BooksTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Ch14 சோலைமலை இளவரசி Audiobook

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Ch14 Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch14 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch14 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan,

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.


அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அத்தியாயம் 14. ஆனந்த சுதந்திரம்

குமாரலிங்கம் அந்த இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் அவ்வளவு உற்சாகமாகவும் உல்லாசமாகவும் நாட்களைக் கழித்து வந்ததற்குப் பொன்னம்மாளின் நேசம் மட்டுமல்லாமல் வேறொரு காரணமும் இருந்தது. அரசியல் நிலைமையைப் பற்றி மணியக்காரர் சொன்னதாகப் பொன்னம்மாள் அன்று சொன்ன செய்திதான் அது. பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராஜிப் பேச்சு நடந்து வருகிறது என்பதைப் பரிபூரணமாய் அவன் நம்பினான். அதைப் பற்றிச் சந்தேகிக்கவே அவனுக்குத் தோன்றவில்லை. 'அன்று தளவாய்ப் பட்டணத்தில் நடந்தது போலத்தானே இமய மலையிலிருந்து குமரி முனை வரையில் எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் சூறாவளிப் புரட்சி நடந்திருக்கும்? அந்தப் புரடிசியைப் பிரிட்டிஷ் சர்க்காரால் எப்படி எதிர்த்து நிற்க முடியும்? ஜப்பான்காரனோ பர்மா எல்லைப் புறத்தில் வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறான். பிரிட்டிஷ் சர்க்கார் காங்கிரஸுக்குச் சரணாகதி அடையாமல் வேறு என்ன செய்ய முடியும்?' என்னும் கேள்வி அடிக்கடி அவன் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. தளவாய் பட்டணம் சரித்திரப் பிரசித்தி அடைந்த விசேஷ தினத்தில் அவன் காதில் விழுந்த ஒரு சம்பாஷ்ணையும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டிருந்தது.

 சப் ஜெயிலின் கதவுகளை உடைத்துக் கைதிகளை விடுதலை செய்துவிட்டு வீர முழக்கத்துடன் சுதந்திர கோஷங்களுடனும் திரும்பிய ஜனங்களில், கிராமவாசிகள் இருவர் பின்வருமாறு பேசிக் கொண்டார்கள்:

 "ஆமாம்! இந்தியா சுதந்திரம் அடைஞ்சு விட்டால்.." என்று ஒருவர் ஏதோ கேட்க ஆரம்பித்தார்.

 "அடைஞ்சுவிட்டால் என்ன? அதுதான் அடைஞ்சாகிவிட்டதே!" என்றார் இன்னொருவர் வெகு உற்சாகத்துடன்.

 "சரி, இந்தியா சுதந்திரம் அடைஞ்சுட்டுது! இனிமே யாரு நமக்கு ராசா என்று கேட்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேருவா? நேதாஜி சுபாஷ் போசா?" என்று கேட்டார் முதலில் பேசியவர்.

 "இரண்டு பேரிலே யார் ராசாவானால் என்ன? நேருஜி ராசா ஆனால், நேதாஜி மந்திரி ஆ கிறாரு! நேதாஜி ராசா ஆனால், நேருஜி மந்திரி ஆ கிறாரு!" என்றார் இரண்டாவது பேசியவர்.

 படிப்பில்லாத பட்டிக்காட்டு ஆசாமிகளின் மேற்படி பேச்சை அன்றைக்கு குமாரலிங்கம் கேட்டபோது அவன் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஆனால் இப்போது அதைப்பற்றி எண்ணியபோது அவர்கள் பேச்சு ஏன் உண்மையாகக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திரபோஸும் இந்தியாவின் ராஜாவாகவும் மந்திரியாகவும் வராவிடாலும், குடியரசின் அக்கிராசனராகவும் முதன் மந்திரியாகவும் வரக்கூடுந்தானே? அப்படி வரும்போது மணியக்காரர் சொன்னதுபோல் இந்தியக் குடியரசு சர்க்காரில் தனக்கும் ஒரு பதவி ஏன் கிடைக்கக்கூடாது? கிடைக்காமலிருந்தால் தான் ஆச்சரியமே தவிர கிடைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இராது!

 இப்படிப்பட்ட எண்ணங்கள் குமாரலிங்கத்துக்குக் குதூகலத்தை அளித்ததோடு, ஓரளவு பரபரப்பையும் உண்டாக்கி வந்தன. பொன்னம்மாளைத் தினம் பார்த்த உடனே, "இன்றைகு ஏதாவது விசேஷம் உண்டா? காங்கிரஸ் விஷயமாக அப்பா ஏதாவது சொன்னாரா?" என்று அவன் கேட்டுக் கொண்டு வந்தான். ஆனால் முதல் நாள் சொன்ன செய்திக்குப் பிறகு பொன்னம்மாள் புதிய செய்தி எதுவும் கொண்டு வரவில்லை.

 "உங்கள் ஊருக்குப் பத்திரிகை வருவதில்லையா?" என்று ஒரு நாள் குமாரலிங்கம் கேட்டதற்கு, பொன்னம்மாள், "வராமல் என்ன? எங்கள் வீட்டுக்கே பத்திரிகை வந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் மகாத்மா காந்தி சொல்லிவிட்டார் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நிறுத்தி விட்டார்களாமே? அதற்கப்புறந்தான் வருகிறதில்லை" என்றாள்.

 "புரட்சித் திட்டத்தில் மற்றதெல்லாம் சரிதான்! ஆனால் பத்திரிகை நிறுத்துகிற காரியம் மட்டும் சுத்தப் பிசகு!" என்று குமாரலிங்கம் தன் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.




 குமாரலிங்கம் சோலைமலைக் கோட்டைக்கு வந்து ஒளிந்து கொண்டு பத்து நாளைக்குப் பிறகு சோலைமலைக் கிராமத்தில் ஓர் அதிசய சம்பவம் நடந்தது. அதைப் பார்த்து அந்தக் கிராம வாசிகள் எல்லாரும் திடுக்கிட்டுத் திகைத்துப் போனார்கள். கதைகளிலே அடிக்கடி எழுதுகிறார்களே அதைப்போல, அவர்களால் தங்களுடைய கண்களையே நம்ப முடியவில்லை. அந்தச் சம்பவம் என்னவென்றால், காந்திக் குல்லா தரித்த இரண்டு காங்கிரஸ்காரர்கள் பகிரங்கமாகவும் தைரியமாகவும் அந்தக் கிராமத்துக்குள்ளே பிரவேசம் செய்ததுதான்.

 காந்திக்குல்லா மட்டுந்தானா அவர்கள் தரித்திருந்தார்கள், பம்பாய்க்காரர்களைப் போல் கதர்க் கால்சட்டையும் கதர் ஜிப்பாவும் அணிந்திருந்தார்கள். கதர் ஜிப்பாவின் பேரில் ஜவாஹர் வெயிஸ்ட் கோட்டுப் போட்டிருந்தார்கள். வெயிஸ்ட் கோட்டில் ஒரு சின்னஞ் சிறு மூவர்ண தேசியக் கொடி தைக்கப்பட்டிருந்தது.

 அவர்களில் ஒருவர் கையிலேயும் பெரிய மூவர்ண தேசியக் கொடி ஒன்று கொண்டு வந்திருந்தார்கள். அதைக் கிராமச் சாவடிக்கு எதிரிலே இருந்த பிரம்மாண்டமான இலுப்ப மரத்தின் உச்சியில் கட்டிப் பறக்க விட்டார்.

 கொடி பறக்கத் தொடங்கியதும் இரண்டு பேருமாக மாற்றி மாற்றி, "வந்தே மாதரம்!" "பாரத மாதாவுக்கு ஜே!", "புரட்சி வாழ்க!" முதலிய கோஷங்களைக் கிளப்பினார்கள்.

 இதையெல்லாம் பார்த்துச் சோலைமலைக் கிராமவாசிகள் ஒரேயடியாக ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.

 காங்கிரஸ் கலகத்தை வெள்ளைக்காரச் சர்க்கார் அடியோடு அடக்கிவிட்டார்கள் என்றும், சிறையில் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்றும், கலகம் நடந்த ஊர்களில் புகுந்து ஒன்றும் அறியாத ஜனங்களைக் கூட அடித்து இம்சிக்கிறார்கள் என்றும், போலீஸாரிடம் அகப்படாமல் கலகம் செய்த காங்கிரஸ்காரர்கள் பலர், ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இம்மாதிரியான செய்திகளையே இதுவரையில் அந்தக் கிராமத்து ஜனங்கள் கேள்விப் பட்டிருந்தார்கள்.

 அப்படியிருக்கும் போது இரண்டு கதர்க் குல்லாக்காரர்கள் திடீரென்று எங்கிருந்தோ வந்து, பட்டப்பகலில் பகிரங்கமாகக் கதர்க்கொடியை உயர்த்திக் கோஷங்களைக் கிளப்பி கூப்பாடு போட்டதும் கிராமவாசிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 அந்தக் காந்திக் குல்லாக்காரர்களின் அருகில் நெருங்கவே முதலில் கிராமத்தார் தயங்கினார்கள். அவரவர்கள் தத்தம் வீட்டு வாசலிலிருந்தே பயத்துடன் அவர்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 ஆனால் கதர்க் குல்லா ஆசாமிகள் அவர்களை விடுகிற வழியாயில்லை. கிராமத்துக்குள்ளே அவர்கள் வந்து, "மணியக்காரர் வீடு எது?" என்று விசாரித்ததும், கிராமத்தாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. காந்தி குல்லாக்காரர்களின் அருகில் நெருங்கி அவர்கள் யார், எதற்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பதிலாகக் காந்திக் குல்லாக்காரர்கள் சொன்ன சமாசாரம் அவர்களை ஒரேயடியாக பிரமிக்கச் செய்துவிட்டது. வெள்ளைக்காரச் சர்க்கார் தோற்றுப் போய்க் காங்கிரஸிடம் இராஜ்யத்தை ஒப்புவித்து விட்டார்கள் என்றும், அந்த ஜில்லாவுக்கு மேலதிகாரிகளாகத் தங்களைக் காங்கிரஸ் நியமித்திருக்கிறதென்றும், கலெக்டர்கள், தாசில்தார்கள் எல்லாரும் இனிமேல் தங்கள் கட்டளைப்படிதான் நடக்க வேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். இதையெல்லாம் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டே ஜனக் கூட்டம் காந்திக் குல்லாக்காரர்களைப் பின் தொடர்ந்து சென்று மணியக்காரரின் வீட்டு வாசலை அடைந்தது.

 அப்போதுதான் கரும்புத் தோட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மணியக்காரரும் முதலில் சிறிது திகைத்துப் போனார். என்ன ஏது என்று விசாரித்தார். விஷயத்தைக் கேட்டதும் அவருக்கு நம்பிக்கைப் படவில்லை. "சரிதான், என்னிடம் எதற்காக வந்தீர்கள்? ஏதாவது காரியம் உண்டா?" என்று கொஞ்சம் அலட்சியமாகவே கேட்டார்.

 "காரியம் இருக்கிறது. இல்லாமலா உங்களிடம் வருவோம். 'சுயராஜ்யம் வந்துவிட்டது. இனிமேல் காங்கிரஸ் சர்க்கார்தான் அரசாங்கம் நடத்துவார்கள்' என்பதாகச் சுற்று வட்டாரத்துக் கிராமங்களிலெல்லாம் தண்டோ ராப் போடவேண்டும். தலையாரியை உடனே கூப்பிட்டு விடுங்கள்!" என்று வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

 மணியக்காரர் தமது அவநம்பிக்கை நன்கு வெளிப்படும்படியாக, "அதெல்லாம் என்னால் முடியாது. மேலாவிலிருந்து எனக்குத் தகவல் ஒன்றும் வரவில்லை!" என்றார்.

 அதைக் கேட்ட கதர்க்குல்லாக்காரர்கள் சிரித்தார்கள்.

 "இப்போது இப்படித்தான் சொல்வீர்! சற்று நேரம் போனால் வேறு பாடம் படிப்பீர்!" என்றார் அவர்களில் ஒருவர்.

 இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையிலே இரண்டு போலீஸ் ஜவான்கள் அங்கு வந்து நின்று மேற்படி காந்திக் குல்லாக்காரர்களுக்கு ஸலாம் வைத்தார்கள். "எஜமான், கலெக்டர் கடிதம் கொடுத்திருக்கிறார்!" என்றார் ஜவான்களில் ஒருவர். அதை வாங்கிக் கொண்டு கதர்க்குல்லாக்காரர் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, "சரி நீங்கள் போகலாம்!" என்றதும், போலீஸ் ஜவான்கள் மறுபடியும் ஒரு பெரிய ஸலாம் வைத்துவிட்டுப் போனார்கள்.

 இதைப் பார்த்த பிறகு சோலைமலைக் கிராம ஜனங்களுக்கும் மணியக்காரருக்குங்கூட நம்பிக்கை பிறந்துவிட்டது.

 "அதற்கென்ன, தண்டோ ரா போடச் சொன்னால் போகிறது!" என்றார் மணியக்காரர்.

 "உடனே தலையாரியைக் கூப்பிட்டு அனுப்புங்கள். தண்டோ ரா போடும் போது இன்னொரு விஷயமும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புரட்சி வீரர் குமாரலிங்கத் தேவர் இந்தப் பக்கத்துக் காடுகளில் எங்கேயோ மறைந்திருப்பதாகத் தெரிகிறது. அவரை உடனே கண்டு பிடித்துப் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர் ஜவஹர்லால் நேருவிடமிருந்து கட்டளை வந்திருக்கிறது. குமாரலிங்கத்தேவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லுகிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் காங்கிரஸ் சர்க்கார் இனாம் கொடுப்பார்கள் என்பதையும் சேர்த்துத் தண்டோ ரா போடச் செய்ய வேண்டும்!" என்று ஒரு காந்திக் குல்லாக்காரர் சொன்னார்.

 வாசல் திண்ணையில் நடந்த இந்தப் பேச்சையெல்லாம் வீட்டு நடையில் கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த பொன்னம்மாளுக்கு அப்போது எப்படியிருந்திருக்கும் என்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். உடனே வாசற்புறம் ஓடிப்போய்க் குமாரலிங்கத் தேவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிடலாமா என்று அவள் உள்ளம் துடிதுடித்தது. ஆனால் பெண்மைக்குரிய அடக்கமும் பெரிய குலத்துக்கு உரிய பண்பும் அவ்விதம் செய்ய முடியாமல் அவளைத் தடை செய்தன.

 பொன்னம்மாளின் தந்தை சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளே வந்தார். பொன்னம்மாளும் விரைந்து உள்ளே போய் வீட்டுக் கூடத்தின் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

 "பார்த்தாயா, பொன்னம்மா! கடைசியில் நான் சொன்னபடிதான் ஆச்சு! அந்த வெள்ளக்காரப் பய மவனுகள் கடைசியில் காங்கிரஸ்காரன் காலிலே விழுந்துட்டானுக! மொத்தத்திலே, மானம் ரோசம் இல்லாதவனுங்க! நான் மட்டும் இங்கிலீஷ்காரனாயிருந்தால், என்ன ஆனாலும் ஆவட்டும் என்று கடைசிவரைக்கும் ஒரு கை பார்த்திருப்பேன்! ஜப்பான்காரன் கையிலாவது ராச்சியத்தைக் கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பேனே தவிர, காங்கிரஸ்காரன் கையிலே கொடுத்திருக்க மாட்டேன்! அது போனால் போவட்டும்! இங்கிலீஷ்காரன் கொடுத்து வைச்சது அம்மட்டுந்தான்! நாம் என்னத்துக்கு அதைப்பத்திக் கவலைப்பட வேணும்? காங்கிரஸ் ராச்சியந்தான் இனிமேல் என்று ஏற்பட்டுப் போச்சு! நாளைக்கு ஒரு கண்டிராக்டோ , கிண்டிராக்டோ எல்லாம் இவங்களிடத்திலேதான் கேட்டு வாங்கும்படியிருக்கும். வந்திருக்கிறவங்க இரண்டு பேரும் ரொம்பப் பெரிய மனுஷங்க என்று தோணுது. நல்ல விருந்து செய்து அனுப்ப வேண்டும். உன் சின்னாயிகிட்டச் சொல்லு; இல்லாட்டி சின்னாயியை இங்கே கூப்பிடு; நானே சொல்லிடறேன்!" என்று மணியக்காரர் மூச்சு விடாமல் பொழிந்து தள்ளினார். வாசல் திண்ணையிலே உட்கார்ந்திருந்த மேற்படி காந்திக் குல்லாக்காரர்களின் காதிலே விழப் போகிறதே என்று கூட மணியக்காரர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 ஏற்கனவே உணர்ச்சி மிகுதியால் உள்ளம் தத்தளித்துக் கொண்டிருந்த பொன்னம்மாளோ, மணியக்காரர் பேசும் போது நடுவில் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாதவளாய், திறந்த வாய் மூடாமல் அடங்கா ஆவலுடன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றாள். அவர் கடைசியில் சொன்னபடி சின்னாயியைக் கூப்பிடக் கூட அவளுக்கு நா எழவில்லை.

 நல்ல வேளையாகப் பொன்னம்மாளின் சின்னாயி, அதாவது மணியக்காரரின் இரண்டாவது மனைவி, தானாகவே அப்போது அங்கு வந்து விட்டாள். மறுபடியும் ஒரு தடவை அவளிடம் மணியக்காரர் பாடம் ஒப்புவித்துவிட்டு, "ஆ கையால், இன்றைக்குத் தடபுடலாக விருந்து செய்ய வேணும். இலை நிறையப் பதார்த்தம் படைக்க வேணும். தாயும் மகளுமாய்ச் சேர்ந்து உங்கள் கைவரிசையைச் சீக்கிரமாகக் காட்டுங்கள், பார்க்கலாம்!" என்றார். பிறகு வாசற்பக்கம் சென்றார்.

 பொன்னம்மாளின் சின்னம்மாள் அவ்விதமே சமையல் வேலை தொடங்கினாள். ஆனால் பொன்னம்மாளோ, "ஆயா! ஊருணியில் போய்க் குளித்துவிட்டு இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்!" என்று சொல்லி, வீட்டின் கொல்லை வாசற்படி வழியாகச் சிட்டாய்ப் பறந்து சென்றாள். அவ்வளவு விரைவாக அவள் எங்கே போனாள் என்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா?

 போகும்போது பொன்னம்மாள் பூமியில் கால் வைத்தே நடக்கவில்லை; காற்று வெளியிலே மிதந்து கொண்டுதான் சென்றாள். கடைசியில் அவள் நினைத்தபடியே நடந்து விட்டதல்லவா? குமாரலிங்கத்துக்கு விடுதலையும் பெரிய பதவியும் வந்துவிட்டன என்னும் எண்ணம் அவளுக்கு எல்லையில்லாக் குதூகலத்தை அளித்தது. இதோடு அவரை அந்தக் கோட்டையை விட்டுப் போகாமல் அங்கேயே இருக்கும்படி தான் வற்புறுத்தியது எவ்வளவு சரியான காரியமாய்ப் போயிற்று என்று நினைவு தோன்றி, அவள் மனத்தில் பெருமிதத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணியது.

 ஆனால் இந்த உற்சாகம், குதூகலம் எல்லாம் சோலைமலைக் கோட்டைக்கு வந்து சேரும் வரையிலே தான் இருந்தன. கோட்டையில் கால் வைத்தவுடனேயே, அவளுடைய உள்ளத்தில் ஒரு சோர்வு உண்டாயிற்று. 'நாளைக்கு இந்நேரம் குமாரலிங்கத் தேவர் இவ்விடத்தில் இருக்க மாட்டார்!' என்ற எண்ணம் அவளுக்குச் சொல்ல முடியாத மனவேதனையை உண்டாக்கிற்று.

 ஆனால் குமாரலிங்கமோ, பொன்னம்மாளைச் சற்றுத் தூரத்தில் பார்த்ததுமே, "வா, பொன்னம்மா, வா! இன்றைக்கு ஏது இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்? வந்தது என்னமோ நல்லதுதான்! வா!" என்று உற்சாகமான குரலில் வரவேற்றான்.

 பொன்னம்மாள் சற்று அருகிலே வந்ததும், "என்ன, கையிலே ஒன்றையும் காணோம்? பலகாரம் கிலகாரம் ஒன்றுமில்லையா? போனால் போகட்டும்! ஒரு வேளை சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் அதற்காக முகத்தை இப்படி ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?  இங்கே வந்து உட்கார்ந்து கொள். பொன்னம்மா இன்றைக்கு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். என் வாழ்க்கையில் மட்டும் என்ன? நம் இருவர் வாழ்க்கையிலும் இன்று மிக முக்கியமான தினம்!" என்றான்.

 பொன்னம்மாளின் முகம் அளவில்லாத அதிசயத்தைக் காட்டியது.

 "உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

 "பின்னே, எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்? பாட்டு இட்டுக் கட்டியது நான் தானே?" என்றான் குமாரலிங்கம்.

 "பாட்டா? என்ன பாட்டு?" என்று பொன்னம்மாள் வியப்பும் குழப்பமும் கலந்த குரலில் கேட்டாள்.

 "இங்கே வந்து என் பக்கத்தில் சற்று உட்கார்ந்து கொள்; சொல்லுகிறேன். என் பாட்டனாருக்குப் பாட்டனார் பெரிய கவிராயர், தெரியுமா பொன்னம்மா! சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்குப் போட்டியாக அவர் சாவடிச் சிந்து பாடினாராம். தேசத்தின் அதிர்ஷ்டக் குறைவினால் அந்தச் சாவடிச் சிந்து எழுதியிருந்த ஓலைச் சுவடியைக் கடல் கொண்டு போய்விட்டதாம். அந்தக் கவிராயருடைய வம்சத்தில் பிறந்த என்னுடைய உடம்பிலும் கவியின் இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் இருந்துவிட்டு, திடீரென்று அன்றைக்கு உன்னைப் பார்த்தவுடன் தான் பீறிக் கொண்டு வெளிவந்தது! உன்னைப் பற்றி அன்றைக்கு ஒரு கவியில் இரண்டு இரண்டு வரியாகப் பாடிக்கொண்டு வந்து இன்றைக்குக் காலையிலேதான் பாட்டைப் பூர்த்தி செய்தேன். கவிதை ரொம்ப அற்புதமாய் அமைந்திருக்கிறது. பாடப்பாட எனக்கே அதில் புதிய புதிய நயங்கள் வெளியாகி வருகின்றன! நின்று கொண்டேயிருக்கிறாயே? உட்கார்ந்து கொள் பொன்னம்மா! பாட்டைக்கேள்!" என்றான் குமாரலிங்கம்.

 'இன்றைக்கு என்ன, எல்லோரும் இப்படி மூச்சு விடாமல் பேசுகிறார்கள்' என்று பொன்னம்மாள் மனத்தில் நினைத்துக் கொண்டாள்; பிறகு, "பாட்டும் ஆச்சு! கூத்தும் ஆச்சு! எல்லாம் இன்றைக்கு ஒருநாள் வாழ்வு தானே? நாளைக்கு இந்நேரம் நீ எங்கேயோ, நான் எங்கேயோ எனக்கு உட்கார நேரமில்லை. வீட்டில் பெரிய விருந்து நடக்கப் போகிறது. சின்னாயிக்கு நான் ஒத்தாசை செய்ய வேண்டும்!" என்றாள் பொன்னம்மாள்.

 அப்போதுதான் குமாரலிங்கம் பொன்னம்மாளைக் கவனித்துப் பார்த்தான். அவளுடைய மனத்தில் ஏதோ பெரிய சமாசாரத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதும், அதை அவள் சொல்லமுடியாதபடி ஏதோ தான் பிதற்றிக் கொண்டிருப்பதும் அவனுக்கு உடனே தெரிய வந்தன.

 "பொன்னம்மா! என்ன சமாசாரம்? வீட்டிலே என்ன விசேஷம்? எதற்காக விருந்து? நாளைக்கு நீ எங்கே போகப் போகிறாய்?" என்று திடுக்கிட்ட குரலில் கேட்டான். பொன்னம்மாளின் கல்யாணம் சம்பந்தமாக யாராவது வந்திருக்கிறார்களோ, அதற்காகத்தான் விருந்தோ என்னும் விபரீதமான சந்தேகம் ஒரு நொடிப் பொழுதில் தோன்றி அவன் மனத்தை அலைத்தது.

 "நான் எங்கேயும் போகவில்லை. நீதான் போகப் போகிறாய். கடிதாசி உனக்குத்தான் வந்திருக்கு; ஜவஹர்லால் நேரு போட்டிருக்காரு!" என்று பொன்னம்மாள் சொன்னாளோ இல்லையோ, அதுவரையில் உட்கார்ந்திருந்தபடியே பேசிக்கொண்டிருந்த குமாரலிங்கம் துள்ளி குதித்து எழுந்தான்.

 "பொன்னம்மா! என்ன சொன்னாய்? நன்றாய்ச் சொல்லு! கடிதாசு வந்திருக்கா? ஜவஹர்லால் நேரு போட்டிருக்காரா? சரியாச் சொல்லு!" என்று பொன்னம்மாளின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு மிக்க பரபரப்போடு கேட்டான்.

 "கையை விடு, சொல்லுகிறேன்!" என்றாள் பொன்னம்மாள். பிறகு, கதர்க் குல்லா தரித்த இரண்டு ஆட்கள் வந்திருப்பது பற்றியும், அவர்கள் தண்டோ ராப் போடச் சொன்னது பற்றியும் விவரமாகக் கூறினாள்.

 "அவர்கள் சொன்னதை எங்க அப்பாகூட முதலில் நம்பவில்லை. ஆனால் இரண்டு போலீஸ் ஜவான்கள் வந்து கதர்க் குல்லாக்காரர்களுக்கு ஸலாம் போட்ட பிறகு அவர்கள் பேச்சை நம்பாமல் வேறு என்ன செய்வது? அவர்களுக்கு வீட்டில் விருந்து வைக்கத் தடபுடலாக ஏற்பாடு நடக்கிறது!" என்றாள்.

 குமாரலிங்கத்துக்கு அச்சமயம் பழைய காலேஜ் நாட்களின் வாசனை எப்படியோ வந்து சேர்ந்தது. மேல் துணியை எடுத்து ஆ காசத்தில் வீசி எறிந்து, "ஹிப் ஹிப் ஹுர்ரே!' என்று சத்தமிட்டான். பிறகு இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வந்திருப்பதைக் கேவலம் அப்படி ஒரு இங்கிலீஷ் கோஷத்தினால் கொண்டாடியது பற்றி வெட்கப்பட்டவனாய்

 ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
 ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று

என்னும் பாரதியார் பாடலைப் பாடி அந்த மகத்தான சம்பவத்தைக் கொண்டாடினான்.

 மேற்படி பாரதியார் பாடல் வரிகளைத்தான் எத்தனை நூறு தடவை அவன் ஏற்கனவே பாடியிருக்கிரான்? எத்தனை ஆயிரம் தடவை பிறர் பாடக் கேட்டிருக்கிறான்?

 அப்போதெல்லாம் ஏதோ வெறும் வார்த்தைகளாயிருந்த பாட்டு, இப்போது பொருள் ததும்பி விளங்கிற்று. உண்மையாகவே, பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு; பங்கு கேட்பதற்குத் தனக்கு உரிமை உண்டு; சென்ற ஒரு மாத காலத்திற்குள் தேசத்தின் சுதந்திரத்துக்காகத் தான் செய்திருக்கும் தொண்டானது மேற்படி உரிமையைத் தனக்கு அளித்திருக்கிறது.

 ஆ கா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறது? தேசத்துக்கு எப்படியோ, அப்படியே தனக்குந்தான்!

 குமாரலிங்கம் வருங்காலச் சுதந்திர வாழ்க்கையைப் பற்றி ஆனந்தக் கனவு கண்டுகொண்டிருந்த அந்தச் சில நிமிஷங்களில், பொன்னம்மாள் தன்னுடைய ஆ காசக் கோட்டையெல்லாம் தகர்ந்து துகள் துகளாகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

 தன்னைச் சோலைமலை இளவரசியென்றும், குமாரலிங்கத்தை மாறனேந்தல் மகாராஜா என்றும் அவள் கற்பனை செய்து மகிழ்ந்ததெல்லாம் மாயக் கனவாகவே போய்விட்டது! குமாரலிங்கம் இனி ஒரு கணமும் இங்கே தங்கப் போவதில்லை; இவ்விடத்தை விட்டுப் போனபிறகு இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கவனிக்கப் போவதுமில்லை, 'சீ!' இது என்ன வீண் ஆசை? இந்த மாய வலையில் நாம் ஏன் சிக்கினோம்?' என்ற வைராக்கிய உணர்ச்சி அவளுக்கு அப்போது ஏற்பட்டது.

 வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் சின்னாயி தன்னைத் திட்டப் போகிறாளே என்பதும் நினைவு வந்தது. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, "சரி நான் போய் வாரேன்!" என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டாள்.

Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,

mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,

kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,

solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,

kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *