Tamil AudiobooksVelpariYoutube

Velpari Audiobook 13 வீரயுக நாயகன் வேள் பாரி

Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 13 Mr and Mrs Tamilan

Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 13 Mr and Mrs Tamilan

Velpari Audiobook இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…

Buy Book: https://velparibook.com/

Credits -:
Book : வீரயுக நாயகன் வேள் பாரி
Author of book -: Su. Venkatesan
Image Credits -: மா.செ (மணியம் செல்வன்)
Copyright © Su. Venkatesan, All rights reserved.

அத்தியாயம் 13:

நள்ளிரவு நெருங்கியது. எவ்வியூரை விட்டு சற்றுத் தொலைவில் நடுக்காட்டில் பெரும் மர அடிவாரத்தைச் சுற்றி வட்ட வடிவில் ஊரே உட்கார்ந்திருந்தது. எங்கும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் ஆடுகளம் இருந்தது. உட்காருவதற்கு ஏதுவாக மண்திட்டுகளும் மர அடுக்குகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பெரும் மரப் புதர்தான் கொற்றவையின் இருப்பிடம். அந்த மர அடிவாரத்தின் முன்னர் இலைவிரித்து, பதினைந்துவிதமான பனங்கூடைகள் நிறைய பல்வேறு வகையான பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

சுற்றிலும் பெரும் கூட்டம். நேர் எதிரே பாரியின் இருக்கை. அதற்குப் பக்கத்தில் கபிலர் அமர்ந்திருந்தார். மரத்தின் வலதுபக்கம் எண்ணற்ற பாணர்கள் வாத்தியக் கருவிகளோடு காத்திருந்தனர். இடதுபக்கம் குலநாகினி உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி நாகினிகளின் கூட்டம் இருந்தது. ஊர்மன்றலில் நடக்கும் குரவைக்கூத்துக்கோ, பாணர்களின் ஆட்டம்பாட்டத்துக்கோ, சந்தனவேங்கை முன்பு நிகழும் வள்ளிக்கூத்துக்கோ நாகினிகள் வர மாட்டார்கள். குலச்சடங்குகள் தவிர்த்து கொற்றவைக் கூத்துக்கு மட்டுமே அவர்கள் வருவார்கள்.

இருளின் மையத்தில் சிறுத்திருந்த வெளிச்சத்துக்கு நடுவில் குலநாகினியைப் பார்ப்பதே அச்சம்கொள்ளச் செய்தது. அவளின் தோளிலும் மடியிலும் கூகைக்குஞ்சுகள் தாவிச் சரிந்துகொண்டிருந்தன. அவள் தன் மேல் போட்டிருந்த தாவர வேர்களாலான மாலைக்குள், சிறுபாம்புகள் நெளிவதுபோல் கபிலருக்குத் தெரிந்தது. அந்தச் சூழலே மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. விழா தொடங்கவில்லை. பெரும் அமைதி நிலவியது. யாருக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கபிலருக்கு கொற்றவை விழா பற்றி எத்தனையோ கேள்விகள் இருந்தன. ஆனால், விழா நாள் நெருங்க நெருங்க, ஊரே பேச்சைக் குறைத்து மெளனமாகியது. கபிலரால் யாரிடமும் எளிதில் உரையாட முடியவில்லை. தன்னோடு எப்போதும் பேசி மகிழும் நீலன், மற்றவர்களைவிட இறுகிய மெளனம் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து ஒரு வார்த்தையைக்கூட கபிலரால் வாங்க முடியவில்லை; ஏன் என்றும் புரியவில்லை. கபிலர் கேட்கிறார் என்பதால், பாரி மட்டுமே அவ்வப்போது ஒரு சில கேள்விகளுக்குப் பதில் அளித்தான்.

“கொற்றவைக் கூத்து பாலை நிலத்துக்கு உரியதுதானே. அதை ஏன் குறிஞ்சி நிலத்தில் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார் கபிலர்.

“மனம் கொடும்பாலையாக வெடித்துக்கிடக்கும்போது எங்கே நடத்தினால் என்ன?”

பாரியிடம் இருந்து இவ்வளவு விரக்தியான ஒரு பதிலை கபிலர் எதிர்பார்க்கவில்லை. அவர் திகைப்புற்று நின்றார்.

“இது குறிஞ்சிக்கு உரிய கூத்து அன்று. ஐந்திணைக்கும் உரிய கூத்து” என்ற பாரியின் குரல், சத்தற்று பெரும் கலக்கம் கொண்டிருந்தது. இதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்க வேண்டாம் என கபிலர் எண்ணிக்கொண்டிருந்தபோது, பாரி தொடர்ந்தான்.

“இந்த மண் எங்கும் மூவேந்தர்களால் எத்தனையோ குலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பலநூறு ஆண்டுகளாகக் குருதி ஆறு வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அழிபடும் குலங்களின் எண்ணிக்கை இன்று வரை தொடர்கிறது

இந்த விழாவுக்கும் பாரி சொல்லும் பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடன், கபிலர் கேட்டுக்கொண்டிருந்தார்.பாரி தொடர்ந்தான், “அழிக்கப்பட்ட குலங்கள் எண்ணிக்கையில் எத்தனையோ… யார் அறிவார்? ஆனால், பேரரசுகளின் கொடும் தாக்குதலில் இருந்து தப்பி உயிர்பிழைத்தவர்கள் மிகச் சிலர். அவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் பறம்பு நாட்டுக்கு வந்து குடியேறி உள்ளனர். மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் மிச்சங்கள், இப்போது பறம்பு நாட்டில் வசிக்கின்றன. அவர்கள் போர் தெய்வமான கொற்றவையிடம் முறையிட்டு, ஆராத்துயரைக் கொட்டி வஞ்சினம் உரைக்கும் விழாதான் இது

அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் வழித்தோன்றல்கள் இன்னும் மிச்சம் இருக்கிறார்களா, அவர்கள் எல்லாம் பறம்பு நாட்டில் இருக்கிறார்களா? செய்தி கபிலரைக் கலங்கடித்தது.

பாரி தொடர்ந்தான்… “நாங்கள் மட்டுமே வேந்தர்களிடம் இருந்து பாதுகாத்து அடைக்கலம் தர முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இங்கு குடிபுகுந்தனர். அந்தக் குலங்களுக்கான குடிப் பாணர்களின் வழித்தோன்றல்கள், இப்போது எங்கெங்கோ இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த விழாவுக்கு வந்துவிடுவர். அழிந்த குலத்தின் வரலாற்றை அந்தப் பாணர்கள் பாட, இறுதியில் குலத்தின் வழித்தோன்றல்கள் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பார்கள்” என்றான் பாரி.

அதன் பிறகு இங்கு வந்து அமரும் வரை, கபிலர் பேச்சற்றவராக ஆனார். காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறி கலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?

அழிந்த குலங்களின் வழித்தோன்றல்களை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப்போகிறோம் என்பதை, கபிலரால் நம்பவே முடியவில்லை. கடந்த காலத்தின் பெரும் சாட்சி ஒன்று கண்கள் முன்னால் விரியப்போகிறது. மிச்சம் இருக்கும் அந்தக் குலங்கள் எவை… எவை? தப்பிப் பிழைத்த அந்த மனிதர்கள் யார்… யார்? வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அந்த மகத்தான மனிதச் செல்வங்களை மீண்டும் காணக்கிடைப்பது எவ்வளவு பெரும் வாய்ப்பு. இப்படி ஒரு தருணம் தனது வாழ்வில் வரும் என அவர் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால், விழா தொடங்காமல் இருந்தது. இந்த மெளனம் யாருக்காக, ஏன் நீடிக்கிறது என்பது கபிலருக்கு விளங்கவில்லை. பொழுது நள்ளிரவைக் கடந்தது.

இந்த மரத்தில் தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் உள்ளன. அவை மிகச் சிறியவை. ஆந்தை முகமும் அணில் உடலும் குரங்குக் கால்களும்கொண்ட விலங்குகள் அவை. மிகப் பயந்த சுபாவம்கொண்டவை. அகலக் கண்களை விழித்து, குழந்தையைப் போலவே பயந்து பயந்து பார்க்கும் அவை, இன்னும் மரத்தைவிட்டு இறங்காமல் இருக்கின்றன. அவை மெள்ள இறங்கிவந்து எந்தக் கூடையில் உள்ள பழத்தை எடுத்துச் செல்கின்றவோ, அந்தக் குலப்பாடகன் தனது பாடலைப் பாடத் தொடங்குவான். பாடல் முடிந்ததும் அந்தக் குலத்தின் வழித்தோன்றல் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பான். அந்தத் தெய்வவாக்கு விலங்குகள் இறங்கி வருவதற்காகத்தான் எல்லோரும் அமைதிகொண்டு காத்திருந்தனர். சிறுசத்தமும் அசைவும் இருந்தால்கூட அவை வெளிவராது. எனவே, அந்த இடத்தில் இருள் மிரளும் அமைதி நிலவியது.

மரக்கிளைகளுக்கு நடுவில், அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டியைப் போல சின்னஞ்சிறிய உடல்கொண்ட அந்த விலங்கு மெள்ள இறங்கி வந்தது. தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, பயந்த விழிகளோடு கூடை அருகில் வந்தது. எல்லோரும் அது எந்தப் பழத்தை எடுக்கப்போகிறது என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கபிலரின் கண்கள் இமைகொட்டாமல் நிலைகுத்தி நின்றன. அசையும் மரக்கொப்பு ஒன்று சிற்றோசை எழுப்ப, பயந்து கணநேரத்துக்குள் அது உள்ளோடி ஒழிந்தது. அதன் மறுவருகைக்காக எல்லோரும் காத்திருந்தனர். அதைவிடச் சின்னதான தெய்வவாக்கு விலங்கு ஒன்று வேறுதிசையில் இருந்து இறங்கி வந்தது. தயங்கியபடி கால் எடுத்து வைத்த அது, கூடைக்கு அருகில் வந்து சேராது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், நினைத்து முடிக்கும் கணத்தில் அதன் கையில், மூன்றாம் கூடையில் இருந்த இலந்தைப்பழம் இருந்தது.

அந்தக் கணத்தில் காட்டையே மிரட்டும் பேரொலியாக மேலே எழுந்தது குலவை ஒலி. மருத நிலத்துக்கு உரிய கிணைப்பறை கொட்டும் பாணர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்தனர். கொற்றவையின் அருகில் வந்த மூத்த கிணையன், சிறுகோள்கொண்டு கிணைப்பறையின் தோலுக்கு மையத்தில் இருக்கும் கண்ணில் ஓங்கி அடித்தான். உடன்வந்த கலைஞர்கள் எல்லோரும் கிணை முழங்க அச்சமூட்டும் கிணைப்பறையின் பேரொலி எங்கும் பரவியது. குடிப்பாணன் பாடலைத் தொடங்கத் தயாரானான்.

கபிலர் நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பாரியைப் பார்த்தார்.

வைகைக் கரை கூடல்நகரை ஆட்சிசெய்த அகுதைக் குடிப்பாணர்கள் அவர்கள். அகுதையின் குலப்பாடலைப் பாடப்போகிறார்கள்” என்றான் பாரி.

கபிலருக்கு மயிர்க்கூச்செரிந்தது. அகுதையின் வழித்தோன்றல்கள் இந்த உலகில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா, அந்தக் கதையை பாணர்கள் பாடுகின்றனரா? கபிலர் உச்சந்தலையை கைகளால் அழுத்தி, மயிர்க்கற்றையின் சிலிர்ப்பைத் தளர்த்த முயன்றார். கூடல்மாநகரின் வரலாற்றையும் அகுதையின் கதையையும் அணுஅணுவாக அறிந்தவர் கபிலர். எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் நடந்த நிகழ்வு அது.

உரத்துச் சொல்லப்படுவதைவிட, காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம். அது காட்டுச்செடிபோல ஒருபோதும் நிலம்விட்டு அகலாது. அகுதையின் குலம் கூடலைவிட்டு அகற்றப்பட்டாலும் அவனைப் பற்றிய கதை கூடல்மாநகரில் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. யாரும் அறியாமல், விளக்குகள் அணைக்கப்பட்ட நள்ளிரவில், ரகசிய மொழியில், அகுதையின் கதை காலங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.

நாட்டில் உலவும் ரகசியக் கதை, காட்டுக்குள் பெரும் குரலெடுத்துக் கர்ஜிக்கிறது. கிணைப்பறை முழங்க, பெரும் பாணன் கதையைத் தொடங்கினான்.

வைகைக் கரையில் செழித்து வளர்ந்த வேளாண்மை, அழகிய நாகரிகத்துக்கு அடித்தளம் அமைத்தது. நதிக்கரையின் நிலவளம் கொண்டு பயிர் வளர்க்கவும் விளையவைக்கவும் அறுவடையைக் குவிக்கவுமாக, விவசாயத்தின் ஆதிரகசியங்களைக் கண்டறிந்தவர்கள் கூடல்வாசிகளே.

குறிஞ்சி நிலம், கற்களாலான மண்ணை உடையது; முல்லை, வெண்ணிற மண்ணை உடையது; நெய்தல், உவர் மண்நிலம். பாலை, செம்மை ஏறியது; மருதம் மட்டுமே பொன்னிறமாக கரிசலும் வண்டலும் மேவிக்கிடப்பது. அதனாலேயே மண்ணையும் நீரையும் பிசைந்து உணவாக மாற்றக்கூடிய வித்தையை கூடல்வாசிகள் முந்திக் கற்றனர்.

அவர்களுக்குத்தான் மண்ணின் நிறம் பிடிபட்டது. வெவ்வேறு வகையான மண்ணுக்கு இருக்கக்கூடிய குணங்கள் பிடிபட்டன. புற்றுகளும் ஊற்றுகளும் அவர்களின் கணிப்புக்குள் அடங்கின. தாவரங்களின் வேர்களை எந்த மண் தனது மார்போடு உள்வாங்கி அணைத்துக்கொள்ளும், எந்த மண் தலையில் முட்டி வெளித்தள்ளும் என அவர்கள் கண்டறிந்தனர். பறவைகளின் அலகு பறித்துத் தின்னும் காட்டுக் கதிர்களைக் கண்டறிந்தனர். பறவைகளின் கழிவில் இருந்து முளைவிடும் தானியமணிகள் எவை எவை என்பதைப் பற்றிய அறிவுச்சேகரம் அவர்களிடம் இருந்தது.

முதல் தானியம் நடும்போது அந்தப் பறவையின் சிறகை, அதன் அருகில் நட்டு தங்களுக்கு வழிகாட்டிய அந்த வானம்பாடிக்கு நன்றி சொல்லும் மரபைக்கொண்டவர்கள். விளைந்த பயிரைத் தின்னவரும் விலங்குகளை வேல்கொண்டு விரட்டுவர். ஆனால், பறவைகளை வேண்டிக்கொள்ள மட்டுமே செய்வர். ஏனென்றால் பறவையே ஆசான். பறவையின் எச்சம் கண்டே பயிர்செய்து பழகியவர்கள். பறவை உண்ட மிச்சமே நமக்கு என அறம் வகுத்துக்கொண்டனர்.

காடு எங்கும் அலைந்து சேகரித்த தானியங்களை, கால் பரப்புக்குள் விளையவைத்து அறுக்க முடியும் என்பதைச் செய்துகாட்டியவர்கள் அந்தக் குலத்தின் முன்னோர்களே. அவர்களே மனிதக் கூடலின் ஆற்றலை, மண்ணில் விளையும் பயிராக மாற்றியவர்கள். அவர்கள் வாழ்விடமே கூடல் என அழைக்கப்படலாயிற்று. அந்தக் கூடல் நகரை உருவாக்கிய குலத்தின் தலைவன் அகுதை.

அகுதையின் கதையைக் குலப்பாடகன் பாடத்தொடங்கிய கணமே பாரியின் கண்கள் கலங்கின.

“வேளாண் அறிவின் நுணுக்கத்தை இந்த உலகுக்குக் கண்டறிந்து சொன்னது அகுதையின் குலம் அல்லவா” கபிலரைப் பார்த்து பாரி சொன்னபோது, அவனது கண்களில் திரண்ட நீருக்குள் பந்தத்தின் வெளிச்சம் நெளிந்தது.

உப்பு விற்கும் உமணர்களே நிலம் எங்கும் அலைந்து திரிபவர்கள். கடற்கரை தொடங்கி மலைமுகடு வரை அவர்களின் வண்டிச்சக்கரங்கள் சதா உருண்டுகொண்டே இருந்தன. எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்கள் அவர்களிடம் இருந்தன. எல்லோரும் தங்கள் கைவசம் இருந்த பொருளை அவர்களிடம் கொடுத்து உப்பைப் பெற்றனர்.

இந்த நிலம் எங்கும் இருக்கும் மனிதக் கூட்டங்கள், அவர்களின் வாழ்விடங்கள், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வச் செழிப்பு, சேமிப்பு என, எல்லாவற்றையும் அறிந்தவர்கள் அவர்களே.

கூடல்நகரில் வளமை கொடிகட்டிப் பறந்தது. விளைச்சல்கள் குவிய, தானியக் குதிர்கள் வைக்கும் ஆளுயர மொடாவை, உமணர்கள் அங்குதான் முதன்முதலில் கண்டனர். அந்தக் குலத்தின் செழிப்பு உமணர்களின் கண்களில் அதிசயம் என நிலைபெற்றது. அது சொல்லவேண்டிய எல்லா செய்திகளையும் சொன்னது.

பொருநை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கொற்கைப்பாண்டியன் தன் வீரர்களோடு புறப்பட வேண்டிய நாளை, உமணர்கள் சொன்ன தகவலை வைத்தே முடிவுசெய்தான்.

`வைகையில் புனலாட்டு விழா. கூடல்வாசிகள் முழுவதும் நீராடி மகிழ்ந்திருக்கும் நன்னாள். அன்று காலை நமது படை கூடல் நகருக்குள் நுழைந்தால் எளிதில் அதைக் கைப்பற்றலாம்’ என்று உமணர்கள் நாள் குறித்துச் சொன்னார்கள். முதல் நாள் நண்பகலில் கொற்கைப்பாண்டியன் படை கடற்கரையில் இருந்து புறப்பட்டது.

கிணைப்பாணன் தனது தாள லயத்தைக் கூட்டத் தொடங்கினான். செங்காலி மரத்தால் செய்யப்பட்டு, மயிர்சீவாத செவ்வித்தோலைக் கொண்டு போத்தப்பட்ட கிணைப்பறை, அதன் அகால ஓசையை எழுப்பத் தொடங்கியது. குலப்பாடகனின் குரல்நாளங்கள் வெடிப்புறத் தொடங்கின. ஒரு கொடூரம் அரங்கேறப்போகும் விடியல்பொழுதைப் பாட அவனது நா எழவில்லை.

பொழுது புலர்ந்தது. வைகையின் பெருவெள்ளம் தாவிக் குதித்தோடியது. கூடல் மாநகரே நதிக்கரையில் வந்து ஆவலோடு நின்றுகொண்டிருந்தது. குலத்தலைவன் அகுதை, யானை மீது ஏறி வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் அவனது கையசைவுக்காகக் காத்திருந்தனர்.

வைகையை வணங்கி, கூட்டத்தை நோக்கிக் கையசைத்தான் அகுதை. புனலாட்டு விழா தொடங்கியது. கரையில் இருந்த இளைஞர்களும் இளைஞிகளும் வைகையில் பாய்ந்து உள்ளே இறங்கினர். புனலாட்டு விழா என்பது காதல் திருவிழா. காதலர்கள் நீரால் ஒருவரை ஒருவர் அடித்து விளையாட ஆரம்பித்து, நேரம் செல்லச் செல்ல நீர் அடித்தாலும் விலகாத விளையாட்டாக மாறும். மணமானவர்களும் தம் இணையோடு சென்று வைகையில் நீராடி, காதல் பேசி, கனிவுகொண்டு விளையாடுவர்.

காமத்துக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு திரவம் நீர். அதுவும் நதியில் ஓடும் நீர் தனது உள்ளங்கையில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கணநேரத்துக்குள் கரைத்துவிடும். கரைந்தவர்கள் காதல்கொண்டவரின் உடலுக்குள் உறைந்திருப்பர். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு.

மண்ணில் கால்பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும்தான். இரண்டும் ஒன்றுசேரும் தருணத்தில் நிகழ்வது எல்லாம் மாயவித்தைகளே. வித்தைகளின் வாடிவாசல் வழியே பீறிட்டு ஓடிக்கொண்டிருந்தது வைகை.

அகுதை உள்ளிறங்கும் பொழுதுக்காக கரையில் நின்றிருந்தவர்கள் காத்திருந்தனர். காதல் ஏறிய கண்கொண்டு தனது மனைவியைப் பார்த்தான் அகுதை. அவளோ அவனது தோள்கவ்வி உள்ளிறங்கும் பொழுதுக்காகக் காத்திருந்தாள். அகுதை நதி நீருக்குள் கால் நுழைத்தான். இன்னும் சற்று உள்ளே போகட்டும் அவனது தோளைத் தாவிப்பிடித்தபடி நாம் இறங்குவோம் என அவள் கல்பாவியத் திட்டில் நின்றிருந்தாள். ஏன் இன்னும் வராமல் இருக்கிறாள் என யோசித்தபடி, அகுதை இரண்டாவது அடியை எடுத்து நீருக்குள் வைத்தான். அவன் தோளின்மேல் சரிந்துவிழலாம் என அவள் நினைத்தபோது, அருகில் தோழியிடம் இருந்த அவள் மகன், பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.

“பெருக்கெடுத்து ஓடும் நீரும் உற்சாகப் பேரொலியும் குழந்தையைப் பயமுறுத்தியிருக்கும், அவனை அமைதிப்படுத்திவிட்டு வருகிறேன். நீங்கள் உள்ளிறங்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு தோழியிடம் போனாள். தாயைப் பார்த்ததும் குழந்தையின் அழுகை மேலும் கூடியது. அவள் அவனைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றாள்; முடியவில்லை. நீருக்குள் இருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அகுதை. அந்தப் பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது. குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை. வேறு வழியில்லாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, நதிக்கரைவிட்டு சற்றே அகன்று உள்காட்டுக்குள் நுழைந்தாள். குழந்தையின் முதுகைத் தட்டியபடி சமாதானப்படுத்தினாள்.

குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. நீரின் சத்தமும் நீராடுவோர் சத்தமும் கேட்காத அளவுக்கு அடர்ந்த மரங்களுக்கு இடையே மிகவும் உள்ளே சென்றாள். உள்ளே செல்லச் செல்ல ஓசையின் அளவு கூடுவதுபோல் உணர்ந்தாள். மனிதக் கூக்குரல் எங்கும் எதிரொலிக்கிறதே என யோசித்தவள், அகுதையின் கண்கள் தன்னைத் தடுமாறவைக்கிறது என நினைத்தபடி காட்டை ஊடுருவி வெகுதொலைவு சென்றாள். காலைக்கதிர்களின் இளமஞ்சள் ஒளியில் உள்காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது. எங்கும் தும்பிகள் பறந்தன. புல்நுனிகள், பனித்துளிகளை உலர்த்தாமல் வைத்திருந்தன.

தரையில் அழகிய செம்மூதாய் ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது. செந்நிறப் பட்டுப்பூச்சி அது. மேனி எல்லாம் மெத்தைபோல மினுமினுத்து நகர்ந்தது. குழந்தையை அதன் அருகில் இறக்கிவிட்டாள். குழந்தை தனது பிஞ்சுவிரலால் செம்மூதாயின் மேனியை மெள்ளத் தொட்டதும் அது நகர்வதைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. அந்தப் செம்பட்டுப் பூச்சியிடம் சிறிதுநேரம் விளையாடவிட்டபடி அவள் நின்றுகொண்டி ருந்தாள்.

சிவப்பு, காமத்தின் அடையாளம். அவளது கண்கள் அதற்குள் போக எண்ணங்கள் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தன. அகுதையின் தோள்தழுவிய அந்த முதற்கணம் நினைவுக்கு வந்தது. அகுதை, அதிகம் பேசாதவன். ஆனால், அந்த இரவில் அவன் பேசியதை இன்னோர் ஆண், இந்த உலகில் பேசியிருப்பானா என்பது சந்தேகமே. காதல் சொல்லால்தான் மலர்கிறது. காதல்கொள்கையில் சின்னஞ்சிறு சொற்கள் எவ்வளவு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன.

சிறு உளியால் மலைகள் உடையும் தருணம் அது. அவன் ஒற்றைச்சொல் சொல்லும்போது, அப்படி ஒரு வெட்கம் உடல் எங்கும் பரவியது. அந்தச் சொல் ஞாபகம் வந்த கணம் மீண்டும் வெட்கம் பரவி, தன்னை அறியாமல் சிலிர்த்து மீண்டாள்.

சொற்கள் நினைவுக்கு வந்த கணத்திலேயே, செயல்களும் நினைவின் வழியே மேலே எழுந்து வந்துவிடுகின்றன. அதன்பின் என்ன செய்ய முடியும்? சற்றே பெருமூச்சுவிட்டபடி குழந்தையைப் பார்த்தாள். அவன் செம்மூதாயின் பின்னால் நகர்ந்துபோய்க்கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்த முதல் புனலாட்டு விழாவின்போது அவள் கருவுற்றிருந்தாள். அதனால் ஆற்றுக்குள் இறங்கவில்லை. இரண்டாம் ஆண்டான இப்போதும், அதேபோல் தன்னந்தனியாகவே அகுதை ஆற்றுக்குள் இறங்கினான். கரையில் நின்ற அவளைத் துளைத்தெடுத்தது அகுதையின் பார்வை.

ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப்போல நயமிக்கது இல்லை. ஆணின் கண்கள் காதல்கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்துகொண்டிருந்தாள்.

கண்கள் விழித்திருந்தாலும் ஆந்தைக்கு பகலில் பார்வை கிடையாது. அதைப்போலத்தான், மனிதன் நீருக்குள் மூழ்கிவிட்டால் பார்வையைத் தொலைத்துவிடுகிறான். ஆனால், காதலர்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் அந்த இடமே பார்வை பெறுகின்றனர். கண்களின் வேலையை கைகள் எடுத்துக்கொள்கின்றன. தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன. அதனால்தான் நீர் விளையாட்டு காதலின் களம் ஆ கிறது.

அவள் கண்களைச் சிமிட்டி கனவைக் கலைத்தாள். குழந்தை நீண்ட நேரம் விளையாடி அமைதி அடைந்தது. சரி… அழைத்துச் செல்லலாம் என முடிவுசெய்து, அவள் காட்டைவிட்டு நடக்கத் தொடங்கினாள். நதியை நோக்கி வர வர அவளுக்குக் காட்டின் அமைதியே நீடித்தது. கொண்டாட்டத்தின் பேரொலி கேட்கவில்லை. இவ்வளவு அமைதியாக நீராட வாய்ப்பே இல்லையே என யோசித்தபடி, நதியின் கரையில் ஏறி நின்று பார்த்தாள். மொத்த வைகையும் நீண்டு நகரும் செம்மூதாயாகக் காட்சி அளித்தது. குருதி கரைபுரண்டோட கரை எங்கும் மீன் எலும்புகள்போல் முட்கள் கோக்கப்பட்ட ஈட்டியுடனும் உயர்த்திய வாளுடனும், எண்ணற்ற வேற்றுக்குலத்தினர் நின்றுகொண்டிருந்தனர்.

குரல்வெடித்துச் சரிந்தான் குலப்பாடகன். பெண்களின் குலவை ஒலி பீறிட்டுக்கொண்டிருந்தது. குரல் உடைந்தபடி பாரி கபிலரிடம் சொன்னான்… “அந்தப் பெண் எதிரிகளின் கண்ணிற்படாமல் தப்பித்து, கையில் குழந்தையோடு ஒரு முதுகிழவனை அழைத்துக்கொண்டு, பல மாதங்களுக்குப் பிறகு பறம்பு நாட்டுக்குள் நுழைந்திருக்கிறாள். பறம்பின் மக்கள் அவளை அள்ளி அணைத்துப் பாதுகாத்திருக்கின்றனர். அவள் வழித்தோன்றல்தான் இப்போது கொற்றவைக்குக் காளையைப் பலிகொடுத்துச் சூளுரைக்கப் போகிறான்” என்றான்.

தாங்க முடியாத துக்கத்தைக் கிழித்துக்கொண்டு கபிலருக்கு ஆர்வம் மேலே ஏறியது. அகுதையின் வழித்தோன்றல் இயற்கையை, வேளாண்மையை, நாகரிகத்தை நேசித்த அந்த மாமனிதனின் வம்சக்கொடி யார் என அறிய, கபிலர் ஆடுகளத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாமரையின் மேல் இதழில் முள் இறங்கும் நேரம்கூட அவரால் தாங்க முடியவில்லை. அந்த மகத்தான குலத்தில் உதித்த திருமகனைக் கண்டு வணங்க அவரை அறியாமலே கைகள் கூப்பின.

அந்தக் கணம் இடம் இருந்து உள்ளிறங்கினான் நீலன்.

Popular Tags

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vel pari vikatan,

vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,

vel pari in tamil,vel pari vikatan,vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,Paari Vallal,vallal pari,paari vallal story,angavai sangavai story,angavai sangavai story in tamil,mullaiku ther kodutha pari,vel pari,parivallal in tamil,Great King Paari,velpari audiobook free download,வேள்பாரி நாவல்,வேள்பாரி புத்தகம்,வேள்பாரி வரலாறு,

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vell paari story,vell paari,veerayuga nayagan velpari audiobook,

veerayuga nayagan velpari,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,vel pari,velpari audiobook free download,velpari audio book,vel pari audio book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *