Tamil AudiobooksVelpariYoutube

Velpari Audiobook 12 வீரயுக நாயகன் வேள் பாரி

Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 12 Mr and Mrs Tamilan

Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 12 Mr and Mrs Tamilan

Velpari Audiobook இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…

Buy Book: https://velparibook.com/

Credits -:
Book : வீரயுக நாயகன் வேள் பாரி
Author of book -: Su. Venkatesan
Image Credits -: மா.செ (மணியம் செல்வன்)
Copyright © Su. Venkatesan, All rights reserved.

அத்தியாயம் 12:

ஒரு பொன்வண்டு கூட்டுக்குள் நுழைவதைப்போல் இருந்தது. விளிம்பில் கருமைகொண்டு நீண்டுகிடந்த மரக்கிளைகள், அந்தப் பொன்வண்டின் எண்ணற்ற கால்கள் எனக் காட்சியளித்தன. மாளிகையின் மேல்மாடத்தில் நின்றபடி, மேற்குத் திசையில் மலையில் மறையும் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். கண்கள், ஊர்ந்து இறங்கும் பொன்வண்டைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் காலைச் சூரியனே நிறைந்திருந்தான். அருகில் யாரோ வரும் காலடி ஓசை கேட்டுத் திரும்பினார்.

“மறையும் கதிரவனிடம் ஒளி வாளை ஒப்படைத்துக்கொண்டிருக்கிறீர்களா?” கேட்டுக்கொண்டே இன்முகத்தோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே இருக்கையில் அமர்ந்தனர்.

பாரி கேட்டான்… “காலையில் உச்சிப்பாறை ஏறியதும் மேற்குத் திசையைப் பார்த்தபடி, ‘காணக்கிடைக்காத காட்சி’ எனச் சொன்னீர்களே… எதைச் சொன்னீர்கள்?”

சற்றே யோசித்த கபிலர், “அதுவா… மேலே ஏறியதும் முதலில் கண்ணில்பட்டது கோட்டைச்சுவரே இல்லாத இந்த நகர அமைப்புதான். இப்படி ஒரு தலைநகர் உலகில் எவ்வியூர் மட்டுமாகத்தான் இருக்கும்”

“எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, கோட்டைச்சுவர் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை. ஏனென்றால், எங்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல், யாரும் இந்தப் பெரும்காட்டையும் மலைமுகடுகளையும் கடந்து இங்கு வந்துவிட முடியாது அல்லவா?”

பாரியின் கேள்வியை ஆமோதித்தார் கபிலர்.

“அதே நேரம் காட்டு உயிரினங்களிடம் இருந்து உங்களுக்குப் பாதுகாப்பு தேவை.அதற்காகவாவது சுவர் எழுப்பியிருக்கலாமே?”

“அதன் பொருட்டுத்தான் எழுப்பியுள்ளோம்”

“எங்கே எழுப்பியிருக்கிறீர்கள்… என் கண்களுக்குத் தெரியவில்லையே. எதுவும் மாயச்சுவர் கட்டியுள்ளீர்களா?”

பாரி சிரித்தான்.

“உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால், அதுதான் சுவர் என்பதை உங்களின் எண்ணம் ஏற்க மறுக்கிறது”

கபிலர், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து பார்த்தார். அவரைக் கவனித்தபடி பாரி கேட்டான்… “இந்தக் காட்டில் எத்தனை வகையான விலங்குகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? காட்டுவிலங்குகளால் உடைத்து நொறுக்கவோ, தாவிக் கடக்கவோ முடியாத ஒரு கோட்டை மதிலை மனிதனால் கட்டிவிட முடியுமா? கார்காலத்தில் மூன்று குளகு’ தின்ற ஒரு பெண் யானை, எவ்வளவு பெரிய கற்கோட்டையையும் தகர்க்கும்.அதிங்கத்தை’த் தின்ற ஆண் யானைக் கூட்டம் உள்நுழைந்தால், பெரும்மலையும் கிடுகிடுக்கும். மரமேறி உயிரினங்களால் தாவிக் கடக்க முடியாத தடுப்புச்சுவரை எழுப்ப முடியுமா? இந்த மலைத்தொடர் வடதிசையிலும் தென்திசையிலும் எவ்வளவு தொலைவு நீண்டுகிடக்கிறதோ, யார் அறிவார்? இடையில் ஒரு சிறு பகுதியில் பறம்பு நாடு இருக்கிறது. எண்ணிக்கையில் அடங்காத விலங்குக் கூட்டங்கள் நாள்தோறும் இடமும் வலமுமாக எங்களைக் கடக்கின்றன. இவற்றிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ முறைகளைக் கையாண்ட எம் முன்னோர்கள், இறுதியாக இந்த நாகப்பச்சை வேலியை பெரும்கோட்டையாக எழுப்பினர்”

கபிலர் சுற்றும் முற்றும் பார்த்தார். எவ்வியூரின் கடைசி வீடுகளும் தெருக்களும் முடிவடைந்த சிறிது தொலைவில் இருந்து காடு ஆரம்பம் ஆ கிறது. இதில் வேலியோ, சுவரோ எங்கு இருக்கிறது என யோசித்தபடி நின்றார்.

பாரி சொன்னான்… “ஊரின் எல்லை முடிவடைந்ததும் காடு தொடங்குகிறது.இடையில் வேலி எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பார்க்கும் அந்தக் காட்டின் தொடக்கம் இயற்கையானது அன்று. அந்தத் தாவரங்கள், தாமாக முளைத்தவை அல்ல; நாங்கள் அறிந்த இந்தப் பெரும் உலககெங்கிலும் இருந்தும் கொண்டுவந்து, இங்கு முளைக்கவைத்தவை”

கபிலர், பாரியைக் கூர்ந்து பார்த்துக்கொண் டிருந்தார்.

“காட்டில் உள்ள ஒவ்வோர் உயிரும் தின்னக்கூடிய தாவரங்களும் உண்டு; தின்னக் கூடாத தாவரங்களும் உண்டு. நுகரக்கூடியதும் நுகரக் கூடாததுமான பச்சிலைகள் உண்டு. பற்றக்கூடியதும் பற்றக் கூடாததுமான செடி, கொடிகள் உண்டு. நாங்கள் வன உயிரினங்கள் நுகரவும் நெருங்கவும் பற்றவும் முடியாத தாவரங்களைக்கொண்டு, ஒரு பெரும் வேலி அமைத்துள்ளோம். தலைமுறைத் தலைமுறையாக எங்கள் தாவர அறிவின் சேகரம், இந்த நாகப்பச்சை வேலிதான்”
இவ்வளவு எளிதான வார்த்தைகளால் எவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறான் பாரி, நம்ப முடியாமல் நின்றுகொண்டிருந்தார் கபிலர்.

“இதை எப்படி மனிதனால் செய்ய முடிந்தது?”

“அதைச் செய்ய முடிந்ததால்தான், நாங்கள் இங்கு வாழ்கிறோம். காற்றுகூட உள்நுழைய முடியாத இந்தக் கானகத்தில் ஓரிரு வீரர்கள் காவல் காக்க, நாள்தோறும் தூங்கி, உயிரோடு எழுகிறோம். எங்கள் குழந்தைகள் மறுநாள் காலை சிரித்துக்கொண்டு விளையாடுகின்றனர். எங்கள் இளைஞர்களின் இதழ்களில் முத்தத்தின் ஈரம் ஊறிக்கொண்டே இருக்கிறது”

“இது எப்படி…?” நா தயங்கி வெளிவந்தன கபிலரின் வார்த்தைகள்.

“வெறிமணம்கொண்ட செடி, கொடி, மரங்களால் சூழ்ந்துகிடக்கிறது இந்த வேலியின் வெளிப்புறம். நடுப்பகுதியோ, புறவைரமும் அகவைரமும் பாய்ந்தோடும் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கிடப்பதைப்போல நன்கு திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது. வெளிவிஷம், மற்றும் உள்விஷத் தாவரங்களால் தழைத்துக் கிடக்கிறது இதன் முதல் பகுதி. இந்த மூன்று பகுதிகளின் இடைவெளிகளிலும் நஞ்சு ஏறிய அலரி வேர்கொண்டு சுருக்கு வலை பின்னப்பட்டுள்ளது.

நச்சுப் பிசின் வழியும் மருவு, தொடரிப் பட்டைகள் இடைவிடாதிருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து பின்னிப்பிணைந்து உருவாக்கப்படும் பிணையல், மாலையைப்போல தாவரப்பச்சிலைகளோடு பிணைந்து கட்டிக் கிடக்கும். அதன் கணுக்கள்தோறும் வேர்களை உண்டாக்கி, அந்தப் பச்சிலைச்செடிகள் தழைத்தபடி இருக்கும்.

இந்த வேலிக்குள் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துத் தாவரங்களின் மீதும் குறுக்கும் நெடுக்குமாகப் படர்ந்துகிடக்கும் எண்ணிலடங்காத படர்கொடிகளும் சுற்றுக்கொடிகளும்தான், இந்த நாகப்பச்சை வேலியின் உயிர்நாடி. வலப்புறம் சுற்றும் கொடியும் இடப்புறம் சுற்றும் கொடியும் ஒன்று மாற்றி ஒன்றாகப் படர்ந்துகொண்டே இருக்கின்றன. சுருண்டு எழும் அவற்றின் ஊசிநாவுகள் எதிரெதிர் திசையில் ஒருசேரப் பின்னியபடியே மேலே எழுகின்றன. உதிர்ந்து கொண்டிருக்கும் இலையைக்கூட இந்த வேலி அந்தரத்தில் நிறுத்திவிடும்.

விலங்கின் நாசியை வெகுதொலைவிலேயே இந்த வெறிமணம் தாக்கும். அதையும் கடந்து உள்நுழையும் உயிரினம் விஷமுள்ளாலோ, நச்சுக்கணுக்களாலோ, நாவில்படும் பச்சிலையாலோ, சற்றே மயங்கி அமரும். அந்த கணத்தில் அதன் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றையும் பற்றி உள்ளிழுக்கின்றன சுருட்கொடிகள். அந்த உயிரினத்தின் இயக்கத்தை மிக விரைவாக தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது இந்த நாகப்பச்சை வேலி. அதன் பிறகு அந்த விலங்கு அமர்ந்த இடத்தில் உள்ள தாவரமும் கறையான்களும் எறும்புகளும் சிலந்திகளும் சற்றே கூடுதல் செழிப்புக்கொள்கின்றன”

பாரி சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

“தாமரை இதழை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதன் மேல் ஊன்றப்படும் வேலம் முள், முதல் இதழுக்குள் இறங்கும் நேரம்தான் கணப்பொழுது. மூன்றாம் இதழைக் கடக்கும் நேரம்தான் இமைப்பொழுது, ஆறாம் இதழுக்குள் நுழையும் நேரம்தான் விநாடிப்பொழுது. எந்த ஒரு விலங்கின் இயக்கத்தையும் வேலம் முள் ஆறாம் இதழைக் கடக்கும் பொழுதுக்குள் நிறுத்திவிடும் ஆற்றல் இந்த நாகப்பச்சை வேலிக்கு உண்டு என்று எம் முன்னோர் கூறுவர்”

இயற்கையைப் பற்றிய பேரறிவின் முன்னர், தூசி என நின்றுகொண்டிருப்பதாக கபிலர் உணர்ந்தார். மேற்கு மலையின் விளிம்பில் பொன்வண்டு தனது கடைசிக்கால்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. பாரி, இறங்கும் சூரியனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆச்சர்யம் விலக்கி, சற்றே ஆர்வம் மேலிட கபிலர் கேட்டார், “எந்த வெறிமணம் யானைகள் கூட்டத்தை விரட்டக்கூடியது?”

ஒளி உள்வாங்கும் அழகைப் பார்த்தபடி பாரி சொன்னான்.

“ஏழிலைப் பாலை”

கபிலரின் கண்கள் பூத்தன.

“அந்த மரத்தின் வாடையை நுகரும் யானைகள் காதத் தொலைவுக்கு விலகி ஓடும்” என்றான் பாரி.

“அந்த மரங்கள் எங்கே இருக்கின்றன? நான் அருகில் சென்று பார்க்க வேண்டும்”

பாரியின் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு ஓடி மறைந்தது.

`சிரிக்கக்கூடிய கேள்வியையா நான் கேட்டுவிட்டேன்’ என்று யோசித்தபடி பதிலுக்குக் காத்திருந்தார் கபிலர்.

“ஒவ்வொரு திசைக்கும் ஒரு மரம் நின்றுகொண்டிருக்கிறது”

“எறும்புக் கூட்டங்கள்போல் யானைக் கூட்டங்கள் திரியும் இந்தக் காட்டில், திசைக்கு ஒரு மரம் போதுமா?”

“அதற்கும் அதிகமாக வைத்தால் எவ்வியூர் தாங்காது” என்றான் பாரி.

கபிலருக்கு, பதில் விளங்கவில்லை.

பாரி சொன்னான்… அந்த மரத்தால் வேறு தொல்லைகள் இருக்கின்றன. மதயானை ஏழிலைப் பாலையின் வாசனையை நுகர்ந்துவிட்டால், வெறிகொண்டு வந்து அந்த மரத்தை அடியோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துவிடும்" பின் எப்படிச் சமாளிப்பீர்கள்?”

“அதன் பிறகு மனித முயற்சிதான். ஆயுதங்களும் பறை ஒலிகளும் தீப்பந்தங்களும்தான் கைகொடுக்கும். திசைக்கு ஒன்று என்றால் வந்த திசையில் இருக்கும் அந்த ஒன்றோடு அதன் ஆத்திரம் தணிய வாய்ப்பு இருக்கிறது அல்லவா? இப்படி ஒரு நிகழ்வு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்வார்கள்”

ஆர்வத்தில் கேட்ட கேள்வி அதிர்ச்சியைப் பதிலாகக் கொடுத்தது. கணப்பொழுதுக்குள் மாறிச் செல்லும் உணர்வுகளின் வழியே பயணமாகிக்கொண்டிருந்தது கபிலரின் எண்ணம்.

“அதுமட்டும் அல்ல. இன்னொரு பிரச்னையும் உண்டு. அதுதான் மிக முக்கியமானதும்கூட”

“என்ன அது?”

“அந்த மரத்தின் வாசனை, காமத்தைத் தூண்டும். கோல்கொண்டு நெருப்பைக் கிளறுவதைப்போல, அது வாசனையைக்கொண்டு காமத்தைக் கிளர்த்திக்கொண்டே இருக்கும்”

சற்றே இடைவெளிவிட்டு பாரி சொன்னான், “எவ்வியூருக்குள் வேறு வேலையும் நடக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் திசைக்கு ஒரு மரம் மட்டும் வைத்திருக்கிறோம்” பாரியின் சொல்லைத் தாண்டி வெளிவந்தது சிரிப்பு.
கபிலரும் சேர்ந்து சிரித்தார். நினைவு வந்ததும் சட்டென சிரிப்பை அடக்கிவிட்டுக் கேட்டார், “அதனால்தான் மரத்தின் அருகில் சென்று நான் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு நீ சிரித்தாயா?”

அவ்வளவு நேரம் அடக்கமாக வெளிப்பட்ட சிரிப்பு இப்போது பீறிட்டது. சிரித்தபடியே ‘ஆம்’ என, தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் பாரி.

கபிலர் சற்றே வேகமாக, “ஏழிலைப் பாலையை அடியோடு வீழ்த்தும் மதயானை மனிதரிலும் உண்டு”

சட்டென பாரி சொன்னான்… “காமம் கண்டு பயந்த சொல் இது”

“பயம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், பயப்பட மாட்டேன் எனச் சொல்ல பொய் தேவை இல்லை”

“அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்”

நாழிகை மணியோசை எவ்வியூர் முழுவதும் எதிரொலித்தது. சூரியன் முழுவதும் விழுந்தவுடன் இருள், காட்டின் எல்லா திசைகளில் இருந்தும் இறங்கி வந்துகொண்டிருந்தது. பந்தங்களை ஏற்றும் வீரர்கள், கையில் நீண்ட குழல்போன்ற விளக்குகளுடன் ஓர் இடம் நோக்கிக் குவிந்துகொண்டிருக்கின்றனர்.

பேச்சு எதிர்பாராத கணத்தில் காமத்துக்குள் போனதைப் பற்றி யோசித்தபடி கபிலர் கூறினார்… “இரவு வரும்போதே ஏதாவது ஒரு வடிவில் காமத்தையும் அழைத்து வந்துவிடுகிறதே”

பாரி அசட்டுச் சிரிப்போடு சொன்னான்… “ஏழிலைப் பாலைக்கு இரவு ஏது… பகல் ஏது?”

பறம்புமலை ஏறத் தொடங்கியதில் இருந்து தனது சொல் முறியும் ஓசையை விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர்.

பாரி சொன்னான்… “ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்து வந்ததுதான் முருகன் செய்த மிகப்பெரிய தந்திரம். இல்லை என்றால், வள்ளியை ஒருநாளும் அவனால் இணங்க வைத்திருக்க முடியாது”
“அவனும் குறுக்குவழியைத்தான் கையாண்டானா?”

சற்றே தயக்கத்துடன், “ஆம்” எனச் சொல்லியபடி தொடர்ந்தான் பாரி. “முருகன் வேட்டுவர் குலம்; வள்ளியோ கொடிக்குலம். செடி, கொடிகளை அறிந்தவர்கள் வேட்டையாடியவர்களைவிட மனநுட்பத்தில் முன்னேறியவர்கள் அல்லவா? வலிமையைவிட நுட்பத்துக்குத்தானே ஆற்றல் அதிகம். அதனால்தான் முருகனால் வள்ளியின் மனதில் எதைச் சொல்லியும் இடம்பிடிக்க முடியவில்லை.

காட்டை அழித்து, பயிரிடு முன் அந்த நிலத்தில் காமம் நிகழ்த்தி மனிதக் குருதி படிந்த தாய்நிலத்துக்குள் முதல் பயிரிடுதலைத் தொடங்கிய வர்கள்தான் கொடிக்குலத்துக் காரர்கள். முதலில் நட்ட வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுக்கும்போது இடுப்பு வலிகண்டு, அந்த நிலத்திலே பிறந்தாள் அந்தப் பெண். விதைத்த இடத்திலே முளைத்தவள் அவள். அதனால் அந்தச் செவ்வள்ளிக் கிழங்கின் பெயரையே அந்த அழகிய பெண்ணுக்குச் சூட்டினர். வள்ளிக்கிழங்கும் வஞ்சிக்கொடியுமே பெண்ணாக மாறிய பேரெழில் கொடிக்குலத்துக்கு உரியது.

செடி, கொடிகளை அறிந்தவர்களை எளிதில் ஈர்க்க முடியாது. அவர்கள் கணம்தோறும் உயிரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள். வண்ணங்களையும் வாசனைகளையும் அவர்கள் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதோ, காதலைப் பெறுவதோ எளிது அல்ல. வேறு வழியே இல்லாமல்தான் ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்துச் சென்றான் முருகன்”

கபிலரின் கண் முன் காலமும் காதலும் கடவுளும் ஒன்றை ஒன்று பின்னி மேலே எழுந்தபடி இருந்தன. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
பாரி சொன்னான்… “ஏழிலைப் பாலை, பெண்மையால் பூக்கும்; அதைவிட முக்கியம் பெண்ணையும் ஆணையும் ஒருசேரப் பூக்கவைக்கும்”

வியப்பு நீங்க சிறிது நேரமானது. உள்ளுக்குள் ஏனோ ஒரு சிரிப்பு பொங்கிவந்தது. அதை அடக்க முடியவில்லை. சற்றே திரும்பிச் சிரித்தார் கபிலர். ஏளனம்கொண்ட அந்தச் சிரிப்பின் தொனியைக் கவனித்த பாரி, ‘இதில் சிரிக்க என்ன இருக்கிறது?’ என, பார்வையால் கேட்டான்.

கபிலர் சொன்னார்… “அந்த ஏழிலைப் பாலையைத் தலைமாட்டில் நட்டுவைத்துக் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு நான் வந்து சேர்ந்துவிட்டேனே என்று என்னை நினைத்துச் சிரித்தேன்”

கபிலரோடு சேர்ந்து வெடித்துச் சிரித்தான் பாரி.

இருளை விரட்ட பந்தங்கள் தயாராகிக்கொண்டி ருந்தன. பாரி சொன்னான், “பந்த ஒளிக்குப் பூச்சிகள் வந்து விழாமல் இருக்க இலுப்பை எண்ணெய் ஊற்றப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அதற்கு எல்லாம் இந்தக் காட்டுப்பூச்சிகள் கட்டுப்படாது. நாங்கள் பயன்படுத்துவது கொம்பன் விளக்குகள். அதில் நாகக் கழிவும் நஞ்சுப் பிசினும் சேர்த்து மெழுகியிருப்போம். பந்தம் எரிவது திரியில் இருந்து மட்டும் அல்ல, திரியோடு சேர்ந்து விளக்கின் விளிம்பும் கருகியபடி தீய்ந்து எரியும். அந்த வாசனையை ஊடறுத்து பூச்சிகளால் உள்நுழைய முடியாது. ஒருவகையில் இதை `ஒளிவலை’ எனச் சொல்லலாம். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் மாறுபடும் பூச்சியினங்களுக்கு ஏற்ப, கொம்பனில் தேய்க்கும் பசையும் மாறும். எண்ணெய்யின் சேர்மானமும் மாறும். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

கபிலர் பந்தம் ஏற்றப்போகும் காவலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பெரும் தாழ்வாரத்தின் அடியில், அவர்கள் எல்லோரும் கூடியிருந்தனர். கொம்பன் விளக்கில் எண்ணெய் ஊற்றப்பட்ட பிறகும், அவர்கள் நெருப்பைப் பற்றவைக்காமல் யாருக்கோ காத்திருந்தனர்.

தொலைவில் மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த கபிலர் கேட்டார், “உனது உத்தரவுக்காகத்தான் காத்திருக்கிறார்களா?”

“இல்லை. அவர்கள் குலநாகினியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்”

பாரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயதான கிழவிகளின் கூட்டம் ஒன்று எவ்வியூரின் கீழ்த் திசையில் இருந்து நடந்து வந்துகொண்டி ருந்தது. கபிலர் எட்டிப்பார்த்தார். பாரி கையைக் காட்டிச் சொன்னான்… “அதுதான் நாகினிகளின் கூட்டம். அதற்குள்தான் குலநாகினி வந்துகொண்டிருப்பாள். அவள்தான் எங்கள் குலமூதாய். இந்த நாகப்பச்சை வேலியை ஆட்சிசெய்பவள் அவள்தான். பெண்களால்தான் இவ்வளவு நுட்பமான ஒரு வேலியைக் கட்டியமைத்துக் காப்பாற்ற முடியும். அவர்களின் சொல்கேட்டு தாவரங்கள் தழைக்கும்; தலையாட்டும். அவர்களின் உடம்பில்தான் கொடிக்குலத்தின் ரத்தம் ஓடுகிறது.

ஆதியில் நிலத்தில் சிந்திய குருதியில் இருந்து தழைத்தவர்கள்தானே அவர்களின் முன்னோர்கள். ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப்போல இவர்களால் முடியும். கருவுக்குள் புது உயிர் சூல்கொள்ளும் கணத்தில்கூட, பிறந்த குழந்தைக்காக மார்பில் பால் சுரந்துகொண்டிருக்கும் அல்லவா? எல்லாம் தாவரப்பட்சினிகள். அபார ஆற்றல் படைத்தவர்கள். இவர்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.”

பாரியின் குரலுக்குள் இதுவரை கேட்டு அறியாத அச்சம் இருந்தது. குல சமூகத்தில் பெண்ணின் தலைமை இடத்தை வேளீர் குலம் அப்படியே வைத்துள்ளது.

“எங்களின் மூதாயின் குரலுக்கு குலமே அஞ்சும்” என்றான் பாரி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கூட்டம் பந்தங்கள் ஏற்றப்படும் தாழ்வாரத்துக்கு வந்துசேர்ந்தது. நகர் எங்கும் ஏற்றப்படவேண்டிய பந்த எண்ணெய்களின் வாடையையும் கொம்பன் விளக்கின் வாடையையும் நுகர்ந்து பார்த்தபடியே ஒவ்வொரு விளக்காக ஏற்றிக் கொடுத்துக்கொண்டி ருந்தார்கள் நாகினிகள். ஏற்றப்பட்ட விளக்குகளைக் கையில் ஏந்திய வீரர்கள், அவற்றை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

“நாகப்பச்சை வேலியையும் ஒளி வலையையும் நிர்வகிப்பவர்கள் குலநாகினியின் தலைமை யிலான பெண்களே. அவர்கள்தான் பருவ காலங்களின் தன்மையை அறிந்து, செய்ய வேண்டிய எல்லா முன்னெச்சரிக்கைகளையும் செய்து இந்த நகரையும் எங்களையும் காத்துவருகிறவர்கள். ஆண்கள் எல்லோரும் விலங்குகளை வேட்டையாடவும் வெளியுலக மனிதர்களிடம் இருந்து தற்காக்கவும்தான். புல் பூண்டில் இருந்து, இலையின் முனைக்கு வந்து இரு கால்கள் நீட்டி எட்டிப்பார்க்கும் எறும்புகள் வரை அறிந்தவர்கள் அவர்களே”

பிரமிப்பு நீங்காமல் இருந்தது பாரியின் ஒவ்வொரு வார்த்தையும். வந்ததில் இருந்து இதுவரை பார்த்தறியாத பாரியை, கபிலர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார்.

“நாகினிகள் பார்க்கிறார்கள். வாருங்கள் கீழிறங்கிப் போவோம்” என்றான் பாரி.

இருவரும் அந்த இடம் நோக்கி நடந்தனர். வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி எல்லா திசைகளிலும் சென்றுகொண்டிருந்தனர். எல்லா தீப்பந்தங்களும் அந்த இடத்தில் வைத்துதான் ஏற்றப்படுவதால், அங்கு கரும்புகை நிரம்பியிருந்தது. உள்ளே இருக்கும் யாருடைய முகமும் அருகில் வரும் வரை தெரியவில்லை. கரும்புகைக்குள் நுழைந்ததும் பாரி வணங்கினான். கபிலருக்கு புகைவாடை பெரும் உமட்டலைக் கொடுத்தது. கண்கள் வேறு எரிந்தன. உள்ளுக்குள் இருக்கும் யார் முகமும் தெரியவில்லை. உமட்டலை அடக்கியபடி கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தார். புகை பொங்கிப் பொங்கி வந்துகொண்டிருந்தது. மூக்கில் காரநொடி ஏறி, தும்மல் உருவானது. மூச்சிழுத்து வாய் திறந்தபடி, தும்மப்போகும் அந்த நொடியில் மூக்குக்கு மிக அருகில் தெரிந்தது பெருவிழி விரிந்திருந்த குலநாகினி முகம்.

Popular Tags

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vel pari vikatan,

vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,

vel pari in tamil,vel pari vikatan,vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,Paari Vallal,vallal pari,paari vallal story,angavai sangavai story,angavai sangavai story in tamil,mullaiku ther kodutha pari,vel pari,parivallal in tamil,Great King Paari,velpari audiobook free download,வேள்பாரி நாவல்,வேள்பாரி புத்தகம்,வேள்பாரி வரலாறு,

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vell paari story,vell paari,veerayuga nayagan velpari audiobook,

veerayuga nayagan velpari,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,vel pari,velpari audiobook free download,velpari audio book,vel pari audio book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *