Poiman Karadu Kalki | Kalki Times

அத்தியாயம் 11:
வெள்ளாமை

மறுநாள் காலையில் செங்கோடன் வழக்கம்போல் வீடு சுத்தம் செய்துவிட்டு, கேணியில் பாதித் தண்ணீர் இறைத்து விட்டு, குளித்து, வெள்ளை வேட்டி சொக்காய் தரித்துக் கொண்டு, கொப்பனாம்பட்டிக்குப் போனான். பெரியகவுண்டர் செங்கோடனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டது போல் பாவனை செய்து, “நீ எங்கே வந்தாய்?” என்று கேட்டார்.

“என்ன மாமா! அப்படிக் கேட்டீங்க ஒரு கேள்வி? நான் வரக்கூடாதா?” என்றான்.

“நன்றாய் வரலாம். வரக்கூடாது என்று யார் சொன்னது? ரொம்ப நாளாய் உன்னைக் காணுகிறதேயில்லையே, எங்களை அடியோடு மறந்துவிட்டாயோ என்று பார்த்தேன். “

“அப்படியெல்லாம் மறப்பேனுங்களா? வெள்ளாமை வேலை அதிகமாயிருந்தது. உங்களுக்குத் தெரியாதா? மழையில்லாமல்… “

“அதெல்லாம் தெரியும்! அப்பா! ஆனால் நீ வெள்ளாமையிலே மட்டும் கவனாயிருந்ததாகத் தெரியவில்லையே? சின்னமநாயக்கன்பட்டிக்கு அடிக்கடி போகிறாயாம்? அங்கே யாரோ காவாலிகள் வந்திருக்கிறார்களாம். அவர்களோடு சேர்ந்துகொண்டு திரிகிறாயாம்! சாலையிலே போகிறபோதே ஏதேதோ பேத்திக்கொண்டு போகிறாயாம், குடிகாரனைப் போல. அப்படியிருக்க… “

“அதெல்லாம் முந்தாநாளோட தீர்ந்தது மாமா! எனக்குத் தாயா, தகப்பனாரா, வீட்டிலே வேறு பெரியவர்களா, யார் இருக்கிறார்கள்? நான் அப்படியே தப்பு வழியில் போனாலும் நீங்கள் தானே புத்தி சொல்லித் திருத்த வேணும்?”

“புத்தி சொன்னால் நீ கேட்கிற நிலைமையிலே இல்லையே? அது போகட்டும்; இப்போது எதற்காக வந்தாய்? ஏதாவது யோசனை கேட்பதற்காக வந்தாயா?” “ஆமாம், மாமா! ஒரு யோசனை கேட்கத்தான் வந்தேன். நம்ப செம்பாவைக் கலியாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வெகு நாளாக எனக்கு எண்ணம். அதைப் பற்றி இன்றைக்குப் பேசி… “

“வெகுநாளாக உனக்கு எண்ணம் என்றால், இத்தனை நாள் ஏன் சொல்லாமல் இருக்கவேணும்? இப்போது வந்து சொல்கிறாயே? நான் அந்தப் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே?”

“அது எப்படி நீங்கள் வாக்குக் கொடுக்கலாம்? செம்பா விஷயமாக என் மனசில் இருந்த உத்தேசம் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?”

“மறுபடியும் அதையே சொல்கிறாயே? மனசிலே உத்தேசம் இருந்தால் என்ன பிரயோசனம்? வாயை விட்டுச் சொல்கிறதுதானே? கடவுள் வாயை எதற்காகக் கொடுத்திருக்கிறார்?”

“சரி; இப்போதுதான் வாயைவிட்டுச் சொல்லியாகி விட்டதே? ஒரு மழை நல்லாப் பெய்து ஊரிலே கொஞ்சம் செழிப்பு உண்டாகட்டும், அப்புறம் உங்களிடம் வந்து கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன். “

“மழை பெய்யாவிட்டால் உனக்கு என்ன? மற்றவர்களுக்குக் கஷ்டம். உன் கேணியிலேதான் வற்றாமல் தண்ணீர் வருகிறது! சோளம், நெல் எல்லாம் நன்றாய் வந்திருக்கிறதே?”

“நான் மட்டும் நல்லாயிருந்தால் போதுமா? உங்கள் காட்டிலும் மழை பெய்து நல்லா விளைந்தால்தானே என் சோளம் எனக்குக் கிட்டும்! இல்லாவிட்டால் இந்த வீட்டுக் குழந்தைகள் வந்து சோளம் முற்றுகிறதற்குள்ளே பிடுங்கித் தின்றுவிடமாட்டார்களா?”

“தம்பி! நானும் பார்த்தாலும் பார்த்தேன். உன்னைப் போன்ற கருமியைப் பார்த்ததில்லை. செம்பாவுக்கு நீதான் சரியான புருஷன். அவள் பெரிய ஊதாரி… “

“அதெல்லாம் உங்கள் வீட்டிலே; என்னிடத்துக்கு வந்தால் சரியாய்ப் போய்விடும். குடும்பப் பொறுப்பு வந்துவிடும் அல்ல?”

இச்சமயம் செம்பாவின் தம்பி தான் படித்துக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு, “அப்பா! நம்ம அக்காளை அந்தப் போலீஸ்காரருக்கே கட்டிக் கொடுங்க! இந்த ஆளுக்குக் கொடுக்காதிங்க!” என்றான்.

“ஏண்டா அப்படிச் சொல்லுகிறாய்? நம்ம செங்கோடனுக்கு என்ன குறை வந்தது?”

“நேற்று அந்தப் போலீஸ்காரர் பெப்பர்மிண்ட் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் ஒருநாள் எங்களையெல்லாம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருமிக் கவுண்டர் என்னத்தைக் கொடுப்பார்?”

“தம்பி! நான் உனக்கு அன்றைக்குக் கொடுக்கவில்லை?” என்றான் பையன்.

“என்ன கொடுத்தீங்க? ஒன்றும் கொடுக்கவில்லை! சும்மாச் சொல்றீங்க” என்றான் பையன்.

“நினைச்சுப்பார், தம்பி! நீ அன்றைக்கு என் சோளக் கொல்லைக்கு வந்து சோளக் கொண்டையை ஒடித்த போது நான் ஓடிவந்து உன் முதுகில் நாலு அடி கொடுக்கவில்லை? ஒன்றுமே கொடுக்கவில்லை என்கிறாயே?”

உள்ளேயிருந்து ‘கலீர்’ என்று சிரிக்கும் சத்தம் கேட்டது.

பெரிய கவுண்டரும் புன்னகை பூத்தார். “சரி; இப்போது என்ன சொல்கிறாய்?” என்றார்.

“என்ன சொல்கிறது? கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்!” என்றான் செங்கோடன்.

“அடுத்த தை மாதத்திலே வைத்துக் கொள்ளலாமே!”

“அவ்வளவு நாள் ஏன் தள்ளிப் போடணும்? இந்த மாதத்திலேயே வைத்துவிடுங்க! இனிமேல் தாமதிக்கிறது உசிதமில்லை!”

“அது என்ன, அவ்வளவு அவசரப்படுகிறாய்! அந்தப் போலீஸ்காரருக்கு வேறு நான் சமாதானம் சொல்லியாக வேண்டும். ” “அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் தான் செம்பாவைக் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று நேற்றே சொல்லிவிட்டேன். “

“அப்படியென்றால், அடுத்த வாரத்திலே புதன்கிழமை ஒரு முகூர்த்தம் இருக்கிறது. கலியாணம் வைத்துக் கொள்ளலாமா?”

“அப்படியே வைத்துவிடுங்கள். இன்னும் சீக்கிரமாய் வைத்தாலும் சரிதான்!” என்றான் செங்கோடன்.

இந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து செம்பவளவல்லி அவசரமாக வந்தாள்.

“அப்பா! இவரிடம் ஒரு கேள்வி கேட்கவேணும் அதற்குச் சரியான பதில் சொன்னால்தான் கல்யாணம்!”

“கேட்டுக்கொள்! நன்றாய்ச் சந்தேகமற என்னென்ன கேட்கவேணுமோ எல்லாவற்றையும் இப்போதே கேட்டுக் கொள்! நீயும் இவனுந்தானே ஆயுள் முழுவதும் வாழ்க்கை நடத்தவேணும்?” என்றார் பெரிய கவுண்டர்.

“சினிமாக் கொட்டகையிலே ஒரு பெண்பிள்ளை இவரைக் கன்னத்திலே அடித்தது வாஸ்தவமா?” என்றாள்.

செங்கோடன் தலையைக் குனிந்துகொண்டு யோசித்தான்.

“ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாரு? என் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாரா, இல்லையா?”

செங்கோடன் தலை நிமிர்ந்து, “அது வாஸ்தவந்தான். அதற்கு என்ன செய்யவேணும்?” என்றான்.

“இவர் ஆண்பிள்ளைதானே? கன்னத்தில் பெண் பிள்ளை அறைந்தால் இவர் ஏன் சும்மா வரவேணும்? திரும்பி நாலு அறை கொடுப்பதற்கென்ன?”

“பெண் பிள்ளையாயிருந்தபடியால்தான் சும்மா விட்டு விட்டு வந்தேன். ஆண் பிள்ளையாயிருந்தால் அங்கேயே பொக்கையில் வைத்திருப்பேன்!”

“பெண் பிள்ளையாயிருந்தால் அதற்காகச் சும்மா விட்டு விடுவதா? அவள் தவடையில் இரண்டு அறை கொடுத்து விட்டு வரவேணும். இல்லாவிட்டால்… “

“இல்லாவிட்டால்… ?”

“இல்லாவிட்டால் நான் போய் அவள் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு வருவேன். அதற்குப் பிறகுதான் கலியாணம்!” என்றாள் செம்பவளவல்லி.


Poiman Karadu Kalki

poiman karadu kalki,kalki poiman karadu,poiman karadu story,poiman karadu salem,poiman karadu,poiman karadu audiobook,பொய்மான் கரடு,கல்கியின் பொய்மான் கரடு ,kalki audio,kalki audiobooks,kalki audiobook,kalki story,kalki audio books,kalki audio books free download,kalki novels audio ,kalki tamil audio books,kalki story audiobook,kalki krishnamurthy,poiman karadu pdf,poiman karadu book,poiman karadu audio,poiman karadu audio book,