்தம் விநாடிக்கு விநாடி நெருங்கி வந்து கொண்டிருந்தது. மேலே ஓர் அடி கூட இனிமேல் நடக்க முடியாது என்று தோன்றியது. ஒரு பக்கம் கோட்டைச் சுவரும் மற்றொரு பக்கம் 'கிடுகிடு' பள்ளமுமாக இருந்த அந்தக் குறுகிய பாதையில் அப்பால் இப்பால் நகர்ந்து தப்புவதற்கு வழியே இல்லை. வேட்டை நாய்களைப் போல் தன்னைத் துரத்திக்கொண்டு வரும் எதிரி வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *