BooksTamil AudiobooksVelpariYoutube

Velpari Audiobook 01 வீரயுக நாயகன் வேள் பாரி

Velpari Audiobook 01 வீரயுக நாயகன் வேள் பாரி

Velpari Audiobook 01 வீரயுக நாயகன் வேள் பாரி Mr and Mrs Tamilan

Velpari Audiobook இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…

Buy Book: https://velparibook.com/

Credits -:
Book : வீரயுக நாயகன் வேள் பாரி
Author of book -: Su. Venkatesan
Image Credits -: மா.செ (மணியம் செல்வன்)
Copyright © Su. Venkatesan, All rights reserved.

அத்தியாயம் 1:
குலப்பாடல்

மூக்கை விடைத்தபடி பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். மேடு பள்ளமற்ற பாதை இன்னும் விரைந்து, `வா..’ என்று தேரோட்டியை அழைத்தது. தேரை ஓட்டும் ஆதன், குதிரையின் கடிவாளத்தைச் சுண்டியபடி வேகத்தை மேலும் அதிகப்படுத்தினான்.

அதிகாலையில் இருள் கலையத் தொடங்கியபோது இவர்கள் புறப்பட்டனர். அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் தென்திசை மாளிகை அது. அங்குதான் நேற்றிரவுத் தங்கல். அதுவரை தேரை ஓட்டிவந்தவன் நாகு.

“இனி அடர் காட்டுப்பகுதியில் பயணம் இருக்கும். இந்த நிலப்பாதையை நன்கு அறிந்த தேரோட்டி இவன். இவனது பெயர் ஆதன். நாளை இவன்தான் உங்களை அழைத்துச் செல்வான்” என்று கூறி வணங்கி விடைபெற்றான்.

புறப்படும்போது, நாகுவிடம் ஆதன் கேட்டான், ‘‘இவர் யார்… மன்னரின் சுற்றத்தாரா?”

“இல்லை… ‘இவரின் அடிமை நான்!’ என்று மன்னர் என்னிடம் கூறினார்”

பதில் கேட்டு ஆதன் நடுக்குற்றான். சற்று நிதானித்து, “அப்படியென்றால் ஏன் தனியாக வந்திருக்கிறார். உடன் பாது​காப்புக்கு யாரும் வரவில்லையா?”

“பெரும் படையே புறப்பட்டது” என்று சொன்ன நாகு, சற்றுக் குரல் தாழ்த்தி, “முதலில் தேரை ஓட்ட, வளவனின் இருக்கையில் ஏறி அமர்ந்ததே மன்னர்தான். இவர் ஒற்றைச் சொல்தான் சொன்னார்.

எல்லோரும் நின்றுகொண்டார்கள். நான் மட்டும் அவரை அழைத்துக்​கொண்டு​வந்தேன்” சொல்லி​விட்டு புறப்​படத் தயா​ராகும்போது, ஆதன் மீண்டும் கேட்டான்…

“மன்னர்களை ஆளும் இந்தத் தெய்வத்துக்குத் தனித்த பெயர் எதுவும் இருக்கிறதா?”

“பெரும்புலவர் கபிலர்”

ஆதன் இரவு முழுவதும் தூங்கவில்லை. பதற்றத்திலேயே இருந்தான். பொழுது விடிந்தது. தூக்கமின்மையைக் காட்டிக்​கொள்ளாமல், உற்சாகமாகக் குதிரையைப் பூட்டி தேரைத் தயார்​செய்தான். மாளிகையில் இருந்து கபிலர் வெளியேறி வந்தார். நரை முழுமைகொள்ளாத தாடி, வேந்தனைப்​போல தலைமுடியை உச்சியில் முடிச்சிட்டு, சிறுகோள் ஒன்றைச் செருகியிருந்தார். பேரறிவின் இறுமாப்பு கண்ணொளியில் மின்னியது. பார்த்ததும் நெடுஞ்​சாண்கிடையாக விழுந்து வணங்​கினான் ஆதன்.

அவரது வாழ்த்துச்சொல் காதில் கேட்க எழுந்து திரும்பியபோது, அவர் குதிரையின் கழுத்தைத் தடவிக்கொடுத்துக்​கொண்டிருந்தார். குதிரைகள் புதிய மனிதர்​களைத் தொடவிடாது. ஆனாலும் தேரில் பூட்டப்பட்டிருந்ததால், ஓர் அளவுக்கு மேல் அதனால் விலகவோ, முகத்தைத் திருப்பவோ முடியவில்லை.

“மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது” என்று சொன்னவர், சிரித்த முகத்தோடு தேரில் ஏறினார்.

ஆதன், மிகத் திறமையான தேரோட்டி. பயணத்தின் அதிர்வு பசுந்தூள் மெத்தையைக் கடந்து உடலில் உணர முடியாதபடி, தேரைச் செலுத்துவான். அவன் நினைத்ததைவிட வேகமாகவே வேட்டுவன் பாறைக்கு வந்துவிட்டான். அருகில் வந்ததும் வேகத்தைக் குறைக்க, கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். கடிவாளத்தில் இருக்கும் பூண் எழுப்பிய உலோக ஒலி தனித்து மேலெழும்பியது.
தலைதூக்கிப் பார்த்தார் கபிலர். எதிரில் இரு சிறுகுன்றுகள். அதற்குப் பின்னால் அடுக்கடுக்காக மலைத்​தொடர்கள். அதன் உச்சி, வெண்மேகத்​துக்குள் மறைந்திருந்தது. மேலெழும்பிய உலோக ஒலி, மலையோடு மறைந்தது.

“அய்யா… இதுதான் பச்சை மலைத்தொடரின் முன்னால் இருக்கும் வேட்டுவன் பாறை. இந்த வழியாகத்தான் பாரியின் பறம்பு மலைக்குப் போக வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்​கிறேன்”
கபிலர் வண்டியைவிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தார். கண்ணுக்கெட்டும் தூரம் வரை மலை விரிந்துகிடந்தது. நீர் வற்றிய காட்டாற்றைக் கடந்து வேட்டுவன் பாறையில் பாதி ஏறுவது வரை, ஆதன் நின்று பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இதற்கு முன்னால் பறம்பு நாட்டுக்குப் போனது கிடையாது. பாதை எவ்வளவு தூரம் இருக்கும். துணைக்கு யாராவது வருவார்களா? போய்ச் சேர எத்தனை நாளாகும் என எதுவும் தெரியாது. தன்னந்தனியாக எந்தத் தைரியத்தில் இந்த அடர்வனத்துக்குள் இவர் போய்​க் கொண்டிருக்கிறார்?” ஆதனுக்கு வியப்பு குறையவே இல்லை. வேறு வழியின்றி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான்.
உச்சிவெயிலிலும் ஈரக்காற்று வீசியது. குன்றின் சரிவில் போய்க்கொண்டிருந்த பாதை சற்றே வளைந்து மேல் நோக்கி ஏறியது. பாறையில் இருந்து சரிந்துகிடக்கும் வேர்கள், கைபிடிக்க வாகாக இருந்தன. கபிலர் வேரை இறுகப் பிடித்து விசைகொடுத்து மேலேறியபோது, தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்தார். உடல் வேர்த்தது, மூச்சுவாங்கியது, நடையின் வேகத்தைச் சற்றே குறைக்க​லாமா என்று யோசிக்கையில், கால்கள் நின்றுகொண்டுதான் இருந்தன. சிறிது இளைப்பாரி மீண்டும் நடந்தார்.

இடப்புறம் கீழே நீர் வற்றிக்கிடக்கும் காட்டாற்றின் அழகைப் பார்த்தபடி, ஒற்றையடிப் பாதையை நோக்கி கண்களைத் திருப்பினார். செடி​களுக்கு இடையில் ஏதோ உருவம் தெரிகிறதே என்பதை உணர்ந்தவர், மீண்டும் கீழே உற்றுப்பார்த்தார். இவர் நடக்கும் பாதையை நோக்கி ஓர் இளைஞன் கையில் வேல் கம்போடு சரசரவென மேலேறி வந்தான்.

கபிலருக்கு அவனது உருவம் பதியவில்லை… அவன் வந்த வேகம்தான் பதிந்தது. மேலே ஏறியவன் கபிலரைக் கடந்து முன்னால் போய்க்கொண்டிருந்தான். நின்று பேச அவனுக்குப் பொழுது இல்லை. நடந்துகொண்டே கேட்டான்.

“நீங்கள் யார் எனத் தெரிந்து​கொள்ளலாமா?”

கபிலர், கண்ணிமைத்து அவனைப் பார்த்தார். பதில் சொல்லுவதற்குள் மறைந்துவிடுவானோ என்று தோன்றியது. குரல் உயர்த்திச் சொன்னார்.

“கபிலர்”

“நான் பெயரைக் கேட்கவில்லை. யார் எனக் கேட்டேன்?”

எதிர்காற்றில் சற்றே தடுமாறினார் கபிலர். தடுமாற்றத்துக்குக் காற்று காரணம் அல்ல என்பதை, அவரது மனம் சொல்லியது.

“நான் புலவன்”

“பாணர் குலமா?” கேட்டபடி நடந்து போய்க்கொண்டே இருந்தான். அவனைப் பார்ப்பது, பாதையில் கவனம்கொள்வது, பதில் சொல்வது என்ற மூன்று வேலைகளை கபிலர் செய்யவேண்டி இருந்தது.

“இல்லை… பாணர்கள் பாடல் பாடுபவர்கள். இசைஞர்கள், கலைஞர்கள். நான் அவர்கள் இல்லை. நான் புலவன்; எழுதக் கற்றவன்”

பதில் சொல்லி முடிக்கும்போது, கேள்வி வந்தது…

“எழுத்து என்றால்..?”

மலையேறும் ஒரு பாதையில், இவ்வளவு தூர இடைவெளியில் ஓர் உரையாடலா?

உரத்தக் குரலில் பதில் சொல்வதற்கு மூச்சுக்காற்று ஒத்துழைக்க மறுத்தது. ஆனாலும் கபிலர் உரத்தே சொன்னார்…

“மரத்தை ஓவியமாக வரைந்து பார்த்திருக்கிறாயா?”

“பார்த்திருக்கிறேன்… குகைப் பாறையில் நிறைய மரங்கள் ஓவியமாக வரையப்​பட்டுள்ளன”

“அதேபோல, நாம் பேசும் ஒலியை ஓவியமாக வரைவதுதான் எழுத்து” அவனது நடையின் வேகம் கொஞ்சம் குறைந்தது. யோசிக்கிறான் என்று புரிந்தது. அவனைக் கொஞ்சம் உள்ளிழுக்க முடியும் என்ற நம்பிக்கை கபிலருக்கு வந்தது.

“உனது பெயர் என்ன?”

“நீலன்”

“இங்கே வா… வரைந்து காட்டுகிறேன்” என்று சொன்ன கபிலர், கீழே கிடந்த காய்ந்த குச்சியைக் குனிந்து எடுத்தார். அவன் சட்டென அருகில் வந்தான். அதைக் கவனித்தபடியே, குச்சியால் கீறி அவனது பெயரை மண்ணில் எழுதினார்.

அதைப் பார்த்ததும் உதட்டோரத்தில் ஓர் இளஞ்சிரிப்பு. மீண்டும் நடக்கத் தொடங்கியவன், “நான் என்ன யானையின் சாணத்தில் செரிக்காமல் கிடக்கும் ஈக்கியைப்போலவா இருக்கிறேன்?”

எதிர்காற்று மீண்டும் அடித்து கபிலரைத் தள்ளாடவைத்தது. நீலன் வேகமாகப் போய்க் கொண்டிருந் தான். கபிலர் ‘அவனை ரசிக்கத் தொடங்கினார். ‘அவனது வேகம், இறுகித் திரண்ட உடல், வீரனுக்கே உரிய மிடுக்கு, சிறு கண்கள், உள்ளத்தில் இருந்து உருவாகும் கேள்விகள், அவன் கையில் இருக்கும்போதே வேல் இவ்வளவு வேகமாகப் போகிறதே, அவன் எறிந்தால் எவ்வளவு வேகம் கொள்ளும்?’ என யோசித்த கபிலர், இந்த இடைவெளியில் கேள்வியை நாம் ஆரம்பித்துவிடுவோம் என முடிவுசெய்து, “உனக்கு மணமாகி​விட்டதா?” என்றார்.

“இல்லை… விரைவில் நடக்கும்” சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், “என்னவளைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்”

“எங்கே இருக்கிறாள்?”

“அதோ… அந்த மலையின் பின்புறம் இருக்கிறது அவளது குடில்”

“அந்த மலைக்குப் பின்புறமா?’’ ஓசையின் நீளமே உணர்வைச் சொன்னது.

“நாள்தோறும் இவ்வளவு தூரம் போய் வருவாயா?”

“நாளும் இருமுறை போய் வருவேன். சில நாட்களில் இருமுறை இங்கு வந்து செல்வேன்”

கபிலருக்கு அவன் மீதான ஈர்ப்பு இன்னும் கூடியது. ஓர் ஊஞ்சலைப்போல இரு குன்றுகளுக்கும் இடையில் தினமும் ஆடுகிறவன் என்று, மனதில் ஒரு சித்திரம் உருவாகிக்கொண்டிருக்கையில், கேள்வியை அவன் தொடுத்தான்.

“பெண்ணின் இதழ் இவ்வளவு சுவையேறி இருக்கிறதே, எப்படி?”

அந்த இளஞ்சிரிப்பு கபிலரின் உதட்​டோரத்தில் வந்து உட்கார்ந்தது. ஊஞ்சலில் தன்னையும் ஏற்ற நினைக்கிறான். சரி… அவனது வேகத்தைக் குறைத்தால் போதும் என நினைத்தவர், பதில் சொல்லும் முன் அடுத்த கேள்வியை அவனே கேட்டான்.

“உங்களுக்கு மணமாகிவிட்டதா?”

“இல்லை”

“அப்படியென்றால் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது அல்லவா?”

ஏதாவது ஓர் இடத்தில் நின்றால்தானே பதில் சொல்வதற்கு, கணப்பொழுதில் மூன்று கொப்பு தாவுகிறான். இவனை எப்படி அடைத்து நிறுத்துவது என யோசித்த கபிலர், “உனக்கும்தான் மணமாகவில்லை” என்றார்.

“நான் வீரன்”

கபிலர் திகைத்துப்போனார். இவன் என்னை என்ன சொல்ல வருகிறான் என யோசிக்கை​யில் அவன் பதிலைத் தொடர்ந்தான்…

“எப்போது போர் மூளும் எனத் தெரியாது. பறம்பு நாட்டுக்குச் சூழவும் எதிரிகள். போர்க்களத்தில் நான் சாயும்போது எனது ஈட்டியை இறுகப் பற்றி முன்னேற, என் மகன் வந்து நிற்கவேண்டும்.
வீரர்களின் வாழ்வு மிகக் குறுகியது, நிதானமாக வாழ்ந்து, எழுத்துக்கள் எல்லாம் கற்று, நாடுதோறும் பயணம்​போய், ஒரு காத தூரத்தை மூன்று நாழிகை நடந்து கடக்க எங்களுக்கு அவகாசம் இல்லை புலவரே!”

ஊஞ்சல் அறுபட்டு தான் மட்டும் விழுவதுபோல் உணர்ந்தார் கபிலர்.

ட்டுவன் பாறையின் இரண்டாவது குன்றில் கால் பதிக்கும் வரை, கபிலர் அவனிடம் பேச்சுக் கொடுக்க வில்லை. அவனைப் பற்றிய ஒரு கணிப்பை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. எதை உருவாக்கினாலும் அடுத்த கணமே அதைக் குழைத்து​விடுகிறான். அவன் கையில் வைத்திருக்கும் வேல்முனையைவிடக் கூர்மையானதாக இருக்கிறது அவன் அளிக்கும் பதில்கள். அவனைக் கணிக்க முடியவில்லை என்பதை மனம் ஏற்கவில்லை. ஆனால், ஒன்று புரிந்தது. அவனது நடைவேகத்துக்கு எங்கோ போயிருக்க வேண்டும். அவ்வாறு போகாததில் இருந்து, அவன் தன்னை அழைத்துக்கொண்டு போகிறான் என ஊகித்தார் கபிலர்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் மெளனம் கலைத்துப் பேசத் தொடங்கினார், “பாரியின் பறம்பு மலை எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”

“இந்த நாட்டின் பெயர்தான் பறம்புநாடு; பாரி இருக்கும் மலையின் பெயர் ஆதிமலை. அந்த மலையில்தான் வேளீர் குலத்தைத் தோற்றுவித்த மாவீரன் `எவ்வி’, தலைநகரை உருவாக்கினான்”

நிலப்பகுதிக்கு வந்து பாணர்கள் பாடிய பாடல்களில் இருந்தே பலவற்றை நாம் ஊகித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மை எவ்வளவு விரிவுடையதாக இருக்கிறது என யோசித்தபடி கபிலர் கேட்டார், “அங்கு இருந்துதான் பாரியின் அரசாட்சி நடக்கிறதா?”

கேள்வி, நீலனுக்குச் சிரிப்பை உண்டாக்​கியது. “பாரி அரசன் அல்ல… வேளீர் குலத் தலைவன். நாட்டை ஆள்வதைப்போல காடும் ஆளப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். காட்டை யாராலும் ஆளமுடியாது. சின்னஞ்சிறு மனிதனால் என்ன செய்ய முடியும்? பகை, துரோகம், வீரம், சாவு, அவ்வளவுதான். ஆனால், காட்டைப் பாருங்கள் எண்ணிலடங்கா உயிர்கள், ஒவ்வொன்றும் அளவில்லா ஆற்றல்கொண்டது. ஒரு பச்சிலையை வாயில் வைத்தால், அந்தக் கணமே நீங்கள் செத்து மடிவீர்கள். துளிர்விடும் ஒற்றை இலை உங்களின் வாழ்வை முடித்துவைக்கப் போதுமானது. உங்களால் முடிவுசெய்ய முடியுமா, காடு இலைகளால் ஆனதா, மரங்களால் ஆனதா, மிருகங்களால் ஆனதா, பாறைகளால் ஆனதா, பறவைகளால் ஆனதா, கொம்புகளால் ஆனதா?”

அவன் பேசிக்கொண்டேபோனான். கபிலரால் ஒருகட்டத்தில் அவனது பேச்சைப் பின்தொடர முடியவில்லை. பாறைகள் உருள்வதைப்போல வார்த்தைகள் உருண்டு கொண்டிருந்தன.

மூச்சுவிட அவகாசம் எடுத்துக் கொண்டார். அவர் நின்றுவிட்டதை உணர்ந்த அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான், “எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை. பாதடியைக் கழட்டிவிட்டு பாதத்தை முன்னெடுத்து வையுங்கள். பற்களைப்போல விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்”

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு ஒருவன் நடைபயிலச் சொல்லிக்​கொடுக்​கிறான். இளம்பருவத்தில் இப்படித்தான் ஏமாற்றி நடை பழக்கினார்களா?

சீறூர் மன்னன், முதுகுடி மன்னன், குறுநில மன்னன், சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள், கல்வியில் சிறந்த சான்றோர்கள், அறவோர், `எட்டி’ பட்டம் சூடிய பெருங்குடி வணிகர்கள் என எத்தனையோ பேரோடு கழிந்துபோன இந்தக் காலங்களில், மொழியும் அறிவும் ஞானமுமே என்னுள் எப்போதும் நிலைகொண்டது. ஆனால், ஒருபோதும் எனது தாயின் நினைவு தோன்றியது இல்லை. கணப்பொழுதில் என்னை எனது தாயின் மடியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டானே, முன்னால் போகும் இவன் யார்?”

கபிலர் ஒருவித உணர்ச்சி மேலிட்ட வராக பாதடியைக் கழட்டிவிட்டு, அவனை நோக்கி நடந்தார். அவன் குன்றின் உச்சியை அடைந்து, அவரது வருகைக்காகக் காத்திருந்தான். அவர் மூச்சு வாங்கியபடி உச்சியை நெருங்கினார். எதிரில் பெரும் மலைத்தொடரின் அடுக்குகள் தெரிந்தன.

நீலன் சொன்னான்… “முதல் அடுக்குக்கு ‘காரமலை’ என்று பெயர். அதன் மேல் நின்று பார்த்தால்தான், மூன்றாம் அடுக்கைப் பார்க்க முடியும்… அதுதான் ஆதிமலை”

உச்சிக்கு வந்ததும், அதுவரை இல்லாத வேகத்தோடு காற்று வந்து அவரைத் தள்ளியது. உடலைச் சற்றுத் திருப்பி காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நின்றபடி, எதிர்திசையைப் பார்த்தார். நீண்டுகிடக்கும் மலைத்தொடர் தனது இரு கரங்களையும் விரித்து அவரை அழைப்பதுபோல் இருந்தது.

நீலன் சரிவில் இறங்கத் தொடங்கினான். “இனி வேகமாக நடக்க வேண்டும். பொழுதுசாய சிறிது நேரம்தான் இருக்கிறது. மலையின் விளிம்பை சூரியன் கடந்துவிட்டால், ஒரு பனை தூரத்தைக் கடப்பதற்குள் இருள் நம்மை அடைத்துவிடும். அதன் பிறகு நீங்கள் நடப்பது கடினம். விரைவில் வாருங்கள்” என்று சொல்லியபடி தாவிச் சரிந்தான்.

கபிலர் வேகமாக இறங்கத் தொடங்கினார், அவன் நடக்கவில்லை தாவிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்தவாறு, சிறு புதர்களை விலக்கி, வேகமாக நடக்க முயற்சித்துக்​கொண்டிருந்தார். ஏறும்போது முன்னால் செல்பவன் எவ்வளவு உயரம் போனாலும், ஆளைப் பார்த்துவிட முடியும். இறங்கும்​போது அப்படி அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவனது உருவம் மறைந்து தெரிந்தது. பேச்சுக் கொடுத்தால் மட்டுமே அவனைப் பின்தொடர முடியும் என்பதை உணர்ந்த கபிலர், கவனமாக நடந்தபடி கேட்டார்.

“ `காடுகள் கொம்புகளால் ஆனதா?’ என்று எப்படிக் கேட்டாய்?” என்றார்.

“கொம்புகள் என்றால் மிருகங்களின் கொம்புகள் என்று நினைத்து​விட்டீர்​களா? நான் மரங்களின் கொம்புகளைச் சொன்னேன்”

கபிலருக்கு விளங்கவில்லை. கழுத்தை நீட்டிப்பார்த்தார். அவன் எந்தப் புதர் தாண்டி போய்க் கொண்டிருக்கிறான் எனத் தெரிய வில்லை. சத்தமாகக் குரல்கொடுத்தார்…

“கொப்புகளைத்தான் கொம்புகள் என்று சொல்கிறாயா?”

“இல்லை… நாங்கள் மரத்தின் வேர்களை மரக்கொம்புகள் என்றுதான் சொல்வோம். மரம் மேல் நோக்கி வளருவது அல்ல… கீழ் நோக்கி வளருவது. இறுகிய மண்ணையும் கரும்பாறையும் தனது கொம்புகளால் பிளந்துகொண்டு அது உள்செல்கிறது. மரத்தின் முழு ஆற்றலும் அதன் கொம்புகளில்தான் இருக்கிறது. உடலைவிட நீளமானவை அதன் கொம்புகள்”

தான் கற்றவற்றை ஒருவன் தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருக்கிறான் எனத் தோன்றியபோது, முன்வைத்த வலதுகால் இடறியது. சிறுபாறையில் பாதம் நழுவிச் சரிந்தது. பக்கத்தில் இருந்த செடியைப் பிடித்து, கீழே விழுந்துவிடாமல் நின்றார் கபிலர்.

கால் இடறி கற்கள் உருளும் சத்தம் கேட்டதும், நீலன் வேகமாக மேலேறி​வந்தான், பக்கத்தில் இருந்த வேம்பின் மீது கை சாய்த்து நின்றார் கபிலர். `சிறிது நேரம் உட்காருங்கள்’ என்று சொன்னவன், பாதங்களை உள்ளங்கையால் பிடித்து, தசைகளை இழுத்துவிட்டான். அவரது முகத்தைப் பார்த்தபடி, “நடக்கலாமா?” என்றான். கொஞ்சம் பொறுப்பா என்பதுபோல அவரது பார்வை இறைஞ்சியது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். வேப்பம் பூக்கள் சுற்றிலும் உதிர்ந்து​கிடந்தன. பூக்களை எடுத்து உள்ளங்கையில் வைத்து உற்றுப்பார்த்தார். மூச்சுக்காற்றில் பூக்கள் அசைந்தன. பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்திருக்கும் நேரத்தைச் சிறிது நீட்டிக்கலாம் என யோசித்த கபிலர் “வேப்பம் பூ, யாருக்கு உரியது தெரியுமா?” என்றார்.

“சிற்றெறும்புக்கு உரியது”

கபிலர் பதற்றம் அடைந்தார்.

“நான் அதைக் கேட்கவில்லை. வேப்பம் பூ மாலை யார் சூடுவதற்கு உரியது தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, ஏதாவது பதிலைச் சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் அவரே பதிலையும் சொன்னார்…

“பாண்டிய மன்னனுக்கு உரியது”

“சரி… அப்படியே நடக்கத் தொடங்குங்கள். நான் அருகிருந்து அழைத்துச் செல்கிறேன்” என்றான்.

கபிலர் நடக்கத் தொடங்கினார். எட்டு​வைக்கும்​​போது கால் நரம்பு சுண்டுவது போல் இருந்தது. சூரியனின் அடிவிளிம்பு காரமலையின் தலையைத் தொட்டது.

முன்னால் நடந்தபடியே கேட்டான்… “வயல் நண்டைப் பார்த்திருக்கிறீர்களா?”

சம்பந்தம் இல்லாமல் கேட்கிறானே என எண்ணியபடி, “பார்த்திருக்கிறேன்” என்றார்.

“வயல் நண்டின் கண்கள் வேப்பம்​பூவைப் போலத்தான் இருக்கும். உங்கள் பாண்டியன் வயல் நண்டை மாலையாக அணிந்துகொள்வானா?” கேட்டபடி நமட்டுச் சிரிப்போடு நாலு எட்டு முன் தாவிச் சென்றான்.

கபிலர் நிலைகுலைந்துபோனார். பெரும் வேந்தனை சாதாரண வீரன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தி தன்னிடம் பேசுகிறானே. இதைக் கேட்டுக்​கொண்டிருப்பது அறம் அல்ல என்று தோன்றியது. இந்த எண்ணம் முழுமை அடையும் முன்னர், அவருக்குள் இருந்த கவிஞன் விழித்துக்கொண்டு வெளியில் வந்தான். என்ன அழகான ஓர் உவமை? கணநேரத்தில் எப்படி இவ்வளவு பொருத்தமான ஓர் ஒப்பீட்டைச் செய்தான். காதலுக்குள் சூழ்கொண்டு கிடக்கிற ஒருவனுக்கு உவமைகள் வராதா என்ன? மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கபிலர் கேட்டார்… “வயல் நண்டின் கண்கள்தான் அப்படி இருக்குமா… கடல் நண்டின் கண்கள் அப்படி இருக்காதா?”

“எனக்குத் தெரியாது. நான் கடல் பார்த்தது இல்லை. ஆனால் நீரும் நிலமும் மாறுபடுகையில், வடிவமும் மாறு​படத்தான் செய்யும்”

“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்”

“ஏன்?”

“அது அவ்வளவு விரிந்து பரந்தது… அளவற்றது”

முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன், சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்…

“எங்கள் பாரியின் கருணையை விடவா?”

கபிலர், மனதுக்குள் சுருங்கிப் போனார்!

Popular Tags

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vel pari vikatan,

vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,

vel pari in tamil,vel pari vikatan,vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,Paari Vallal,vallal pari,paari vallal story,angavai sangavai story,angavai sangavai story in tamil,mullaiku ther kodutha pari,vel pari,parivallal in tamil,Great King Paari,velpari audiobook free download,வேள்பாரி நாவல்,வேள்பாரி புத்தகம்,வேள்பாரி வரலாறு,

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vell paari story,vell paari,veerayuga nayagan velpari audiobook,

veerayuga nayagan velpari,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,vel pari,velpari audiobook free download,velpari audio book,vel pari audio book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *