BooksTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Ch16 சோலைமலை இளவரசி Audiobook

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Ch16 Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch16 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch16 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook,

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.


அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அத்தியாயம் 16. கயிறு தொங்கிற்று!

இரவுக்கும் பகலுக்கும் அதிக வேற்றுமையில்லாமல் இருள் சூழ்ந்திருந்த எட்டடிச் சதுர அறையில் குமாரலிங்கம் தன்னந்தனியாக அடைக்கப்பட்டிருந்தான்!

 இரவிலே இரும்புக் கதவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு கரியடைந்த ஹரிகேன் லாந்தர் மங்கிய சோகமான ஒளியைத் தயக்கத்துடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

 பகலில், அவன் அடைபட்டிருந்த அறையின் பின்புறச் சுவரில் இரண்டு ஆள் உயரத்தில் இருந்த சிறு ஜன்னல் துவாரம் வழியாக மங்கிய வெளிச்சம் வரலாமோ, வரக் கூடாதோ என்று தயங்கித் தயங்கி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

 குமாரலிங்கத்தின் உள்ளத்தின் நிலைமையும் ஏறக்குறைய வெளிப்புற நிலைமையை ஒத்திருந்தது. குழப்ப இருள் சூழ்ந்து எதைப் பற்றியும் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலையை அவன் மனம் அடைந்திருந்தது. பார்த்தவர்கள் அவனுக்குச் 'சித்தப் பிரமை' பிடித்திருக்கிறது என்று சொல்லும்படி தோன்றினான். ஆனாலும் இருள் சூழ்ந்த அவனுடைய உள்ளத்தில் சிற்சில சமயம் அறிவின் ஒளி இலேசாகத் தோன்றிச் சிந்திக்கும் சக்தியும் ஏற்பட்டது. அத்தகைய சமயங்களில், ஆ கா! அவனுடைய மனத்தில் என்னவெல்லாம் எண்ணங்கள் குமுறி அலைமோதிக் கொண்டு பாய்ந்தன!

 சோலைமலைக் கிராமத்தில் ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் காந்திக் குல்லாக் கதர்வேஷம் தரித்த போலீஸாரால் கைது செய்யப்பட்டதிலிருந்து அவன் கண்டும், கேட்டும், அநுபவித்தும் அறிந்த பயங்கரக் கொடுமை நிறைந்த சம்பவங்கள், அதற்கு முன்னால் சோலைமலைக் கோட்டையில் கழித்த ஆனந்தமான பத்துப் பன்னிரண்டு தினங்கள், அதற்கு முந்தித் தளவாய்க் கோட்டையில் ஒருநாள் நடந்த புரட்சிகரமான காரியங்கள், இன்னும் நூறு வருஷத்துக்கு முன்னால் சோலைமலை மாறனேந்தல் இராஜ்யங்களில் நேர்ந்த அபூர்வ நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகவும் சில சமயம் சேர்ந்தார் போலவும் அவன் மனத்தில் தோன்றி அல்லோல கல்லோலம் விளைத்தன.

 இத்தனைக்கும் மத்தியில், அவன் அறிவு தெளிவடைந்து சிந்தனை செய்து கொண்டிருக்கும்போதும் சரி, தெளிவில்லாத பலப்பல எண்ணங்கள் போட்டியிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும்போதும் சரி, சிந்தனா சக்தியை இழந்து 'பிரமை' பிடித்து அவன் உட்கார்ந்திருக்கும் போதும் சரி, ஒரே ஒரு விஷயம் மட்டும் அவன் மனத்திலிருந்து மறையாமல் எப்போதும் குடிகொண்டிருந்தது. அது அவன் தலைக்கு மேலே வட்டச் சுருக்கிட்ட ஒரு கயிறு அவனைத் தூக்கிலிட்டுக் கழுத்தை நெரித்துக் கொல்லப்போகிற கயிறு எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது என்னும் பிரமைதான்.

 அந்தக் கயிற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு; முன்னொரு ஜன்மத்தில்தான் மாறனேந்தல் மகாராஜாவாகப் பிறந்திருந்தபோது, எந்த முறையைப் பின்பற்றி அவன் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பினானோ, அதே முறையையே இப்போதும் பின்பற்றியாக வேண்டும்.

 அதாவது, சிறைச்சாலையிலிருந்தோ போலீஸ் காவலிலிருந்தோ தப்பித்துக் கொண்டு ஓட முயல வேண்டும். ஓட முயல்வது உயிர் பிழைக்க வேண்டுமென்ற ஆசையினால் அல்ல; உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையினாலும் அல்ல. அப்படித் தப்பி ஓட முயலும் போது முன்னொரு ஜன்மத்தில் நடந்தது போலவே சிறைக் காவலர்களோ போலீஸ்காரர்களோ தன்னை நோக்கிச் சுடுவார்கள். குண்டு தன் முதுகிலே பாய்ந்து மார்பின் வழியாக வெளியே வரும். அதன் பின்னால் 'குபுகுபு' வென்று இரத்தம் பெருகும். அந்த க்ஷணமே அவன் உணர்விழந்து கிழே விழுவான். அப்புறம் மரணம்; முடிவில்லாத மறதி; எல்லையற்ற அமைதி!

 குமாரலிங்கம் அப்போது விரும்பியதெல்லாம் இத்தகைய மரணம் தனக்குக் கிட்ட வேண்டும் என்பதுதான். அவன் மரணத்துக்கு அஞ்சவில்லை; சாகாமல் உயிரோடிருக்க வேண்டும் என்று ஆசைப்படவும் இல்லை. ஆனால் தூக்கு மரத்தில் கயிற்றிலே தொங்கிப் பிராணனை விடமட்டும் அவன் விரும்பவில்லை. அந்த எண்ணமே அவனுடைய உடம்பையும் உள்ளத்தையும் சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளாக்கிற்று. அவன் தூக்கு மரத்தைப் பார்த்ததில்லை; தூக்குப் போடும் காட்சி எப்படியிருக்கும் என்றும் அவனுக்குத் தெரியாது. எனவே, தூக்குத் தண்டனை என்று நினைத்ததும், தாழ்ந்து படர்ந்த மரக் கிளையில் முடிச்சுடன் கூடிய கயிறு தொங்கிய காட்சிதான் அவனுக்கு நினைவு வந்தது. அத்தகைய மரக்கிளை ஒன்றில் அவனுடைய உடம்பு தூக்குப் போட்டு தொங்குவது போலவும், உடம்பிலிருந்து வெளியேறிய தன்னுடைய உயிர் அந்த உடம்பைச் சுற்றிச் சுற்றி வருவதுபோலவும் அடிக்கடி அவனுக்குப் பிரமை உண்டாகும். சில சமயம் விழித்திருக்கும்போதும், சில சமயம் அரைத் தூக்கத்திலும் அவனுக்கு இம்மாதிரி அநுபவம் ஏற்படும் போது அது முற்றிலும் உண்மை நிகழ்ச்சி போலவே இருக்கும். அப்போது குமாரலிங்கம், "கடவுளே!" என்று வாய்விட்டுக் கதறுவான். உடனே விழிப்பு உண்டாகும். அவன் உடம்பெல்லாம் சொட்ட வியர்த்து விட்டுச் சிறிது நேரம் வரையில் நடுங்கிக் கொண்டேயிருக்கும்.

 இந்த மாதிரி பயங்கரம் நிறைந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கு வாழவேண்டுமோ என்று எண்ணி எண்ணி அவன் ஏங்கத் தொடங்கினான். இந்தியா தேசத்துக்குச் சுயராஜ்யம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், தனக்கும் தன்னுடைய சகோதரக் கைதிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற ஆசையும் அவனுக்கு இப்போதெல்லாம் சிறிதும் இருக்கவில்லை. விசாரணைக்காகக் கோர்ட்டுகளுக்குப் போகும் போதும் திரும்பி வரும்போதும் மற்றபடி அபூர்வமாக மற்ற சகோதர அரசியல் கைதிகளைச் சந்திக்கும் போதும், "சுயராஜ்யம் சீக்கிரம் வரும்" என்று யாராவது சொல்லக் கேட்டால், அவன் புன்சிரிப்புக் கொள்வான். சிறைப்பட்ட நாளிலிருந்து அவன் புன்னகை புரிவதென்பது இந்த ஒரு சந்தர்ப்பத்திலேதான் என்று சொல்லலாம்.

 ஏனெனில், "சுயராஜ்யம்" என்ற வார்த்தை காதில் விழுந்ததும், அவன் சிறைப்பட்ட புதிதில் அடைந்த அநுபவங்கள் ஞாபகத்துக்கு வரும். தினம் தினம் புதிது புதிதாகத் தொண்டர்களைக் கைது செய்து கொண்டு வருவார்கள். ஒரு போலீஸ்காரர் இன்னொரு போலீஸ்காரரைப் பார்த்து, "இவர் பெரிய தேசபக்தர், அப்பா! இவருக்குக் கொடு, சுயராஜ்யம்!" என்பார். உடனே 'தப தப'வென்று சத்தம் கேட்கும். அடிவிழும் சத்தந்தான். அடி என்றால் எத்தனை விதமான அடி! சில தொண்டர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருப்பார்கள். வேறு சிலர் அலறுவார்கள். ஒவ்வோர் அடிக்கும் ஒவ்வொரு 'வந்தேமாதர' கோஷம் செய்து நினைவு இழக்கும் வரையில் அடிபட்டவர்களும் உண்டு. இடையிடையே, "சுயராஜ்யம் போதுமா?" "சுயராஜ்யம் போதுமா?" என்ற கேள்விகளும் கிளம்பும்.

 இந்தப் பயங்கர அநுபவங்களைக் குமாரலிங்கம் சொந்தமாக அநுபவிக்கவில்லை. சோலைமலைக் கிராமத்தில் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும் அவன் மூர்ச்சையடைந்து விழுந்ததிலிருந்து போலீஸார் அவன் விஷயத்தில் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள். அதோடு ஸப் ஜெயிலில் முதன் முதலாக அவனை வந்து பார்த்த டாக்டர் அவனுக்கு இருதயம் பலவீனமாயிருக்கிறதென்றும், நாடி துடிப்பு அதிவிரைவாக இருக்கிறதென்றும் சொல்லி விட்டார். எனவே குமாரலிங்கம் மேற்படி அநுபவங்களிலிருந்து தப்பிப் பிழைத்தான். ஆனால் மற்றவர்கள் பட்ட அடியெல்லாம் அவன் மனத்தில் என்றும் மறக்க முடியாதபடி பதிந்திருந்தது.

 எனவே, "சுயராஜ்யம் வரப் போகிறது!" என்ற பேச்சைக் கேட்டாலே அவனுடைய முகத்தில் அவநம்பிக்கையோடு கூடிய துயரப் புன்னகை தோன்றுவது வழக்கமாயிற்று.

 மேலும் அப்படி நடவாத காரியம் நடந்து சுயராஜ்யமே வந்துவிட்டால்தான் என்ன? தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? சுயராஜ்ய இந்தியாவில் தான் இருந்து வாழப்போவதில்லை! அது நிச்சயம்! நூறு வருஷத்துக்கு முன்னால் மாறனேந்தல் உலகநாதத்தேவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதுதான் தனக்கு இந்த ஜன்மத்தில் நேரப் போகிறது! அதைப்பற்றிச் சந்தேகமில்லை.

 சோலைமலை மணியக்காரர் வீட்டு முன்னிலையில் குமாரலிங்கம் கைது செய்யப்பட்டதிலிருந்து அவனுக்கு மானஸிகக் காட்சியில் பரிபூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சியும் அந்த ஜன்மத்தில் நடந்தது போலவே இப்பொழுதும் நடந்து வருகிறதல்லவா?

 கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் சில நளைக்கு முன்பு சோலைமலை மணியக்காரர் அவனைச் சிறையிலே பார்த்துப் பேசியதிலிருந்து அடியோடு நீங்கி விட்டது. விதியென்னும் சக்கரம் சுழன்று வரும் விந்தையே விந்தை! அதைக் காட்டிலும் பெரிய அதிசயம் இந்த உலகத்திலும் இல்லை; மறு உலகத்திலும் இருக்க முடியாது.

Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,

mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,

kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,

solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,

kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *