BooksKalki Times

Mohini Theevu Kalki

ஒன்பதாம் அத்தியாயம்

மோகினித் தீவின் பெண்ணரசி இந்த இடத்தில் மறுபடியும் குறுக்கிட்டுக் கதையைத் தொடர்ந்தாள்:- “பாண்டிய வீரர்கள் அப்படிப் பின் வாங்கியதற்குக் காரணம், பராக்கிரம பாண்டியர் காலமாகி விட்டார் என்ற செய்தி வந்ததுதான்; அந்தச் செய்தி வருவதற்கு முன்பே, புவனமோகினி தந்தையைக் கடைசிமுறை தரிசிப்பதற்காக மதுரைக்கு விரைந்தோடினாள்.

மரணத் தறுவாயிலிருந்த பராக்கிரம பாண்டியர், தம் அருமைக் குமாரியைக் கட்டி அணைத்துக் கொண்டு ஆசி கூறினார். அவள் செய்த குற்றத்தை மன்னித்து விட்டதாகத் தெரிவித்தார். அவள் வீரப் போர் புரிந்து பாண்டிய நாட்டின் கௌரவத்தை நிலைநாட்டியதைப் பாராட்டினார். இனிமேல், யுத்தத்தை நிறுத்திவிட்டுச் சோழர்களுடன் சமாதானம் செய்து கொள்ளும்படியும், புத்திமதி சொன்னார். “நான் இறந்துவிட்ட பிறகு சோழர்கள் போர் செய்ய மாட்டார்கள்.

ஒரு அபலைப் பெண்ணோடு யுத்தம் செய்யும்படி, அவ்வளவு தூரம் சோழ குலம் மானங் கெட்டுப் போய்விடவில்லை. அவர்கள் போரை நிறுத்த விரும்பினால், நீ அதற்கு மாறுதல் சொல்ல வேண்டாம்” என்றார். கடைசியாக, “உனக்குத் திருமணம் நடத்திப் பார்க்க வேண்டும் என்ற என் மனோரதம் ஈடேறவில்லை. மீனாக்ஷி அம்மனுடைய அருளினால் நீ உன மனதுக்குகந்த மணாளனை மணந்து இன்புற்று வாழ்வாய்!” என்று ஆசி கூறினார். இவ்விதம் ஆசி கூறிச் சிறிது நேரத்துக்கெல்லாம், பராக்கிரம பாண்டியர் தமது அருமை மகளுடைய மடியில் தலையை வைத்துப் படுத்தபடி, இந்த இகவாழ்வை நீத்துச் சென்றார்.

புவனமோகினி அழுதாள்; அலறினாள்; கண்ணீரை அருவியாகப் பெருக்கினாள். என்ன தான் அழுதாலும் இறந்தவர்கள் திரும்பி வர மாட்டார்கள் அல்லவா? தகனக்கிரியைகள் ஆனவுடனே பாண்டிய குமாரி மறுபடியும் போர் முனைக்குச் சென்றாள். ஆனால், முன்னைப் போல் அவளுக்கு உற்சாகம் இருக்கவில்லை.

சோகத்தில், மூழ்கியிருந்த புவனமோகினியினால், பாண்டிய வீரர்களுக்கு ஊக்கம் ஊட்டவும் முடியவில்லை. ‘உன் மனதுக்கு உகந்த மணாளனை மணந்து கொள்’ என்று தந்தை மரணத் தறுவாயில் கூறியது, அவள் மனதில் பதிந்திருந்தது. மனதுக்கு உகந்த மணாளனை மணப்பதென்றால், ஒருவரைத்தான் அவள் மணக்க முடியும். ஆனால், அவரோ தன்னை வஞ்சித்துவிட்டுத் தான் கொடுத்த முத்திரை மோதிரத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனவர்.

தான் அவரிடம் காட்டிய அன்புக்குப் பிரதியாகத் தன் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்திருப்பவர். அவரைப்பற்றி நினைப்பதில் பயன் என்ன? அடடா! அவர் உண்மையாகவே ஒரு சிற்ப மாணாக்கராக இருந்திருக்கக் கூடாதா? கடைசியில் சுகுமார சோழர், புவனமோகினி இருந்த இடத்துக்குத் தாமே நேரில் விஜயம் செய்து, பிரமாதமான வீரப்போர் புரிந்து, அவளைச் சிறைப் பிடித்துவிட்டார்! பாண்டியகுமாரி சிறைப்பட்டதும், பாண்டிய சேனையும் சின்னாபின்னமடைந்து சிதறி ஓடிவிட்டது. தமிழ் நாட்டு மன்னர்களின் வீரதீரங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த மாதிரி ஓர் அபலைப் பெண்ணுடன், ஒரு ராஜகுமாரன் போர் புரிந்து, அவளைச் சிறைப்படுத்திய அபாரமான வீரத்தைப் பற்றி நீர் கேள்விப்பட்டதுண்டா?”

இவ்விதம் கூறிவிட்டு அந்தப் பெண்ணரசி கடைக்கண்ணால் தன் நாயகனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அளவிலாக் காதல் புலப்பட்டது. ஆனால், அவளுடைய குரலில் ஏளனம் தொனித்தது.

அந்த யுவதியின் ஏளன வார்த்தைகளைக் கேட்ட அவளுடைய நாயகன் சிரித்தான். என்னைப் பார்த்து, “பெண்களுடைய போக்கே விசித்திரமானது. அவர்களை மகிழ்விப்பது பிரம்மப் பிரயத்தனமான காரியம். நாம் நல்லது செய்தால் அவர்களுக்குக் கெடுதலாகப்படும். நம்முடைய நோக்கத்தைத் திரித்துக் கூறுவதிலேயே அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம்!” என்று கூறி மேலும் சொன்னான்:-

“சோழ ராஜகுமாரன் போர்க்களத்தில் முன்னால் வந்து நின்று, பாண்டிய குமாரியைத் தோற்கடித்து அவளைச் சிறைப் பிடித்தது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் என்ன தெரியுமா? புவனமோகினி தற்கொலை செய்து கொண்டு சாகாமல் அவள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத்தான். புவனமோகினியின் மனதில் தந்தை இறந்த காரணத்தினால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த மனச்சோர்வை அவள் போர்க்களத்தில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. முன்னைக் காட்டிலும் பத்துமடங்கு வீராவேசத்தோடு போர் புரிந்தாள். கத்தியை சுழற்றிக் கொண்டு போர்க்களத்தில் தன்னந் தனியாக அங்குமிங்கும் ஓடினாள். பாண்டிய குமாரியை யாரும் காயப்படுத்தி விடக்கூடாதென்றும், சுகுமாரன் சோழ வீரர்களுக்குக் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தான். ஆனால், அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவது இயலாமற் போகும்படி புவனமோகினி நடந்து கொண்டாள். எப்படியாவது போர்க்களத்தில் உயிரை விட்டு விடுவது என்றும், சோழர் குலத்துக்கு அழியாத பழியை உண்டு பண்ணுவது என்றும் அவள் தீர்மானம் செய்திருந்ததாகக் காணப்பட்டது.

‘சண்டையை நிறுத்தி விட்டுச் சமாதானமாகப் போகலாம்’ என்று தந்தை சொல்லியனுப்பியதை அவள் சட்டை செய்யவில்லை. அதன் பேரில் சுகுமாரன், தானே அவளுக்கு எதிரே வந்து நிற்க வேண்டியதாயிற்று. சுகுமாரனைத் திடீரென்று பார்த்ததும், பாண்டிய குமாரியின் கையிலிருந்து கத்தி நழுவி விழுந்தது. உடனே பக்கத்திலிருந்த சோழ வீரர்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். கயிறு கொண்டு அவளுடைய கைகளைக் கட்டிச் சுகுமாரன் எதிரில் கொண்டு போய் நிறுத்தினார்கள். சுகுமாரன் உடனே குதிரை மீதிருந்து கீழே இறங்கினான். பாண்டிய குமாரிக்கு ஆறுதலான மொழிகளைச் சொல்லவேண்டும் என்று கருதினான்.

ஆனால், மனதில் தோன்றிய ஆறுதல் மொழிகள் வாய் வழியாக வருவதற்கு மறுத்தன. புவனமோகினியின் கோலத்தைக் கண்டு, அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவள் தந்தையை இழந்து நிராதரவான நிலையில் இருப்பதை எண்ணி அவன் உள்ளம் உருகியது. ஆனால், ஆண்மக்களை விடப் பெண் மக்கள் பொதுவாகக் கல்நெஞ்சு படைத்தவர்கள் என்பதை அப்போது புவனமோகினி நிரூபித்தாள்.

சுகுமாரனை அவள் ஏறிட்டுப் பார்த்து, “ஐயா, மதிவாணரே! செப்புச் சிலை செய்யும் வித்தையைச் சோழ மன்னரிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டீரோ?” என்று கேட்டாள். அதற்கு மறுமொழி சொல்லச் சுகுமாரனால் முடியவில்லை. தான் அவளை ஏமாற்றிவிட்டு வந்ததற்காக, அவளிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள அவன் விரும்பினான். ஆனால், அத்தனை வீரர்களுக்கு மத்தியில், ஒரு பெண்ணுக்குப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சுகுமாரனுக்குத் தைரியம் வரவில்லை. ஆகையால், புவனமோகினியைப் பத்திரமாய்க் கொண்டு போய்த் தக்க பாதுகாப்பில் வைக்கும்படி கட்டளை பிறப்பித்து விட்டுத் தன்னுடைய தந்தையைத் தேடிப் போனான்.

உத்தம சோழர் அப்போது வெகு உற்சாகமாக இருந்தார். மதுரையின் வீதிகளில், அவரைத் தேர்க்காலில் கட்டிப் பராக்கிரம பாண்டியன் இழுத்துச் சென்றதை உத்தம சோழர் மறக்கவே இல்லை. அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்று, அவர் எண்ணிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்; பராக்கிரம பாண்டியன் இறந்துவிட்டபடியால் அவனுக்குப் பதிலாக அவனுடைய மகளைப் பழி வாங்குவதற்கு அவர் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தார். அவனுடைய இதயம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

உரலுக்கு ஒரு பக்கத்தில் இடி, மத்தளத்துக்கு இரு பக்கத்திலும் இடி என்ற பழமொழி தெரியுமல்லவா? சுகுமாரன் மத்தளத்தின் நிலையில் இருந்தான். ஒரு பக்கம் அவனுடைய காதலைக் கொள்ளை கொண்ட புவனமோகினி அவனை வஞ்சகன் என்று நிந்தனை செய்தாள். இன்னொரு பக்கத்தில் அவனுடைய தந்தை ஒரே மூர்க்க ஆவேசங்கொண்டு, பாண்டிய குமாரி மீது வஞ்சந்தீர்த்துக் கொள்ள வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார். சுகுமாரன் அவரிடம் மெள்ள மெள்ளத் தன் மன நிலையை வெளியிட முயன்றான். முதலில் அரச தர்மத்தைத் தந்தைக்கு நினைப்பூட்டினான், “புவனமோகினி பாண்டிய ராஜனின் மகள் அல்லவா? அவளை மரியாதையாக நடத்த வேண்டாமா?” என்றான். அதற்கு உத்தம சோழர், “அவர்கள் பரம்பரை பாண்டியர்கள் அல்லர்; நடுவில் வந்து மதுரைச் சிம்மாசனத்தைக் கவர்ந்தவர்கள்; அவர்களுக்கு ராஜகுலத்துக்குரிய மரியாதை செய்ய வேண்டியதில்லை,” என்று சொன்னார்.

பிறகு சுகுமாரன், “பாண்டியகுமாரியின் உதவியில்லா விட்டால் நான் தங்களை விடுவித்திருக்க முடியாது. அவள் கொடுத்த முத்திரை மோதிரத்தை எடுத்துக் கொண்டுதான் சிறைக்குள்ளே வர முடிந்தது. அந்த மோதிரத்தைக் காட்டித் தானே நாம் தப்பித்து வந்தோம்?” என்றான்.

அதற்கு உத்தம சோழர், “யுத்த முறைகள் நான்கு உண்டு; சாம, தான, பேத, தண்டம் என்று. நீ பேத முறையைக் கையாண்டு எதிரியை ஏமாற்றினாய். அது நியாயமான யுத்த முறைதான். அதற்காக நீ வருத்தப்பட வேண்டியதில்லை! உலகம் தோன்றின நாள் தொட்டு, அரச குலத்தினர் பகைவர்களை வெல்வதற்காகத் தந்திரோபாயங்களைக் கைக்கொண்டிருக்கின்றனர். சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியாதா?” என்றார்.

சுகுமாரன் கடைசியாகத் தன்னுடைய உள்ளத்தின் நிலையை உள்ளபடியே வெளியிட்டான். பாண்டிய குமாரியிடம் தான் காதல் கொண்டு விட்டதையும், அவளைத் தவிர வேறு யாரையும் கலியாணம் செய்து கொள்ளத் தன் மனம் இடம் கொடாது என்பதையும் சொன்னான். இதை அவன் சொன்னானோ இல்லையோ, உத்தம சோழர் பொங்கி எழுந்தார். துர்வாச முனிவரும் விசுவாமித்திரரும் பரசுராமரும் ஓருருக் கொண்டது போலானார். “என்ன வார்த்தை சொன்னாய்? அந்தக் கிராதகனுடைய மகள் பேரில் காதல் கொண்டாயா? என்னைத் தேர்க்காலில் கட்டி, மதுரையின் வீதிகளில் இழுத்த பாதகனின் குமாரியை மணந்து கொள்வாயா?

என்னைச் சிறையில் அடைத்துச் சங்கிலி மாட்டி, விலங்கினத்தைப் போலக் கட்டி வைத்திருந்த சண்டாளனுடைய மகள், சோழ சிங்காதனத்தில் வீற்றிருப்பதை நான் அனுமதிப்பேனா? ஒரு நாளும் இல்லை! அப்பனைப் போலவே மகளும் சூழ்ச்சி செய்திருக்கிறாள். உன்னை வலை போட்டுப் பிடிக்கத் தந்திரம் செய்திருக்கிறாள். அதில் நீயும் வீழ்ந்துவிட்டாய். புவனமோகினியை நீ கலியாணம் செய்து கொள்வதாயிருந்தால், என்னைக் கொன்று விட்டுச் செய்து கொள்! நான் உயிரோடிருக்கும் வரை அதற்குச் சம்மதியேன்! அவளைப் பற்றி இனி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசாதே! அவளைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி வைத்து, அதே மதுரை நகர் வீதிகளில் ஊர்வலம் நடத்தப் போகிறேன். அப்படிச் செய்தால் ஒழிய, என் மனத்தில் உள்ள புண் ஆறாது!” என்று, இப்படியெல்லாம் உத்தம சோழர் ஆத்திரத்தைக் கொட்டினார்.

இந்த மனோநிலையில் அவருடன் பேசுவதில் பயனில்லையென்று சுகுமாரன் தீர்மானித்தான். கொஞ்ச காலம் கழித்து, அவருடைய கோபம் தணிந்த பிறகு முயற்சி செய்து பார்க்க வேண்டும். அதற்குள்ளே கோபவெறி காரணமாகப் புவனமோகினியை ஏதாவது அவமானப்படுத்தி விட்டால் என்ன செய்கிறது? அந்த நினைவையே சுகுமாரனால் பொறுக்க முடியவில்லை. காதலும் கல்யாணமும் ஒரு புறம் இருக்க, அவள் தனக்குச் செய்த உதவிக்கு பிரதி நன்றி செலுத்த வேண்டாமா? – இவ்விதம் யோசித்ததில், கடைசியாக ஒரு வழி அவன் மனதில் தோன்றியது. சிறையிலிருந்து அவள் தப்பிப் போகும்படி செய்வது முதல் காரியம்.

நேரில் அவளிடம் போய் எதுவும் பேசுவதற்கு அவனுக்கு வெட்கமாயிருந்தது. தன்னைப் பார்த்ததும் “செப்பு விக்கிரகம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டீரா?” என்று தான் மீண்டும் அவள் கேட்பாள்! அதற்கு என்ன மறுமொழி கூறுவது? அதைக் காட்டிலும் வேறொருவர் மூலம் காரியம் நடத்துவது நல்லது. எனவே நம்பிக்கையான தாதிப் பெண் ஒருத்தியைச் சுகுமாரன் அழைத்தான். அவளிடம் சோழ நாட்டு மோதிரத்தைக் கொடுத்தான்.

அவளைப் பாண்டிய குமாரியின் சிறைக்குள்ளே சென்று, அவளைப் பார்த்து, ‘உன்னிடம் ஒரு சமயம் பாண்டிய ராஜாங்கத்தின் முத்திரை மோதிரத்தை வாங்கிக் கொண்டவர், இந்த மாற்று மோதிரத்தை உனக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அந்த மோதிரத்தை உபயோகித்ததுபோல் இதை நீயும் உபயோகிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, மோதிரத்தைக் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பினான்.

தாதி சென்ற பிற்பாடு, சுகுமாரனுக்குச் சும்மா இருக்க முடியவில்லை. புவனமோகினி மோதிரத்தை வாங்கிக் கொண்டு என்ன செய்கிறாள், என்ன சொல்லுகிறாள் என்று, தெரிந்து கொள்ள விரும்பினான். ஆகவே, தாதியின் பின்னோடு சுகுமாரனும் சென்று ஒரு மறைவான இடத்தில் இருந்து ஒட்டுக் கேட்டான். அவன் சொன்ன மாதிரியே தாதி மோதிரத்தைக் கொடுத்த போது, பாண்டிய குமாரி கூறிய மறுமொழி, அவனை மறுபடியும் திகைப்படையச் செய்து விட்டது.”

இவ்விதம் சொல்லி மோகினித் தீவின் சுந்தர புருஷன் கதையை நிறுத்தினான். மேலே நடந்ததைத் தெரிந்து கொள்ள என்னுடைய ஆவல் உச்ச நிலையை அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *